Thursday, December 25, 2008

சுருக்குப்பை - 2008

அதிகம் கேட்டது - disturbia - Rihanna, வீணையடி நீயெனக்கு - எதையோ தேட இணையத்தில் கிடைத்த பாரதியார் பாடல் - எஸ்பிபி குரலில், pappu cant dance saala, ishq ada hai, போன மாதம் முழுக்க - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை.

அதிகம் பார்த்த வீடியோ - gimme more - Britney Spears - (sexy figure n innocent face - deadly combo), mayya mayya - mallika sheravat பாட்டின் ஓபனிங் சீனுக்காக.

ரசித்த படங்கள் - Rock on, jhodha akbar, பொய் சொல்ல போறோம், the bridges of madison county, into the wild...

பெரிய ஐயோ - saawariya. jab se tere naina தவிர்த்து!

ஜொள்ளு லிஸ்டில் புது வரவு - ஃபர்ஹான் அக்தர்.

ஆஹா - தீபிகா படுகோன்.

தினமும் காலையில் வாசிக்க விரும்புவது - ஜெயமோகன் வலைப்பதிவு.

சந்தோஷம் - 'மகளிர் மட்டும்' - எட்டு பேர் பெண்கள் குழு கனஜோராக போய்க் கொண்டிருப்பது.

ரெசல்யூஷன் - நோ வாழைப்பழம். :-(

வருத்தம் - ப்பூ இவ்ளோதானான்னு ரொம்ப பெருமையடிச்சிட்டு இருந்த ஷேர் டிரேடிங் ஊத்திக் கொண்டது.

வாசித்ததில் பிடித்தது - காட்டில் ஒரு மான் - அம்பை.

பாதியில் விட்டது - a fine balance - Rohinton mistry, Shantaram - gregory david roberts. முன்னது பிழியும் சோகம், ரெண்டாவது நீளம்.

கச்சேரி - பாம்பே ஜெயஸ்ரீ, டி.எம்.கிருஷ்ணா. ஹிந்து ம்யூஸிக் ஃபெஸ்டில் ரொம்ப ரசிப்பேன்னு நினைத்த நிகழ்ச்சிகளை எல்லாம் தாண்டி உலுக்கிப் போட்ட கச்சேரி. கர்னாடக சங்கீதம் கேட்கும் போது வழக்கமாக நிகழும் அலைபாய்தல்களை ஆரம்பம் முதலே கட்டுக்குள் கொண்டு வந்து 'சர்வம் ப்ரம்ம மயம்' தர்பாரி கானடாவில் கேட்கும் போது எத்தனையோ நாட்களாக சேர்த்து வைத்திருந்த சோகத்தையெல்லாம் தட்டி எழுப்பி இப்ப அழுன்னு அழ அடித்த கச்சேரி. உனக்கு அந்தப் பாட்டா ரொம்ப பிடித்திருந்தது என்று ஆல்டைம் ம்யூஸிக் பார்ட்னர் சக்ரபாணி அய்யா ஏன் திரும்பத் திரும்பக் கேட்டார் என்பது இன்னும் புரியாத ஆச்சர்யம். (அந்த ராகம் பற்றிச் சொன்னதும் அவரே) அன்று இரவு வெகு நேரம் வரை தூங்கமுடியவில்லை. இன்னொரு வருஷத்துக்கு இது எதேஷ்டம்.

லைட் ம்யூஸிக் - அதே ஹிந்து ம்யூஸிக் ஃபெஸ்டில் ஸ்ரீநிவாஸ், சின்மயி, நரேஷ் அய்யர் & அனுராதா ஸ்ரீராம் வழங்கிய பழைய ஹிந்தி சினிமா பாடல்கள். ம்யூஸிக் அகடமி இதுக்கு ஓகே சொன்னது பெரிய ஆச்சர்யம்! சிரத்தையாக தேர்ந்தெடுத்த பாடல்கள். sincere effort. டிட்பிட்ஸ் - ஸ்ரீநிவாஸுக்கு வெள்ளைக் குர்த்தா பொருந்தின அளவு கலர் எடுபடவில்லை. நரேஷ் அய்யரின் சுருள் தலைமுடி ஆஹா. சின்மயி ஸ்வீட். உடைகள்தான் கொஞ்சம் gaudy. அனுராதா ஸ்ரீராம் இரண்டரை மணி நிகழ்ச்சிக்கு நான்கு முறை உடை மாற்றியது ஓவர்.

