Saturday, July 14, 2012

யாமம்

எஸ். ராவுடைய நாவல்கள் வாசிப்பது எனக்கு எப்போதும் ஒரு பிரம்ம பிரயத்தனம். இதற்கு முன்னால் நெடுங்குருதியும் உபபாண்டவமும் நான்கைந்து பக்கங்களைக் கடக்க சிரமப்படுத்தியதில், காத்துக் கொண்டிருக்கிறது. வராத எதையும் விட்டு விடுவதில்லை.

என் மருத்துவர்/நண்பர் கிருஷ்ணன் ஒரு தரம் நான் போயிருக்கும் போது 'துயில்' வாசித்துக் கொண்டிருந்தார். அவசியம் வாசிக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததில் வாசித்தேன். வழக்கமான‌ ஆரம்ப தடங்கல்கள் எதுவும் இல்லாமல் கதையும் களமும் சித்திரமாக விரிய வைத்த வாசிப்பனுபவம். முடிந்த ரெண்டு நாட்களுக்கு அது மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்ததும் அந்த தடை கடந்து போனதும் பெரிய விஷயமாய் உணர முடிந்தது.

அதில் தான் யாமம் வாங்கியிருந்தேன். முழு மூச்சில் வாசிக்கும் சந்தர்ப்பம் இருந்திருக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வாசிக்க முடிந்தது. அத்தர் வடித்தெடுக்கும் மொத்த பகுதியிலும் 'Perfume - The story of a Murderer' - ஞாபகப்படுத்திக் கொள்ளாமல் வாசிக்க முடியவில்லை. அது பெரிய இடஞ்சல்.

மதராப்பட்டினம் - தோற்றம், உருமாற்றம் வாசிக்கும் போது அதை க‌ற்பனை செய்ய முடிந்தது. ஜூனியரில் கண்ணில் பட்டுக் கொண்டிருந்த அவரது இந்தியா பற்றிய‌ தொடரை, அதில் தொட்டுச் சென்ற விஷயங்களைப் பார்த்த போது அவருக்கு அதில் இருந்த நாட்டமும் உழைப்பும் புரிந்தது. அதை நாவலில் அங்கங்கே கதையோடு சொல்ல முயற்சித்ததெல்லாம் ஒட்டாமல் உறுத்திக் கொண்டிருந்தது. கற்பனை கலந்த நிஜமாகக் கொள்வதா அல்லது நிஜமேதானா என்று யோசிக்க வைத்ததில் ஃபிக்ஷனுக்கும் நான்-ஃபிக்ஷனுக்கும் நடுவில் காணாமல் போனது.

மேல்மலையையும் காட்டையும் வாசிக்கும் போது ஜெமோவின் காடு நினைவுக்கு வந்ததும் எதேச்சையாக என்று கொள்ள முடியவில்லை. திருச்சிற்றம்பலத்தின் கடல் பயணத்தில் Titanic நினைவு வந்ததென்றால் எஸ்ரா நிச்சயம் உதைக்கப் போகிறார்! ஆனால் வந்ததென்னவோ நிஜம்!

பத்ரகிரியின் உறவு பகுதி நவீன நாவல்களின் கிளுகிளுப்பு டெம்ப்ளேட்டில் சரியாகப் பொருத்திக் கொண்டது. பண்டாரம் பகுதி ஒட்டவேயில்லை.

நாவல்களில் மயங்கி வாசித்த காலம் போய் விமரிசிக்கும் நிலை வந்ததில் இழப்புதான்.