Saturday, August 20, 2005

அவ்வளவே.

ஸோ... வணக்கம் சொல்ற நேரம் வந்து விட்டது. ஒரு வார ஒளிவட்டம் தந்ததற்கு தமிழ்மணத்திற்கு என் நன்றி.

மினி மாரத்தான் ஓடியது போலிருக்கிறது. முடித்ததில் நிறைவாகவும் இருக்கிறது. வாசித்த, கருத்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி.

ஐயோ... சுத்தமா என்னால இதுக்கு மேல எதுவும் எழுத முடியலை. அதனால் இத்தோட முடிச்சுக்கறேன். அடுத்த வார இறுதியில் 27-30 வரை சென்னையில் இருக்கிறேன். தயிர்வடையோடு உட்லாண்ஸோ, சிக்கன் டிக்காவோடு பியர் பாரோ( நீங்க அடிங்கப்பா!) எதுவானாலும் சரி... ஒரு குரல் கொடுங்க. நம்ம பசங்க கிட்ட ஒரு மாலை லீவு சொல்லிட்டு வரேன். ரோமிங்கில் இருக்கும் போது கால் போட்டு தாளிச்சாலும் சரின்னு நம்பர் குடுக்கறேன். நண்பர்களுக்கு இல்லாததா?! ஒன்பது எட்டு மூன்று ஒன்று ஏழு எட்டு பூஜ்யம் மூன்று ஒன்று ஆறு (ப்ரகாஷ் குசும்பு!) பளிச்சுன்னு நம்பர் போடறதுக்கு இது தேவலை!

மெயில் அனுப்பினாலும் சரியே. nivedha_1 at yahoo dot com.

அவ்வளவே. நன்றி. வணக்கம்.

Friday, August 19, 2005

அது வேற உலகம்.

ஒரு கறுப்பு நிற Shopper's Stop கவரில் பொதிந்து வைக்கப் பட்டிருக்கும். புத்தக அலமாரியில் சட்டென்று கண்ணில் படாத இடத்தில், அதே சமயம் வேண்டுமென்றால் அதிகம் தேட வைக்காமல் கையில் கிடைப்பதாய். சில நேரம் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது. சில நேரம் நான் எவ்வளவு மிஸ் பண்ணறேன் என்பதை உணர வைப்பது. அதைப் பிரித்ததில்....

ஒரு பெரிய வெள்ளை நிற சார்ட் பேப்பரை மடித்து செய்தது. முன் பக்கம் ஒரு விளக்கு வரைந்து கலர் செய்யப் பட்டிருக்கிறது. அவள் வயது குழந்தை வரைந்தது என்று நம்ப சிரமமான நேர்த்தியோடு. உள்ளே Happy Diwali & Prosperous New Year என்று எழுதி to Nirmala teacher, From Khyati.

ஒரு வாழ்த்து அட்டை. கடையில் வாங்கியது. மேலே Dear Nirmala teacher. கீழே Siddhanjay Godre, roll no 14!

வளைத்து வளைத்து ஒரு கையெழுத்து. ஸ்டைலாம். You are my best teacher and my best friend. you are good teacher. you teach that song running over, do you love my jesus, and if i, if i that song is very good. you are so good. i cant believe it. please take it. பக்கத்தில் கப்பல் மாதிரி ஒரு கேக் படம் வரைந்திருக்கிறது. பின் பக்கம் From Kanak S. agarwal, vibhusha (பெயர் எழுதி அடிக்கப் பட்டிருக்கிறது. card செய்து கொடுப்பதற்குள் சண்டையாயிடுச்சோ?!) and Avdhi Kabra.

நோட்டு புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கிழித்து அவசரமாகச் செய்தது. ஒரு பக்கம் நீல க்ரேயான் பூசி, இன்னொரு பக்கம் பச்சை க்ரேயான். நீல க்ரேயான் மீது ஊதா நிறத்தில் when i close my eyes, i hear the cries, they echo in my mind. he must die to cricify from people so unkind and in my life in every strife, to u i will now .....??? கடைசி வார்த்தை படிக்க முடியவில்லை. கீழே teacher wish you happy diwali.

ட்ராயிங் நோட்டு பக்கம். இரண்டாக மடித்து முன் பக்கம் சிவப்புக் கலர் ஸ்ப்ரே செய்திருக்கிறது. அதில் எட்டு இதயங்கள்! love, joiness, enjoyness, happiness, gifts, sometimes sadness, sometimes full of ஒரு சிரிக்கும் வாய், sometimes of இரண்டு இதயங்கள். உள்ளே... this card brings exclusive wisches to an expecdational fiend like teacher. from Shubham.

எங்கிருந்தோ வெட்டி எடுத்த ஒரு பூ, ஒரு பழக்கூடை, ஒரு ஜன்னல், ஒரு நுரை ததும்பும் கோப்பை, ஒரு நாய்க்குட்டி, ஒரு சிரிக்கும் பெண் குழந்தை கார்ட்டூன், இரண்டு நீள பட்டியில் நட்சத்திரங்கள்... எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் ஒட்டி, மடித்து, பசை காய்வதற்குள் மடித்ததில் பேப்பரும் ஒட்டிப் போய், அதை
கவனமாக பிய்த்து எடுத்து... கிறுக்கலான கையெழுத்தில் தீபாவளி வாழ்த்து Apoorva Mehtaவிடமிருந்து.

தொடரும் வாழ்த்து அட்டைகள். பெரும்பாலும் அவர்களே செய்தது. முறுவலிக்க வைக்கும் எழுத்துப் பிழைகளோடு. தப்பே இல்லாத அட்டைகளை விட, வெகுளித்தனமான இவை அதிகம் சந்தோஷம் தருகிறது. ஒரு அட்டையில் பெரிய அழகான பார்பி ஸ்டிக்கர். நிச்சயம் அது அவளுக்கு ரொம்ப பிடித்ததாய் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அது அவளுடைய டீச்சருக்கு. ஒரே வாசகம் இரண்டு அட்டையில். அதை கொடுக்கும் போது அவர்களுக்குள் சண்டை வந்ததும், ஒருத்தி 'என்னைப் பார்த்து அவள் காப்பி அடித்தாள்' என்று சொன்னதும் தெளிவில்லாமல் நினைவில். முழு சூரியன், இரண்டு மரம், இரண்டு மேகம், பறந்து
கொண்டிருக்கும் நாயின் வாயில் ஒரு இதயம், அதில் happy diwali! தெளிவில்லாமல் ஒரு படம் வரைந்து(மாடர்ன் ஆர்ட்?!), கலர் பூசி கொடுக்கப்பட்ட ஒன்று பெயரில்லாமல். ப்ரோபஷனல் டச்சோடு யாரிடமோ கொடுத்து வரைந்து கீழே கிறுக்கல் கையெழுத்தோடு ஒன்று.

அடிக்கும் நிறத்தில் பாசி மணிகளைக் கோர்த்து ஒரு வளையல், ஒரு மோதிரம், ஒரு கழுத்துச் செய்ன்...பிக்னிக் போயிருந்த போது எல்லாம் என் அளவெடுத்து செய்தது, பையின் அடியில். அடுத்த நாள் 'நீங்க அதை இன்னைக்கு ஸ்கூலுக்கு போட்டுட்டு வருவீங்கன்னு நினைச்சோம்' என்று இடைவேளையில் ஏமாற்றத்தோடு சொன்ன போது சமாதானப் படுத்தியது நன்றாக நினைவிருக்கிறது. தேவைப்படும் என்று எழுதி வைத்திருந்த நான்காம் வகுப்பின் ஐம்பத்தியோரு பேரின் பெயர், தொலைபேசி எண்ணுடன் ஒரு காகிதம். வரிசையாகப் படித்துக் கொண்டே வரும் போது வகுப்பில் அட்டெண்டென்ஸ் எடுத்த நினைவு. ஒன்றிரண்டு பெயருக்கான முகங்கள் நினைவுக்கு வராத போது... இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டயா? என்ற குற்ற உணர்வு.

