Monday, February 13, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 4(கடைசி)

மறுநாள் காலையில் திரும்ப அஸ்ஸாம். 'காஸிரங்கா போக நாலைந்து மணி நேரம் ஆகும். மெதுவாகப் போனாலும் சாயந்தரம் போய் சேர்ந்திடலாம்' என்று ஓட்டுனர் சொன்னதால் வழியில் அந்த உமியம் ஏரியில் கொஞ்சம் இறக்கிப் போக முடிவானது. எந்த அசைவோ ஓசையோ இல்லாமல், ஒரு மெகா சைஸ் சித்திரம் மாதிரி இருந்தது ஏரி. அங்கங்கே ஒன்றிரண்டு மனித முகங்கள்... அதுகூட சித்திரத்தின் ஒரு பகுதி போலத்தான். சிதைந்து போன ஒரு தார்ச்சாலை இறங்கி ஏரியின் ஒரு மூலையில் அமிழ்ந்து போயிருந்தது. அந்த சாலையிலே நடந்து போய் ஏரித் தண்ணீரில் கால் வைத்ததும் அதன் ஜில்ல்லிர்ப்பு உடம்பெல்லாம் ஓடியது. இறங்கி விடலாமா என்ற வந்த ஆசையோடு எங்கே உடுப்பு மாற்ற என்ற கேள்வியும் வந்ததில் வெறும் கால் அளைதலோடு முடிந்தது.

அங்கே தொடங்கிய பயணம் இருட்டுவதற்கு முன்னால் காஸிரங்காவில் முடிந்தது. '·பாரஸ்ட் கேம்பில் தங்க ஏற்பாடாகியிருக்கிறது. ஒரு யானை சவாரி, ஒரு ஜீப் சவாரி, ராத்திரியும் காலையும் சாப்பாடு, தலைக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய். எல்லாம் அவங்க பாத்துக்குவாங்க' என்று கொல்கத்தாவிலிருந்து தொலைபேசி சொன்னதில் சுவாரசியமான எதிர்பார்ப்பு இருந்தது.

பிரதான சாலையிலிருந்து உள்ளடங்கியிருந்த கேம்பிற்குள் நுழைந்ததுமே பிடித்துப் போனது. சின்னச் சின்ன குடிசைகளாக ஏழெட்டு, நடுவில் ஒரு சாப்பிடும் இடம், வேலிக்கு வெளியே ஒரு தேயிலைத் தோட்டம், அதற்கு பின்னால் நீளும் காடும் மலையுமாய். வணக்கமும் விசாரிப்புகளும் முடிந்தவுடன் குடிசைகள் திறந்து விடப்பட்டது. சுமாரான சுத்தமாய் படுக்கை, போர்த்திக்கொள்ள ஒரு அழுக்கு ரஜாய்.... 'இதை நான் தொடப் போவதில்லை' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டது அதற்குக் கேட்டிருக்கும்... 'ம் ம்... பார்க்கலாம்' என்று அது சிரித்தது எனக்குக் கேட்கவில்லை.

எரியத் தொடங்கிய கேம்ப் ·பயர், சுடச்சுட தேநீர், ராத்திரி சாப்பிட என்ன வேண்டும் என்ற விசாரிப்பு எல்லாம் முடிந்து, 'கஸ்டமர் குஷ்' ஆன நேரத்தில் 'அந்த யானை சவாரி ஆகாது போலிருக்கிறது. அதுக்குப் பதிலா இங்க பக்கத்துல ஒரு நைட் ச·பாரி போயிட்டு வந்துடுங்களேன்' என்று அந்த மேனேஜர் சின்னப் பையன் நைச்சியமாகப் பேசி சம்மதிக்க வைத்து விட்டார். இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கும்மிருட்டில் ஒரு ஓடைக்குப் பக்கத்தில் ஜீப்பை நிறுத்தி, 'சத்தம் போடாம இருங்க... எதாச்சும் வந்தாலும் வரும்' என்று சொல்ல, வந்தாலும் தெரியாத அந்த கும்மிருட்டில் காத்திருந்த அரை மணிநேரத்தில் கொஞ்சம் மின்மினியும், இன்னொரு நைட் ச·பாரி ஜீப்பும் தான் வந்தது.

