Wednesday, October 22, 2008

என் சினிமா சினிமா

போன தொடர் விளையாட்டிலேயே கடைசியில் ரொம்ப குழப்பியது யாரை தொடர அழைப்பது என்பதுதான். கலவையாக ஒரு லிஸ்ட் போட்டு கடைசியில் எல்லாவற்றையும் டிலீட் செய்து ஓபன் இன்விடேஷன் என்று தப்பித்துக் கொண்டேன். இப்போது அதை முதலிலேயே முடிவு செய்து விட்டதால் நோ குழப்பம். ஓபன் இன்விடேஷன் விட தெரிந்த நான், தானாக இந்த விளையாட்டில் சேர்ந்து கொள்ளாததும் முரண் தான். ஸோ... அழைப்பு விடுத்த கேயாரெஸ்ஸுக்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஆரம்பித்தது நினைவில்லை. நினைவிலிருப்பது - பத்ரகாளி. கோவை ராயல் அல்லது இருதயா தியேட்டரில்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா.

3. கடைசியாக அரங்கிலன்றி பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

வேறெங்கேயும் தமிழ் படம் முழுதாகப் பார்ப்பது ரொம்ப குறைவு.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

மகாநதி. டீவியில் எப்போதாவது பார்க்க கிடைத்தால் பார்க்கவும் முடியாமல், விடவும் முடியாமல் ஒரு அலைமோதல் இருக்கும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தாக்கியது எதுவும் இல்லை. இதிலெல்லாம் தாக்கம் வர அனுமதிப்பதில்லை. குஷ்பு விஷயத்தில் கொஞ்சம் கடுப்பானதுண்டு.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்ப விஷயங்களை ரசிப்பதோடு சரி.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ரொம்ப மேலோட்டமாக. சிற்றிதழ்கள் கிழிப்பதை சிரிப்போடு சில நேரங்களில். சாருவின் கட்டுரைகளையும் சேர்த்தி. :-)

7.தமிழ்ச்சினிமா இசை பற்றி?

எப்போதும் ரசித்தது. அந்தந்த காலகட்டங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ்... எல்லாருமே. சினிமா இசை இல்லாமலிருந்திருந்தால் என்னுடைய மன அழுத்த நேரங்களில் என்ன செய்திருப்பேன்?

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

எல்லா படங்களும் பார்ப்பதுண்டு. அங்க்லேஷ்வரில் வீட்டுக்கு ரொம்ப பக்கத்தில் இருந்த ஒரு வீடியோ காஸட் லைப்ரரியில் இருந்த எல்லாப் படங்களும் பார்த்து முடித்திருந்தேன். அப்போது நிறைய மலையாளப் படங்களும். கொல்கத்தா போன பிறகு பெங்காலி படங்கள். தற்போது இணையத்திலிருந்து உலகப் படங்கள்.

நினைவிலிருந்து கொண்டு ஒன்றிரண்டு நாட்கள் தொந்தரவு செய்த படங்கள் நிறைய. சட்டென்று நினைவுக்கு வருவது மாத்ருபூமி, ஷக்தி, அந்தர்ஜலி யாத்ரா(பெங்காலி)...

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிறைய தூரம் போக வேண்டும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது. தமிழர்கள் தவித்துப் போவார்கள்.


இந்தப் பதிவு எழுத ஆரம்பித்தபோது நிறைய விஷயங்கள் நினைவுக்கு வந்தது. சினிமாவும் புத்தகங்களும் எல்லா நேரங்களிலும் கூடவே இருந்திருக்கிறது. எப்படியாவது வாரத்தில் மூன்று நான்கு படங்கள் பார்த்து விடுகிறேன். சொந்த கலெக்ஷனில் உள்ளது, டீவி, நண்பர்கள், மகள் கொண்டு வந்து சேர்ப்பது. ஒரு சுவாரசியமான திரைப்படம் பார்க்கும் போது மெல்ல உள்ளே இழுத்து, எதாவது ஒரு விஷயத்தோடு தொடர்பு ஏற்பட்டு, அந்த இரண்டு மணி நேரம் வேறொரு உலகத்திற்கு போய் விட வைக்கிறது. சில நேரங்களில் திரும்பி வரப் பிடிக்காமல்.

இவ்வளவு சினிமா பார்க்க என் அம்மா முதல் காரணம். அம்மாவுக்கு அந்த நாட்களில் எல்லாப் படமும் பார்க்க பிடிக்கும். நான், கௌரி, அம்மா மூன்று பேரும் தான் சினிமாவுக்குப் போவோம். வீட்டிலிருந்து பெரும்பாலான தியேட்டர்கள் நடந்து போய்விடக் கூடிய தூரம் தான். டிக்கெட், இடைவேளையில் ஒரு கோன் ஐஸ்கிரீம்... ஒரு ஆளுக்கு நாலு ரூபாய். வாரத்திற்கு ஒன்றாவது பார்த்திருந்தோம்.