சின்ன சின்னதாய் சில வருத்தங்கள், கோபங்கள், இயலாமைகள் இருந்தாலும் தினம் தினமும் என்னை புதிதாய் பிறக்க வைத்த நாட்கள். தரையிலிருந்து இரண்டு இன்ச் உயரத்தில் நடந்து கொண்டிருந்த நாட்கள். எல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் கறைந்து விட்டது. வேண்டி விரும்பிக் கேட்டாலும் இனி வராது. இவ்வளவு தானா... இன்னும் எதாவது நடந்திருக்குமே... யோசிச்சு பாரு... என்று தேடிப் பார்க்கிறேன். எதாவது செய்து கொண்டிருக்கும் போது சட்டென்று சிலது நினைவுக்கு வருகிறது. இதோ இந்த சந்தனா(chandana) மாதிரி.

ஒரு மாலை பள்ளிக்கூடம் முடிந்து ஹிந்தி ஆசிரியரோடு பேசிக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறேன். காலியான வராந்தாவின் எதிர்ப்புறத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கிறாள். என்னுடைய முந்தைய வருடத்து மாணவி. எங்களுக்கு நாலடிக்கு முன்னாலிருக்கும் போது ரொம்ப இயல்பாக 'கேஸே ஹோ?' (எப்படியிருக்கே?). அவ்வளவே. பதிலைக்கூட எதிர்பார்க்காமல் கடந்து போய் விட்டாள். கூட வந்து கொண்டிருந்த ஆசிரியருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. கொஞ்சம் எனக்கும். இந்தப் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தொடங்கிய அவர் குரல் புலம்பலாகத் தொடர, யோசிக்கும் போது... வரவழைத்துக் கொண்ட மரியாதை, உதட்டிலிருந்து வரும் மாலை வணக்கம்... இதெல்லாம் ஒரு ஆசிரியருக்குச் செய்வது. இது வேற மாதிரி வெளிப்பாடு. இயல்பாக. நட்பாக. அந்தக் குட்டி, அந்த மாலை, அந்த வராந்தா, அந்த கேஸே ஹோ? ... ஒரு நிரந்தர பிம்பமாக்கிக் கொடுத்துப் போயிருக்கிறாள்.

எல்லாருக்குமே நல்லதே என்றும் சொல்ல முடியாது. எப்போதும் கோபமாக, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பரேஷ் மனதில் என் பிம்பம் என்னவாயிருக்கும் என்று யூகிக்க முடிகிறது. சிரிப்பே இல்லாமல் ஆராயும் கண்களோடு இருக்கும் பள்ளி முதல்வரின் மகள் அவளுடைய எந்த வட்டத்திற்குள்ளும் என்னை அனுமதித்ததில்லை. பாதி கேள்விகளுக்காவது விடை தெரிந்தும் எந்தப் பரிட்சையிலும் நாலு வரிக்கு மேல் எழுத மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த அபூர்வாவை கடைசி வரை என்னால் எழுத வைக்க முடியவில்லை. வகுப்பில் பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது, அவசரமோ, பயமோ... உள்ளாடையில் மலம் கழித்ததும், அதைச் சொல்ல இன்னும் அதிகமாக பயந்த நவாஸ¤க்கு நான் சிம்ம
சொப்பனமா தெரியாது. அன்றைக்கு என்னை 'நீ ஒன்னும் எல்லாருக்கும் Pet டீச்சர் இல்லை' என்று சொல்லாமல் சொல்லிப் போனான். வீட்டுக்கு போன் போட்டு, அவன் அம்மா மாற்று ஆடையோடு வந்த போது எனக்கு என்னை பிடிக்கவில்லை.

அவ்வளவுதான். மறுபடியும் எல்லாவற்றையும் கவரிலேயே போட்டு அதே இடத்தில் வைத்தாகிவிட்டது.

'சந்தோஷமா?'

'ரொம்ப'

'சங்கடமொன்னும் இல்லியே?'

'அதும் தான்'

Thursday, August 18, 2005

இறுக்கமாகவேதான் இருக்கப் போகிறோமா?

அவர் எனக்கு அதிகம் பழக்கம் இல்லாத, நெருங்கின உறவினர். அந்த முறை ஊருக்குப் போயிருந்த போது உடல்நலம் சரியில்லாத அவரைப் பார்க்கப் போயிருந்தோம். ஆஸ்பத்திரி அறையைத் தேடிப் போன போது கட்டிலில் உட்கார்ந்திருந்தார். அசப்பில் 'மணல்கயிறு' கிட்டுமணியின் மாமனாரைப் போல இருப்பார். நல்ல உயரம். வயசு காலத்தில் நல்ல சிவப்பாயிருந்திருக்க வேண்டும். அப்போது கொஞ்சம் சோகையாயிருந்தார். அவரை இதற்கு முன் பார்த்த சந்தர்ப்பங்களில் 'வணக்கம், சௌக்கியமா இருக்கீங்களா?' விற்கு மேல் போனதில்லை. அப்போதும் அதையே அசட்டுத்தனமாகக் கேட்டு, அதற்கு அவர் உடம்பிற்கு என்ன என்று விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். மெல்லிய குரலில் சினேகமாக சொல்லிக் கொண்டு போக, கேட்க ஆசையாயிருந்தது.

அப்போது உள்ளே நுழைந்த அவர் மகள் 'இவளுக்கு புஸ்தகம் வாசிக்கறதுல ரொம்ப ஆர்வம்' என்று அவரிடம் சொல்லி விட்டு, என் பக்கம் திரும்பி 'அய்யா கூட நிறைய வாசிச்சிருக்கார்' என்று சொன்ன பிறகு பேச்சில் ஸ்ருதி சேர ஆரம்பித்தது.

நான், கணவர், அவர், அம்மா (அவர் மனைவி), அவர் மகள் எல்லோரும் சேர, பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தது. பொன்னியின் செல்வனில் இருந்து அலையோசைக்குப் போன போது கணவரும், அம்மாவும் கழண்டிருந்தனர். அலையோசை நாயகி கடைசியில் ஏரியில் படகு சவாரி போகும் போது அவளுக்குக் கேட்பதாக வரும் அலை சத்தத்தைக் குறிப்பிட்டு 'வாசிக்கும் போது காதுல அலை சத்தம் கேட்டுதுப்பா' என்று அவர் சொன்ன போது 'அட! இப்படி வாசிப்பவரா நீங்க!' என்றிருந்தது.

கல்கியிலிருந்து கொஞ்சம் அங்கே இங்கே என்று அலைந்து பாலகுமாரனுக்கு வரும் போது அவர் மகளும் ஜகா வாங்கி விட்டார். மகளுக்கு அந்தக் கால பாலகுமாரன் பிடிக்காது. சமீபத்திய பாலகுமாரன் எழுத்துகளோடு எனக்கு நெருக்கமில்லை. பெரியவருக்கும் பழைய பாலகுமாரன் எழுத்துகள் மேல் ஒரு மோகம் இருந்தது. நான் நினைவு கூர்ந்ததும் அவர் நினைவு கூர்ந்ததுமாய்... ஒரு நீண்ட சுற்றுக்குப் பிறகு தி.ஜா. முதல் முதலாய் எனக்கு தி.ஜா அறிமுகமானதை நான் சொல்ல, மலர்மஞ்சம், மோக முள், அம்மா வந்தாள்... போதும் என்று நர்ஸ் விரட்டாமல் இருந்திருந்தால் இன்னும் ஓடியிருக்கும்.

இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேசியிருக்கிறோம். இன்னும் பேச வேண்டியது பாக்கியிருப்பது போல இருந்தது. பேசிய வரையில் திருப்தியாகவும் இருந்தது. விடை பெறும் நேரம், அவரைச் சந்தித்ததில் எவ்வளவு சந்தோஷம் என்பதை உணர்த்த ஸ்வாதீனமாகத் தோண்றியது அழுத்தமான ஒரு கை குலுக்கல் தான். நான் கை நீட்ட, அவர் கண்களில் ஒரு தயக்கம் காட்டி, வணக்கம் சொல்லி அனுப்பிய போது... ஆச்சர்யமாயிருந்தது.

