Sunday, December 31, 2006

தலைப்பு? நோ தலைப்பு

போன மாதம் ஒரு கொல்கத்தா பயணம் இருந்தது. போகும் போதே சரியில்லாத உடம்பு அங்கே போய் அதிகமாகப் படுத்தியதும், கொல்கத்தா கொஞ்சம் என்னை மறந்து போனதாய் உணர்ந்ததும் பெரிய விஷயமில்லை. வழக்கம் போல காளிகாட் போனதும் வழக்கமில்லாமல் ஒன்றைப் பார்த்ததும் தான் விஷயம்.

பத்து நிமிடத்தில் காளியைப் பார்த்து முடிந்தாலும் அங்கேயிருந்து கிளம்ப முடியாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்ததும், என்ன தான் தேடுகிறேன் என்று தெரியாமல் அலைமோதியதும்... வழக்கம் போல அந்த பலிபீடத்தைப் பார்த்துக் கொண்டே நின்றதும்... ஒன்றிரண்டு வெற்றுச் சுற்று முடித்து கிளம்பப் போகும் போது... இழுத்துக் கொண்டு வந்த கறுப்பு ஆடுகள்... யோசனையே இல்லாமல் பின்னால் போனது... மறுபடியும் அந்த பலிபீடத்திற்கே வந்து சேர்ந்தது... ஏதோ கேள்விகள்... எவ்வளவு என்ன என்று விசாரணைகள்... முடித்து அங்கே ஒரு மேசை போட்டு உட்கார்ந்திருந்தவரிடம் போய் தகவல் சொல்கிறார்கள்... கீழே ஒரு குழாயைத் திறந்து அவசரமாக தலையை மட்டும் பேருக்கு நனைத்தார்கள்... இழுத்துக் கொண்டு வர கழுத்தில் போட்டு வந்த கயறு கழட்டப்பட்டது... அதுவரை பேசாமல் தான் இருந்தது... முன்னங்கால்களை பின்பக்கமாக வளைத்துப் பிடித்த போது தான் அந்த சத்தம் கேட்கத் தொடங்கியது... அதற்குப் பின் அதிக நேரம் எடுக்கவில்லை... அதுவரை போவோரும் வருவோரும் தொட்டுக் கும்பிட்டுப் போன அந்த மரச் சட்டத்தில் தலை வைக்கப் பட்டது... அசையாமல் இருக்க ஒரு இரும்புக் கழியால் நிறுத்தப் பட்டது... உயர்ந்த அந்த அரிவாள் எந்த நொடியில் கழுத்தைக் கடந்தது என்று கவனிக்க முடியவில்லை... துடித்துக் கொண்டிருந்த உடம்பை ஒரு புறமாகத் தள்ளி விட்டு தலையைத் தூக்கிக் கொண்டு வருகிறார்... வழியும் ரத்தத்தில் அவர்கள் குடும்பத்தவருக்கு பொட்டு வைத்து விடுகிறார்... முடிய முடிய அடுத்தது தயாராகிறது... பக்தியும் இல்லாமல் பதைப்பும் இல்லாமல் வெறுமனே தான் பார்த்துக் கொண்டிருந்தேன். முன்று நான்கு வயது சின்னப் பையன் எதற்கு என்று தெரியாமல் கையில் சுமந்து கொண்டு, வரும் போது பேசிக் கொண்டே, அந்த குட்டி ஆட்டைப் பார்த்ததும் அங்கே நிற்க முடியவில்லை. வெளியே வரும் போது கொஞ்சம் வெறுமையாக இருந்தது. யார்கிட்டயாவது சொல்லியே ஆகணும் என்று மண்டை வெடிக்க, கூப்பிட்ட இரண்டு பேரும், 'உன்னை யார் அதையெல்லாம் பார்க்கச் சொன்னது?' என்றும் 'கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா?' என்று கோவித்ததும்... அதைப் பற்றிப் பேசவே தோணவில்லை.

நேற்று தொலைக்காட்சியில் கை பின்னால் கட்டி கழுத்தில் கருப்பு துணி சுற்றி...

Wednesday, November 29, 2006

சென்னை ம்யூஸிக் ·பெஸ்ட்

நவம்பர் ஹிந்து ம்யூஸிக் பெஸ்ட் போயிட்டு வந்ததில் கொஞ்சம் கொறிக்க. ஆறிப் போனதுன்னாலும் அதில் ஏதோ சொல்ல வேண்டியிருந்தது. கொஞ்ச நாளா யோசிக்கறது மூணு பாஷை, எழுதறதுக்காக தமிழ்ப்படுத்துவதில் இருக்கற அசௌகரியம்... இதுக்காகவே ஒரு ஆங்கில ப்ளாக் ஆரம்பிக்கலாமான்னு முயற்சி பண்ணியது... நல்லவேளை ஹிந்தி எழுதற, படிக்கற வேகம் இரண்டாம் வகுப்பு குழந்தையோட கூட போட்டி போட முடியாத அளவானதால ஹிந்தி ப்ளாக் உலகம் பிழைத்தது!

இரண்டு வார இறுதிகளில் ஏழு நாள் நிகழ்ச்சி. முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதமா இல்லை என்பது தான் போகத் தூண்டியதற்கு முதல் காரணம்.

சீஸன் டிக்கெட் வாங்கின ஒரே காரணத்துக்காக முதல் வரிசையில் உட்கார வைத்து விவிஐபி ட்ரீட்மெண்ட் கொடுத்தது ம்யூஸிக் அகடமியா, இல்ல நிகழ்ச்சி அமைப்பாளரா தெரியவில்லை. எந்தரோ மகானு பாவோ, அந்தரிக்கே நா வந்தனம்!

முதல் நாள் ·பரிதா கானும் கஸல் & தும்ரி. உருது வார்த்தைகள் ஒவ்வொன்றாக அர்த்தம் விளங்கி புரிஞ்சுக்க முடிந்த போது ஏதோ பூ விரிந்த மாதிரி இருந்தது. சில நேரம் எதுவுமே புரியாம பாட்டு கேட்கிற சுகம் மட்டும். பக்கத்து இருக்கை அம்மணி மகளிடம் ·பரிதா கானும் போட்டிருந்த கம்மலை கவனிச்சயான்னு ஜாடை காட்டி சின்னதாகச் சிரிக்க வைத்தார். திருத்த்த்த முடியாது!

ஜெர்மனியிலிருந்து வந்திருந்த நால்வர் இளைஞர் அணி Mozart வாசித்ததில் மொத்த அரங்கத்தையும் கட்டிப் போட்டது இசையா அல்லது அசட்டுத்தனம் காட்ட வேண்டாமென்ற பயமா தெரியவில்லை. கைதட்டல் கூட கொஞ்சம் தயக்கத்தோடுதான்.

ஞாயிற்றுக் கிழமை கூட்டம் கலந்து கட்டி இருந்தது. பெரும்பாலும் காஷ¤வலாக வந்திருந்த இளைஞர் கூட்டம். எப்போதோ காதில் விழுந்திருந்த Kandisaa பாடிய Indian Ocean இவர்கள் தான் என்பது ரொம்ப லேட்டாகத்தான் தெரிந்தது. அவர்களுடைய இசை, வெளிப்படையான பேச்சு, தளர்வான உடல் மொழி எல்லாவற்றோடும் சட்டென்று பொருத்திக் கொள்ள முடிந்தது. ஒவ்வொரு பாடல் தொடங்குவதற்கு முன்னால் அது எந்த மாதிரி சூழலில் எப்படி உருவானது என்று சொல்லிப் பாடும் போது அந்த சூழலுக்குப் போய் ரசிக்க முடிந்தது. காட்டாறு மாதிரியான ஒரு ·ப்ளோ. அடிச்சுட்டு போயிடக்கூடாதான்னு இருந்தது.

ஒரு சிரியன் கிரிஸ்டியன் குழு சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் மதம் வளர்க்க கேரளா வந்து பாடிய பாடல் ஒன்று கேரள வாசம் சேர்த்து நாளாவட்டத்தில் யாருக்குமே அர்த்தம் தெரியாத ஒரு பாடலாகி அது யாரோ பாடி இவர்கள் கேட்டு kandisaa ஆனதாகச் சொன்னது சுவாரசியம்.

எங்களை சூ·பிக்கள் என்று எங்கள் நண்பர் சொல்கிறார். ஆனா எங்களுக்கென்னவோ நாங்கள் லூ·பிக்கள் என்று தோன்றுகிறது என்று சொல்லி ஒரு நிமிஷம் இடைவெளி கொடுத்து லூ·பிக்களுக்கு கொடுத்த விளக்கம்... 'we are the sufis who cannot control the lust'... இதைக் கேட்டு ஒரு கைத்தட்டலோடு சத்தமாகச் சிரித்து வைக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்த கனவான் ஓரக்கண்ணால் முறைத்தார். மறுநாள் பக்கத்தில் இடம் காலியிருந்தும் உட்காரவில்லை!

Global conversation-ல் கலா ராம்நாத் வயலின் மற்றும் சான்பிரான்ஸிஸ்கோ ஜார்ஜ் ப்ரூக்ஸின் சாக்ஸபோன். அறிமுகத்தின் போதே அம்மணியின் வயலினை பாடும் வயலின் என்று சொன்னார்கள். எனக்கென்னவோ அது கொஞ்சுவது போலிருந்தது. வாயெல்லாம் சிரிப்பாய் அனாயசமா அவர் கையசைக்க அதென்னவோ குழந்தையாட்டம் சொன்ன பேச்சு கேட்கிறது. இவ்வளவு திறமையிருக்க, சாக்ஸ் கலைஞரை கொஞ்சம் நாதா அல்லது குருவே என்ற பாவத்தோடு பார்த்துக் கொண்டு அவருக்கு இசைந்து வாசித்ததைப் பார்க்க பிடிக்கவில்லை.

ஜுகல்பந்தி பாலமுரளி கிருஷ்ணாவும் அவருடைய சிஷ்யர் அஜோய் சக்ரோபர்த்தியும். குருபக்தியில் சிஷ்யர் குரல் எழும்பவேயில்லை. அரங்கமே குருவை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தது. அன்றைக்கு கச்சேரியைவிட சுவாரசியமாக ஒரு நண்பர் கிடைத்தார். நாற்பத்தி ஐந்து வருட இசை கேள்வி ஞானம், பாலமுரளி கிருஷ்ணாவுடைய இளமைக்கால நண்பர்,
எக்கச்சக்கமான நினைவுகளுக்கு சொந்தக்காரர்... பதில் சண்டை போடுவேனோ என்ற எதிர்பார்ப்பில் ஏதோ கேட்டு வைக்க நான் எதோ பதில் சொல்ல சட்டென்று நண்பர்களாகிப் போனோம். ராகங்களைப் பற்றி அவர் ஏதோ சொல்லிக் கொண்டு போக நிஜமாகவே புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது ஏனோ லலிதா ராம் ஞாபகம் வந்தது. அந்த இடத்தில் அவர் இருந்திருக்கலாம்! நிகழ்ச்சி முடிந்தும் பேசிக் கொண்டிருந்தது போதாது என்று ஞாயிற்றுக் கிழமை போனில் ஒரு மணி நேரம் அரட்டை. எனக்கு ராகங்களை புரிய வைப்பதில் ஆர்வமாயிருக்கிறார். எவ்வளவு தேறுவேனென்று தெரியவில்லை! உங்களை சந்தித்ததில் சந்தோஷம் மிஸ்டர். சக்கரபாணி. (மனுஷருக்கு தமிழ் படிக்கத் தெரியாதாம்! எப்படியும் இதைப் படிக்கப் போவதில்லை).