பத்தாவது படிக்கும் போது பள்ளிக்கூடத்திலிருந்து கிளம்பும் போது நானும் குந்தவியும் நாளைக்கு இன்னது படித்து முடிக்க யோசித்து வீட்டுக்கு வந்தால் அம்மா சினிமாவுக்கு கிளம்பிக் கொண்டிருப்பார். படிக்கணுமேன்னு லேசாக இழுத்தால், ராத்திரி வந்து படிச்சுக்கப்பா... எல்லா நேரமும் என்ன படிப்பு என்று கூட்டிப் போய்விடுவார். மறு நாள் காலையில் முழுதாக முடிக்க முடியவில்லை என்று குந்தவிக்கு காரணம் சொல்லும் போது அவளால் நம்பவே முடியாது. அவள் வீட்டில் சினிமா என்ற பேச்சே ஆகாது!

கல்லூரிக்கு போன பிறகும் கூட எங்களுடைய ஆறு பேர் க்ரூப்பில் யார் வீட்டிலும் சினிமா பார்க்க அனுமதியில்லை. மூன்றாவது செமஸ்டர் ஹோலி பண்டிகைக்காக முதல் முதலாக கட் அடித்து பார்த்த முந்தானை முடிச்சில் ஆரம்பித்து மீதி ஒன்றரை வருடத்தில் பார்த்தது எல்லாம் வீட்டில் அம்மாவோடு ஒருதரம், காலேஜில் கட்டடித்து ஒரு தரம். நாற்பத்தி ஏழு படங்கள் பார்த்ததாக ஒரு லிஸ்ட் போட்டதும், கடைசி செமஸ்டரில் அட்டெண்டென்ஸ் போதாததும் நினைக்கும் போது சின்னதாக ஒரு சிரிப்பு வருகிறது.

டிக் டிக் டிக் பார்த்து வீட்டுக்கு வரும்போது காதல் கடிதம் அப்பாவிடம் மாட்டிக் கொண்டு டோஸ் வாங்கினது, ரிலீஸ் ஆன சமயத்தில் வயது போதாது என்று என்னை கழட்டி விட்டுப் போன தப்புத்தாளங்களை எப்போதுமே பார்க்க முடியாமல் போனது, கட் அடித்துப் பார்த்த நாற்பத்தி ஏழு படங்களின் போதும் இன்னைக்கு மாட்டிக்கப் போறேன் என்று பயந்திருந்த மாதிரி ஒரு தடவை கூட ஆகாதது, ஒரு ஞாயிறு மதியம் முதல் மரியாதை பார்த்துக் கொண்டு இருக்கும் போது கரெண்ட் போய்விட எதிர் வீட்டில் மீதிப் படத்தை முடித்து வீட்டுப் படி ஏறும் போதே 'எனக்கு உள்ளே போரடிக்கிறது' என்று அலார்ம் அடித்ததில் குறைப் பிரசவத்தில் மகளைப் பெற்றெடுத்தது... மறக்க முடியாதது.

வட இந்திய வாழ்க்கையில் அறிமுகமான ராஜ்கபூர், தேவ் ஆனந்த், வைஜயந்தி மாலா படங்களைத் தேடித் தேடி பார்த்தது... எங்கே கலைப்படங்களுக்கு தடம் மாறினேன் என்று நினைவில்லை. அவற்றோடு அதிகம் தொடர்பு கொள்ள முடிந்தது. பிறகு பெங்காலி படங்கள். அதிலே தெரிந்த ரியாலிட்டி, வித்தியாசமான முயற்சிகள், சென்னை நண்பர்கள் அறிமுகப் படுத்திய உலகப்படங்கள்... இத்தனை வருஷங்களில் எத்தனை படங்கள்! சினிமா ஒரு எஸ்கேபிஸம். அம்மாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.


Wednesday, October 15, 2008

புத்தகங்களோடு நான்

மற்ற நேரங்களில் தோணுகிறதோ இல்லையோ தொடர் விளையாட்டுகளுக்கு எப்போதும் மறுப்பில்லை. ராம்கிக்கு நன்றி.



1. நீங்கள்
படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

நினைவில்லை. ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போது பொழுது போகாமல் வாசிக்க ஆரம்பித்த சாருலதா வாக இருக்கலாம். கல்கியிலிருந்து கிழித்த பக்கங்களை பைண்ட் பண்ணி அம்மா வைத்திருந்தது. கதாநாயகி குதிரை மேல் உட்கார்ந்திருக்க, ஊட்டியில் நடப்பதாக வரும் கதை.

2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?

