Friday, August 19, 2005

அது வேற உலகம்.

ஒரு கறுப்பு நிற Shopper's Stop கவரில் பொதிந்து வைக்கப் பட்டிருக்கும். புத்தக அலமாரியில் சட்டென்று கண்ணில் படாத இடத்தில், அதே சமயம் வேண்டுமென்றால் அதிகம் தேட வைக்காமல் கையில் கிடைப்பதாய். சில நேரம் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது. சில நேரம் நான் எவ்வளவு மிஸ் பண்ணறேன் என்பதை உணர வைப்பது. அதைப் பிரித்ததில்....

ஒரு பெரிய வெள்ளை நிற சார்ட் பேப்பரை மடித்து செய்தது. முன் பக்கம் ஒரு விளக்கு வரைந்து கலர் செய்யப் பட்டிருக்கிறது. அவள் வயது குழந்தை வரைந்தது என்று நம்ப சிரமமான நேர்த்தியோடு. உள்ளே Happy Diwali & Prosperous New Year என்று எழுதி to Nirmala teacher, From Khyati.

ஒரு வாழ்த்து அட்டை. கடையில் வாங்கியது. மேலே Dear Nirmala teacher. கீழே Siddhanjay Godre, roll no 14!

வளைத்து வளைத்து ஒரு கையெழுத்து. ஸ்டைலாம். You are my best teacher and my best friend. you are good teacher. you teach that song running over, do you love my jesus, and if i, if i that song is very good. you are so good. i cant believe it. please take it. பக்கத்தில் கப்பல் மாதிரி ஒரு கேக் படம் வரைந்திருக்கிறது. பின் பக்கம் From Kanak S. agarwal, vibhusha (பெயர் எழுதி அடிக்கப் பட்டிருக்கிறது. card செய்து கொடுப்பதற்குள் சண்டையாயிடுச்சோ?!) and Avdhi Kabra.

நோட்டு புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கிழித்து அவசரமாகச் செய்தது. ஒரு பக்கம் நீல க்ரேயான் பூசி, இன்னொரு பக்கம் பச்சை க்ரேயான். நீல க்ரேயான் மீது ஊதா நிறத்தில் when i close my eyes, i hear the cries, they echo in my mind. he must die to cricify from people so unkind and in my life in every strife, to u i will now .....??? கடைசி வார்த்தை படிக்க முடியவில்லை. கீழே teacher wish you happy diwali.

ட்ராயிங் நோட்டு பக்கம். இரண்டாக மடித்து முன் பக்கம் சிவப்புக் கலர் ஸ்ப்ரே செய்திருக்கிறது. அதில் எட்டு இதயங்கள்! love, joiness, enjoyness, happiness, gifts, sometimes sadness, sometimes full of ஒரு சிரிக்கும் வாய், sometimes of இரண்டு இதயங்கள். உள்ளே... this card brings exclusive wisches to an expecdational fiend like teacher. from Shubham.

எங்கிருந்தோ வெட்டி எடுத்த ஒரு பூ, ஒரு பழக்கூடை, ஒரு ஜன்னல், ஒரு நுரை ததும்பும் கோப்பை, ஒரு நாய்க்குட்டி, ஒரு சிரிக்கும் பெண் குழந்தை கார்ட்டூன், இரண்டு நீள பட்டியில் நட்சத்திரங்கள்... எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் ஒட்டி, மடித்து, பசை காய்வதற்குள் மடித்ததில் பேப்பரும் ஒட்டிப் போய், அதை
கவனமாக பிய்த்து எடுத்து... கிறுக்கலான கையெழுத்தில் தீபாவளி வாழ்த்து Apoorva Mehtaவிடமிருந்து.