அவரை விட்டு விடலாம். வயதானவர். அந்தக் கால மனிதர். ஆனால் அந்த சந்திப்பு சில கேள்விகளைத் தந்தது. ஒரு ஆண் இன்னொரு ஆணை சந்திக்கும் முதல் சந்திப்பே பெரும்பாலும் கை குலுக்கலில் தான் தொடங்குகிறது. ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணைச் சந்திக்கும் போது கூட ஒரு தலையசைப்பு... ஒரு ஹலோ அல்லது வணக்கம் மட்டும் ஏன்? முதல் சந்திப்பிலேயே இயல்பாக பெண்களோடு கை குலுக்கும் ஆண்கள் இல்லையென்றும் சொல்ல முடியாது. ஒருவரைப் பார்க்கும் போது இயல்பாக அப்படி எக்ஸ்பிரஸ் செய்யச் செய்வது எது? அவர்கள் உருவமா? உடை தரும் அனுமானமா? இல்லை வைப்ரேஷன்ஸா? சில நேரங்களில் எவ்வளவு பழகினாலும் விலகியே நிற்கச் செய்வது எது? மரியாதை? கலாச்சாரம்? என்னன்னாலும் நீ பெண்(ஆண்), நான் ஆண்(பெண்)?

ஒருவேளை இப்படி மறுக்கப் படலாம் என்பது தான் முக்கியமான காரணமாயிருக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் அதிகம் 30+ களுக்குத்தான். 30+ களோடுதான். அதற்குக் குறைந்த வயதுக்காரர்கள் இவ்வளவு இறுக்கமில்லை என்று தோண்றுகிறது.

இறுக்கமாகவேதான் இருக்கப் போகிறோமா?

Wednesday, August 17, 2005

விஷ¤ கூப்பிடறார் - 2

ஒரு மணிக்கெல்லாம் வந்து விடுங்கள். ஒன்றரைக்குக் கிளம்பினால் எட்டு மணிக்குள் சிட்டி டூரை முடித்து விடலாம் என்று மேனேஜர் சொல்லியிருந்தார். நாங்கள் திரும்பி வரும் போதே இரண்டாகியிருந்தது. அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். நமக்கு இந்த சிட்டி டூரெல்லாம் சரிப்படாது. ஆனால் முன்னே பின்னே தெரியாத ஊரில் அதுதான் தேவலை. ரொம்ப விலாவரியாக இல்லாமல் சுவாரசியமாக இருந்த இரண்டை மட்டும் சொல்கிறேன்.

முதலாவது காலபைரவர் கோவில். நீண்ட சந்துக்குள் சின்னதாய் ஒரு கோவில். உருட்டின கண்களும் முறுக்கின மீசையுமாய் பைரவர். ஆனாலும் உதட்டில் சிரிப்பிருந்ததாக எனக்கு ஒரு தோணல். சன்னிதியைச் சுற்றி நாலடிக்கு ஒரு நடை. அதில் நல்ல கருப்பில் ஒரு பயமூட்டும் மாடு. உருவத்திற்கு கொஞ்சமும்
பொருத்தமில்லாமல் சாதுவாய் சுற்றிச் சுற்றி வருகிறது. ஜனங்களும் தங்கள் பாட்டுக்கு. நடையை ஒட்டி உயரமாய் ஒரு திண்ணை. திண்ணையில் வரிசையாய் கையில் மயிலிறகும், வாயில் மந்திரமுமாய்... திருஷ்டி கழிக்கிறார்கள் போலிருந்தது. இளைஞர்கள், ஒரு இளம் பெண், ஒரு குடுகுடுக்கிழவர் என்ற அந்த வரிசையின் சுவாரசியம், ஒரு ஏழெட்டு வயது சிறுவன். குழந்தைத்தனமே இன்னும் மாறவில்லை... அது திருஷ்டி கழிக்கப் போகிறதாம்! அந்த வாண்டு கன்னத்தைக் கிள்ள வேண்டும் போலிருந்தது. அவரோ 'நான் ஆன் ட்யூட்டி' ன்னு ரொம்ப சீரியஸாய் இருந்ததில் அந்த முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று.

அடுத்தது சாரநாத். காசியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரமிருக்கும். வண்டியை விட்டு இறங்கினதுமே வந்து சேர்ந்த கைடைப் பார்த்ததுமே எனக்கு சந்தோஷம். சொந்த சரக்கை அள்ளித் தெளிப்பார்கள் என்றாலும் கைடு இல்லாமல் பார்க்கும் எந்த இடமும் திருப்தியே தருவதில்லை. சாரநாத், காசிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் படு சுத்தமாக இருக்கிறது. கோவிலுக்கு அருகில் சாரநாத் ஸ்தூபி பிரம்மாண்டமாய் நிற்கிறது. இரண்டாயிரத்து இருநூற்றி எழுபது ஆண்டு பழமையானது. புத்தர் தனது முதல் உரையை இங்கே நிகழ்த்தியதற்கு அடையாளமாக நிர்மாணிக்கப் பட்டிருக்கிறது.

கோவிலுக்கு மற்றொரு பக்கம் அழகான வேலைப்பாடுகளோடு ஒரு மணி. மணியில் ஏதோ ஸ்கிரிப்டில் எழுதியிருக்கிறது. அதிகம் எடையில்லை... வெறும் மூவாயிரம் கிலோதான். ஜெர்மனியிலிருந்து செய்து வரப்பட்டதாம். ஒரிஜினல் போதி மரத்துக் கிளை இலங்கையில் நடப்பட்டு அங்கிருந்து கொண்டு வந்த கிளையில் முளைத்த போதி மரமொன்று இங்கே பரவி நிற்கிறது. அதற்கடியில் புத்தரையும், அவருடைய ஐந்து சீடர்களையும் இரண்டாள் உயர சிலைகளாக செய்து வைத்திருக்கிறார்கள். சிலைகளில் வேலைப்பாடு எதுவும் இல்லாமல் சிமெண்ட் சிலைகள் போலிருந்தது உறுத்தியது. கோவிலின் உள்ளே தங்க முலாம் பூசின புத்தர். சுவரெல்லாம் அழகான ஓவியங்கள். புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற கெடிபிடியெல்லாம் கிடையாது. உண்டியலில் ஐந்து ரூபாய் போட்டு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

மற்றபடி, பரந்து கிடக்கும் பனாரஸ் ஹிந்து யுனிவர்சிடி, அதற்குள்ளே ஒரு பிர்லா மந்திர், மந்திர் வாசலில் திருத்தமாக அமைந்த மதன் மோஹன் மாளவியா சிலை, அழகான, விலை மலிவான டெரகோட்டா சிற்பங்கள், மரங்கள் அணைகட்டிய அகலமான ரோடுகள்... வெளியே வந்து ஊருக்குள் நுழைந்தால் அதே சேறும் சகதியும். பராமரிப்பில்லாத குறுகலான சாலைகள். ஒழுங்கில்லாத போக்குவரத்து.

இது தவிரவும் இன்னும் சில கோவில்கள், நேரமாகிப் போனதால் கதவடைந்து போன அருங்காட்சியகம்... ஒரு நாளுக்கு இத்தனை எனக்கு ஓவர் டோஸ். அதனால் பெரிதாக கவனத்தைக் கவரவில்லை.

அன்றைக்கு ராத்திரியே விஸ்வநாதரை(நம்ம விஷ¤) தரிசிக்க சத்திர மேனேஜர் விரட்டினதில் ஒன்பதரை மணிக்கு கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். அயோத்தியா குண்டு வெடிப்பு தந்த சூட்டில் கோவிலுக்குள் பக்தர்களை விட காக்கிச் சட்டைகள் அதிகம். செல்பேசி உள்ளே அனுமதிக்க மறுத்ததால் நான் மட்டும் வெளியே. கணவர் சமத்தாய் அறையிலேயே வைத்து வந்திருக்கிறார்.

காத்திருந்த நேரத்தில் கவனித்தது... சுமாரான ரேங்கில் இருக்கும் ஒரு அதிகாரி சில பெண் காக்கிச் சட்டைகளை சொந்த பிரதாபங்களைச் சொல்லி கடுப்படித்துக் கொண்டிருந்தார். அவர்களும் ஓரக்கண்ணில் கிண்டலோடு, ரசிப்பது போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளி தனியாக உட்கார்ந்திருந்த ஒரு காக்கிச் சட்டை 'இதுக்காக இப்படி தனியா கொட்டுக் கொட்டுன்னு உட்காந்திருக்கியா? என்கிட்ட கொடுத்துட்டு போயேன்'னு ஜாடை மாடையாக சொல்லிப் பார்த்தார். எனக்கொன்னும் பிரச்னையில்லை என்ற என் பதிலை
கொஞ்சமும் ரசிக்கவில்லை. எல்லோரும் கோவிலைப் பூட்டும் பதினொரு மணிக்காக சலிப்போடு காத்திருந்தார்கள்.