திரும்ப கேம்பிற்கு வந்த போது நாலைந்து ஜீப்புகளும் கொஞ்சம் கூட்டமுமாயிருந்தது. விசாரித்ததில், பத்து நாளாக தங்கியிருக்கும் அஸ்ஸாமி பட ஷ¥ட்டிங் கோஷ்டி என்று தெரிந்தது. அங்கேயே படப்பிடிப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். குளிர் ஏறத் தொடங்கியிருந்தது. சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு மணி நேரமாகியும் இன்னும் ஏற்பாடுகளே தொடர்ந்து கொண்டிருந்தது. டைரக்டரையோ, நடிகர்களையோ யாரையும் காணவில்லை. மூட்டி வைத்திருந்த நெருப்பை விட்டு விலகும் வரை குளிர் தெரியவில்லை. குடிசைக்குள் நுழைந்ததும் தான் தட்டியில் மண் பூசிய அந்த சுவரெல்லாம் வேலைக்காகாது என்று தெரிந்தது. கைவசமிருந்த ஸ்வெட்டர், ஷால் எல்லாம் போதாமல் வேறு வழியில்லாமல் அந்த ராஜாயை எடுத்து போர்த்தியும் எங்கெல்லாம் எத்தனை எலும்பு ஓடுகிறது என்று எண்ணிக் கொண்டு இரவு ஓடியது.

குளிரில் தூக்கம் வராமல் நடு ராத்திரியில் ஒரு தரம் லேசாக கதவை திறக்க, வெளியே பாட்டிலும் கையுமாய் உட்கார்ந்திருந்த போலீஸையும் கூட்டாளிகளையும் பார்த்ததில் ஹிந்தி சினிமா சீன்கள் நினைவுக்கு வந்ததில் வெளியே போகும் உத்தேசத்தை விட்டு மறுபடியும் ரஜாயைத் தஞ்சமடைய வேண்டியதாயிற்று.

அரைத்தூக்கத்தில் கழிந்த அந்த ராத்திரி, பறவைகள் சத்தத்தில் விடிந்தது. வீட்டில் இருக்கும் போது பார்த்தே இருக்காத ஐந்தரை மணி காலையை அந்த கேம்ப்பில் பார்க்கக் கிடைத்தது. யாரும் விழித்திருக்காத அந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் பரவும் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டு தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்தது மறக்க முடியாது.

அதற்குப் பிறகு போயிருந்த ஜீப் ச·பாரி, பச்சை பூத்திருந்த காட்டு வழி, தூரப்பார்வைக்கு காட்டெருமையாகத் தெரிந்து காண்டாமிருகம் தான் என்று ஊர்ஜிதமான அந்த ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு காண்டா, இரண்டு மான்கள், ஒரு ஆமை(!), நான்கைந்து காட்டெருமை... இதெல்லாம் அந்த காலை விருந்துக்குப் பின்னால் சாப்பிட்ட கொறிப்புகள். கிளம்பும் போது தான் தெரிந்தது ராத்திரி பார்த்து மிரண்டடித்து போனது சினிமா போலீஸ் என்று! தைரியமாய் வெளியே வந்து டைரக்டர் கண்ணில் பட்டு அஸ்ஸாமி படத்தில் அண்ணியாகவோ அக்காவாகவோ நடித்திருக்கக் கூடிய சந்தர்ப்பம் பாழாய் போன நடுஜாம பயத்தில் பறி போனது! ம்ம்ம்...

3 comments:

Boston Bala said...

முடிஞ்சுடுத்தா... too good; finished too soon

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

எப்பவும்போல உங்கள் எழுத்துகள் ஒரு சித்திரத்தை வரைந்து எழுப்பியிருக்கிறது நிர்மலா. அந்த அதிகாலை வேளைத் தனிமை எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து அனுபவிக்க முயன்றுகொண்டிருக்கிறேன்.. :)

-மதி

Nirmala. said...

பாலா, அதுக்குமேல எழுத அதிகம் ஒன்னும் இருக்கலை :-)

மதி, அந்த காலை நேரம் தான் முழு பயணத்திலயும் அதிகம் அனுபவித்தது. ஒன்றரை மணி நேரம்... சுற்றிலும் ஒரு மனுஷர் கிடையாது. ஒரே ஏகாந்தம். அடுத்த வருஷம் போனா அது இருக்குமான்னு தெரியாது... அங்கே ஒரு பெரிய ரிசார்ட் கட்ட ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க. :-( இப்படி ஒரு இடம் வேணும்னா இன்னும் தள்ளிப் போக வேண்டியிருக்கும்.