சனிக்கிழமை அருணா சாய்ராம் வழங்கிய முழுநீள அபங்க். எப்போதோ வழக்கமாக காதில் விழுந்து கொண்டிருந்த, அவ்வளவாக கேட்கப் பிடிக்காத மராட்டி அவர் குரலில் ஸ்வீட்டாக இருந்த மாதிரி இருந்தது! அந்தக் குரலில் இருந்த பாவம் கேட்கும் போது அழவைச்சுடுமோன்னு இருந்ததால் அம்மணி மேல் சரியான பொறாமை. மனசு சரியில்லையா ஒரு பாட்டு பாடினா போதும்ன்னு இவர்களுக்கெல்லாம் ஒரு வசதி இருக்கேன்னு தான். வழக்கமான கர்நாடக கச்சேரிக்கு பழக்கப் பட்ட சென்னைக் காதுகள் இடைவேளையில் காணமல் போய்விட்டன.

கடைசிநாள் நிகழ்ச்சிக்கு என் காதும் மனசும் காலியிருக்கவில்லை. ஒட்டாம முதல் பாதி கேட்டதோடு சரி. எனக்கு அதுக்குமேல சங்கீதம் ஜீரணமாகாது போல! கொஞ்சம் இடைவெளி விட்டு டிசம்பர் கச்சேரிகளைத் தேர்ந்தெடுத்துக் கேட்க உத்தேசம். நாலு சீட்டு இடைவெளியில் தொடங்கி அடுத்தடுத்த இருக்கை வரை முன்னேறி கடைசி நான்கு நாள் பக்கத்து இருக்கைக்காரராக இருந்த திருமதி. ஒய்ஜிபி அவருடைய சபா நிகழ்ச்சிகளைப் பற்றி சந்தோஷமாகச் சொல்லியிருக்கிறார். பார்க்கணும்.

கம்பியரிங் பண்ண வந்த திரு.*&(% (பெயர் தெரியவில்லை!) வை எங்கேயோ பார்த்த ஞாபகம். நிகழ்ச்சிக்கு ஏற்ற மாதிரி உடையணிந்து வந்ததும் இயல்பான பேச்சையும் சொல்லாமப் போனேன்னா (அத்தனை ஜொள்ளு விட்டதற்கு)சரியாகாது.

என்னதான் நல்ல செட்ன்னு போட்டு அலற விட்டுக் கேட்டாலும் கண் முன்னால உட்கார்ந்து வாசிக்கறதைக் கேட்கற சுகமே சுகம்.

Sunday, October 15, 2006

உயிர்மை.. நான்கு புத்தகங்கள்... சாரு

கவனமாகப் பாரு என்று நண்பர் அனுப்பியிருந்த மின்னஞ்சல் சொன்னது சாருவின் புத்தக வெளியீட்டு விழாவைப் பற்றி. அவர் கவனமாகப் பார்க்கச் சொன்னது வெளியீட்டு விழா அழைப்பிதழில் இருந்த பிரகாஷ்ராஜ், பார்த்திபன் பெயர்களை. பிரகாஷ்ராஜ் ஓக்கே... பார்த்திபன் கூடவா?! கமலையும் பிடிக்கும் பார்த்திபனும் பிடிக்கும்... இதென்ன ரசனை எனறு அவர் சலித்துக் கொள்ளும் போதெல்லாம் தோற்றம் தாண்டி ஒவ்வொருவருக்கும் ஒரு ஈர்க்கும் விஷயம் இருப்பதை சொல்ல முயன்றதில்லை. அங்கே போக வேண்டும் என்ற முதல் தூண்டலுக்கு அவர்கள் காரணமாக இருந்தாலும் தமிழ் புத்தக வெளியீடு அதுவும் இது போன்ற பெரிய அளவில் என்பது தான் பெரிய ஆச்சர்யமாக இருந்தது. ஏதோ ஒரு இருட்டு கல்யாண மண்டபத்தில் இருந்திருந்தால் ஞாயிறு மாலையை அங்கே கழித்திருப்பேனா என்பது சந்தேகம் தான்.

ஆறு மணிக்கு அரங்கிற்குள் நுழையும் போதே நிறைவான கூட்டம். அரைமணி நேரம் வெட்டியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிறகு மேடையேறி தொடங்கி வைத்தவர்கள்... திரு. நல்லி குப்புசாமி, முன்னாள் தொலைக்காட்சி...(?) திரு. நடராஜன், திரு. நாஞ்சில் நாடன், திரு. ட்ராஸ்கி மருது, திருமதி. கனிமொழி, திரு. ரா.பார்த்திபன், திரு. சாரு நிவேதிதா மற்றும் அவருடைய எழுத்துகளை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் அன்பர் (பெயர் நினைவில்லை). பிரகாஷ்ராஜ் மிஸ்ஸிங். (இப்படி ஆனாலும் ஆகும் என்று முன்னாலேயே வெறுப்பேற்றியிருந்த நண்பருக்கு என் மனமார்ந்த எரிச்சல்கள்).

நல்லி குப்புசாமி, நடராஜன் வரவேற்புரைகளை தொடர்ந்த நாஞ்சில் நாடன் பேச்சைக் கேட்கும் போது சமீபத்தில் சென்னை வந்திருந்த உஷா சொன்ன போதும் கூட அவரைப் படிப்பதில் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்று யோசிக்க வைத்தது. அவருக்கு சாருவில் மேல் உள்ள முப்பதாண்டு கால பொறாமையைச் சொல்லி முன் அனுமாணங்களை விலக்கி, வாசித்து விட்டு திட்டச் சொன்னார்!

கனிமொழி சாருவால் தத்தெடுக்கப்பட்டு தான் அறிந்து கொள்ள முடிந்த உலக இசை மற்றும் உலக சினிமா பற்றி பேசினார். பழசாகிப் போன ஒரு ஜோக் சொல்லி சிரிக்க வைத்தார்! அவரால் இறுக்கம் தளர்ந்ததை மறுக்க முடியாது. மருதுவின் வேறு தளப் பேச்சு சொல்ல வந்த விஷயத்தின் ஆழத்தை உணர்த்தினாலும் உள் வாங்கிக் கொள்ள முடியவில்லை. மொழிபெயர்ப்பாளரின் மலையாள உரை ரசிக்க முடிந்தது. வரிசையில் கடைசியாய் குறிப்புகளைப் பார்த்துப் பேசிய பார்த்திபனின் பேச்சில் ஒரு ப்ளோ இல்லாமல் போனது ஏமாற்றம்.

முடிவாக சாருவின் நன்றி உரை. வழக்கமான நன்றி அறிவிப்புகளைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகால் எப்போதும் ஒதுக்கப்படுவதும், சுய ஒப்பீடுகளும்... இத்தனை உயரங்களை அடைந்த பின்பும் இந்த எதிர்பார்ப்புகள் இருக்குமா என்ற ஆச்சர்யம்.

ஒன்பது மணிக்கு எல்லாம் முடிய கிளம்பும் போது இரவு உணவு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லி இருக்கச் சொன்ன போதும் அசௌகரியமாக இருந்தது. சுரேஷ் கண்ணன் வற்புறுத்தியிருக்காவிட்டால் இருந்திருக்க மாட்டேன். இருந்திருக்காவிட்டால் சில அறிமுகங்கள் நிகழாமல் போயிருக்கும். சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த எங்கள் பேச்சில் இயல்பாகக் கலந்து கொண்ட எஸ். ராமகிருஷ்ணன்... மனுஷ்ய புத்திரனுடன் ஒரு ஹலோ... எல்லோரும் சொன்னது போல விமர்சனங்கள் இருந்தாலும் பாராட்டாமல் விட முடியாத சாரு...

ஒரு நிறைவான மாலை.

Monday, April 24, 2006

கொல்கத்தா சங்கதிகள் - 2

கொல்கத்தாவிலிருந்த போது பெங்காலி படங்களோடு தொடர்பு கொள்ள ஒரு சந்தர்ப்பம் ரே திரைப்பட விழா என்று அறிவித்த INOX கொடுத்தது. சத்யஜித் ரேயா? ஆளைவிடு என்று எல்லோரும் விலகிக் கொள்ள, அப்போது விடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அது தனியாக சினிமா பார்க்கத் தொடங்கியிருக்காத நாட்கள். அதனாலென்ன, சொந்த கலெக்ஷனுக்காகட்டும் என்று வாங்கி வந்த பதேர் பாஞ்சாலியும் அதன் தொடர் பட வரிசையும் ஜீரணிக்க முரண்டு பிடித்ததில் பெங்காலி சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தாலும் 'இது பிடிச்சிருக்க பாரேன்' என்று இழுத்து வந்தது ரிதுபர்ணோ கோஷ்.

சோக்கேர் பாலியில் தொடங்கியது... அவருடைய படங்கள், அது சொல்ல வருவதும் எதுவோ எங்கேயோ சகட்டுமேனிக்கு இழுக்க எந்த புள்ளியில் சந்திக்கப் போகிறோம் என்ற ஆவலும் அதைத் தேடும் முயற்சியுமாய் பார்த்த ரிதுபர்ணோவின் ஆரம்ப காலப் படங்கள்... கொஞ்சம் கமர்ஷியல், கொஞ்சம் துப்பறியும் கதை சொல்லும் முயற்சி... subhomuhurat... படத்தில் நந்திதா தாஸ் சொன்ன ஒரு வரி வசனத்தில் அந்தப் புள்ளியைக் கண்டு பிடித்த போது ஒரு உற்சாக ஹே!

தொடர்ந்து முயற்சித்த அபர்ணா சென் இயக்கிய படங்கள்... முழுக்க முழுக்க பெங்காலி, சப் டைட்டில் இல்லாத கண்ணாமூச்சியோடு பார்த்தவைகள் சொல்ல வந்தது என்னவோ ரொம்ப ஆழமானது, ஆனால் எனக்கு சரியாகப் புரியவில்லை என்ற சமரசத்தோடு மறுபடியும் பெங்காலிப் படங்களுக்கு தற்காலிக விடைபெறுதல்.

'அந்தர்மஹால்' குறுக்கீடும், மூட்டை கட்டும் நேரமாச்சு என்ற அறிவிப்புமாய் மறுபடியும் ஒரு பெங்காலி அலை. அடையாளம் காட்டும் வேலை செய்தது PlanetM. படங்களை பொதிந்து வைத்திருக்கும் அட்டைப் படமே சொல்லும் இது தான் நீ பார்க்க வேண்டியது என்று. முதுகில் எழுதியிருக்கும் ஆங்கிலப் பெயரைக் குறித்துக் கொள்வதும், கொச்சையான பெங்காலி உச்சரிப்பில் அதை வீடியோ கடைக்காரரிடம் ஒப்பிப்பதுமாய் பார்த்த பெங்காலிப் படங்கள் 'ஒரு வருஷத்தை வீணடிச்சுட்டே. பேசாம பெங்காலி கத்திருக்கலாம்' என்று லேட்டாக ஒரு ஞானோதயம் கொடுத்தது, ஒரு பத்து முப்பது படம் பார்த்ததில் பாஷை புரிய
ஆரம்பித்ததுதானென்றாலும்.

வழக்கமான பெங்காலி சினிமாவில் பாலிவுட் பாதிப்பில் கமர்ஷியல் கூத்துகளுக்கு குறைவில்லை என்றாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த வேறு நிறப் படங்களும். நாவல்களை மூலமாகக் கொண்டு என்று எடுக்கும் படங்கள் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிகிறது. சாதாரணமாக பார்க்கக் கிடைக்காத, குறைந்தபட்சம் நான் பார்த்திருக்காத கதைக்கரு... அதைச் சொல்லியிருக்கும் நேர்த்தி... உள்ளுக்குள்ளே இழுத்துக் கொள்ளக் கூடியதாய். சொல்லாமல் போக முடியாது என்ற ஒன்றிரண்டைப் பற்றி எழுதவில்லை என்றால் உறுத்தல் தாங்க முடியாது
என்பதால் கொஞ்சம்...