கணவர் வந்ததும் செல்பேசியை அவரிடம் ஒப்படைத்து விட்டு ஒரு வழியாக உள்ளே போக முடிந்தது. இருட்டில் கோவிலின் பிரம்மாண்டம் பயம் தந்தது. எந்த பராமரிப்பும் எங்கேயும் நடப்பது போல தெரியவில்லை. கோவிலுக்கு உள்ளேயும் நிறைய காக்கிச் சட்டைகள். சிலர் படுத்துக் கொண்டு. சிலர் உலாவிக் கொண்டு. யூனிபார்மில் பத்மாசனம் போட்டு மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த பெண் போலீஸ் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பத்து மணி வாக்கிலும் கூட்டத்திற்குக் குறைவில்லை. விஸ்வநாதருக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. கூடை கூடையாய் பூக்கள் வந்து குவிந்து கொண்டிருக்க, நேர்த்தியான அலங்காரம். நான்கு பக்கமும் வாசல். நான்கிலும் சரியான நெரிசல். வியர்வையும், தலை எண்ணைச் சிக்கும் போட்டி போட்டுத் தாக்கியதில் சீக்கிரமே விலக வேண்டியதாயிற்று. ஒருபக்கச் சுவரில் வெள்ளைப் பளிங்கில் மீசை முறுக்கி இருந்த சிற்பமும், சுற்றிலும் இருந்த மற்றவைகளையும் சரியாக கவனிக்க முடியாமல் போன குறையிருக்கிறது.

வெளியே ஒரு பார்வதி சன்னதி. பக்கத்தில் போய் நின்றதுமே கர்ம சிரத்தையாய் மந்திரம் ஓதி பத்து ரூபாய் வசூல். என்ன ஓதினார், யாருக்கு... எதுவும் தெரியாது. அன்னபூரணி எங்கே என்றதற்கு இதோ என்று கைகாட்டிய இடத்தில் பார்த்த அன்னபூரணி சுவற்றோடு சேர்ந்த விக்ரஹம். கையில் இருக்கும் அன்ன கிண்ணம்
எங்கே என்ற கேள்விக்கு 'அதெல்லாம் புடவைக்கு உள்ளே இருக்கிறது' என்ற கறாரான பதில். ஐந்து ரூபாய் தட்டில் போட்டதும் புடவையை விலகி கிண்ணம் காட்டினார். கரண்டியைக் காட்ட இன்னொரு ஐந்து ரூபாய். நமட்டுச் சிரிப்போடு நானும், இதெல்லாம் சகஜம்ப்பா சிரிப்போடு அவரும் விடை பெற்றோம்!

மழை, கூட்டம், காக்கிச் சட்டை கெடுபிடி, அர்ச்சகர் இடையூறு... இதெல்லாம் இல்லாத இன்னொரு நாளில்(அப்படி ஒரு நாள் இருக்கிறதா என்ன?) சந்திப்போம் என்று விஸ்வநாதரிடம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். கங்கைக் கரையில் எதிர்பார்த்திருந்த சாதுக்களையும் சந்யாசிகளையும் நாங்கள் போன மொட்டை
வெயிலில் பார்க்க முடியவில்லை. மாலை ஏழு மணிக்கு நடக்கும் கங்கை பூஜை போட்டில் இருந்து பார்க்க ரொம்ப அழகாயிருக்கும் என்று போட்காரர் வேறு தூபம் போட்டிருந்தார். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் காசியிலிருந்து போட்டிலேயே கொல்கத்தா வரை செல்கிறார்களாம். ஒரு வாரம் பிடிக்கும் அந்தப் பயணங்களை
நாம் தான் அனுபவிப்பதில்லை.

மந்திரமும் முழுக்குமாய் சாதுக்கள் நிறைந்த 'காட்'களின் சித்திரம் ஒன்று எண்ணத்தில் ஓடுகிறது. ஹரித்துவார் கங்கா பூஜாவை அனுபவித்து எழுதியிருந்த ஒரு நாவல் தந்த சித்திரமும் கூட. தனியாக ஒருதரம் காசிக்கு போகப் போறேன் என்று இப்போதே கணவரை அரிக்க ஆரம்பித்திருக்கிறேன். தாங்க முடியாமல் தலையாட்டி விடுவார் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

Tuesday, August 16, 2005

வாங்க, விஷ¤ கூப்பிடறார்!

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒரிஸ்ஸாவில் இருந்த போது 'அங்கயிருந்து பக்கமாமே? போயிட்டு வரலாமா?' என்று ஒரு கேள்வி வந்தது. அப்போது 'எங்களுக்கு இப்போ வேண்டாமே' என்று சுலபமாக ஒதுக்க முடிந்தது. நாட்களின் வேகத்தை விட வீட்டுப் பெரியவர்களின் தளர்ச்சியின் வேகம் அதிகமாகப் போவது உணர்ந்ததில் இப்போது மறுக்க முடியவில்லை தான். ஐந்து வருடத்தில் நானும் தான் வளர்ந்திருக்கிறேனே! இடையில் படித்த பாலகுமாரனின் 'புருஷவதம்' கூட மறுக்காததற்கு ஒரு காரணம். இரவல் வாங்கி இரண்டு நாளில் கிடைத்த நேரத்தில் படித்த அந்த புத்தகம் சொன்னதே... அது காசி யாத்திரை. இன்றைக்கு ரயில் பெட்டியின் ஏஸி இதத்தில் செல்லும் இதெல்லாம் வெறும் இன்னொரு பயணம் மட்டுமே.

இப்போது புரிந்திருக்கும். யார் விஷ¤... எங்கே கூப்பிடறார் என்று. காசி யாத்திரைன்னு தலைப்பு போட்டு ஆரம்பித்திருந்தால், அம்மா தாயே... ஆளை விடு! ன்னு தலைப்போடவே ஓடிப் போயிருப்பீங்களே? இனி, தொடருவதும் இங்கேயே பை பை சொல்லிட்டு போவதும் உங்கள் விருப்பம்.

கொல்கத்தாவிற்கு வந்து சிரம பரிகாரம் செய்து கொண்ட வீட்டுப் பெரியவர்களோடு ஒரு சனிக்கிழமை இரவு தொடங்கிய பயணம். நேர் வண்டியில் இடம் கிடைக்காததால் முகல்சராய் - ல் இறங்கிப் போனோம். ரயில் நிலையத்தில் புதிதாக வந்து இறங்குபவர்களை சூழ்ந்து வதம் செய்யும் கும்பல் இங்கேயும் தன் கைவரிசையைக் காட்டியது. ஒரு வழியாக ஒரு சுமோவைப் பேசி முடித்த பின்னும் விடாது விரட்டிய கும்பலின் கடைசிக் குரல் 'வேலையில்லாத் திண்டாட்டம் தான் வேறென்ன?'.

மழை சகதி, அழுக்கு ஆடைகள், பக்கா கிராமத்தனம்... இதை ரசிக்கப் போறேனா, விலகி ஒதுங்கப் போறேனா என்று நானே கேட்டுக் கொண்டேன். முகல்சராயிலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் பயணத்தில் காசி எப்படி இருக்கப் போகிறது என்று ஒரு கணிப்பு வந்திருந்தது. வழியெல்லாம் தேங்கிக் கிடக்கும் குப்பைக் குவியல், மழை புண்ணியத்தில் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. கதவும் ஜன்னலும் பிடுங்கி எடுக்கப் பட்டிருந்த ஒரு அறை குப்பையால் நிரம்பி உச்சக்கட்ட நாற்றமெடுத்துக் கொண்டிருக்க, அதற்குள்ளே உட்கார்ந்து எதையோ தேடிக் கொண்டிருந்த இரண்டு உருவங்களை சுமோ இன்னும் கொஞ்சம் வேகமாகப் போயிருந்தால் நான் பார்க்காமலே கடந்திருக்கலாம்.

அரைமணி நேரத்தில் ஊருக்குள் நுழைந்து விட்டிருந்தோம். கோயம்பத்தூரிலிருந்து கொண்டு வந்திருந்த சிபாரிசு கடிதம் சொன்ன சத்திரத்தில் தான் நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கும் என்று ஆரம்பத்திலிருந்து வற்புறுத்தியதால் அதைத் தேட இன்னொரு அரைமணி நேரம் போனது. சத்திரத்திற்குள் நுழைந்ததுமே தமிழ்நாட்டுக்கு வந்து விட்ட உணர்வு. நானும் கணவரும் சூழ்நிலைக்குப் பழக முயற்சிக்க, வீட்டுப் பெரியவர்களுக்கு ஆஹா! என்ற ஆசுவாசம். குறைந்த வாடகை, குறைந்த பராமரிப்பு... மோசமில்லை.

