Tuesday, August 16, 2005

வாங்க, விஷ¤ கூப்பிடறார்!

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒரிஸ்ஸாவில் இருந்த போது 'அங்கயிருந்து பக்கமாமே? போயிட்டு வரலாமா?' என்று ஒரு கேள்வி வந்தது. அப்போது 'எங்களுக்கு இப்போ வேண்டாமே' என்று சுலபமாக ஒதுக்க முடிந்தது. நாட்களின் வேகத்தை விட வீட்டுப் பெரியவர்களின் தளர்ச்சியின் வேகம் அதிகமாகப் போவது உணர்ந்ததில் இப்போது மறுக்க முடியவில்லை தான். ஐந்து வருடத்தில் நானும் தான் வளர்ந்திருக்கிறேனே! இடையில் படித்த பாலகுமாரனின் 'புருஷவதம்' கூட மறுக்காததற்கு ஒரு காரணம். இரவல் வாங்கி இரண்டு நாளில் கிடைத்த நேரத்தில் படித்த அந்த புத்தகம் சொன்னதே... அது காசி யாத்திரை. இன்றைக்கு ரயில் பெட்டியின் ஏஸி இதத்தில் செல்லும் இதெல்லாம் வெறும் இன்னொரு பயணம் மட்டுமே.

இப்போது புரிந்திருக்கும். யார் விஷ¤... எங்கே கூப்பிடறார் என்று. காசி யாத்திரைன்னு தலைப்பு போட்டு ஆரம்பித்திருந்தால், அம்மா தாயே... ஆளை விடு! ன்னு தலைப்போடவே ஓடிப் போயிருப்பீங்களே? இனி, தொடருவதும் இங்கேயே பை பை சொல்லிட்டு போவதும் உங்கள் விருப்பம்.

கொல்கத்தாவிற்கு வந்து சிரம பரிகாரம் செய்து கொண்ட வீட்டுப் பெரியவர்களோடு ஒரு சனிக்கிழமை இரவு தொடங்கிய பயணம். நேர் வண்டியில் இடம் கிடைக்காததால் முகல்சராய் - ல் இறங்கிப் போனோம். ரயில் நிலையத்தில் புதிதாக வந்து இறங்குபவர்களை சூழ்ந்து வதம் செய்யும் கும்பல் இங்கேயும் தன் கைவரிசையைக் காட்டியது. ஒரு வழியாக ஒரு சுமோவைப் பேசி முடித்த பின்னும் விடாது விரட்டிய கும்பலின் கடைசிக் குரல் 'வேலையில்லாத் திண்டாட்டம் தான் வேறென்ன?'.

மழை சகதி, அழுக்கு ஆடைகள், பக்கா கிராமத்தனம்... இதை ரசிக்கப் போறேனா, விலகி ஒதுங்கப் போறேனா என்று நானே கேட்டுக் கொண்டேன். முகல்சராயிலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் பயணத்தில் காசி எப்படி இருக்கப் போகிறது என்று ஒரு கணிப்பு வந்திருந்தது. வழியெல்லாம் தேங்கிக் கிடக்கும் குப்பைக் குவியல், மழை புண்ணியத்தில் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. கதவும் ஜன்னலும் பிடுங்கி எடுக்கப் பட்டிருந்த ஒரு அறை குப்பையால் நிரம்பி உச்சக்கட்ட நாற்றமெடுத்துக் கொண்டிருக்க, அதற்குள்ளே உட்கார்ந்து எதையோ தேடிக் கொண்டிருந்த இரண்டு உருவங்களை சுமோ இன்னும் கொஞ்சம் வேகமாகப் போயிருந்தால் நான் பார்க்காமலே கடந்திருக்கலாம்.