Nishi Japon ( after the night... dawn)... மலையும் காடுமாய்... அதில் ஒரு வீடு, வயதான அப்பா, விடுமுறைக்கு வந்திருக்கும் மகன்கள், மருமகள், அவளுடைய தங்கை, அப்பாவின் நண்பர்... தொலைக்காட்சி இல்லாத, செல்பேசி தொடர்பில்லாத ஏகாந்தத்தில்... சந்தோஷமான குடும்பம்... ஒரு ராத்திரி அடர்மழையும் நிலச்சரிவும்... தொடர்புக்கு இருந்த ஒரே தொங்குபாலமும் பிய்த்துக் கொண்டு போய் விட, சாப்பாடு தண்ணீர் இல்லாத மூன்று நாட்கள்... பசி மாற்றிப் போன குடும்பத்து ஆட்கள்... வெளியேறும் முயற்சிகளும் தொடரும் போராட்டங்களுமாய்... அந்த வீடும் லொக்கேஷனும்... அங்கேயே இழுத்துப் போன ஒளிப்பதிவும்... சந்திப் ரேயின் க்ளீன் மூவி.

Dahan... ஒரு ராத்திரி கடைத்தெருவிலிருந்து திரும்பி வரும் இளம் தம்பதியை வம்பிழுக்கும் ரவுடிக் கும்பல்... மொத்த ஜனமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க நடுரோட்டில் நடக்கும் இந்த ரகளையை சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தில் கண்ணில் பட இறங்கிவந்து உதவி செய்யும் இன்னொரு பெண்... போலிஸ் கேஸ்,
வசதியான வீட்டுப் பிள்ளைகள், புகாரைத் திரும்ப பெற வைக்கும் முயற்சிகள் எல்லாம் வழக்கமானவைகள் என்றாலும்... பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலை... உதவி செய்த பெண்ணின் மனநிலை... இருவரையும் சந்திக்க அனுமதிக்காத வீட்டு மனிதர்கள்... இந்த திடீர் புகழை உபயோகப் படுத்திக் கொள்ள முயலும் காதலன்...
இதெல்லாம் நிச்சயம் புதுசு.

shunyo e'bukey (empty canvas)... ஓவியமும் சிற்பமும் நாட்டுப்புறபாடலுமாய் நிறைந்திருக்கும் நான்கு நண்பர்களின் கஜுராஹோ விஜயம்... அங்கே சந்திக்கும் ஒரு பெண், உணர்வுப் பூர்வமாய் நேசம் நிறைந்தவன் அவளைக் காதலிக்க, பக்கா ப்ராக்டிகல் கொஞ்சம் வெடுக்கென்ற பேச்சு நண்பன் இது சரிவராது என்று மறுக்க... கொல்கத்தாவில் தொடரும் அந்த காதல் கதை திருமணத்தில் முடிகிறது. முதல் இரவில், சரியான வளர்ச்சியடையாத அவள் மார்பகங்களைப் பார்த்து அதிர்ச்சியில் விலகும் கணவன்... ஏன் முதல்லயே சொல்லலை என்ற கேள்வியும்... என்னன்னு சொல்லியிருக்கணும் என்ற தயக்கம் நிறைந்த பதிலும்... நிறைய யோசிக்க வைத்த படம்.

Antarjali yatra... தொண்ணூறு பளஸ் வயதுகாரர்... கடைசி சுவாசத்தைத் தேடி நதிக்கரை கம் மயானத்திற்கே வந்து விட்டவருக்கு ஜோசியரின் அறிவுரைப்படி சிட்டுப் போல ஒரு பெண்ணோடு திருமணம்... திருமணம் முடிந்த பிறகும் அங்கேயே தொடரும் குடித்தனம்... நாலு மூங்கில் கம்பும் அதில் வெயில் மறைக்கக் கட்டிய ஒரு துணி கொஞ்சம் சமையல் பாத்திரங்களோடு யாருமில்லாத வெட்டவெளியில் குடுகுடு கிழவரோடு... தூரத்தில் ஒரு முரட்டு வெட்டியான்... கல்யாணம் கட்டிக் கொண்ட ஜோரில் உடல்நிலை தேறி, நடுங்கும் கைகளால் கன்னத்தை தடவத் தேடும் அந்த ப்ரேம் 'கொடுமைடா சாமி'! அந்த மூன்று பேருக்குள் ஓடும் உணர்வுகள்... படம் முழுதாகப் புரிந்ததா என்று தெரியவில்லை... ஆனால் பாதித்தது.

ரித்விக் காடக்கின் Meghey dhaka tara, 'அரங்கேற்றம்' 'அவள் ஒரு தொடர்கதை' பாலச்சந்தருக்கு முந்தியதா பிந்தியதா தெரியவில்லை. நான் முதலில் பார்த்தது பாலச்சந்தரைத்தான். மின்னலடித்துக் கொண்டே படம் காட்டிய அந்த மோட்டார் கார் படம் (பெயர் நினைவில்லை)... அதில் யாரும் நடித்த மாதிரி தெரியவில்லை... ஒரு காட்சியில் மாடிப்படியிலிருந்து இறங்கி வரும் சிறுவனின் எந்த அசைவும் அவனை எங்கிருந்தோ ஒரு காமிரா படம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு கொண்டிருக்கவில்லை... சிறுவனுக்கே இது என்றால் மற்றவர்களை யூகித்துக் கொள்ளலாம். யாராவது ஒரு பழைய சினிமா ரசிகரோடு இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று யோசிக்க வைத்த படம்... மத்தியான நேரத்தில் தனியே பார்க்கும் போது நழுவிப் போவதை தவிர்க்க முடிவதில்லை.

கடைசியில் மறுபடியும் ரே... அபராஜிதா... சமீபத்திய காசி விஜயத்திற்குப் பிறகு கூடுதல் சுவாரசியத்தோடு ரசிக்க வைத்தது. அந்த நாள் காசிக்கும் இன்றைய காசிக்கும் இன்னும் மிச்சம் இருக்கும் தொடர்பு... ஆனாலும் ரே உங்களை முழுதாக ரசிக்க இன்னும் சில படிகள் ஏற வேண்டும். ஒருவேளை இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு.

Saturday, April 15, 2006

சென்னையில் Blank Noise

இணையம் இல்லாத ஒரு மாத காலத்தில் மதியிடமிருந்து வந்திருந்த மயில் சொன்னது eve teasing எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் blogathon என்ற தொடர் பதிவுகளைப் பற்றி. யாரும் எழுதினார்களா தெரியவில்லை. நான் எழுத யோசித்த போது அங்கங்கே பேருந்திலும் நடைபாதைகளிலும் சந்தித்த நொடி நேர சுகம் தேடும் இடிமன்னர்கள், தொண்ணூறுகளில் ஏதோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியில் வர முயற்சிக்கையில் அதீத நெரிசலில் பின்னால் உரசிக் கொண்டிருந்த ஒரு ஆண் உறுப்பையும் தவிர பெரிதாய் எதுவும் நினைவுக்கு வரவில்லை. திரும்பிப் பார்த்ததில் விலகிப் போன அந்த முகமில்லாத மனிதரை முற்றிலும் மறந்து போகவில்லை என்று இப்போது தெரிகிறது.

மறுபடியும் கில்லி சொல்லித் தெரிந்தது சென்னையில் இவர்கள் கூடப் போவது. 14 ம் தேதி மாலை நாரத கான சபாவைத் தேட நேரமாகுமோ என்று முன்னாலேயே புறப்பட்டு போனதில், ஆறேகால் மணிக்கு சபாவிற்குள் நுழைவதற்கு முன்னால் வுட்லேண்ட் கபேயில் ஒரு வெட்டுவெட்டிக் கொண்டிருக்கும் கச்சேரி ரசிகர்களில்
வலைபதியும் மக்கள் இலட்சணம் எதும் தெரியாததால் இன்னும் முக்கால் மணி நேரத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. சாரதியார் பக்கத்திலிருக்கும் ஹனுமார் கோவிலுக்கு போங்களேன் என்று கூட்டிப் போனதில் ஒரு ஐந்து நிமிடம் ஓட்ட முடிந்தது. ஒரு சலாமுக்கும் குங்குமத்தீற்றலுக்கும் அதுக்கு மேல் எத்தனை நேரமாகப் போகிறது?! இத்தனை சீக்கிரம் முடிஞ்சுதா என்ற சாரதியின் ஆச்சர்யத்தை ஒதுக்கிவிட்டு வேற என்ன? என்று அந்த பிராந்தியத்தை சலித்ததில் ஒரு செருப்புக்கடை, ஒரு மினி கண்காட்சி... எதிலும் எதுவும் வேலையிருக்கவில்லை. சத்தம் அதிகமாய் ஒர் உள்ளடங்கிய கடை கூப்பிட்டதில் எட்டிப் பார்க்க AVM Music Store கண்ணில் பட நேரம் போனதே தெரியவில்லை.

ஏழு பத்துக்கு அவசரமாய் போய் சேர கபேயில் Blank Noise கூட்டம் ஆரம்பமாகி விட்டிருந்தது. மூன்று மேசைகளை வளைத்துப் போட்டு உட்கார்ந்திருந்த கூட்டத்தில் ஆணும் பெண்ணுமாய் எல்லாவயதுகாரர்களையும் பார்க்க முடிந்தது. மேலோட்டமாக சில விவாதங்கள், கருத்து பகிர்தல்கள், என்ன செய்யலாம், ஏன் இப்படி என்ற பேச்சுகள். ஏழு மணிக்கு, அடுத்ததாய் இந்த மாதம் 29ம் தேடி மறுபடியும் கூடுவதாயும் இடம் பின்னர் அறிவிக்கப் படும் என்று முடிவானது. நேரமிருக்கிறது என்னை உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லி வந்திருக்கிறேன்.

முடிந்தபின் கொஞ்ச நேரம் அரட்டையில் சில அறிமுகங்கள், அவரவர் கேள்விப்பட்டதும், என்ன செய்யலாம்ங்களும். கொஞ்சம் இணையம்... சந்தர்பம் கிடைத்ததில் தமிழ்மணமும் ஆயிரத்தை எட்டும்(எட்டியாச்சா?) தமிழ் வலைப்பதிவுகளையும் பேசி விடை பெற்றேன். அந்த சிறு கூட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த Blank Noise எங்கே எவ்வளவு தூரம் போகும் என்று தெரியவில்லை. எதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பதே முதல் படியாய் இருக்கட்டும்.

Wednesday, March 29, 2006

கொல்கத்தா சங்கதிகள் - 1

கொல்கத்தா காளிகாட்... நான்கைந்து முறை போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அனுபவம் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருந்திருந்தது. வண்டியை விட்டு இறங்கும் போதே தூரத்தில் நான்கைந்து கூட்டமாய் நிற்கும் பண்டிட் கும்பலால் அளக்கப்படுவோம். அவர்களில் ஒருவர் வந்து அவசரமாகப் பேச ஆரம்பிப்பார்... 'நான் கோவில் பண்டிட். பிராமின்... வேணாப் பாருங்க... உள்ளேயிருந்து பூணலை எடுத்துக் காமிப்பார். க்யூவிலயெல்லாம் நிக்க வேண்டாம். நான் தரிசனம் செய்து தருகிறேன். வெறும் இருபது ரூபாய் தான்' என்பார். இதற்கு கொஞ்சம் மசிவது போலத் தெரிந்தால் உடனே அவருக்கென்று இருக்கும் கடைக்குக் கூட்டிப் போவார். அங்கே போனதும், 'செருப்பை இங்கேயே விட்டு விடலாம்', என்று சொல்லி கூட்டி வந்த பண்டிட் விலகிக் கொள்ள கடைக்காரர் பொறுப்பெடுத்துக் கொள்வார். 'பிரசாதம் வாங்கிட்டுப் போங்க... வெறும் இருபது ரூபாய் தான்' என்பார். மறுப்பு எதுவும் சொல்லாமல் இருக்கிறோமென்றால் ஒரு கூடையை கையில் திணிப்பார்.
அதில் பிரசாதப் பொட்டலம், ஒரு செம்பருத்தி மாலை... இப்பவும் எதுவும் பேசவில்லையென்றால் ஒரு தேங்காய், அரக்கிலோ மண்ணிலோ ஆன இரண்டு சிவப்பு வளையல்கள் (கொஞ்சம் கோணல் மாணலாயிருக்கும்)... அவ்வளவுதானென்று நினைக்கிறேன்... இதையெல்லாம் கையில் திணித்து விட்டிருப்பார். இதெல்லாமே ஒரு அவசரத்தில் நடந்திருக்கும். என்ன ஏதென்று யோசிக்கவெல்லாம் நேரமிருந்திருக்காது.