வேண்டுமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் சத்திர மேனேஜரே நம்முடைய ப்ரோக்ராம்களை முடிவு செய்து விடுகிறார். 'நாளைக்கு காலையில கிளம்பிடுவீங்களா? இப்ப போட்டில் போய் கங்கையில் குளித்துவிட்டு வந்து விடுங்கள், மத்யானம் சாப்பிட்டு விட்டு சிட்டி டூரில் இந்த லிஸ்டில் இருக்கும் இடங்களைப் பார்த்து விடுங்கள். திரும்பி வந்ததும் ஸ்வாமி தரிசனம். காலையில் நீங்கள் கிளம்பிடலாம்'. இப்படி ஒரு பக்கா ப்ளான், அதுவும் ஜெட் வேகத்தில் கவர் செய்வதாகச் சொல்லும் போது, அத்தனை தலைகளும் ஆடியது, என்னுடயதைத் தவிர. இங்கேயுமா இந்த சிட்டி டூர் என்ற அலுப்பு. வேறு வழியிருக்கவில்லை.

சுவற்றோரமா ஒரு அடி அகலத்தில் நீளமாக ஒரு பந்தி ஜமக்காளம். அதில் காலை மடக்கி உட்கார்ந்து, இலையில் இட்லியோடு கோவித்துக் கொண்டு ஓடும் சாம்பாரைக் காப்பாற்றிச் சாப்பிட கொஞ்சம் சிரமமாக இருந்தது. உடம்பைக் குறைன்னு உள்ளேயிருந்து ஒரு குரல். கீழே உட்கார்றது பிரச்னையில்லை... வீட்ல தட்டை கையிலே ஏந்தியே சாப்பிட்டுப் பழகிப் போனதில்...! என்று இழுத்ததையும், தெரியும் தெரியும் என்று குரல் தலையாட்டியதையும் நீங்கள் கவனிக்கவில்லைதானே?

டிபன் முடிச்சு வெளியே வந்ததும், குளியலெல்லாம் கங்கையில் பார்த்துக்கோங்கன்னு மேனேஜர் ஆலோசனை சொல்லி ஒரு போன் போட, போட் ஓட்டுபவர் பத்து நிமிடத்தில் சத்திரத்தில் ஆஜர். நெட்வொர்க் எல்லாம் ஜோர்தான். மாற்றுத் துணியோடு('எங்கே மாற்ற?... அதுக்கெல்லாம் அங்கே இடம் இருக்கு மேடம்...' கடைசி வரை அப்படி ஒரு இடம் கண்ணில் படவே இல்லை!) கிளம்பினோம். இதோ இங்கேதான் என்று நடந்து கொண்டேஏஏஏ இருந்தார். ராத்திரி மழையின் சேறு வழியெல்லாம். கணவர் முன்னால், நம்ம மக்கள் நடுவில், கடைசியில் நான் என்று ஊர்வலம் ஒரு வழியாக கங்கைக் கரையை அடைந்தது. கசமுசாவென்று நிற்கும் படகுகளையெல்லாம் ஏறிக் கடந்து முன்னால் நிற்கும் படகுக்கு போய்ச் சேரும் வரை கொஞ்சம் டென்ஷன். ஆறு பேரையும் பேலன்ஸ் செய்து உட்கார வைத்து விட்டு, படகை எடுக்கும் முன்னால் நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம், பயப்படாதீர்கள் என்று சொல்லி, ஓ! பயப்பட வேண்டுமோ என்று யோசிக்க வைத்தார்.

ஒரு மாதிரி நிதானப் படுத்திக் கொண்டு கங்கையைப் பார்த்த போது, செக்கச் செவேலென்று மழை புண்ணியத்தில் குழம்பாட்டம் ஓடிக் கொண்டிருந்தது. நல்ல அகலம்... தெரிந்தது. ஆழம் யூகிக்க முடிந்தது. சுழித்துக் கொண்டு ஓடுவது என்றால் என்ன என்று இப்போது தான் பார்க்கக் கிடைத்தது. கிளம்பும் போது தண்ணீர் ஓட்டத்திற்கு எதிர் பயணம். நான்கு பேர் எதற்கு என்று அப்போது புரிந்தது. படகு பாட்டுக்கு தன் இஷ்டத்திற்கு திரும்ப எத்தனிக்கிறது. ஒவ்வொரு முறையும் அதன் பாதைக்குத் திருப்ப அவர்கள் பாடு, பார்க்க கஷ்டம். கூடவே பயம்.

வழியெல்லாம் படித்துறைகள். ghat என்று சொல்கிறார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர். கரையை ஒட்டி வரிசையாக ஒவ்வொரு மாநில ராஜாக்கள் கட்டிய மெஹல்களின் மிச்சங்கள். அவர்கள் காலத்தில் அங்கே தங்கி கங்கா ஸ்நானம் செய்திருக்க வேண்டும். இப்போது பெரும்பாலும் பராமரிப்பில்லாமல் கிடக்கிறது. சிலது சாதுக்களால் உபயோகப் படுத்தப் படுகிறது. ஏதோ ஒரு ராஜாவின் மெஹலில், இரண்டாவது மாடியிலிருந்து கீழே வந்து குளித்து விட்டுப் போக ஆட்களால் இழுக்கப் பட்ட 'லிப்ட்' இருந்ததற்கான தடயம் மட்டும் மிஞ்சியிருக்கிறது.

ஒவ்வொரு காட்(ghat)டிலும் சிறப்பம்சம் சொல்லி, தண்ணீரை தலையில் தெளித்துக் கொள்ளச் சொல்கிறார். ஒரு மாதிரி இழுத்துக் கொண்டு போகும் யுபி ஹிந்தியில் பாதி புரிகிறது, பாதி நாமே யூகித்துக் கொள்ள வேண்டியது தான். எல்லா 'காட்'டிலும் குளியல் ஆனந்தமாக நடக்கிறது. லோக்கல் மன்மத ராஜாக்கள் தைத்த கோவணம் உடுத்தி, பெண்கள் கடந்து போகும் போது மேலே வந்து கட்டுடலைக் காட்டிப் போனார்கள். அந்தக் கோவணம், உடுத்தினால் இப்படித்தான் இருக்குமா என்று தெரிந்து கொண்டேன்!!!

கொஞ்ச தூரம் போனதும் ஒரு படகிற்குப் பக்கத்தில் ஒரு துணி மூட்டை மிதந்து கொண்டிருந்தது. அது என்ன என்று கேட்டதற்கு, 'யாராவது சாதுவின் பிணமாயிருக்கும். இங்கே சாதுக்கள் இறந்தால் புதைப்பதோ எரிப்பதோ இல்லை. ஒரு கல்லோடு கட்டி கங்கையில் போட்டு விடுவார்கள். கட்டின கயறு மீன் அரித்து கழண்டு போனால் இப்படித்தான் மிதக்கும்' என்றார். அதற்குப் பிறகு அந்தப் பக்கம் திரும்பவேயில்லை.

ஹரிச்சந்திர காட் - டில் வரிசையாக பிணங்கள் எரிந்து கொண்டிருந்தது. அதற்கு முந்தைய காட்- டில் குளிக்க இறங்கிக் கொள்ளச் சொன்னார். இந்தத் தண்ணீரிலா? இதுவா கங்கா ஸ்நானம்! என்ற கேள்வியெல்லாம் தண்ணீருக்குள் இறங்கும் வரைக்கும் தான். உள்ளே இறங்கினதும் ஆற்றுக்கே உள்ள குதூகலம் தொற்றிக் கொள்கிறது. சில்லென்று நூறு கைகளால் அணைத்துக் கொள்ளும் தண்ணீரை விட்டு விலகவே மனசில்லை, போட்காரர் அடுத்த சவாரி பார்க்கணும் என்று விரட்ட ஆரம்பிக்கும் வரை. தர்ப்பனம் என்ற பெயரில் புரியாமல் திரும்பத் திரும்பச் சொன்ன நான்கு மந்திரங்களோடு கங்கா ஸ்நானம் முடிந்தது.