பிடித்த இடங்கள் - மணாலிக்கு பக்கத்தில் செய்ஞ் என்ற சின்ன ஊர். தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸுக்கு முன்னால் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த பிரம்மாண்ட மலையும் மூடியிருந்த கதவு ஜன்னல்களைத் தாண்டி கேட்ட செய்ஞ் நதியின் கூச்சலும் . குளிர்காலத்தில் முழு மலையும் பனியால் மூடியிருக்குமாம். அங்கே வசிப்பவர்கள் அந்த ஆறு மாதத்திற்கு மலைமேலேயே வாசம். எத்தனை யோசித்தும் அந்த வாழ்க்கையை முழுதாக கற்பனை செய்ய முடியவில்லை. முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் இருக்கிறது.

மணாலியில் ரோர்க் நினைவிடத்தில் ஒரு தாழ்ந்த தளிர் பச்சை மரத்தின் கீழே போட்டிருந்த கருங்கல் உட்காருமிடம். குளிர்ச்சியும் ஏகாந்தமுமாய். அங்கே உட்கார்ந்திருக்கும் போது அந்த முழு பயணமும் அந்த இடத்தில் உட்கார்ந்து அப்படி உணர்வதர்காக மட்டும் என்றிருந்தது. அங்கே வாழ்ந்த அந்த தம்பதிகளை நினைத்து கொஞ்சம் பொறாமை வந்தது.

சொல்ல முடியாமல் போனது - டிக்கெட்டுடன் ஒரு durex condom இலவச இணைப்பாக வைத்து மிரட்டிய ராக் ஷோ. ஐந்தரை மணிக்கு என்று அறிவித்திருந்த மைதானத்தை தேடிப் போக ஆறானது. சொல்லி வைத்தது போல அத்தனை பேரும் ஏறக்குறைய முழு கறுப்பில் தான் உடை. அந்த நுழைவாயிலில் நின்றிருந்தவர்களில் முப்பது வயதுக்கு மேலிருந்தவர்களை எண்ணிவிடலாம். ஏழு மணிக்கு தகரத் தடுப்பை தட்டி உள்ளே விடச் சொல்லி ரகளை மெல்ல ஆரம்பித்தது. உள்ளே விட ஆரம்பித்தவுடன் முண்டியடித்த கூட்டம் நடுவில் மாட்டிக் கொண்ட ஒற்றை 'நானை' அலுங்காமல் பத்திரமாக உள்ளே கொண்டு போய் சேர்த்த அத்தனை இளைஞர்களுக்கும் நன்றி.

திருப்தி - உயிர்த்திருப்பது.

சோகம் - சாப்பிடப் போன இடத்திலோ சினிமா அரங்கிலோ குண்டுகளெதும் வெடிக்காமல் இன்னும் உயிரோடிருப்பதற்காக சந்தோஷப் படுவது.

Tuesday, December 09, 2008

ஒரு முத்தம்

சென்னை மழையும், வீட்டு விசேஷமுமாய் சேர்ந்து ஒரு பத்து நாட்கள் நிறைய பேரோடு இருக்க நேர்ந்தது. பொதுவாகவே தனிமை விரும்பி, ஒரு நாளின் சில மணிநேரங்களாவது தனியாக இருக்காது போகும் போது தோன்றும் அசௌகரியமும் மெல்ல பரவும் சிடுசிடுப்பையும் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே இது போன்ற நாள் பூராவும், தொடர்ந்தும் உறவினர்களோடு கழிக்க நேரிடும் சமயங்களுக்காக முன் கூட்டியே என்னை தயார் செய்து கொள்ள வேண்டியிருந்திருக்கிறது.

இந்த சில நாட்களில் கவனித்தது...

ஐந்து வயதுக்குக் கீழான ஒரு குழந்தை கூட இருக்கவில்லை. குழந்தையின் சிரிப்பிலும் மழலைப் பேச்சிலும் பரவியிருக்கக் கூடிய மென்மை அறவே இல்லை. எல்லாரும் எல்லா நேரமும் பெரியவர்களாகவே இருந்தோம்.