பத்து பதினோரு வயதிலிருந்து இருக்கலாம். சுவாரசியமாக வாசிக்க ஆரம்பித்தது பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் கௌரியோடு சேர்ந்து. ரெண்டு பேரும் சேர்ந்து வாசிப்பதும் அதைப் பற்றி பேசுவதுமாய்... அந்த வெகுளித்தனம், ஆர்வம் எல்லாமே தனி.

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

வாசிக்க ஆரம்பித்த காலங்களில் எது கிடைத்தாலும் வாசித்திருக்கிறேன். இப்போது வாசித்ததில் பிடிக்கும் எழுத்தாளர்களின் எந்த மாதிரியான படைப்பும் வாசிக்கப் பிடிக்கிறது.

4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு

இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து

உ. புத்தகத்தின் வடிவமைப்பையும், அட்டையையும் பார்த்து (ரொம்ப சில நேரங்களில் இதுவும்)

5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

அ. பக்க அளவு

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

எழுத்தாளர் முன்வைப்பதிலிருந்து தான்.

7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

முன்னூறு நானூறு பக்கங்களாவது.

8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

ரொம்ப பெரிய நாவல் அதற்கான தருணத்திற்கு சலிக்காமல் காத்திருக்கும்.

9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

எப்போதும் இல்லை.

10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?

தனிமை வாய்க்கும் போதெல்லாம்.

11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?

சிலது இருக்கிறது, ஆனால் முடித்துவிடுவேன்.

12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?

பிடிக்காமல் போனது என்று சொல்வதற்கில்லை... எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருந்திருக்கிறது.

13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?

ஜெமோவின் விஷ்ணுபுரம், கொற்றவை

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?

ஆரம்பகால பாலகுமாரன் நாவல்கள், தி.ஜா, சாண்டில்யன், கல்கி, ஆதவன், ஜெமோ... பத்திலெல்லாம் அடங்காது.

15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

தமிழ் தவிர வேறு இந்திய மொழிகள் எதிலும் வாசிக்கத் தெரியாது

16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?

Ayn Rand , ஆங்கில ரமணிச்சந்திரன் என்று தெரியாமல் ஆரம்பகாலத்தில் வாசித்த Danielle Steel.

17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

மோகமுள், மெர்க்குரிப்பூக்கள், இரும்பு குதிரைகள்...

18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

சிலநேரங்களில்.

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

பாலகுமாரனின் ஆண் கதாபாத்திரங்களில், குறிப்பாக கரையோர முதலைகள் ஹீரோ, மயங்கிய விடலை பருவங்களில் அப்படி ஒரு ஆளை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. லட்சிய மனிதராக யாரும் இருந்ததில்லை.

20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?

பெரிதாக எதும் உணர்ந்ததில்லை.

21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?

ரொம்ப ரசிக்கும் எந்த எழுத்தும்.

22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?

ரத்த உறவு, ஏழாம் உலகம்.

23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

ஆ.பேச்சு வழக்கு

24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?

இதுவரை அந்த கோணத்தில் யோசித்ததில்லை. ஒன்றோடு ஒன்றை தொடர்பு படுத்திப் பார்த்ததில்லை.

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

ஆரம்பகாலங்களில் பாலகுமாரன்.

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?

நாவல்களை வாசிக்க தனிமை வேண்டும்.

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

சமீபகாலங்களில் வாசிக்கும் எல்லாவற்றிலும் உள்ளடகத்தை விட மொழிநடை ரசிப்பே பிரதானமாயிருக்கிறது.

28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?

ரொம்ப சில நேரங்களில்.

29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.

இல்லையென்றே தோண்றுகிறது.

30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?

இல்லை.

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

கன்னியாகுமரி - ஜெமோ.

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?

இதுவரை இல்லை. சுயசரிதை எழுத ஆசை உண்டு.


தொடர விரும்பும் எல்லோருக்கும் அழைப்பு...



Thursday, October 09, 2008

பெயர்தல் குறிப்புகள்


நான் உடல்பெயர்கிறேன்
இடமும் பெயர்கிறேன்
பறந்து

மார்புகளை துறக்கும் நேரம்
சிறகுகள் முளைத்துவிடுமென்று
எனக்கு நிச்சயமாகத் தெரியும்

மனுஷிக்காய் சுமந்ததை
துவாரங்களில் வடியவிட்டு
லேசாகியிருப்பேன்

ஞாபகங்களை செறிவூட்டி
நீல நிற தீற்றலாய் சேர்த்திருப்பேன்

உருமாறும் கடைசி கணம்
மிஞ்சியிருக்கும்
காதலோ குரோதமோ
கொண்டதோர் பறவையாகி...

கழியும் யுகங்களின் ஓர்
சாயும் வேளை
கூட்டத்தில் சேராத
நீல மூக்கு கழுகையோ
நீலம் பாரித்த குருவியையோ
என் பேர் சொல்லி கூப்பிடு
முழுதும் துறக்க முடியாதெனக்கு.


நன்றி : வார்த்தை.