ஆனால் பயணம் தொடர்கிறது. விஷ¤வைப் பார்க்க வேண்டாமா?

பி.கு: ஆமா இப்படியா கவுப்பாங்க?! போன பதிவு கேள்விக்கு ஒரே ஒரு முயற்சி! தேவையா உனக்குன்னு என்னையே கேட்டுட்டு பதில் சொல்லறேன். அதைச் சொன்னது பாலகுமாரனின் 'மெர்க்குரிப் பூக்கள்' சியாமளி.

எத்தனை முறை காதல் கொண்டேன்?

கவிதை வரிகளால்
காதல் விதைத்தவனிடம்

இறகாய் குரலால்
தீண்டிச் சென்றவனிடம்

தனித்த வேளையில்
துணையாய் நின்றவனிடம்

தவித்த பொழுதில்
தூணாய் சுமந்தவனிடம்

சிறகை விரித்துப்
பறக்கச் செய்தவனிடம்

சிந்தனைச் சிதறலில்
சிலிர்க்க வைத்தவனிடம்

அழுத கணங்களில்
அமைதி காத்தவனிடம்

அத்தனையும் மெல்ல
மறந்திட செய்தவனிடம்....

துளிகளாய் நனைத்ததெல்லாம்
தேடலைத்தான் தூண்டியது!

மொத்தமாய் நனைய வேண்டும்
அருவியாய் ஒருவன் வேண்டும்.

இந்தக் கவிதை 'புத்தகப் புழு'வில் பாரா வைத்த காதல் கவிதைப் போட்டியில் எழுதியது. செல்வராகவன் 'காதல் கொண்டேன்' படத் தலைப்பை இந்த கவிதையில் இன்ஸ்பயர் ஆகித்தான் வைத்திருப்பாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்! (நெனைப்புத்தான்).

ஆனா இந்தக் கவிதைக்கு இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா?

'... ஓட்டைச் செம்புல குளிக்கிற மாதிரி இவரோட குடித்தனம் பண்றேன். தடேர்னு விழற அருவி மாதிரி நீ கிடைச்சப்போ அருவியை விட்டுட்டு வெளியே வர முடியலை....'

யார் சொன்னது? கண்டு புடிங்க பாக்கலாம். க்ளு தேவையிருக்குமா என்ன?

Monday, August 15, 2005

நீ என்ன கலர்?

அவன்... வயது பத்தொன்பது. அந்த வயதிற்கே உரிய பெண்கள், காதல், சினிமா, ம்யூஸிக்... இவற்றிலிருந்து விலகி இருப்பவன். ப்ராணிக் ஹீலிங் கற்றுக் கொள்கிறேன். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆர்ட் ஆப் லிவிங் சேர்ந்திருக்கேன். நான் டான்ஸ் ஆடினேன் என்றால் நம்புவீர்களா? இன்றைக்கு ஆடினேன். சந்தோஷமாக இருக்கிறேன். நான் எல்லோரையும் போல குடும்பம், மனைவி என்று வாழப் படைக்கப் பட்டவன் இல்லை என்பவன்.

எனக்கு பிராண்டட் சட்டைகள் தான் பிடித்திருக்கிறது. எம்டிவி, விடிவி ஸோ குட், என்ன சொல்றீங்க? என்று கேட்பவன். இந்திய கிரிக்கெட் டீம் பிடிக்காது. இந்தியாவில் நிறைய மாற்றம் வர வேண்டும் என்பவன். ஆனால் அதில் நம்பிக்கை அதிகம் இல்லாதவன். பகத் சிங் பட கடைசிக் காட்சியில் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தவன். காந்தி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால் பகத் சிங்கை தூக்கில் போட்டிருக்க மாட்டார்களா? என்று வேதனைப் பட்டவன். ஸ்வதேஷ் ஒரு நல்ல படம். பார்த்ததில் எனக்குள் பாதிப்பு இருக்கிறது என்பவன். வயது பதினாறு.

வயது இருபத்தி ஐந்து. பிஸியோ தெரபிஸ்ட். அதுவும் இன்னும் ஆறு மாதங்களுக்குத்தான். அதற்குப் பிறகு முழுநேர மக்கள் சேவை என்று நண்பர்கள் தினத்தன்று தொலைபேசியில் அறிமுகமானவன் சொல்லிப் போகிறான்.

பொய் சொல்லப் போவதில்லை, ஏமாற்றப் போவதில்லை. நான் சொல்வதை கவனமாக யோசித்துப் பார். வேண்டாம் என்றால் என்னை கன்வின்ஸ் செய். கேட்டுக் கொள்கிறேன் என்கிறாள். கலாச்சார கோடுகள்... தாண்டுவதில் தப்பில்லை என்கிறாள். எல்லாம் மாறும், மாறத்தான் போகிறது என்கிறாள்.

என் வாழ்க்கை. நான் வாழ்கிறேன். எனக்கு என் தொப்புளில் வளையம் போடப் பிடித்திருக்கிறது. அதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்கிறாள். கல்லூரி விடுதி வாழ்க்கை என் வாழ்க்கை. நான் விரும்பிய வண்ணம் வாழ்கிறேன். ஊருக்குப் போகும் போது அவர்கள் விரும்பும் மகளாக இருக்கிறேன். ஆமாம் எனக்கு இரண்டு முகம் தான். என்ன தப்பு? என்று கேட்கிறாள்.

ஒரிஸ்ஸாவிலிருந்து பெங்களூருக்குப் படிக்க வந்தவன். கால் சென்டரில் பகுதி நேர வேலை. என்னுடைய செலவை நான் பார்த்துக் கொள்கிறேன். வயது பதினெட்டாகிவிட்டது, இன்னுமா அப்பாவை எதிர்பார்த்திருப்பது என்கிறான்.

படிய வாரிய தலைமுடி. கொஞ்சமாய் பூ. பாந்தமாக உடுத்திய சல்வாரோடு தான் வீட்டிலிருந்து கிளம்புகிறாள். half sex தப்பில்லை என்கிறாள். அதென்ன half sex என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன்.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. பத்து பேர். ஒரு கார், நான்கு பைக்கில் அணிவகுத்துப் போகிறார்கள், நண்பர்கள் தினத்தன்று 'காப்பி டே'க்கு.

கல்லூரிக்குள் நுழைகிறார்கள். ஏழெட்டு பேர்களாக. நடுவிலிருப்பவன் தாதா போல நினைத்துக் கொள்கிறான். அங்கே இருக்கும் ஒரு பெண்ணை முத்தமிட்டு களேபரத்தில் நழுவி விடுகிறான். கொல்கத்தா செய்தித்தாள் மூல அறிமுகம் ஆனவன்.

நான்கு கல்லூரி மாணவர்கள். ஷாப்பிங் மாலில் கண்ணில் பட்ட பெங்காலி நடிகையை கேலி செய்து, காரில் துரத்தி, வழிமறித்து மிரட்டி விட்டுப் போகிறார்கள். எல்லோரும் பனிரெண்டாவது வகுப்பு மாணவர்கள்.

என் பிள்ளைகள் மற்றும் செய்தித்தாள் மூலம் அறிமுகமாகும் அடுத்த தலைமுறை சாம்பிள்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், கறுப்பு, வெள்ளை என்ற ஆறே வண்ண கலர் பென்சில்கள். நான் படிக்க ஆரம்பித்த போது பனிரெண்டு கலர் பாக்ஸ். இப்போது விரிந்து கிடக்கும் கலர் பேலட்... பார்க்க ஆச்சர்யம், கொஞ்சம் பெருமை, அதிர்ச்சி, பயம், சந்தோஷம்... எல்லாமும் தான்.

ஆதவனுக்கு...

'தழுவல்களும், முத்தமிடல்களும் இரு மனிதர்களுக்கிடையே ஏற்படும் மன உறவின், உணர்ச்சி சங்கமத்தின், புரிந்து கொள்ளலின், ஒரு குறிப்பிட்ட பரிணாம கட்டத்தில் யதேச்சையாக நிகழ்கின்றன. அந்த கணத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்தால், பாசாங்கு செய்யாமலிருந்தால், அது ஒரு தூய நிகழ்ச்சி. இல்லாவிட்டால், அது வக்கிரமானது, ஆபாசமானது; சம்பந்தப்பட்டவர்கள் மணமானவர்களானாலும் சரி, மணமாகாதவகளானலும் சரி....'