அறுபது ப்ளஸ் ஆண்கள் கூடுதல் சிடுசிடுப்பாக இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கும் ஒருவரோடும் ஒத்துப் போகவேயில்லை. மாமனார் - மருமகன், அண்ணன் - தம்பி... எந்த உறவும் விதிவிலக்கில்லை.

ஆண்கள் கையில் டீவி ரிமோட் கிடைத்தால் தவறியும் கீழே வைக்காமல் இருந்தார்கள். பத்து பதினைந்து பேர் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதும் கூச்சமில்லாமல் சேனல் மாற்றிக் கொண்டே இருந்தார்கள். பெண்கள் சீரியல் பார்க்கத் தொடங்கும் போது பகல் சீரியலுக்கு அலுத்துக் கொண்டவர்கள், ப்ரைம் டைம் சீரியல்களுக்கு சத்தமில்லாமல் ஜோடி சேர்ந்து கொண்டார்கள்.

தான் வாங்கி வந்திருந்த ஒரு விசிடி ரொம்ப பிடித்திருந்ததால் வந்திருந்த எல்லாரோடும் மூன்று நாட்களில் நான்காவது முறையாக ஒரே படத்தை ஓடவிட்ட அப்பாவைப் பார்க்க பயமாகவும் கவலையாகவும் இருந்தது.

பெண்கள் சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அதை சாமர்த்தியமாக நினைத்து தங்களை இன்னும் சாமர்த்தியசாலிகளாக்கும் முயற்சிகளில் இருந்தார்கள். அதில் ஒருவருக்கொருவர் போட்டி வேறு.

கணவரை ஊரில் விட்டுவிட்டு தனியாக வந்த பெண்கள் சுதந்திரமாக இருந்தார்கள். நாளுக்கு ஒரு முறை செல்போனில் பேசும் போது வழக்கமில்லாத பிரியமாய் பேசினார்கள். வறட்சியான குடும்ப வாழ்க்கைக்காக சலித்துக் கொண்டவர்கள் மக்கள் கல்யாணத்தைப் பற்றி கவலைப் பட்டார்கள்.

அரட்டை, விளையாட்டுகள், கேலிகளுக்கு குறைவில்லை.

கடைசி நாள் கிளம்புவதற்கு முன் சாப்பாட்டு மேசையில் யாரோடோ பேசிக் கொண்டிருக்கும் போது 'கிளம்பறோம்மா' என்று சொல்லி வலது நெற்றியில் அப்பா கொடுத்த அவசர முத்தத்தில் அதுவரை தளும்பிக் கொண்டிருந்ததெல்லாம் நிலை கொண்டது.

Wednesday, October 22, 2008

என் சினிமா சினிமா

போன தொடர் விளையாட்டிலேயே கடைசியில் ரொம்ப குழப்பியது யாரை தொடர அழைப்பது என்பதுதான். கலவையாக ஒரு லிஸ்ட் போட்டு கடைசியில் எல்லாவற்றையும் டிலீட் செய்து ஓபன் இன்விடேஷன் என்று தப்பித்துக் கொண்டேன். இப்போது அதை முதலிலேயே முடிவு செய்து விட்டதால் நோ குழப்பம். ஓபன் இன்விடேஷன் விட தெரிந்த நான், தானாக இந்த விளையாட்டில் சேர்ந்து கொள்ளாததும் முரண் தான். ஸோ... அழைப்பு விடுத்த கேயாரெஸ்ஸுக்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஆரம்பித்தது நினைவில்லை. நினைவிலிருப்பது - பத்ரகாளி. கோவை ராயல் அல்லது இருதயா தியேட்டரில்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா.

3. கடைசியாக அரங்கிலன்றி பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

வேறெங்கேயும் தமிழ் படம் முழுதாகப் பார்ப்பது ரொம்ப குறைவு.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

மகாநதி. டீவியில் எப்போதாவது பார்க்க கிடைத்தால் பார்க்கவும் முடியாமல், விடவும் முடியாமல் ஒரு அலைமோதல் இருக்கும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தாக்கியது எதுவும் இல்லை. இதிலெல்லாம் தாக்கம் வர அனுமதிப்பதில்லை. குஷ்பு விஷயத்தில் கொஞ்சம் கடுப்பானதுண்டு.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்ப விஷயங்களை ரசிப்பதோடு சரி.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ரொம்ப மேலோட்டமாக. சிற்றிதழ்கள் கிழிப்பதை சிரிப்போடு சில நேரங்களில். சாருவின் கட்டுரைகளையும் சேர்த்தி. :-)

7.தமிழ்ச்சினிமா இசை பற்றி?