இப்போது கடைக்காரர் விலகிக் கொள்ள மறுபடியும் பண்டிட் வந்து சேர்ந்து கொள்வார். வேக நடையில் கூட்டிக் கொண்டு போவார். கடைசி ஆள் யாரு... எங்கேயிருந்து வருகிறது என்று தெரியாத ஒரு நீளமான க்யூ நகர்ந்து கொண்டிருக்க நம்மை வேறு வழியில் கூட்டிக் கொண்டு போவார். வழியென்னவோ அந்த வரிசைக்குப் பக்கத்திலேயேதான் இருக்கும். இதோ இப்போ இவர்களெல்லாம் 'ஏன் குறுக்கு வழியில் போறே'ன்னு கூச்சல் போடப் போகிறார்கள் என்ற பதட்டத்தோடு தான் நுழைவோம். ஆனால் அதெல்லாம் எதுவும் நடக்காது. சிகப்புக் கொடி தூக்கும் கொல்கத்தாவா இது என்று சின்ன ஆச்சர்யம் வந்து போகும்.

பண்டிட் கூட்டிப் போகும் இந்த வழியின் வாசலில் ஒரு காக்கிச்சட்டைக்காரர் நின்றிருப்பார். ரொம்ப அவசரமாக நமக்காக நகர்ந்து வழிவிடுவார். படியேறி ஒன்றிரண்டு திருப்பத்திற்கு பிறகு அப்பிக் கொண்டு நிற்கும் மனிதர்களோடு ஒரு சின்ன வாசல் பக்கவாட்டில் தெரியும். இங்கே போய் எப்படி தரிசனம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் நம்மைக் கூட்டி வந்தவர் ரொம்ப லாவகமாக அழைத்துப் போவார். நாம் இரண்டு பேராகட்டும், இல்லை நாலு பேராகட்டும்... எல்லோரையும் சேர்த்தணைத்து அந்த சிறிய வாசலுக்குக் கொண்டு போய் விடுவார். வாசலில் இரண்டு பக்கமும் நான்கைந்து பூசாரிகள்... அதில் ஒன்றிரண்டு பேர் மேலே தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு அசௌகரியமாக போஸில் ஊஞ்சலாடிக் கொண்டே வருபவர்களின் பிரசாதங்களை உள்ளே அனுப்புவதிலும் திரும்ப வாங்கிச் சேர்ப்பதிலும் கவனமாயிருப்பார். கூடவே 'இஷ்டப்பட்ட தட்சணை குடுத்துட்டுப் போங்க... ஐநூறோ ஆயிரமோ' என்று கூவி, பத்து ரூபாய் கொடுத்தாலும் சின்ன சலிப்போடு வாங்கிக் கொண்டு ஒரு செஞ்சாந்துப் பொட்டு வைத்து அனுப்பிவிடுவார்.

இது முடிந்ததும் நம்மை கூட்டிப் போன பண்டிட் வேகமாக சன்னதிக்கு முன்னால் இருக்கும் ஒரு மண்டபத்திற்கு அழைத்துப் போவார். அங்கே ஒரு மூலையில் அதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் நம்முடைய கூடையை ஓப்படைப்பார். அவர் ஏதோ மந்திர முணுமுணுப்பிற்குப் பிறகு அந்தத் தேங்காயை உடைத்து, ஊதுபத்தியை கொளுத்தி கொஞ்சம் தள்ளி ஒரு இடத்தில் குத்தி வைக்கச் சொல்வார். இது எல்லாமே ரொம்ப சிரத்தையோடு நடக்கும். நாமும் மறுக்கத் தோணாமல் திடீரென்று முளைத்த பயபக்தியோடு அவர் சொன்னபடியெல்லாம் செய்து கொண்டிருப்போம். தேங்காய் உடைத்தவரிடமிருந்து விடை பெறப் போகும் போது அவருக்கு கொடுக்க வேண்டிய தட்சணையை கூட்டிப் போன பண்டிட் நினைவு படுத்துவார். 'அவர் இருபது வருஷமாக வெறும் பழம் மட்டும் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்' என்று சொல்லி முடிக்கும்போது தேங்காய்
உடைத்தவர் ஐநூறு ரூபாய் கொடுக்கச் சொல்லிக் கேட்பார். இவரும் பத்து ரூபாயை மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொள்வார். ம்ம்ம் சொல்ல மறந்து போனேன்... அந்த வழி விட்ட காக்கிச் சட்டைகாரருக்கு திரும்ப வரும் போது ஒரு பத்து ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.

இத்தோடு முடிந்தது. பண்டிட் அதே வேகத்தோடு நாம் செருப்பு விட்டிருந்த கடைக்குக் கூட்டி வருவார். செருப்பை போட்டுக் கொண்டு அந்தக் கூடையைத் திருப்பிக் கொடுக்கும் போது கடைக்காரர் அவசர அவசரமாக ஒரு அட்டையில் கணக்குப் போட ஆரம்பிப்பார். அந்த பிரசாதம்... வெறும் இருபது அதெல்லாம் அந்த கூடையில் இருந்த ஒரு சின்ன பொட்டலத்தின் விலை. பூ மாலை, தேங்காய், வளையல் எல்லாமாய் சேர்த்து நூற்றைம்பது, இருநூறு ருபாய் என்று சொல்வார். காரசார விவாதம், கொஞ்சம் சாமி பெயரைச் சொல்லி பயங்காட்டல் எல்லாம் முடிந்து வெளியே வரும் போது மிஞ்சியிருப்பது வெறுப்பா, ஏமாற்றப்பட்டதா என்று சொல்ல முடியாத ஒரு கலவையாயிருக்கும்.

அன்றைக்கும் இதையெல்லாம் எதிர்பார்த்திருந்தாலும் காளிகாட் வேறு முகம் காட்டியது. முதலில் வந்த பண்டிட் கதையெல்லாம் கேட்ட பின் 'எனக்கு பிரசாதம் பூஜை எதுவும் வேண்டாம். வெறும் தரிசனம் மட்டும் செய்து வைக்க முடியும்னா வரேன்' என்று சொல்ல, காளியை வெறும் கையோடு பார்க்க போகாதே என்ற பயங்காட்டல், கெஞ்சல் கொஞ்சல் எதுவும் பலிக்காமல்... 'போ... நீயே போய் பாத்துக்கோ' என்று வெறுப்போடு விலகிக் போக இன்னொரு பண்டிட் வந்து அவருடைய பல்லவியை ஆரம்பித்தார். சரி பிரசாதம் எதும் வாங்க வேண்டாம் இங்கே வாங்க என்று ஒரு கடைக்குக் கூட்டிப் போய் ஒரு எவர்சில்வர் பேசினில் வைத்திருந்த தண்ணீரைக் காட்டி, 'இது கங்கா ஜல்... கை கழுவிக்கோங்க' என்றார். ஐயா பண்டிட் அளக்காதீரும் என்று நினைத்துக் கொண்டே கழுவி முடிக்க, பிரசாதம் வேண்டாம்... வெறும் தேங்காயாச்சும் வாங்கிக்கோங்க. இல்லைன்னா காளி...' இன்னொரு முறை பயங்காட்டலை கேட்கப் பொறுமையில்லாததால் அவரை அங்கேயே கழட்டி விட்டு நடக்கத் தொடங்கியிருந்தேன்.

முடிந்தால் காளியைப் பார்த்து போயிட்டு வரேன்மா பொண்ணேன்னு சொல்வது, முடியாவிட்டால் சும்மா ஒரு சுற்று சுற்றிவிட்டுப் போய்விடலாம் என்று தான் உள்ளே போயிருந்தேன். அதற்குப்பின் வழிமறித்த பண்டிட்களை உறுதியான ஒரு வேண்டாமில் விலக்க முடிந்தது. வழக்கமான பாதையை விட்டு நடக்க ஆரம்பித்ததில் காளியைத் தவிர நான்கு கோவில்கள் இருப்பது தெரிந்தது. ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே பின்னால் போக ரத்த சகதியில் தலை வேறு உடல் வேறாய் கிடந்த ஒரு கறுப்பு ஆடும், அதற்கு இடது பக்கத்தில் ஒரு பலிபீடமும். குங்குமமா இல்லை ரத்தமா என்று தெரியாத ஒரு சிவப்பு கசகசப்பு, தாறுமாறாய் கிடந்த மாலைகள், இரண்டாய் மடிந்து கும்பிடும் மனிதர்கள்... இதையெல்லாம் நான் இத்தனை நாள் பார்த்ததில்லை! விரிந்த கண்களும் கொள்ளை கொள்ளையாய் ஆச்சர்யத்தோடும் பத்து நிமிஷம் அங்கேயே குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருந்தேன். வெட்டிக் கிடந்த ஆட்டுக்குப் பக்கத்தில் மார்கெட்டில் பார்க்கும் ஒரு கறிக்கடை செட்டப். வெட்ட மரத்துண்டும் பெரிய கத்தியுமாய் ஒன்றிரண்டு பேர் இதற்கு முன் வெட்டிய ஆட்டை துண்டுகளாக்கிக் கொண்டிருந்தார்கள். காளிகாட்டில் இதை நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. கோவிலில் இப்படி வெட்டிக் கிடக்கும் என்று சுத்தமாய் தெரியவில்லை. 'சாமி கும்பிட வந்த பக்தியையும் காணோம். என்ன தான் செய்யறே இங்கே?' என்ற கேள்வி ஒன்றிரண்டு கண்களில் தெரிய வேறு வழியில்லாமல் அங்கிருந்து நகர வேண்டியதாயிற்று.

விசாரித்து நேரே போய் நின்றது கோவில் அலுவலகத்தில் தான். நெஞ்சில் இடிக்கும் அந்த செங்குத்துப் படிகளில் ஏறிப் போய் ஒரு பரபரப்பான கோவில் அலுவலகத்தை எதிர்பார்த்த என்னை வரவேற்றது மொத்தமே இரண்டு பேர்தான். கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே என்று கேட்டதும் 'நீங்கள் எழுத்தாளரா?' என்று கேட்டு சிலிர்க்க வைத்த பெரியவருக்கு நன்றி. வலைப்பதிவு கதையெல்லாம் சொல்ல, சுத்தமாய் புரியாத போதும் சிரத்தையாய் கேட்டு என்னை கோவிலின் முன்னாள் ட்ரஸ்டியிடம் அனுப்பி வைத்தார். கோவிலுக்கு வந்தோமா சாமி கும்பிட்டோமா என்று போகாமல் இப்படி கேட்க வந்தாலே எங்கயாச்சும் எழுதத்தானாயிருக்கும் என்பது யாரும் யூகிக்கக் கூடியதுதான் என்று அப்புறம் புத்தியில் உரைத்தாலும் எழுத்தாளரா என்று கேட்ட நிமிஷம் வந்த சந்தோஷம்... சந்தோஷம் தான்.

கோவிலுக்கு பின்னாலேயே இருக்கிறது முன்னாள் ட்ரஸ்டி திரு. அம்யோ குமார் ஹல்தார் அவர்களின் வீடு. கூட்டி போனவர், 'இன்னார் அனுப்பி வைத்தார். கோவிலைப் பற்றி கேட்கிறாங்க' என்று சொல்ல, அந்தப் பெரியவர் கண்ணில் நூறு கேள்விகள். கொஞ்சம் கேட்டும் வைத்தார். யார், என்ன என்ற விவரமெல்லாம்
கேட்டுக் கொண்டு, 'கோவிலைப் பற்றி இப்படி திடீரென்று கேட்டால் எப்படி? ஒரு நாள் ஒதுக்கிக் கொண்டு வாங்க. நிறைய இருக்கு' என்று விரட்டி விடும் தொனியில் பேச ஆரம்பித்தவர் கொஞ்ச நேரத்தில் இளக ஆரம்பித்தார்.

ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை எடுத்தும், மேசை மேலிருந்த பெங்காலி புத்தகங்களையும் காட்டிச் சொன்னது...

வங்காளத்தைக் கைப்பற்ற அக்பரால் அனுப்பப்பட்ட மான்சிங், குடிசையாய் இருந்த இந்த கோவிலைப் பார்த்திருக்கிறார். பெரிதாகக் கட்டி நிர்வாகம் செய்வதற்காக 595 பிஹா(bihas) நிலத்தை கோவிலுக்காக அளித்திருகிறார். (பிஹா என்ற அளவை அவர் விளக்கிச் சொல்ல முயன்றது எனக்குப் புரியவில்லை.) 1799 ல் கட்டத் தொடங்கிய கோவில் கட்டும் பணி 1809 ல் முடிந்தது. கோவில் நிர்வாகம் 800 ஜன்சேவாயத்துகளின் பொறுப்பில். இன்றைக்கும் ஒவ்வொரு நாள் பொறுப்பு ஒவ்வொருவருக்கு. காலை நான்கு மணிக்கு தொடங்கும் பூஜையிலிருந்து இரவு மூடும் வரை கோவிலின் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டியது அன்றைய ஜன்சேவாயத் வேலை. கோவிலைச் சுற்றியும் அவர்களுக்கு வசிக்க இடமும், மானியமும் கொடுக்கப் பட்டிருக்கிறது. அன்றைய கோவில் வசூலும் அவருக்கே.

ஒவ்வொரு நாளின் முதல் பலி காளிக்கு. அது ஆடோ, கோழியோ எதுவானாலும் கோவிலுக்கு கொடுத்து விட வேண்டும். அது கோவிலின் சமையலறைக்கு(bhog ghar) போகிறது. அது தவிர மீனும் சாப்பாடுமாய் விருந்து தயாராகி மத்யானம் காளிக்கு படைத்து விட்டு தானமாகக் கொடுக்கப் படுகிறது. கொஞ்சம் அன்றைய ஜன்சேவாயத் வீட்டுக்கும். ஒரு நாள் செலவு சுமார் நாலாயிரம். கோவிலோ ஜன்சேவாயத்துகளோ பலியிடுவதில்லை. வெளியில் இருந்து வரும் பக்தர்கள் பலியிடுவது மட்டுமே. சனிக்கிழமைகளில் அதிகமான அளவில் பலி நடக்கிறதாம். சிலநேரம் இருநூறையும் தாண்டுமாம். அரசாங்கம் இதில் தலையிடுவதில்லையா என்று கேட்டதற்கு, 'இதில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்? பக்தர்களுக்கு நம்பிக்கை. செய்கிறார்கள்' என்றார். தர்ஷண் ஆச்சா என்று கேட்டு இல்லை என்று சொன்னதால் அவருடைய ஆள் ஒருவரோடு அனுப்பி வைத்தார்.

அதே குறுக்குவழி தரிசனம். இது தவிர கீழேயும் ஒரு வழியிருக்கிறது. அது காளியை ரொம்ப பக்கத்தில் பார்ப்பதற்கு. காலைத் தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள். ஆனால் சுமார் நாலடிக்கு நீண்டிருக்கும் தங்க நாக்கை தொடுவதும், தொடாதே என்று பூசாரிகள் கத்துவதும் தவறாமல் நடக்கும். வெளியிலிருந்து எட்டிப் பார்க்க மட்டும் அனுமதிக்கப் பட்ட 'போக் கர்' உள்ளே குமித்து வைக்கப் பட்டிருந்த மீன் வறுவல்... கோவில் சமையல் அறையில் அதை சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. இரண்டாவது முறை பலிபீடத்திற்குப் போன போது சீன ஜாடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த வாலிபன் கட்டாயம் இன்னொரு தரம் வர வேண்டும் என்று
முடிவெடுக்க வைத்தான்.

திரு. ஹல்தார் உடன் நடந்த இரண்டாவது சந்திப்பில் பெரியதாக எதுவும் தெரியவில்லை. மறுபடியும் அதே தகவல்களை முதலிருந்து சொல்லி முடித்தார். நான் கேட்ட ஒன்றிரண்டு கேள்விகளுக்கும் அவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. எண்பத்து சொச்சம் வயதானவரை அதிகம் தொல்லை செய்ய வேண்டாமென்று கோவில் அலுவலகத்திற்கு நடையை கட்டினேன். அந்த சீனர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாரே என்று காமிராவும் கையுமாய் எதற்கும் அலுவலகத்தில் ஒரு வார்த்தை சொல்லி விட்டு எடுக்கலாமென்று போன போது, ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்து அனுமதி பெறாமல் ஆகவே ஆகாது என்று மறுத்து விட்டார். அவசரம்,
ஒரேயடியா ஊரை விட்டுப் போறேன் என்ற கெஞ்சல் எதுவும் செல்லுபடியாகவில்லை. 'இன்னைக்கு வியாழன். எழுதிக் கொடுத்துட்டு போங்க. சனிக்கிழமை வந்து எடுத்துக்கலாம். அப்பவும் பலிபீடத்தையெல்லாம் எடுக்கக் கூடாது' என்று சொல்ல, சனிக்கிழமையா?!... அத்தனை பலிகள்... அந்த நேரத்தில் அங்கே என்ன மாதிரி ஒரு உணர்விருக்கும்... அந்த பக்தி வெளிப்பாடு இதெல்லாம் பார்க்கணுமே என்ற யோசனையெல்லாம், சாமானை மூட்டைக் கட்ட வரேன் என்று சொன்ன பேக்கர்ஸ் வருகையால் முடியாமல் போனது.

எல்லா இடத்திலேயும் எதாவது விட்ட குறை தொட்ட குறை இருக்கணுமே... இல்லாமல் போனால் ஒரு பூர்த்தியும், அதனாலயே நினைவிலிருந்து அகன்று போவதுமாயிடாதா? காளிகாட்டிற்கு ஒரு சனிக்கிழமை காலை விஜயம் பாக்கியிருக்கிறது.

Friday, March 24, 2006

மிஸ் யூ கொல்கத்தா

ஒன்றரை வருட கொல்கத்தா வாழ்கை ஒரு செவ்வாய்கிழமையோடு முடிந்து போனது. கிளம்ப வேண்டும் என்றான போது நூறு கை கொண்டு கொல்கத்தாவை துழாவ வேண்டும் போலிருந்தது. தேடிப் பார்த்த சிலதும் பார்க்க முடியாமல் போனதும், பெங்காலி சினிமாவுமாய் கழிந்த கடைசி நாட்கள். கொஞ்ச வருஷமாய்
கொண்டிருக்கும் வைராக்கியம் விலகி நின்று கைகட்டி வேடிக்கை பார்த்ததும், 'மனுஷங்களோட ஒட்ட மாட்டேன்னு தானே சொன்னே... இப்போ ஊரோட ஒட்டிப் போனியே... பாத்தியா உன்னால இப்பவும் முடியலை'ன்னு சிரித்துக் கொண்டே சொன்னதும் கேட்டது.

ரோட்டிற்கு அந்தப் பக்கம் இருந்து, பார்க்கும் போதெல்லாம் வெறும் புன்னகை மட்டும் பரிமாறிக் கொண்டிருந்த மிஸஸ். எதிர்வீடு (இப்பவும் பெயர் தெரியாது)... திடீரென்று வந்த ஞானோதயத்தில் முந்தின இரவு போயிட்டு வரேன் என்று சொல்லி வரப் போனதும், எங்கெல்லாமோ அலைபாய்ந்த பேச்சு வலைப்பதிவிலும், கொல்கத்தா தேடலிலும் வந்து நின்றதில், 'நாம் முன்னரே சந்தித்திருக்க வேண்டும்' என்று இருவருக்குமே தோன்றியது. இன்னும் பத்து வருஷம் போனால் கையில் எடுத்தாலே உதிர்ந்து விடும் போலிருக்கும் ஒரு இரட்டை தலையணை சைஸ் புத்தகத்தைக் காட்டி, 'பெங்கால் வரலாறு பற்றிய புத்தகம்... என் அத்தை கிட்ட இருந்து எடுத்து வந்தேன். அவங்க கிட்ட இதுமாதிரி நிறைய இருக்கு' என்றுசொன்ன போது புத்தகத்திற்காக இல்லாவிட்டாலும் அந்த பாதையில் நிறைய தூரம் பயணித்திருந்திருக்கலாம் என்றிருந்தது.

மாலை வேளைகளில் மொட்டை மாடியில் நடக்கையில் தெரியும் மேகம், சிகப்பு விளக்கெரியும் தூரத்து டவர், சுற்றியும் முளைத்துக் கிடக்கும் மரம் செடியெல்லாம் பார்க்கும் போது கொல்கத்தாவைப் போலத்தான் இருக்கிறது. முச்சு விடும் சத்தம் கூடக் கேட்கும்... அந்த அமைதிக்காகவே சர்வசுதந்திரமாய் வீடெல்லாம் நடமாடும் குருவிகள் போய் மாறி மாறி நடமாடிக் கொண்டிருக்கும் மகளோ மகனோ இது சென்னை என்று நினைவு படுத்துகிறார்கள். ராத்திரிகளில் திடீரென்று கலையும் தூக்கத்தில் உணரும் வெறுமையை அசை போடும் அனுபவமும் புதிதாய் இருக்கிறது. தடுமாற்றத்தோடு அலைபாயும் பந்து போல உணர்கிறேன். நிதானத்திற்கு வரும் போது அல்லது நிதானத்திற்கு வருவதற்காகவேயாவது மறுபடியும் எழுத ஆரம்பிக்க வேண்டும். சொல்ல கொஞ்சம் கொல்கத்தா கதை இருக்கிறது.

Monday, February 13, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 4(கடைசி)

மறுநாள் காலையில் திரும்ப அஸ்ஸாம். 'காஸிரங்கா போக நாலைந்து மணி நேரம் ஆகும். மெதுவாகப் போனாலும் சாயந்தரம் போய் சேர்ந்திடலாம்' என்று ஓட்டுனர் சொன்னதால் வழியில் அந்த உமியம் ஏரியில் கொஞ்சம் இறக்கிப் போக முடிவானது. எந்த அசைவோ ஓசையோ இல்லாமல், ஒரு மெகா சைஸ் சித்திரம் மாதிரி இருந்தது ஏரி. அங்கங்கே ஒன்றிரண்டு மனித முகங்கள்... அதுகூட சித்திரத்தின் ஒரு பகுதி போலத்தான். சிதைந்து போன ஒரு தார்ச்சாலை இறங்கி ஏரியின் ஒரு மூலையில் அமிழ்ந்து போயிருந்தது. அந்த சாலையிலே நடந்து போய் ஏரித் தண்ணீரில் கால் வைத்ததும் அதன் ஜில்ல்லிர்ப்பு உடம்பெல்லாம் ஓடியது. இறங்கி விடலாமா என்ற வந்த ஆசையோடு எங்கே உடுப்பு மாற்ற என்ற கேள்வியும் வந்ததில் வெறும் கால் அளைதலோடு முடிந்தது.

அங்கே தொடங்கிய பயணம் இருட்டுவதற்கு முன்னால் காஸிரங்காவில் முடிந்தது. '·பாரஸ்ட் கேம்பில் தங்க ஏற்பாடாகியிருக்கிறது. ஒரு யானை சவாரி, ஒரு ஜீப் சவாரி, ராத்திரியும் காலையும் சாப்பாடு, தலைக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய். எல்லாம் அவங்க பாத்துக்குவாங்க' என்று கொல்கத்தாவிலிருந்து தொலைபேசி சொன்னதில் சுவாரசியமான எதிர்பார்ப்பு இருந்தது.