தொடரும் வாழ்த்து அட்டைகள். பெரும்பாலும் அவர்களே செய்தது. முறுவலிக்க வைக்கும் எழுத்துப் பிழைகளோடு. தப்பே இல்லாத அட்டைகளை விட, வெகுளித்தனமான இவை அதிகம் சந்தோஷம் தருகிறது. ஒரு அட்டையில் பெரிய அழகான பார்பி ஸ்டிக்கர். நிச்சயம் அது அவளுக்கு ரொம்ப பிடித்ததாய் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அது அவளுடைய டீச்சருக்கு. ஒரே வாசகம் இரண்டு அட்டையில். அதை கொடுக்கும் போது அவர்களுக்குள் சண்டை வந்ததும், ஒருத்தி 'என்னைப் பார்த்து அவள் காப்பி அடித்தாள்' என்று சொன்னதும் தெளிவில்லாமல் நினைவில். முழு சூரியன், இரண்டு மரம், இரண்டு மேகம், பறந்து
கொண்டிருக்கும் நாயின் வாயில் ஒரு இதயம், அதில் happy diwali! தெளிவில்லாமல் ஒரு படம் வரைந்து(மாடர்ன் ஆர்ட்?!), கலர் பூசி கொடுக்கப்பட்ட ஒன்று பெயரில்லாமல். ப்ரோபஷனல் டச்சோடு யாரிடமோ கொடுத்து வரைந்து கீழே கிறுக்கல் கையெழுத்தோடு ஒன்று.

அடிக்கும் நிறத்தில் பாசி மணிகளைக் கோர்த்து ஒரு வளையல், ஒரு மோதிரம், ஒரு கழுத்துச் செய்ன்...பிக்னிக் போயிருந்த போது எல்லாம் என் அளவெடுத்து செய்தது, பையின் அடியில். அடுத்த நாள் 'நீங்க அதை இன்னைக்கு ஸ்கூலுக்கு போட்டுட்டு வருவீங்கன்னு நினைச்சோம்' என்று இடைவேளையில் ஏமாற்றத்தோடு சொன்ன போது சமாதானப் படுத்தியது நன்றாக நினைவிருக்கிறது. தேவைப்படும் என்று எழுதி வைத்திருந்த நான்காம் வகுப்பின் ஐம்பத்தியோரு பேரின் பெயர், தொலைபேசி எண்ணுடன் ஒரு காகிதம். வரிசையாகப் படித்துக் கொண்டே வரும் போது வகுப்பில் அட்டெண்டென்ஸ் எடுத்த நினைவு. ஒன்றிரண்டு பெயருக்கான முகங்கள் நினைவுக்கு வராத போது... இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டயா? என்ற குற்ற உணர்வு.

சின்ன சின்னதாய் சில வருத்தங்கள், கோபங்கள், இயலாமைகள் இருந்தாலும் தினம் தினமும் என்னை புதிதாய் பிறக்க வைத்த நாட்கள். தரையிலிருந்து இரண்டு இன்ச் உயரத்தில் நடந்து கொண்டிருந்த நாட்கள். எல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் கறைந்து விட்டது. வேண்டி விரும்பிக் கேட்டாலும் இனி வராது. இவ்வளவு தானா... இன்னும் எதாவது நடந்திருக்குமே... யோசிச்சு பாரு... என்று தேடிப் பார்க்கிறேன். எதாவது செய்து கொண்டிருக்கும் போது சட்டென்று சிலது நினைவுக்கு வருகிறது. இதோ இந்த சந்தனா(chandana) மாதிரி.

ஒரு மாலை பள்ளிக்கூடம் முடிந்து ஹிந்தி ஆசிரியரோடு பேசிக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறேன். காலியான வராந்தாவின் எதிர்ப்புறத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கிறாள். என்னுடைய முந்தைய வருடத்து மாணவி. எங்களுக்கு நாலடிக்கு முன்னாலிருக்கும் போது ரொம்ப இயல்பாக 'கேஸே ஹோ?' (எப்படியிருக்கே?). அவ்வளவே. பதிலைக்கூட எதிர்பார்க்காமல் கடந்து போய் விட்டாள். கூட வந்து கொண்டிருந்த ஆசிரியருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. கொஞ்சம் எனக்கும். இந்தப் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தொடங்கிய அவர் குரல் புலம்பலாகத் தொடர, யோசிக்கும் போது... வரவழைத்துக் கொண்ட மரியாதை, உதட்டிலிருந்து வரும் மாலை வணக்கம்... இதெல்லாம் ஒரு ஆசிரியருக்குச் செய்வது. இது வேற மாதிரி வெளிப்பாடு. இயல்பாக. நட்பாக. அந்தக் குட்டி, அந்த மாலை, அந்த வராந்தா, அந்த கேஸே ஹோ? ... ஒரு நிரந்தர பிம்பமாக்கிக் கொடுத்துப் போயிருக்கிறாள்.