எப்போதும் ரசித்தது. அந்தந்த காலகட்டங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ்... எல்லாருமே. சினிமா இசை இல்லாமலிருந்திருந்தால் என்னுடைய மன அழுத்த நேரங்களில் என்ன செய்திருப்பேன்?

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

எல்லா படங்களும் பார்ப்பதுண்டு. அங்க்லேஷ்வரில் வீட்டுக்கு ரொம்ப பக்கத்தில் இருந்த ஒரு வீடியோ காஸட் லைப்ரரியில் இருந்த எல்லாப் படங்களும் பார்த்து முடித்திருந்தேன். அப்போது நிறைய மலையாளப் படங்களும். கொல்கத்தா போன பிறகு பெங்காலி படங்கள். தற்போது இணையத்திலிருந்து உலகப் படங்கள்.

நினைவிலிருந்து கொண்டு ஒன்றிரண்டு நாட்கள் தொந்தரவு செய்த படங்கள் நிறைய. சட்டென்று நினைவுக்கு வருவது மாத்ருபூமி, ஷக்தி, அந்தர்ஜலி யாத்ரா(பெங்காலி)...

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிறைய தூரம் போக வேண்டும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது. தமிழர்கள் தவித்துப் போவார்கள்.


இந்தப் பதிவு எழுத ஆரம்பித்தபோது நிறைய விஷயங்கள் நினைவுக்கு வந்தது. சினிமாவும் புத்தகங்களும் எல்லா நேரங்களிலும் கூடவே இருந்திருக்கிறது. எப்படியாவது வாரத்தில் மூன்று நான்கு படங்கள் பார்த்து விடுகிறேன். சொந்த கலெக்ஷனில் உள்ளது, டீவி, நண்பர்கள், மகள் கொண்டு வந்து சேர்ப்பது. ஒரு சுவாரசியமான திரைப்படம் பார்க்கும் போது மெல்ல உள்ளே இழுத்து, எதாவது ஒரு விஷயத்தோடு தொடர்பு ஏற்பட்டு, அந்த இரண்டு மணி நேரம் வேறொரு உலகத்திற்கு போய் விட வைக்கிறது. சில நேரங்களில் திரும்பி வரப் பிடிக்காமல்.

இவ்வளவு சினிமா பார்க்க என் அம்மா முதல் காரணம். அம்மாவுக்கு அந்த நாட்களில் எல்லாப் படமும் பார்க்க பிடிக்கும். நான், கௌரி, அம்மா மூன்று பேரும் தான் சினிமாவுக்குப் போவோம். வீட்டிலிருந்து பெரும்பாலான தியேட்டர்கள் நடந்து போய்விடக் கூடிய தூரம் தான். டிக்கெட், இடைவேளையில் ஒரு கோன் ஐஸ்கிரீம்... ஒரு ஆளுக்கு நாலு ரூபாய். வாரத்திற்கு ஒன்றாவது பார்த்திருந்தோம்.

பத்தாவது படிக்கும் போது பள்ளிக்கூடத்திலிருந்து கிளம்பும் போது நானும் குந்தவியும் நாளைக்கு இன்னது படித்து முடிக்க யோசித்து வீட்டுக்கு வந்தால் அம்மா சினிமாவுக்கு கிளம்பிக் கொண்டிருப்பார். படிக்கணுமேன்னு லேசாக இழுத்தால், ராத்திரி வந்து படிச்சுக்கப்பா... எல்லா நேரமும் என்ன படிப்பு என்று கூட்டிப் போய்விடுவார். மறு நாள் காலையில் முழுதாக முடிக்க முடியவில்லை என்று குந்தவிக்கு காரணம் சொல்லும் போது அவளால் நம்பவே முடியாது. அவள் வீட்டில் சினிமா என்ற பேச்சே ஆகாது!