பிரதான சாலையிலிருந்து உள்ளடங்கியிருந்த கேம்பிற்குள் நுழைந்ததுமே பிடித்துப் போனது. சின்னச் சின்ன குடிசைகளாக ஏழெட்டு, நடுவில் ஒரு சாப்பிடும் இடம், வேலிக்கு வெளியே ஒரு தேயிலைத் தோட்டம், அதற்கு பின்னால் நீளும் காடும் மலையுமாய். வணக்கமும் விசாரிப்புகளும் முடிந்தவுடன் குடிசைகள் திறந்து விடப்பட்டது. சுமாரான சுத்தமாய் படுக்கை, போர்த்திக்கொள்ள ஒரு அழுக்கு ரஜாய்.... 'இதை நான் தொடப் போவதில்லை' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டது அதற்குக் கேட்டிருக்கும்... 'ம் ம்... பார்க்கலாம்' என்று அது சிரித்தது எனக்குக் கேட்கவில்லை.

எரியத் தொடங்கிய கேம்ப் ·பயர், சுடச்சுட தேநீர், ராத்திரி சாப்பிட என்ன வேண்டும் என்ற விசாரிப்பு எல்லாம் முடிந்து, 'கஸ்டமர் குஷ்' ஆன நேரத்தில் 'அந்த யானை சவாரி ஆகாது போலிருக்கிறது. அதுக்குப் பதிலா இங்க பக்கத்துல ஒரு நைட் ச·பாரி போயிட்டு வந்துடுங்களேன்' என்று அந்த மேனேஜர் சின்னப் பையன் நைச்சியமாகப் பேசி சம்மதிக்க வைத்து விட்டார். இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கும்மிருட்டில் ஒரு ஓடைக்குப் பக்கத்தில் ஜீப்பை நிறுத்தி, 'சத்தம் போடாம இருங்க... எதாச்சும் வந்தாலும் வரும்' என்று சொல்ல, வந்தாலும் தெரியாத அந்த கும்மிருட்டில் காத்திருந்த அரை மணிநேரத்தில் கொஞ்சம் மின்மினியும், இன்னொரு நைட் ச·பாரி ஜீப்பும் தான் வந்தது.

திரும்ப கேம்பிற்கு வந்த போது நாலைந்து ஜீப்புகளும் கொஞ்சம் கூட்டமுமாயிருந்தது. விசாரித்ததில், பத்து நாளாக தங்கியிருக்கும் அஸ்ஸாமி பட ஷ¥ட்டிங் கோஷ்டி என்று தெரிந்தது. அங்கேயே படப்பிடிப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். குளிர் ஏறத் தொடங்கியிருந்தது. சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு மணி நேரமாகியும் இன்னும் ஏற்பாடுகளே தொடர்ந்து கொண்டிருந்தது. டைரக்டரையோ, நடிகர்களையோ யாரையும் காணவில்லை. மூட்டி வைத்திருந்த நெருப்பை விட்டு விலகும் வரை குளிர் தெரியவில்லை. குடிசைக்குள் நுழைந்ததும் தான் தட்டியில் மண் பூசிய அந்த சுவரெல்லாம் வேலைக்காகாது என்று தெரிந்தது. கைவசமிருந்த ஸ்வெட்டர், ஷால் எல்லாம் போதாமல் வேறு வழியில்லாமல் அந்த ராஜாயை எடுத்து போர்த்தியும் எங்கெல்லாம் எத்தனை எலும்பு ஓடுகிறது என்று எண்ணிக் கொண்டு இரவு ஓடியது.

குளிரில் தூக்கம் வராமல் நடு ராத்திரியில் ஒரு தரம் லேசாக கதவை திறக்க, வெளியே பாட்டிலும் கையுமாய் உட்கார்ந்திருந்த போலீஸையும் கூட்டாளிகளையும் பார்த்ததில் ஹிந்தி சினிமா சீன்கள் நினைவுக்கு வந்ததில் வெளியே போகும் உத்தேசத்தை விட்டு மறுபடியும் ரஜாயைத் தஞ்சமடைய வேண்டியதாயிற்று.

அரைத்தூக்கத்தில் கழிந்த அந்த ராத்திரி, பறவைகள் சத்தத்தில் விடிந்தது. வீட்டில் இருக்கும் போது பார்த்தே இருக்காத ஐந்தரை மணி காலையை அந்த கேம்ப்பில் பார்க்கக் கிடைத்தது. யாரும் விழித்திருக்காத அந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் பரவும் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டு தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்தது மறக்க முடியாது.

அதற்குப் பிறகு போயிருந்த ஜீப் ச·பாரி, பச்சை பூத்திருந்த காட்டு வழி, தூரப்பார்வைக்கு காட்டெருமையாகத் தெரிந்து காண்டாமிருகம் தான் என்று ஊர்ஜிதமான அந்த ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு காண்டா, இரண்டு மான்கள், ஒரு ஆமை(!), நான்கைந்து காட்டெருமை... இதெல்லாம் அந்த காலை விருந்துக்குப் பின்னால் சாப்பிட்ட கொறிப்புகள். கிளம்பும் போது தான் தெரிந்தது ராத்திரி பார்த்து மிரண்டடித்து போனது சினிமா போலீஸ் என்று! தைரியமாய் வெளியே வந்து டைரக்டர் கண்ணில் பட்டு அஸ்ஸாமி படத்தில் அண்ணியாகவோ அக்காவாகவோ நடித்திருக்கக் கூடிய சந்தர்ப்பம் பாழாய் போன நடுஜாம பயத்தில் பறி போனது! ம்ம்ம்...

Tuesday, February 07, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 3

வாசித்துக் கொண்டே போகையில் எங்கேயாவது ஒரு இடத்திலாவது 'படவா! சரியான குசும்பன்டா நீ'... இப்படியாக மனசில் ஓடி ஒரு புன்னகை வர வைக்கும் எழுத்தாக எனக்கு குஷ்வந்த் சிங்கின் எழுத்து இருந்திருக்கிறது. அவர் இந்த தலைப்பிலா?... இது தான் முதலில் தோன்றியது Obituaries - death at my doorstep புத்தகத்தை கடையில் பார்த்த போது. மேலும், 'தவிர்க்க முடியாததுதானென்றாலும் பேசாமலும் வாசிக்காமலுமாவது இருக்கலாம். அதை நான் வாங்கப் போவதில்லை' என்று தான் முதலில் முடிவானது. ஆனாலும் சில விரட்டல்களைத் தவிர்ப்பது சிரமம். இதுவும் அப்படியே.

வெவ்வேறு சமயங்களில் குஷ்வந்த் சிங் எழுதிய மரணச்செய்தி குறிப்புகளின் தொகுப்பு. குஷ்வந்த் சிங் அவருடைய இருபதுகளில் அவருடைய obituary அவரே எழுதியிருப்பதாக எங்கேயே வாசித்திருக்கிறேன். புத்தகம் அதனோடு தான் தொடங்குகிறது. அது எனக்குத் தெரிந்த குஷ் எழுத்தின் சாயலில் கொஞ்சமும் இல்லை. சாவைப் பற்றி அவர் கேட்டறிந்தவைகள்... கேட்டவர்கள் வரிசையில் தலாய் லாமா, ரஜனீஷ், வி.பி.சிங்... தெளிவில்லாத விளக்கங்கள்.

புத்தகம் உள்ளே இழுத்துக் கொள்வது புட்டோவின் இறுதி நாட்களை விவரித்துக் கொண்டு போகும் போது தான். பனிரெண்டு பக்கங்களுக்கு நீளும் அந்தக் குறிப்புகள்... சாப்பிட்டுக் கொண்டே வாசித்துச் செல்ல, ஒரு கட்டத்தில் அது சொல்லத் தெரியாத அவஸ்தையாகி, புத்தகத்தை மூடி வைக்க வைத்தது. அரசியல் நண்பர்கள், எழுத்தாள நண்பர்கள், அவருடைய வீட்டு காவல்காரர்... தொடரும் மரணச் செய்திகள். வெறும் வார்த்தைகளாயில்லாமல் உணர்வுகளாய். தெரிந்த முகங்களும் தெரியாத தகவல்களும். ஒரே சோக கீதம் பாடாமல், இயல்பாய் சொல்லிப் போகிறது. இந்த புத்தகத்தில் கூட மனுஷன் குறும்புத்தனத்தைக் காட்டாமல் போகவில்லை. இத்தனை சாவு சமாச்சாரங்களையும் படிக்க தயார் செய்யவென்றேயாயிருக்கும்.

'கொஞ்சம் சினிமா' வில் அந்தர்மகாலில் தொடங்கி பார்த்த பெங்காலிப் படங்களையும், கொஞ்சம் ஹிந்தி படங்களையும் சொல்ல நினைத்தது... பெங்காலிப் படங்கள் எண்ணிக்கை நீண்டு போனதில் அதைத் தனியாகத் தான் எழுத வேண்டும். அந்த வரிசைப் படங்களில் கனத்து போன தலையை லேசாக்க இடையில் பார்த்த
'Bluffmaster' ம் , Neal n Nikki' ம் முழு மசாலா. சும்மா அபிஷேக்பச்சனை பார்க்க்க்கவும், ம்யூஸிக்கிற்காகவும் Bluffmaster நல்ல சாய்ஸ். கூல் n லைட் மூவி. Neal n Nikki... ஒரு பைசாவுக்கு தேறாது. இந்த உதய் சோப்ராக்கு என்ன ஆச்சு? நல்லாத்தானே இருந்தார்? அந்த ஓவர் சைஸ் புஜங்களும் அதற்கு கொஞ்சமும் பொருந்தாத முகமும்... கொடுமை! அநியாய மினி சைஸ் ஆடைகளில் தனிஷா... இவ்வளவும் குறைச்சிருக்க வேண்டாம் தான். வேஸ்ட்.

அதையெல்லாம் ஒதுக்கி விட்டு அதிகம் கவனம் பெறாத இந்த படம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். Hazaar Chaurasi ki maa.

இந்த படத்தை வாங்கும் போது இது என்ன படம், எதைப் பற்றியது என்ற எந்த அனுமானமும் இல்லை. இறுக்கமான ஜெயாபச்சன் முகமும், கோவிந்த் நிஹலானி என்ற பெயரும் தான் அதை வாங்கச் சொல்லியிருக்க வேண்டும். படம் தொடங்கி இரண்டு நிமிடம் வரை தலைப்புக்கு அர்த்தம் கூட தெரிந்திருக்கவில்லை. அப்புறம்
தான் தெரிந்தது hazaar chaurasi... 1084 என்று. 1084 எண் உடலைக் காட்டி அடையாளம் காணச் சொல்வதுடன் படம் தொடங்குகிறது. அதற்குப் பிறகே தன் மகன் நக்ஸலைட் என்று தெரிந்து கொள்ளும் ஒரு அம்மாவின் தேடல்கள்.

மஹாஸ்வேதா தேவியின் Hazaar chaurasir maa என்ற நாவலின் திரைப்பட வடிவம். நக்ஸலைட் என்று கொல்லப் பட்ட மகனின் சுவடே இல்லாமல் செய்ய முயற்சிக்கும் குடும்பம், அதிலிருந்து விலகி மகனின் வேர்களைத் தேடிச் போவதும் தெரிந்து கொள்வதுமாய். கொலை செய்யப் பட்ட இரவு அவன் தங்கியிருந்த நண்பன் வீடு... அவனின் அம்மாவிடமிருந்து மகனுடைய இன்னொரு முகத்தைத் தெரிந்து கொள்வதும், எப்படி இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போனது என்ற குற்ற உணர்ச்சியும், அதிலிருந்து மீண்டு வருவதுமாய் போகும் கதை.

அம்மாவாக ஜெயாபச்சன். அந்த நிதானம், இறுக்கமான அமைதி... நிறைவாக செய்திருக்கிறார். நண்பனின் அம்மாவாக சீமா பிஸ்வாஸ். உடைந்து அழும் அந்தக் காட்சி ஒன்று போதும். மகன் பாத்திரத்தில் ஜாய் சென்குப்தா. காதலியாக நந்திதா தாஸ். பேரலல் சினிமாவின் வழக்கமான முகங்கள். எந்த அலங்காரமும் இல்லாத க்ளீன் மூவி.