நான் வாசித்த ஆதவனின் மூன்றாவது புத்தகம் 'காகித மலர்கள்'. ஆதவன் என்ற பெயரையே ஆர்கேகேயில் ப்ரகாஷ் மூலமாகத்தான் கேட்டது. கேட்ட பிறகு ஊருக்குப் போன போதெல்லாம் தேடியும், எனக்கு முந்தின வாசிப்பாளர்கள் வட்டத்தில் கேட்டும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு பிறகு கையில் கிடைத்த முதல் ஆதவன் நாவல் 'என் பெயர் ராமசேஷன்'. கொஞ்ச நாட்களாகவே வாசிப்பது எதுவும் மனதில் பதியாமல் போவதற்கு, வாசிப்பதில் முன்பிருந்த கவனம் இல்லாததுதான் என்று எனக்கே தெரிந்திருந்ததில் புத்தங்கங்களை குறை சொல்வதில்லை. ராமசேஷனையும், 'இரவுக்கு முன்பு வருவது மாலை' யையும் அப்படித்தான் வாசித்து விட்டுப் போயிருந்தேன்.

அப்படியே காகித மலர்களையும் வாசிக்க ஆரம்பிக்க, தோள்களைப் பிடித்து உலுக்கியது இந்த வரிகள். முடிப்பதற்குள் நிறைய தடவை உலுக்கியது. பத்மினி ப்யூட்டிபுல் என்று சொன்ன ஒரு இடத்தில் அவளோடு சேர்ந்து நானும் தான் சொன்னேன். அதுவும் இந்தப் பக்கத்தில் ஹே! என்று சொல்ல வைத்து எதிர்பக்கத்தில் முற்றிலும் மாறாக வேறொரு வெளிப்பட்டைக் கொண்டு வந்தது. எந்தப் பக்கங்கள், அதில் எனக்கு என்ன தோன்றியது என்று சொல்லி என் புரிதல்களை ஏன் திணிக்க வேண்டும்? வாசித்துப் பாருங்கள்.

முழு புத்தகமும் ஒரே மூச்சில் படித்திருக்க வேண்டும். மூன்று நாட்களாக படித்ததில்... 77 ல் இப்படி எழுதினாரா? இப்ப அவரைப் பார்க்கணுமே? முடியாது. சரி, அதற்காக சொல்ல நினைத்ததை சொல்லாமல் போய்விட முடியுமா? சொல்லிடறேன் ஆதவன். நாவல் சொன்ன சில விஷயங்களை நானும் அப்படியே யோசிக்கிறேன். இல்லை இல்லையென்று மூடி மூடி மறைக்கும் விஷயங்களை ரொம்ப சாதாரணமாகச் சொல்லிப் போனது பிடித்திருந்தது. தினமும் பார்க்கும் மனிதர்களின் இயல்பான பேச்சில் அவர்களை அறியாமல் வெளிப்படுத்தும் உள்மன நிறங்களை நான் புரிந்து கொள்கிறேன். அப்படி நான் புரிந்து கொண்டதெல்லாம் விபரீத கற்பனை என்று கேலி செய்யப் பட்டதே, அது அப்படியில்லை என்று எனக்கு ஆசுவாசம் சொன்னது உங்கள் எழுத்து.

ஆதவன்... உங்கள் விஸ்வத்தைப் பிடித்திருக்கிறது. செல்லப்பாவைத் தெரியும். கணேசனை புரிந்து கொள்ள முடிகிறது. ம்ம்ம்... கடைசியில் மிஸஸ். பசுபதியை உங்களாலும் கொல்லாமல் இருக்க முடியவில்லைதான் இல்லையா? அது என்ன தண்டனையா? அதற்கு மெனக்கெட்டு விளக்கம் சொன்ன போதும். ஆனாலும் இந்த வாசிப்பு அனுபவத்திற்கு நன்றி ஆதவன்.

Sunday, August 14, 2005

நட்சத்திரம் வாழ்த்து சொல்கிறது.

சுதந்திர தின வாழ்த்துகள்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு என் வணக்கங்கள். அறியப்படாமல் போன ஜீவன்களுக்கு இன்னும் கொஞ்சம் கூட குனிந்து ஸ்பெஷல் வணக்கங்கள். சுதந்திரம், சுதந்திர தினம் என்றெல்லாம் தொடங்கப் போவதில்லை. எல்லோருக்குள்ளும் அந்த உணர்வு இருக்கிறது, வெளிப்படுத்திக் கொள்வதில்லை, அவ்வளவே.

இந்த வார நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி. நன்றி கடைசியில் தானே? இப்பவே என்ன என்று யோசிக்க வேண்டாம். இந்த ஒரு வாரத்தில் என்னென்ன எதிர்பார்க்கலாம், எதெல்லாம் கிடைக்காது என்று சொல்ல வேண்டாமா? புத்தகம், சந்திப்பு, சங்கீதம், சினிமா, பயணம் (அதானே... அதில்லாமல் எப்படி?!), கொல்கத்தா ரவுண்ட் இதில் எதெல்லாம் தேறுதோ அதெல்லாம்.

இந்த வாரத்தில் தொழில் நுட்ப முயற்சிகள் எதுவும் இருக்காது. வலைப்பதிவில் எழுதுவதைத் தவிர எனக்குத் தெரிந்த ரெண்டே விஷயம்...படம் போடுவது, லிங்க் கொடுப்பது! அதுவே சமீபத்தில் கற்றுக் கொண்டது தான். ஸோ, உள்ள ஒரே ஆயுதமான எழுத்தைக் கையிலெடுக்க தீர்மாணித்திருக்கிறேன். அப்டின்னா எழுதியே கொல்லப் போறே!ன்னு மனசுக்குள்ள நினைச்சீங்கதானே? நக்கல், நகைச்சுவை இதெல்லாம் இல்லாமல் கொஞ்சம் சீரியஸான வாரமாக இருக்கப் போகிறது என்று முன்னமே சொல்லி வைத்து விடுகிறேன். நமக்கு எழுத்தில் அதெல்லாம் வராது. அது இதற்குள் புரிந்திருக்கும்! ஆனால் கிச்சுக்கிச்சு மூட்டும் வரிகளுக்கு பரம ரசிகை. இணையத்தில் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் ஏனோ சீரியஸாகி விட்டார்கள். எனக்கு ரொம்ப சோகம்.

அப்புறம், அங்கங்கே கொஞ்சம் கவிதைப் பூக்களும் பூக்கும். பின்னே.. என் எழுத்துலகப் பயணம்(!) தொடங்கியது கவிதையில் தானே! ஆனாலும் நினைத்த எதையும் எழுதி ஒரு பதிவு என்று போடுவது போல் ஒரு கவிதை எழுதிப் போட முடிவதில்லை. இதைக் கவிதையில் சொல்ல வேண்டும் என்று எதாவது ரொம்ப இம்சை செய்ய வேண்டும். அதை எழுத வார்த்தைகளுக்கு அலைபாய வைக்க வேண்டும். முடிக்கும் வரை அதே யோசனையாயிருக்கச் செய்ய வேண்டும்... அப்படியும் திருப்தியில்லாமல் கைவிடப் பட்டவைகளும் உண்டு. கைவிடப் பட்டவைகளில் எதையாவது சரி செய்ய முடிந்தால் போடுகிறேன். இல்லாவிட்டால் எனக்குப் பிடித்த எதாவது.

சுகமோ, சோகமோ... இந்த வாரத்தை என்னோடு கழிக்க நண்பர்களை வரவேற்கிறேன். ரொம்ப போரடித்தேனென்றால் மதியை தனிமடலில் திட்டலாம். அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்மணத்தின் நட்சத்திரப் பகுதியை தவறியும் எட்டிப் பார்க்காதிருக்கலாம்.

சரி...போறதுக்கு முன்னால் ஒரு ஜோக்.

கஸ்டமர்: அண்டர்வேர் காமிங்க.
கடைக்காரர்: ஹிஹி... இன்னைக்கு போட்டுட்டு வரலைங்க.

ஜோக் உபயம்: குஷ்வந்த் சிங்.

Tuesday, August 02, 2005

மாத்ருபூமி - ஒரு தொடர் பதிவு.