கல்லூரிக்கு போன பிறகும் கூட எங்களுடைய ஆறு பேர் க்ரூப்பில் யார் வீட்டிலும் சினிமா பார்க்க அனுமதியில்லை. மூன்றாவது செமஸ்டர் ஹோலி பண்டிகைக்காக முதல் முதலாக கட் அடித்து பார்த்த முந்தானை முடிச்சில் ஆரம்பித்து மீதி ஒன்றரை வருடத்தில் பார்த்தது எல்லாம் வீட்டில் அம்மாவோடு ஒருதரம், காலேஜில் கட்டடித்து ஒரு தரம். நாற்பத்தி ஏழு படங்கள் பார்த்ததாக ஒரு லிஸ்ட் போட்டதும், கடைசி செமஸ்டரில் அட்டெண்டென்ஸ் போதாததும் நினைக்கும் போது சின்னதாக ஒரு சிரிப்பு வருகிறது.

டிக் டிக் டிக் பார்த்து வீட்டுக்கு வரும்போது காதல் கடிதம் அப்பாவிடம் மாட்டிக் கொண்டு டோஸ் வாங்கினது, ரிலீஸ் ஆன சமயத்தில் வயது போதாது என்று என்னை கழட்டி விட்டுப் போன தப்புத்தாளங்களை எப்போதுமே பார்க்க முடியாமல் போனது, கட் அடித்துப் பார்த்த நாற்பத்தி ஏழு படங்களின் போதும் இன்னைக்கு மாட்டிக்கப் போறேன் என்று பயந்திருந்த மாதிரி ஒரு தடவை கூட ஆகாதது, ஒரு ஞாயிறு மதியம் முதல் மரியாதை பார்த்துக் கொண்டு இருக்கும் போது கரெண்ட் போய்விட எதிர் வீட்டில் மீதிப் படத்தை முடித்து வீட்டுப் படி ஏறும் போதே 'எனக்கு உள்ளே போரடிக்கிறது' என்று அலார்ம் அடித்ததில் குறைப் பிரசவத்தில் மகளைப் பெற்றெடுத்தது... மறக்க முடியாதது.

வட இந்திய வாழ்க்கையில் அறிமுகமான ராஜ்கபூர், தேவ் ஆனந்த், வைஜயந்தி மாலா படங்களைத் தேடித் தேடி பார்த்தது... எங்கே கலைப்படங்களுக்கு தடம் மாறினேன் என்று நினைவில்லை. அவற்றோடு அதிகம் தொடர்பு கொள்ள முடிந்தது. பிறகு பெங்காலி படங்கள். அதிலே தெரிந்த ரியாலிட்டி, வித்தியாசமான முயற்சிகள், சென்னை நண்பர்கள் அறிமுகப் படுத்திய உலகப்படங்கள்... இத்தனை வருஷங்களில் எத்தனை படங்கள்! சினிமா ஒரு எஸ்கேபிஸம். அம்மாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.


Wednesday, October 15, 2008

புத்தகங்களோடு நான்

மற்ற நேரங்களில் தோணுகிறதோ இல்லையோ தொடர் விளையாட்டுகளுக்கு எப்போதும் மறுப்பில்லை. ராம்கிக்கு நன்றி.1. நீங்கள்
படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

நினைவில்லை. ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போது பொழுது போகாமல் வாசிக்க ஆரம்பித்த சாருலதா வாக இருக்கலாம். கல்கியிலிருந்து கிழித்த பக்கங்களை பைண்ட் பண்ணி அம்மா வைத்திருந்தது. கதாநாயகி குதிரை மேல் உட்கார்ந்திருக்க, ஊட்டியில் நடப்பதாக வரும் கதை.

2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?

பத்து பதினோரு வயதிலிருந்து இருக்கலாம். சுவாரசியமாக வாசிக்க ஆரம்பித்தது பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் கௌரியோடு சேர்ந்து. ரெண்டு பேரும் சேர்ந்து வாசிப்பதும் அதைப் பற்றி பேசுவதுமாய்... அந்த வெகுளித்தனம், ஆர்வம் எல்லாமே தனி.

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

வாசிக்க ஆரம்பித்த காலங்களில் எது கிடைத்தாலும் வாசித்திருக்கிறேன். இப்போது வாசித்ததில் பிடிக்கும் எழுத்தாளர்களின் எந்த மாதிரியான படைப்பும் வாசிக்கப் பிடிக்கிறது.