அரைமணி நேரத்தில் ஊருக்குள் நுழைந்து விட்டிருந்தோம். கோயம்பத்தூரிலிருந்து கொண்டு வந்திருந்த சிபாரிசு கடிதம் சொன்ன சத்திரத்தில் தான் நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கும் என்று ஆரம்பத்திலிருந்து வற்புறுத்தியதால் அதைத் தேட இன்னொரு அரைமணி நேரம் போனது. சத்திரத்திற்குள் நுழைந்ததுமே தமிழ்நாட்டுக்கு வந்து விட்ட உணர்வு. நானும் கணவரும் சூழ்நிலைக்குப் பழக முயற்சிக்க, வீட்டுப் பெரியவர்களுக்கு ஆஹா! என்ற ஆசுவாசம். குறைந்த வாடகை, குறைந்த பராமரிப்பு... மோசமில்லை.

வேண்டுமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் சத்திர மேனேஜரே நம்முடைய ப்ரோக்ராம்களை முடிவு செய்து விடுகிறார். 'நாளைக்கு காலையில கிளம்பிடுவீங்களா? இப்ப போட்டில் போய் கங்கையில் குளித்துவிட்டு வந்து விடுங்கள், மத்யானம் சாப்பிட்டு விட்டு சிட்டி டூரில் இந்த லிஸ்டில் இருக்கும் இடங்களைப் பார்த்து விடுங்கள். திரும்பி வந்ததும் ஸ்வாமி தரிசனம். காலையில் நீங்கள் கிளம்பிடலாம்'. இப்படி ஒரு பக்கா ப்ளான், அதுவும் ஜெட் வேகத்தில் கவர் செய்வதாகச் சொல்லும் போது, அத்தனை தலைகளும் ஆடியது, என்னுடயதைத் தவிர. இங்கேயுமா இந்த சிட்டி டூர் என்ற அலுப்பு. வேறு வழியிருக்கவில்லை.

சுவற்றோரமா ஒரு அடி அகலத்தில் நீளமாக ஒரு பந்தி ஜமக்காளம். அதில் காலை மடக்கி உட்கார்ந்து, இலையில் இட்லியோடு கோவித்துக் கொண்டு ஓடும் சாம்பாரைக் காப்பாற்றிச் சாப்பிட கொஞ்சம் சிரமமாக இருந்தது. உடம்பைக் குறைன்னு உள்ளேயிருந்து ஒரு குரல். கீழே உட்கார்றது பிரச்னையில்லை... வீட்ல தட்டை கையிலே ஏந்தியே சாப்பிட்டுப் பழகிப் போனதில்...! என்று இழுத்ததையும், தெரியும் தெரியும் என்று குரல் தலையாட்டியதையும் நீங்கள் கவனிக்கவில்லைதானே?

டிபன் முடிச்சு வெளியே வந்ததும், குளியலெல்லாம் கங்கையில் பார்த்துக்கோங்கன்னு மேனேஜர் ஆலோசனை சொல்லி ஒரு போன் போட, போட் ஓட்டுபவர் பத்து நிமிடத்தில் சத்திரத்தில் ஆஜர். நெட்வொர்க் எல்லாம் ஜோர்தான். மாற்றுத் துணியோடு('எங்கே மாற்ற?... அதுக்கெல்லாம் அங்கே இடம் இருக்கு மேடம்...' கடைசி வரை அப்படி ஒரு இடம் கண்ணில் படவே இல்லை!) கிளம்பினோம். இதோ இங்கேதான் என்று நடந்து கொண்டேஏஏஏ இருந்தார். ராத்திரி மழையின் சேறு வழியெல்லாம். கணவர் முன்னால், நம்ம மக்கள் நடுவில், கடைசியில் நான் என்று ஊர்வலம் ஒரு வழியாக கங்கைக் கரையை அடைந்தது. கசமுசாவென்று நிற்கும் படகுகளையெல்லாம் ஏறிக் கடந்து முன்னால் நிற்கும் படகுக்கு போய்ச் சேரும் வரை கொஞ்சம் டென்ஷன். ஆறு பேரையும் பேலன்ஸ் செய்து உட்கார வைத்து விட்டு, படகை எடுக்கும் முன்னால் நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம், பயப்படாதீர்கள் என்று சொல்லி, ஓ! பயப்பட வேண்டுமோ என்று யோசிக்க வைத்தார்.