எழுபதுகளின் கல்கத்தா, சொல்லப் போனால் பளபளக்கும் பெரிய சாலைகளுக்கு பின்னால் இன்னமும் அப்படி ஒரு கல்கத்தா இருக்கத்தான் செய்கிறது. பெரிய மாற்றங்களில்லாமல். நக்ஸல் இயக்கம் விட்டுப் போன வலி இன்னமும் எத்தனையோ குடும்பங்களில் மிச்சம் இருக்கலாம். அதனாலேயே அந்த நாட்களின் வேகம் இல்லாமல் போயிருக்கலாம். கோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போய் நின்று பார்த்தால் அதனுடைய நியாயங்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

இதே விஷயத்தைத் தொட்ட Hazaaron khwaishien aisi... ஒரு பீரியட் படம் என்ற பார்வையில் இன்னும் அதிகம் கவனம் எடுத்திருக்க வேண்டுமோ?

இதோ இங்கே சால்ட் லேக்கில் எழும்பும் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு தோண்டிய பள்ளங்களில் கிடைத்த எலும்புகள், ஏரியில் இப்படித் தூக்கி போட்ட கணக்கில்லாத சடலங்களின் மிச்சங்கள் என்று கேள்விப்பட்ட செய்தி நினைவுக்கு வந்து போகிறது. கொல்கத்தாவும் அதன் வரலாறும், ஆழமும் அகலமுமாய்... ரொம்பப் பெரிசு.

கொல்கத்தா புத்தக கண்காட்சி

31 வது கொல்கத்தா புத்தக கண்காட்சி ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. இந்த வருட தீம் ஸ்பெய்ன். 578 ஸ்டால்களில், ஒரு நாள் மூன்று மணி நேரத்தில் கால் பங்கு கூட பார்த்து முடிக்க முடியவில்லை. இன்னொரு தரம் பார்த்து விட்டு சேர்த்து எழுதலாம் என்ற இருக்க, முடிந்தே போய் விட்டது.

'மைதான்' நாசம் ஆகிவிட்டது, சுத்தம் செய்து முடிக்க ஒரு மாதமாவது ஆகும் என்ற புலம்பல்களும், புத்தக கண்காட்சியில் உணவகங்களையும் மற்ற விற்பனைகளையும் அனுமதிக்கலாமா கூடாதா என்ற விவாதங்களுமாய் இருக்கிறது. 'ஆடியோ விஷ¤வல் சரக்குகள் கூட வாசிக்கும் பழக்கத்தைக் குறைத்து விடும். தள்ளிப் போய் வித்துக்கோ' ன்னு ஒரு கூக்குரல்.

புத்தகம், ம்யூஸிக், சாப்பாடு... இதில் கொல்கத்தாவாசிகளை அடிச்சுக்க முடியாது தான். விடவும் மாட்டார்கள். ஜிப்பா ஜோல்னா பை சகிதமாயும், கோட்டு சூட்டுமாயும் பங்காலிபாபுகள், வயதானவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், காட்டன் சேலைப் பெண்கள்... கலந்தடித்த கூட்டம்.

'குல்லம் குல்லா லிக்கா ஹை கியா(வெட்ட வெளிச்சமா எழுதியிருக்கா)'?... ஜீன்ஸ் சுந்தரிகளும் சுந்தரன்களுமாய் இருந்த கூட்டத்தில் இருந்து வந்த குரல். அவர்கள் தேடிக் கொண்டிருந்தது essays & letter writing section ல்! இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், குருதேவும் நிறைந்திருக்கிறார்கள். 'கோட்டோவியங்களில் கல்கத்தா' இதற்கென்றே ஒரு ஸ்டால். sculptor workshop... ஒரு ஸ்டாலில்.

சாகித்ய அகாடமி ஸ்டாலின் ஒரு சின்ன அலமாரியில் பத்து பதினைந்து தமிழ் புத்தகம் கண்ணில் பட்டது. தமிழ் சங்கம் இருக்கிறது. தியாகராஜர் ஹாலில் கச்சேரி செய்ய சுதாவும், சௌம்யாவும் வந்து போகிறார்கள். கவி பாரதி பெயரில் ஒரு தெரு இருக்கிறது. சாயந்திர நேரத்தில் அந்த தெருவில் கொஞ்சம் நடந்துட்டு வந்தால் ஊருக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கிறது. தமிழ் புத்தகத்துக்கு மட்டும் ஏன் தேவை இல்லை?!

நான் வாங்கியது:

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழாக்கம்: சுந்தர ராமசாமி.

Binodini - Rabindranath Tagore

The Sandal Trees - Kamala Das

May you be the mother of a hundred sons - Elisabeth Bumiller.

Thursday, February 02, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 2

'இவ்வளவு பக்கத்தில நான் இருக்கேன். பெருசா டெல்லி கிளம்பிட்டீங்க. சரி சரி கட்டின பொட்டிய பிரிப்பானேன். இங்க வந்துட்டு போங்க'... ஒற்றைக் கொம்பால் காதில் கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டே முனங்கிய காஸிரங்கா காண்டாமிருகத்தின் குரல் கேட்டு... 'நாம அஸ்ஸாம் போறோம்' என்று முடிவானது.

கௌஹாத்தி, மாநிலத் தலைநகருக்கான லட்சணங்களைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படாமல் தன் போக்கில் இருந்தது. புதிதாக முளைத்திருந்த மால்கள் சூழலோடு ஒட்டாமல் தனியாகத் தெரிந்தது. விமான நிலையத்திலிருந்து தங்கும் இடத்திற்குப் போகும் வழியில் குறுக்கிட்ட இரண்டு கிலோமீட்டர் மார்க்கெட்டைக் கடக்க இரண்டு மணிநேரம் ஆனது. எல்லாம் அந்த மஞ்சள் கோடு மீறல் தான். காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு ட்ராபிக் போலிஸ்காரர் கண்ணில் படவில்லை.

கௌஹாத்தியில் 'கட்டாயம் பார்க்க' என்று பயணப் புத்தகம் சொன்னதில் மூன்று கோவில்களை மட்டும் பார்த்த எங்கள் மக்கள்ஸ்க்கு சரியான சலிப்பு. தீர்த்த யாத்திரையா வந்திருக்கோம் என்று குதிக்க ஆரம்பித்தவர்களை சமாதானப் படுத்தி, முதலில் போனது காமாக்யா மந்திர். அமிதாப்பச்சனுக்காக ரெண்டு எருமைகளை பலி கொடுத்த கதையெல்லாம் திரும்ப வந்து ஆ.வி படித்துத் தான் தெரிந்தது. கோவிலுக்கு உள்ளே நுழையும் போது சிலிர்த்துக் கொண்டு வந்த கடாக்குட்டிகளெல்லாம் அதுக்குத்தானா?!

நீளமான க்யூ இருக்கும், குறைந்தது ரெண்டு மணிநேரமாவது ஆகும் என்று பயமுறுத்திய கதையையெல்லாம் பின்னால் ஒரு ஐம்பது பேராவது நின்று, திரும்பிப் போக வழியில்லாமல் போன சமயத்தில் கணவர் மெதுவாக எடுத்து விட்ட தகவல். வளைந்து வளைந்து செல்லும் க்யூவில் ஆறேமுக்காலாவது திருப்பத்தில் கண்ணில் பட்ட ஸ்வாமிதான் நாங்கள் பார்க்க வந்த காமாக்யாவோ என்று நினைத்தால், 'இதைக் கும்பிட்டுக்கோங்க இன்னும் உள்ள போகணும்' என்று சொன்ன 'உள்ளே' ரொம்ப இருட்டாய் இருந்தது.

அதிகம் வெளிச்சமில்லாத ஒரு திருப்பத்தில் ஒழுங்கில்லாத நான்கைந்து படிகள். இறங்கினால், வரிசையாய் உட்கார்ந்திருந்த பூசாரிகளைத் தவிர வேறேதும் தெரியவில்லை. வட்டமாய் ஒரு தாழ்வான மேடை, அந்த வட்டத்திலேயே பிரம்மாண்டமான ஒரு இருட்டு கோபுரம். உள்ளே போன வழியிலேயே திரும்பி வர வேண்டும். மண்டியிட்டு கீழே சுரக்கும் சுனை நீரைத் தொட்டுப் பார்க்கச் சொன்னபடி செய்து விட்டு வெளியே வர, அது 'ஜஹான் ஸே ஹம் ஆயே, வோ ஸ்தான் ஹை' ( நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடம்) என்று சொன்னதை 'கருப்பை' என்று சொன்னதாக நான் புரிந்து கொண்டேன். சரியா தவறா தெரியவில்லை. அதைச் சொல்லவே அவருக்கு ஏனோ அவ்வளவு தர்மசங்கடம். மேலும் கேள்வி கேட்டு குடையும் ஆர்வம் வரவில்லை.

சாதாரண நாட்களிலேயே இவ்வளவு அசௌகரியமான வழியாயிருக்கும் அந்த இடம் விசேஷங்களில் எப்படி இருக்கும்? எப்படி கூட்டத்தை சமாளிப்பார்கள் என்று கவலையாயிருந்தது. ஒரு ஆள் சறுக்கினாலும் பதட்டமும் கலவரமும் தவிர்ப்பது சிரமமாயிருக்கும். எங்கே போனாலும் இது மாதிரி யோசனை தான் வருகிறது. பக்தி?!

அதை முடித்து அடுத்ததாய் போன பாலாஜி கோவில் அச்சு அசலான தமிழ்நாட்டுக் கோவில். புளியோதரையும் சுண்டலும் தான் மிஸ்ஸிங். சர்ச்சைக்குள்ளான காஞ்சி பெரியவர்கள் சுவர்களில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது கோவிலை தவிர்த்து அன்றைய சுற்றலை முடித்துக் கொண்டோம். தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த பிரம்மபுத்திராவை காரிலிருந்து பார்த்துக் கொண்டதோடு சரி.

மறுநாள் காலை ஷில்லாங் போக கார் வந்திருந்தது. முதலில் சிரபுஞ்சி பார்த்து விடலாம் என்பது ஓட்டுனர் ஆலோசனை. 'அதிக மழை' பட்டத்தை பக்கத்து ஊருக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாய் மகன் தகவல் சொல்ல, 'அச்சச்சோ அப்படியா?!' என்றோம். சொன்ன மாதிரியே நாங்கள் போயிருந்த போது மழையொன்றும் காணோம். திடீரென்று மேகம் திரண்டு சடசட வென்று பெய்யும் என்று சொல்லியிருந்தது நாங்கள் இருந்த மூன்று நான்கு மணி நேரம் வரை நடக்கவில்லை.

தூரப் பார்வைக்குத் தெரியும் ஒன்றிரண்டு அருவிகள், அழகாய் ஒரு குகை... இது சிரபுஞ்சி. அருவியைப் பார்த்தோம் என்று போனில் சொன்னதும் அம்மா கேட்டது, 'குளிச்சீங்களா?' என்பது தான். குளிக்க முடியாத அருவியெல்லாம் வேஸ்ட் என்பது அவருடைய அபிப்ராயம். தண்ணீர், அது ஆறோ குளமோ... இறங்கி அளைய முடியணுமாம். சரிதான்.

'ஐநூறு மீட்டர் நீள குகைக்குள்ளே நுழைந்து வருவது சிரமம். ஆம்பிள்ளைகள் நீங்க ரெண்டு பேர் வேணா போகலாம், பொம்பளைங்களுக்கு கஷ்டம்' என்று அந்த ஓட்டுனர் சொல்லாமல் இருந்தால் அதில் நுழைந்தே தீரும் பிடிவாதம் வந்திருக்காது தான்! தண்ணீராலா, இல்லை நடந்து நடந்தே அப்படி ஆனதா என்று தெரியவில்லை, துடைத்து வைத்தது போல மொழுமொழு பாறைகள். இருட்டுக் குகைகளும் இணைக்கும் சிறு துவாரங்களுமாய்... எப்போ வழுக்கி விழப்போறேனோ, விழுந்தால் எப்படி இங்கிருந்து வெளியே போவது, உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம்னு இவர் ஆரம்பிச்சுடுவாரே... இதெல்லாம் தான் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் நிதானமாய் பார்த்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. அப்போதென்னவோ அதை கடந்து முடிக்கும் வேகம் தான் இருந்தது.