4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு

இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து

உ. புத்தகத்தின் வடிவமைப்பையும், அட்டையையும் பார்த்து (ரொம்ப சில நேரங்களில் இதுவும்)

5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

அ. பக்க அளவு

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

எழுத்தாளர் முன்வைப்பதிலிருந்து தான்.

7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

முன்னூறு நானூறு பக்கங்களாவது.

8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

ரொம்ப பெரிய நாவல் அதற்கான தருணத்திற்கு சலிக்காமல் காத்திருக்கும்.

9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

எப்போதும் இல்லை.

10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?

தனிமை வாய்க்கும் போதெல்லாம்.

11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?

சிலது இருக்கிறது, ஆனால் முடித்துவிடுவேன்.

12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?

பிடிக்காமல் போனது என்று சொல்வதற்கில்லை... எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருந்திருக்கிறது.

13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?

ஜெமோவின் விஷ்ணுபுரம், கொற்றவை

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?

ஆரம்பகால பாலகுமாரன் நாவல்கள், தி.ஜா, சாண்டில்யன், கல்கி, ஆதவன், ஜெமோ... பத்திலெல்லாம் அடங்காது.

15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

தமிழ் தவிர வேறு இந்திய மொழிகள் எதிலும் வாசிக்கத் தெரியாது

16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?

Ayn Rand , ஆங்கில ரமணிச்சந்திரன் என்று தெரியாமல் ஆரம்பகாலத்தில் வாசித்த Danielle Steel.

17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

மோகமுள், மெர்க்குரிப்பூக்கள், இரும்பு குதிரைகள்...

18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

சிலநேரங்களில்.

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

பாலகுமாரனின் ஆண் கதாபாத்திரங்களில், குறிப்பாக கரையோர முதலைகள் ஹீரோ, மயங்கிய விடலை பருவங்களில் அப்படி ஒரு ஆளை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. லட்சிய மனிதராக யாரும் இருந்ததில்லை.

20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?

பெரிதாக எதும் உணர்ந்ததில்லை.

21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?

ரொம்ப ரசிக்கும் எந்த எழுத்தும்.

22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?

ரத்த உறவு, ஏழாம் உலகம்.

23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

ஆ.பேச்சு வழக்கு

24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?

இதுவரை அந்த கோணத்தில் யோசித்ததில்லை. ஒன்றோடு ஒன்றை தொடர்பு படுத்திப் பார்த்ததில்லை.

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

ஆரம்பகாலங்களில் பாலகுமாரன்.

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?

நாவல்களை வாசிக்க தனிமை வேண்டும்.

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

சமீபகாலங்களில் வாசிக்கும் எல்லாவற்றிலும் உள்ளடகத்தை விட மொழிநடை ரசிப்பே பிரதானமாயிருக்கிறது.

28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?

ரொம்ப சில நேரங்களில்.

29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.

இல்லையென்றே தோண்றுகிறது.

30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?

இல்லை.

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

கன்னியாகுமரி - ஜெமோ.

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?

இதுவரை இல்லை. சுயசரிதை எழுத ஆசை உண்டு.


தொடர விரும்பும் எல்லோருக்கும் அழைப்பு...Thursday, October 09, 2008

பெயர்தல் குறிப்புகள்


நான் உடல்பெயர்கிறேன்
இடமும் பெயர்கிறேன்
பறந்து

மார்புகளை துறக்கும் நேரம்
சிறகுகள் முளைத்துவிடுமென்று
எனக்கு நிச்சயமாகத் தெரியும்

மனுஷிக்காய் சுமந்ததை
துவாரங்களில் வடியவிட்டு
லேசாகியிருப்பேன்

ஞாபகங்களை செறிவூட்டி
நீல நிற தீற்றலாய் சேர்த்திருப்பேன்

உருமாறும் கடைசி கணம்
மிஞ்சியிருக்கும்
காதலோ குரோதமோ
கொண்டதோர் பறவையாகி...

கழியும் யுகங்களின் ஓர்
சாயும் வேளை
கூட்டத்தில் சேராத
நீல மூக்கு கழுகையோ
நீலம் பாரித்த குருவியையோ
என் பேர் சொல்லி கூப்பிடு
முழுதும் துறக்க முடியாதெனக்கு.


நன்றி : வார்த்தை.