எல்லாருக்குமே நல்லதே என்றும் சொல்ல முடியாது. எப்போதும் கோபமாக, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பரேஷ் மனதில் என் பிம்பம் என்னவாயிருக்கும் என்று யூகிக்க முடிகிறது. சிரிப்பே இல்லாமல் ஆராயும் கண்களோடு இருக்கும் பள்ளி முதல்வரின் மகள் அவளுடைய எந்த வட்டத்திற்குள்ளும் என்னை அனுமதித்ததில்லை. பாதி கேள்விகளுக்காவது விடை தெரிந்தும் எந்தப் பரிட்சையிலும் நாலு வரிக்கு மேல் எழுத மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த அபூர்வாவை கடைசி வரை என்னால் எழுத வைக்க முடியவில்லை. வகுப்பில் பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது, அவசரமோ, பயமோ... உள்ளாடையில் மலம் கழித்ததும், அதைச் சொல்ல இன்னும் அதிகமாக பயந்த நவாஸ¤க்கு நான் சிம்ம
சொப்பனமா தெரியாது. அன்றைக்கு என்னை 'நீ ஒன்னும் எல்லாருக்கும் Pet டீச்சர் இல்லை' என்று சொல்லாமல் சொல்லிப் போனான். வீட்டுக்கு போன் போட்டு, அவன் அம்மா மாற்று ஆடையோடு வந்த போது எனக்கு என்னை பிடிக்கவில்லை.

அவ்வளவுதான். மறுபடியும் எல்லாவற்றையும் கவரிலேயே போட்டு அதே இடத்தில் வைத்தாகிவிட்டது.

'சந்தோஷமா?'

'ரொம்ப'

'சங்கடமொன்னும் இல்லியே?'

'அதும் தான்'

7 comments:

Anonymous said...

beautiful.

posted by:

கலை said...

இனிமையான + கனமான நினைவுகள்தான், அதை அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

Chandravathanaa said...

very nice

posted by: Chandravathanaa

ஜென்ராம் said...

//அன்றைக்கு என்னை 'நீ ஒன்னும் எல்லாருக்கும் Pet டீச்சர் இல்லை' என்று சொல்லாமல் சொல்லிப் போனான்//
நம்மைப் பற்றி நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகளை உடைத்து நொறுக்கும் வல்லமை குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு. இதில் நாம் பெற்ற குழந்தைகளும் அடக்கம்.

posted by: ராம்கி

Anonymous said...

ரசித்த, கருத்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி.

ராம்கி... இதே வேற யாரும் செய்தால் எகிறிக் குதிப்போம்... குழந்தைகள் கிட்ட வலியோட தாங்கிக்கறோம். நம்ம குழந்தைகளையும் சேர்த்துத்தான்.

posted by: nirmala

பத்மா அர்விந்த் said...

திரும்பவும் உங்கள் பதிவுகளை படிக்கும் போது மகிழ்வாகவும், அதே நேரம் இந்த பதிவையும் காளிகோவில் பதிக்கும் பதிவையும் படிக்கும் போது ஒருவித கனமாகவும் இருக்கிறது

Nirmala. said...

நன்றி பத்மா. ரொம்ப நாளைக்கு முன்னால எழுதின இந்த பதிவைப் ப்ற்றி இப்போது நீங்கள் சொல்லக் கேட்கும் போது மறுபடியும் அந்த நாட்களுக்கு போக முடிந்தது. அதற்கும் நன்றி.