வழியில் உமியம்(Umiam) ஏரியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே ஷில்லாங் போய் சேர்ந்தோம். இரவு தங்கல் அங்கேதான் ஏற்பாடாகியிருந்தது. சாப்பிடப் போகும் போது குளிர் அதிகமாயிருந்ததில் என்னதான் அப்போது டெம்பரேச்சர் இருக்கும் என்ற ஆர்வத்தை மார்க்கெட் பகுதி மணிக்கூண்டு தீர்த்து வைத்தது. எட்டு டிகிரி என்று சொன்னதை நம்ப சிரமமாயிருந்ததது. சாப்பாடெல்லாம் முடித்து ஏழுமணி சுமாருக்குத் (ஏழு மணிக்கெல்லாம் ஊர் அடங்க ஆரம்பித்துவிடும் என்று ஓட்டுனர் முன்னாலேயே சொல்லியிருந்தார்) திரும்பி வரும் போது மணிக்கூண்டு வெப்பம் காட்டி மூன்று என்றது. வெப்பம் காட்டி தவறாக வேலை செய்கிறது என்றுதான் தோன்றியது. அறைக்குள் ஹீட்டரைப் போட்டு கம்பளியையும் போர்த்தி படுத்ததில் எதுவும் தெரியவில்லை.

தொடர்கிறது...

Tuesday, January 31, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 1

அகிலாண்டம்மாள் சுருக்குப்பையில் காசு தேடும் போது... கொஞ்சம் சில்லரை, ஆறாய் மடித்த ஒன்று, இரண்டு ரூபாய் நோட்டுகள், வெட்டுப் பாக்கு, சட்டை பட்டன், இரும்பு வளையம்(?!)... என்னவெல்லாமோ கண்ணில் படும். இரண்டு புத்தகங்கள், ஒரு பயணம், கொஞ்சம் சினிமா... என்று தலைப்பு வைத்து எழுதத் தொடங்கிய இந்தப் பதிவை (ஏறக்குறைய)முடிக்கும் போது ஏனோ பாட்டியின் சுருக்குப்பை ஞாபகம் வந்ததில் தலைப்பு மாறி விட்டது.

முதலில் பயணத்தோடு தொடங்குகிறேன், மற்றவை அங்கங்கே சேர்ந்து கொள்ளும்!

மாலை ஆறு மணிக்குக் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால் கிளம்பப் போகும் அறிகுறி ஒன்றும் எட்டு மணி வரை காணவில்லைதான். இதோ இதோ என்று சொல்லி இரவு ஒன்பதரைக்கு கிளம்பியது. காத்திருந்த நேரத்தில் எட்டிப் பார்க்கத் தொடங்கிய அலுப்பை விரட்டியடிக்க சொல்லிக் கொண்டது, 'சேரும் இடத்தை விட சேர்ந்து செல்லும் இந்தப் பயணத்தை அனுபவியேன்' என்பது தான்.

ஆனால் Spicejet முதலாளிக்கு என்னோடு சேர்த்து அந்த இருநூற்றுச் சொச்சம் பயணிகளை சும்மாவாச்சும் கொல்கத்தாவிலிருந்து லக்னோ வரைக்கும் கூட்டிப் போய் திரும்பக் கூட்டி வர ஏதோ நேர்த்திக் கடன் போலிருக்கிறது. அதை அந்த டிசம்பர் மாத குளிர் ராத்திரியில் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டார்.

விமானத்தின் உள்ளே நுழைந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர். அடுத்து நிறைய காற்றும் கொஞ்சம் வேர்க்கடலையும் அடைத்த ஒரு பொட்டலம். லக்னோ வரைக்கும் போனதும் கேப்டன் அழைத்து 'தில்லி நேற்றெல்லாம் காலை நாலு மணி வரை கூட நல்லாத்தான் இருந்தது, இன்னைக்கு இதோ பதினோரு மணிக்கே மசமசத்து விட்டது. எனக்கு வேற எங்கேயும் இறக்க அனுமதியில்லை, அதனால் திரும்ப கொல்கத்தாவிற்கே போகிறோம்' என்று அறிவித்த போது... தாஜ்மகால், நைனிதால், முசோரி, குளிர், அதில் சூடாக இறங்கும் தேநீர், வாயைத் திறந்தால் வரும் புகை, அதற்காகவே சும்மா சும்மா திறந்து பார்க்கும் கிறுக்குத்தனம், Radisson கபாப் (இதைப் பற்றி பேசிப் பேசி வெறியேற்றி வைத்திருந்த கணவர், எப்படியாச்சும் நேரம் ஒதுக்கி அங்கே போயே ஆகணும்னு போட்டிருந்த ப்ளான்) எல்லாம் லக்னோ வானில் பொசுக்கென்று கரைந்து போனது!

இறங்கினதும் அந்த அர்த்த ராத்திரியில் அது ஒரு பட்ஜெட் சர்வீஸ் என்பதையும் மறந்து, சாப்பாடு குடுக்க மாட்டியா? தங்க ஏற்பாடு பண்ண மாட்டியா? என்று ஒரு கும்பல் கிளம்ப, வீட்டுக்குப் போய்விடலாம் என்று யோசிக்காமல் முடிவு செய்தோம். இதே விமானம் காலை பதினொரு மணிக்கு கண்டிப்பாகக் கிளம்பிவிடும் என்று உறுதி(?!)யாகச் சொல்லிக் கொண்டிருந்த ஒரு Spicejet சிப்பந்தியிடம், 'நாங்க இங்கேயே உட்கார்ந்திருக்கோம். காலையில மறந்துடாம சொல்லுங்க' என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெரியவருடைய பொறுமையைப் பார்த்து பொறாமையாயிருந்தது.

இந்தப் பயணத்தில் தான் அந்த இரண்டு புத்தகங்களில் ஒன்றான கரிச்சான் குஞ்சு எழுதிய 'பசித்த மானுடம்' வாசிக்க ஆரம்பித்தது. ரொம்ப சுவாரசியம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நேரம் கிடைத்த போதெல்லாம் வாசிக்கத் தூண்டியது. ஏகப்பட்ட பாத்திரங்கள், ஆனாலும் அதிகம் குழப்பாமல் போனது. பட்டும் படாமலும் சொன்னாதென்றாலும் அந்தக் காலத்திலேயே ஓரினச்சேர்க்கை பற்றி எழுதியிருக்கும் ஆச்சர்யம் இன்னும் மிச்சம் இருக்கிறது. கணேசன் பாத்திரம் சுவாதீனமாக அங்கங்கே சேர்த்துக் கொள்ளும் உறவுகள் அந்த நாட்களில் சாத்தியமா?!

எந்தப் படைப்புமே கற்பனைச் சேர்க்கையின்றி வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்பதால் அந்தக் கோணத்தில் அதிகம் யோசிக்க வேண்டியதில்லைதான்.

தொடர்கிறது...

Tuesday, January 17, 2006

15 Park Avenue

Image hosted by Photobucket.com

ஏறக்குறைய ஒரு வருடமாகவே செய்தியில் இருந்த படம். பூடானில் படப்பிடிப்பு, ஸ்வபூமி(கொல்கத்தாவில் உள்ள ஒரு கலாச்சார மையம்) யில் இன்று கொன்கனா ஷபனா ஆஸ்மி, சௌமித்ர சட்டர்ஜி, வஹிதா ரெஹ்மான், தீர்த்திமான் சட்டர்ஜி, ஷெ·பாலி ஷா என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் பங்கு பெற்ற... அபர்னா சென்னின் இந்தப் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.

ஒரு Schizophrenic மீட்டி(மிதாலி)யாக கொன்கனா. ஐந்து குழந்தைகளுக்கு தாயாக Mrs.Roy என்று தன்னைக் கற்பனை செய்து கொள்ளும் பாத்திரம். அவருடைய half sis, பிஸிக்ஸ் ப்ரொபஸர் அஞ்சலி மாதூர் (ஷபானா)... தங்கைக்காக சொந்த வாழ்க்கையில் நிறைய சமரசங்கள் செய்து கொள்ளும், கன்வல்ஜித்-ன் காதலி. அதிகம் பட்டுக் கொள்ளாத சகோதரன். வயதான அம்மாவாக வஹிதா ரெஹ்மான்.

இல்லாத 15, Park Avenue விலாசத்தைத் தேடியும், தன் குழந்தைகள் பேரை சொல்லி, அவன் கூப்பிடறான், இவள் அழறாள்... செய்தியில் பார்த்த சதாம் ஹ¤சேன் கற்பனை கணவருக்கு முதலாளியாக, இதோ இப்போ வந்துடுவான் நான் என் வீட்டுக்கு போகணும், பேங்கில் இருந்து என் பணத்தை எடுத்துக் கொடு... இப்படி அதிகம் முரணில்லாத ஒரு கற்பனை உலகம், அதே சமயம் நிஜ உலகை தனக்கு எதிராக நினைத்துக் கொண்டு... எல்லாமே அக்காவாக, சில நேரம் அக்காவையும் சந்தேகப்பட்டுக் கொண்டு...

மீட்டியின் ஒரு தற்கொலை முயற்சியில் மனநல மருத்துவராக கதையில் நுழையும் குணால் (தீர்த்திமான் சட்டர்ஜி). பதினோரு வருடத்திற்கு முன்னால் மீட்டிக்கு நடந்த அசம்பாவிதம், அதற்கு தானும் ஒரு வகையில் பொறுப்பு என்ற குற்ற உணர்வோடு அஞ்சலி, அவரை அதிலிருந்து வெளியே கொண்டு வரும் குணாலின் முயற்சிகள், கொஞ்சம் கவிதையாக அவர்களுக்கு இடையில் ஓடும் நெருக்கம்...

பூடானில் விடுமுறைக்கு போயிருக்கும் சமயம் எதேச்சையா சந்திக்கும் மீட்டியின் முன்னாள் காதலன் ஜோஜோ(ராஹ¤ல் போஸ்), மனைவியாக ஷெ·பாலி ஷா. மீட்டிக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை, ஆனால் தன்னை கணவனாக நினைத்துக் கொண்டு இவ்வளவு நாளாக ஒரு கற்பனை வாழ்க்கை வாழ்கிறாள் என்று தெரிந்த குற்ற உணர்வு. சின்னதாக சந்தேகப்படும் மனைவிக்கும், தன் உறுத்தலுக்கும் நடுவில் ஜோஜோ...

நிறைய விஷயங்களை அந்த இரண்டரை மணிக்குள் அடைக்க முயற்சி செய்ததில்... இன்னும் கொஞ்சம் ஜோஜோ, மீட்டி, அஞ்சலி, குணால் இருந்திருக்கலாம் என்று தோண வைக்கிறது. அங்கங்கே கொஞ்சம் ஹிந்தி, கொஞ்சம் பெங்காலி, கொஞ்சமே கொஞ்சம் தமிழ் எட்டிப் பார்க்க முழு நீள ஆங்கிலப் படம், இயல்பாக இருக்கிறது. ப்ளாஷ்பேக்கில் இளமையாக காட்ட முயன்ற ராஹ¤லும் ஷபானாவும் தேறவில்லை. வஹிதா ரெஹ்மான், சௌமித்ர சட்டர்ஜி... அதிகம் உபயோகப் படுத்தப்படாமல் போயிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் பூடான் கூட இருந்திருக்கலாம்!

மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டரில் வழக்கம் போல பெண்கள் கூட்டம்... ரிதுபர்னோ கோஷின் படங்களிலும் இப்படி ஒரு பெண்கள் கூட்டம் கண்ணில் பட்டது. கொஞ்சம் இலக்கிய ஒளிவட்டத்தோடு இங்கே பார்க்கும் கொல்கத்தா ஒரு முழு கொல்கத்தா அல்லாத போதும் இந்த முகம் எப்போதும் போல ஆச்சர்யத்தை விட்டுப் போனது.