Wednesday, August 13, 2008

அன்புள்ள அருணா நீங்க சொன்ன மாதிரி தான் atikkiReen

Thursday, August 07, 2008

Ishq Ada Hai...

சில நாட்களுக்கு முன் ஒரு மாலை சமைக்க ஆரம்பிக்கும் போது ஐபாடிலிருந்து தேடிக் கேட்க ஆரம்பித்தது Ada. ரஹ்மானின் சமீபத்திய ஹிந்தி மூவி ஆல்பம். Ishq Ada Hai என்று தொடங்கும் பாடல் ஆண் குரலில் ஒன்றும் பெண் குரலில் ஒன்றுமாய். இரண்டும் முற்றிலும் வேறு வேறு அனுபவம். ஆண் குரல் கனமாக, அதுவே ஹஸ்கியாக, ஒரு பெரிய மேடையில் தன்னந்தனியாக நின்று கொண்டு hey look at me, i am singing என்று இழுத்துக் கட்டிப் போடும் குரல். அதிர அதிர நிறைக்கிறது. கேட்டுக் கொண்டிருக்கும் போதே முன்னால் இருக்கும் காய்கறி, சமையலறை எல்லாம் மறைந்து போய் வெறும் அந்தக் குரலும் நானும் மட்டும். இது தான் தேடுவதும், சில சமயங்களில் வாய்ப்பதும். தொடர்ந்த பாடல்களில் சோனு நிகம் குரலும், ரஹ்மானுமாய் ஓடிய சிந்தனையை துரத்திய போது...

ரங்கீலா, தால், ரோஜா... ரஹ்மான் - ஹரிஹரன் ஜோடி, ரஹ்மான - சோனு நிகம், காந்திதாமில் ராத்திரி நேர ட்ரைவ் முடித்து காலியாய் கிடக்கும் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திக் கேட்ட ஏதேதோ பாடல்கள்... தில் ஸே படத்தின் 'ஏ அஜ்னபி'யில் மட்டும் தான் கேட்கவே விரும்பாத உதித் நாரயணை ரசிக்க முடிந்தது.... fiza படத்தின் 'து ஹவா ஹை' சோனு நிகம்... ஏதோ ஒரு ஆல்பத்தின் இரண்டு பக்கமும் வரும் ஒரு அருமையான பாடலுக்காக திரும்பத் திரும்பக் கேட்டதும், வேறு வழியில்லாமல் காரில் அடைபட்டு எங்களோடு கேட்க நேர்ந்ததில் தமிழ், ஹிந்தி பாடல்களே பிடிக்காமல் போனதாக பின்னெப்போதோ மகன் சொன்னது... இப்போதும் மிச்சம் இருப்பது அந்த மோன நிலையும் அது தந்த சந்தோஷமும் மட்டும்....

கௌரி... வாலிப வயதில் நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்திருந்தது ரெண்டு பேருக்குமே பெரிய கொடுப்பினை. எல்லாவற்றிலும் எதிர் எதிரான எங்களை இணைத்திருந்தவை கமல்ஹாசன், பாலகுமாரன். முப்பது பைசா பாட்டு புத்தகம் ஐநூறு அறநூறு வைத்திருந்தாள். எண் போட்டு எதோ ஒரு வரிசையில். காலையில் எட்டு இருபதுக்கு கோவை வானொலியில் பாட்டு போடத் தொடங்கும் போது ஜன்னல் பக்கத்தில் புத்தகக் கட்டோடு தயாராக நின்று கொண்டிருப்பாள். முதல் பாட்டு பேர் சொல்லி ஆரம்பிக்கும் போது புத்தகத்தை தேடி எடுத்து பாட்டோடு சேர்ந்து பாட ஆரம்பித்தால் சுற்றி நான்கைந்து வீடும் அவள் பாட்டையும் சேர்த்து கேட்கும். சரியாக எட்டே முக்காலுக்கு புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஸ்கூலுக்கு கிளம்பியாயிருக்கும். அவளுடைய குரலுக்கு முன்னால என் குரலெல்லாம் எழும்பவே நினைத்ததில்லை! கல்யாணமாகி பாஷை தெரியாத ஊருக்கு போய் கணவரும் கிளம்பிப் போன யாருமில்லாத வீட்டில் தான் அந்த குரல் வெளியே வர துணிந்தது. ஆசைக்காகவாவது கொஞ்சம் பாடிக் கொள்ள.