ஒரு மாதிரி நிதானப் படுத்திக் கொண்டு கங்கையைப் பார்த்த போது, செக்கச் செவேலென்று மழை புண்ணியத்தில் குழம்பாட்டம் ஓடிக் கொண்டிருந்தது. நல்ல அகலம்... தெரிந்தது. ஆழம் யூகிக்க முடிந்தது. சுழித்துக் கொண்டு ஓடுவது என்றால் என்ன என்று இப்போது தான் பார்க்கக் கிடைத்தது. கிளம்பும் போது தண்ணீர் ஓட்டத்திற்கு எதிர் பயணம். நான்கு பேர் எதற்கு என்று அப்போது புரிந்தது. படகு பாட்டுக்கு தன் இஷ்டத்திற்கு திரும்ப எத்தனிக்கிறது. ஒவ்வொரு முறையும் அதன் பாதைக்குத் திருப்ப அவர்கள் பாடு, பார்க்க கஷ்டம். கூடவே பயம்.

வழியெல்லாம் படித்துறைகள். ghat என்று சொல்கிறார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர். கரையை ஒட்டி வரிசையாக ஒவ்வொரு மாநில ராஜாக்கள் கட்டிய மெஹல்களின் மிச்சங்கள். அவர்கள் காலத்தில் அங்கே தங்கி கங்கா ஸ்நானம் செய்திருக்க வேண்டும். இப்போது பெரும்பாலும் பராமரிப்பில்லாமல் கிடக்கிறது. சிலது சாதுக்களால் உபயோகப் படுத்தப் படுகிறது. ஏதோ ஒரு ராஜாவின் மெஹலில், இரண்டாவது மாடியிலிருந்து கீழே வந்து குளித்து விட்டுப் போக ஆட்களால் இழுக்கப் பட்ட 'லிப்ட்' இருந்ததற்கான தடயம் மட்டும் மிஞ்சியிருக்கிறது.

ஒவ்வொரு காட்(ghat)டிலும் சிறப்பம்சம் சொல்லி, தண்ணீரை தலையில் தெளித்துக் கொள்ளச் சொல்கிறார். ஒரு மாதிரி இழுத்துக் கொண்டு போகும் யுபி ஹிந்தியில் பாதி புரிகிறது, பாதி நாமே யூகித்துக் கொள்ள வேண்டியது தான். எல்லா 'காட்'டிலும் குளியல் ஆனந்தமாக நடக்கிறது. லோக்கல் மன்மத ராஜாக்கள் தைத்த கோவணம் உடுத்தி, பெண்கள் கடந்து போகும் போது மேலே வந்து கட்டுடலைக் காட்டிப் போனார்கள். அந்தக் கோவணம், உடுத்தினால் இப்படித்தான் இருக்குமா என்று தெரிந்து கொண்டேன்!!!

கொஞ்ச தூரம் போனதும் ஒரு படகிற்குப் பக்கத்தில் ஒரு துணி மூட்டை மிதந்து கொண்டிருந்தது. அது என்ன என்று கேட்டதற்கு, 'யாராவது சாதுவின் பிணமாயிருக்கும். இங்கே சாதுக்கள் இறந்தால் புதைப்பதோ எரிப்பதோ இல்லை. ஒரு கல்லோடு கட்டி கங்கையில் போட்டு விடுவார்கள். கட்டின கயறு மீன் அரித்து கழண்டு போனால் இப்படித்தான் மிதக்கும்' என்றார். அதற்குப் பிறகு அந்தப் பக்கம் திரும்பவேயில்லை.