ஒரு படத்தைப் பற்றி எழுதும் போது கதை சொல்லி விடாமல் இருந்தால் பார்க்கிறவர்கள் எந்த முன் அனுமானங்களும் இல்லாமல் பார்க்கலாம்... பார்க்கவும் வேண்டும். அந்த எண்ணத்தில் எழுதின முந்தைய பதிவு அதன் உண்மையான பாதிப்பை ஏற்படுத்தவில்லையோ என்று தோண்றியதால் இந்தத் தொடர் பதிவு.

படத்தில் பாதிப்பை ஏற்படுத்திய காட்சிகளில் ஒன்றிரண்டைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று. பாதிப்பில் அதிர வைத்ததும், நமட்டுச் சிரிப்பு சிரிக்க ஆரம்பித்து கடவுளே என்று நோக வைத்ததும் அடங்கும்.


கிராமத்தில் ஒரு கல்யாணம். கஷ்டப்பட்டு தேடிப் பிடித்து கொண்டு வந்த பதினாலு வயதுப் பெண்ணுக்கும், முப்பது சில்லரை வயது ஆளுக்கும். கல்யாணம் செய்து வைக்கும் புரோகிதர் கம் திருமண புரோக்கருக்கு எங்கிருந்தடா எனக்குத் தெரியாமல் இவனுக்கு பெண் கிடைத்தது என்று சந்தேகம். கடைசி நேரத்தில் ஒருவர் புரோகிதர் காதில் ஏதோ சொல்லிப் போகிறார். மணமக்கள் அக்னியை வலம் வருவதற்கு முன்னால் பெண்ணின் அப்பா இரண்டு இலட்சம் பணத்தையும் இரண்டு மாடுகளையும் கண்டிப்பாகக் கேட்டு வாங்கிக் கொண்டு நைசாக நழுவி விடுகிறார். கடைசி சுற்று வரும் வரை கறுவிக் கொண்டு இருக்கும் புரோகிதர் வெடுக்கென்று மணமகளின் பாவாடையை இழுத்து அவிழ்க்க... அம்மணமாய் நிற்கும் சின்னப் பையன், 'பிதாஜி...' என்று அழத் தொடங்க... மாப்பிள்ளையும், அவருடைய அப்பாவும் அதிர்ந்து நிற்க... கல்யாண மண்டபமே வழித்துக் கொண்டு சிரிக்கிறது.கதாநாயகி கால்கியை கல்யாணம் செய்து கொண்டு வந்த ஐந்து சகோதரர்களுக்கும் மூத்தவன் நாள் பகிர்ந்து கொடுக்கிறான். ஆளுக்கு ஒரு நாள் ஒதுக்கினதும்,

(அவர்கள் டயலாக் தமிழில்)

'மிச்சம் இரண்டு நாள் இருக்கே? இவ்வளவு பணம் கொடுத்து கட்டிக்கிட்டு வந்து அவளை சும்மாவா படுக்க விடுவது?

'நீங்கதானே பெரிய அண்ணன், அதனால உங்களுக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு நாளு'

'ஏன்டா, என்னங்கடா நினைச்சீங்க? உங்களுக்காக இவ்வளவு பணம் கொடுத்தது யாரு? உங்கப்பாவை மறந்துட்டீங்களே? உங்கம்மா செத்து போய் இவ்வளவு வருஷமா நான் கஷ்டப் படறது உங்க கண்ணுக்கு தெரியலையா?'

பேசி முடித்து முதலிரவு அறைக்குள் நுழையும் மாமனார்.


மாட்டுக் கொட்டகையில் ஒரு கால் சங்கிலியில் கட்டப்பட்டிருக்க, ஈ மொய்க்க கிடக்கும் கால்கி. வரிசையாக மாறி மாறி வந்து போகும் சகோதர்கள். அவர்களில் ஒருவன் வந்து நிற்கிறான். தொண்டையைக் கனைத்துக் கொண்டு வந்திருப்பதை அறிவிக்கிறான். அரைமயக்கத்தில் கிடக்கும் கால்கி, உடையை விலக்கி தயாராகிறாள்.

இவ்வளவு போதும்.

Monday, August 01, 2005

மா(!)த்ருபூமி

அது ஒரு நியூஸ் சேனல் செய்தித் தொகுப்பு. ஆஜ் தக் அல்லது என்டிடிவி... சரியாக நினைவில்லை. ஒரு மாலைநேர டீயோடு சேனல் மேய்ச்சலில் இருந்த போது கண்ணில் பட்டது. குத்த வைத்து அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் வயது பஞ்சாபி பெண். முகம் மறைத்து முக்காடு போட்டிருந்தது. பக்கத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக நினைவு. அந்தப் பெண்ணை விட்டு அடுத்து கேமிரா நகர்ந்தது இரண்டு ஆண்களை நோக்கி. இரண்டு பேரும் கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மூடியிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சொன்னதிலிருந்து...

' எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் தான் இருக்கிறது. நான் தான் பெரியவன். தம்பிக்கு கல்யாணம் செய்து இன்னொரு பெண் வந்து எங்கள் நிலத்தைப் பங்கு போடுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் என் மனைவியே என் தம்பிக்கும் மனைவி '

'ஹே! என்ன சொல்றீங்க?' என்று கவனிக்க ஆரம்பித்தேன். இதே போல இன்னும் சில குடும்பங்களைக் காட்டி, பஞ்சாபில் நிலம் துண்டு படுவதைத் தவிர்க்க இப்படி ஒரு வழக்கமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லிக் கொண்டு போனார் நிருபர். இது ஒன்றும் புது கதையல்ல என்று இருபத்தி ஏழு வருடங்களாக மூன்று சகோதரர்களுக்கு மனைவியாயிருக்கும் ஒரு பெண்மணி ஆச்சர்யம் தந்தார். இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளா¾தால் எழுபத்து சொச்சம் வயதிலும் திருமணமாகாத இரண்டு ஆண்களோடு ஒரு குடும்பமும் செய்தியில் தலை காட்டியது.

தேவைகள்... அதற்கேற்றார் போல மாறும் கோட்பாடுகள். ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நிறைய யோசிக்க வைத்தது. கொஞ்சம் சிரிப்பும் வந்தது. சிரிப்பு... இன்றைக்கு இறுக்கி இறுக்கி பிடித்துக் கொண்டிருப்பதெல்லாம் ஒரு நாள் பிடியை உதறிவிட்டுப் போகத்தான் போகிறது என்பதை நினைத்தாயிருக்கும். அன்றைக்கே அதை எழுத முடியாமல் போய் விட்டது.

இன்று காலை கொஞ்ச நாளாக நேரம் வாய்க்காமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்த 'மாத்ருபூமி' படம் பார்க்கப் போகும் போது, அது இதைத்தான் சொல்லப் போகிறது என்று நிச்சயம் நினைக்கவில்லை. போனிகபூரை இப்படி ஒரு படம் எடுக்க சம்மதிக்க வைத்த டைரக்டரை பாராட்ட வேண்டும்.

Image hosted by Photobucket.com

தழும்ப தழும்ப பால் நிறைத்த ஒரு அண்டாவில் அப்பாவால் மூழ்கடித்துக் கொல்லப்படும் ஒரு பெண் சிசுவோடு படம் தொடங்குகிறது. பெண்களே இல்லாமல் போகும் ஒரு சமூகத்தில் ஆண்களின் தவிப்பு, வெளிப்படும் மூர்க்கம், தேடும் வடிகால்கள்... எவ்வளவு தூரம் இது கொண்டு போகும் என்று சொன்னது எதுவும் மிகையாகத் தெரியவில்லை. ஐந்து மகன்கள், அப்பா, ஒரு சமையல்காரச் சிறுவன் இந்தக் குடும்பத்திலிருந்து கதை தொடங்குகிறது. ஆரம்பத்தில் சொன்ன செய்திக் குறிப்பு தான் படம். அத்தனை அவலங்களையும் சொல்லிப் போகிறது. சேச்சே இவ்வளவு மோசமாகவெல்லாம் ஒன்னும் ஆகாது என்று மறுக்க முடியவில்லை. இன்றைக்கும் இப்படி கிராமங்கள் இருக்கத்தான் செய்கிறது. இனிமேலும்.

ஏன் இந்தப் படம் பற்றி சத்தமேயில்லை? முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்களை மூடிக் கொள்வது உத்தமமாக பட்டதோ?!