ஹரிச்சந்திர காட் - டில் வரிசையாக பிணங்கள் எரிந்து கொண்டிருந்தது. அதற்கு முந்தைய காட்- டில் குளிக்க இறங்கிக் கொள்ளச் சொன்னார். இந்தத் தண்ணீரிலா? இதுவா கங்கா ஸ்நானம்! என்ற கேள்வியெல்லாம் தண்ணீருக்குள் இறங்கும் வரைக்கும் தான். உள்ளே இறங்கினதும் ஆற்றுக்கே உள்ள குதூகலம் தொற்றிக் கொள்கிறது. சில்லென்று நூறு கைகளால் அணைத்துக் கொள்ளும் தண்ணீரை விட்டு விலகவே மனசில்லை, போட்காரர் அடுத்த சவாரி பார்க்கணும் என்று விரட்ட ஆரம்பிக்கும் வரை. தர்ப்பனம் என்ற பெயரில் புரியாமல் திரும்பத் திரும்பச் சொன்ன நான்கு மந்திரங்களோடு கங்கா ஸ்நானம் முடிந்தது.

ஆனால் பயணம் தொடர்கிறது. விஷ¤வைப் பார்க்க வேண்டாமா?

பி.கு: ஆமா இப்படியா கவுப்பாங்க?! போன பதிவு கேள்விக்கு ஒரே ஒரு முயற்சி! தேவையா உனக்குன்னு என்னையே கேட்டுட்டு பதில் சொல்லறேன். அதைச் சொன்னது பாலகுமாரனின் 'மெர்க்குரிப் பூக்கள்' சியாமளி.

8 comments:

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்புள்ள நிர்மலா, என்ன ஒரு சுகமான நடை,.. காசிக்கே போனமாதிரி இருந்தது. தொடர்ந்து படிக்காமல் பைபையா,.. யார் சொல்வார்கள் சொன்னவர்கள் கொடுத்துவைக்கவில்லை என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான். அடுத்த பதிவிற்குக் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும்,.. உங்கள் விசிறி, ஜெயந்தி சங்கர்

posted by: jayanthi sankar

Anonymous said...

நிர்மலா,

சூஊஊஊஊப்பர் நடை.

அப்புறம் என்ன ஆச்சு?

நான்கூட காசிக்கு போகணுமுன்னு முந்தி நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

துளசி.

posted by:

Anonymous said...

நன்றி ஜெ. அடுத்த பதிவு நாளைக்கே தொடர்கிறது.

துளசி, இப்பவும் நினைச்சுக்கங்க. சந்தர்ப்பம் கிடைச்சா மிஸ் பண்ணீடாதீங்க. எல்லாத்திலயும் ஒரு அழகு இருக்குதானே.

posted by: nirmala

ஏஜண்ட் NJ said...

அவசரகதி பயணம்,
இஷ்டத்திற்குத் திரும்பி பயமுறுத்தும் படகு,
பிணம் மிதக்கும் தண்ணீர்,
புரியாமல் சொன்ன மந்திரங்கள்...

அடுத்ததா எப்போ காசிக்குப் போவீங்க!

posted by: ஞானபீடம்

பத்மா அர்விந்த் said...

நிர்மலா
நான் சரியான விடையை உடனே மறுமொழியிட்டேன்.(சியாமளியை மறக்க முடியுமா என்ன?)

posted by: padma Arvind

Anonymous said...

எதுக்குக் கேக்கறீங்க ஞானபீடம்? சே! என்னப்பா இது மனுசர்கிட்ட பேசறமதிரியே இல்லை. 'ஞானபீடம்' முன்னால வெறுமனே நின்னுட்டு பேசறமாதிரி இருக்கு!

பத்மா... ரொம்ப சந்தோஷம். மெர்க்குரிப் பூக்களை மனப்பாடம் பண்ணினது நான் மட்டும் தானோன்னு நினைச்சேன்.

posted by: nirmala

Anonymous said...

பயணக்குறிப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது. விஷயங்கள், அனுபவங்கள், சம்பவங்கள், நிகழ்வுகள் என்று அலுக்காமல் கோர்த்து தந்திருக்கிறீர்கள். நன்றி

posted by: பாலா சுப்ரா

Anonymous said...

நன்றி பாலா. இப்போதெல்லாம் பயணம் போவது ஒரு சுகம்னா... அதை எழுதறது இன்னொரு சுகமாயிருக்கு.

posted by: nirmala