கௌரியிலிருந்து... மூன்று மாதம் பாட்டு சொல்லிக் கொடுத்த பூர்வர்ஷா... உனக்கு சங்கீதமே தெரியாதும்மா, ஆனா ரசிக்கத் தெரிஞ்சு வச்சிருக்கே என்று கொட்டி தட்டிக் கொடுத்த நண்பர் சக்ரபாணி, எண்பதுகளின் இளையராஜா, ஹரிஹரனை முதல் முதலாக கஜல்களில் அறிமுகம் செய்து கொண்டது, அஹமதாபாத் தெருக்களில் தேடி அலைந்து வாங்கிய லதாவின் மீரா பஜன், எண்பத்தி எட்டில் தூர்தர்ஷனில் தவறாமல் பார்த்த 'சாதனா'... அப்பாவுக்கு ரொம்ப பிடித்த அபூர்வ ராகங்கள்... திரும்பத் திரும்ப கேட்க வைத்து உள்ளே இழுத்துப் போட்டது.... வீட்டில் முதல் முதலாக வாங்கியிருந்த ஸ்டீரியோவில் ஸ்டீரியோ இபெக்ட் புரிய வைக்க முயன்றது... புரியாத போதும் அவருக்காக மையமாக தலை ஆட்டியது... இன்னும் முன்னால்... மத்யாண நேரம் காற்றுக்காக கதவுக்கு பக்கம் படுத்து தூங்கும் போது பக்கத்தில் படுக்கப் போட்டு அம்மா மெல்லிய குரலில் எதாவது தாலாட்டு பாடியிருக்கலாம்...

Ishq Ada Hai ... பெண் குரல் பாட்டு யோசனையை நிறுத்தி மறுபடியும் ஆல்பத்திற்குள் இழுத்து வந்தது. ஆண் குரலைப் போல ஆளுமையெல்லாம் இல்லாமல் அமைதியாகத் தொடங்குகிறது. குரலிலும் பெரிய வசீகரமில்லை. மெல்ல ஒரு வேகம் கொண்டு ஒரு சூபினஸுடன் போதையூட்டி கிறங்க வைக்கிறது. மீண்டும் மீண்டும் தேடச் சொல்லும் போதை. வேறேதும் தேவையிருக்கவில்லை...

Tuesday, June 03, 2008

பெயர்தல் குறிப்புகள்.

நான் உடல்பெயர்கிறேன்
இடமும் பெயர்கிறேன்
பறந்து

மார்புகளை துறக்கும் நேரம்
சிறகுகள் முளைத்துவிடுமென்று
எனக்கு நிச்சயமாகத் தெரியும்

மனுஷிக்காய் சுமந்ததை
துவாரங்களில் வடியவிட்டு
லேசாகியிருப்பேன்

செறிவூட்டிய ஞாபகங்களை
நீல நிற தீற்றலாய்
சேர்த்திருப்பேன்

உருமாறும் கடைசி கணம்
மிஞ்சியிருக்கும்
காதலோ குரோதமோ
கொண்டதோர் பறவையாகி...

யுகங்களுக்கப்பால்
சாயும் வேளை
கூட்டத்தில் சேராத
நீல மூக்கு கழுகையோ
நீலம் பாரித்த குருவியையோ
என் பேர் சொல்லி கூப்பிடு

முழுதும் துறக்க முடியாதெனக்கு.

Friday, May 30, 2008

இன்னொரு பயணம்...

இறங்க வேண்டிய நிறுத்தம்
நெருங்கிக் கொண்டிருக்கையில்
வழிமறித்து பக்கத்திருக்கையில் வந்தமர்ந்தாய்
தாண்டிச் செல்வது
கணநேரத்தில் சாத்தியமென்றாலும்
நகராமல் கட்டிக் கிடக்கிறேன்

நித்தமும் பழகிய பாதையில்
கண்ணிற்கு நழுவிய காட்சிகளை
பக்கத்திலிருந்து காட்டுகிறாய்

மறந்து விட்ட கனவுகளை
ஒவ்வொன்றாய்
விரல்களை ஊசியாக்கி
பொறுக்கியெடுத்து கோர்க்கிறாய்
வாசனை பரவுகிறது

உள்ளோடும் இசையை
உணர்ந்திருந்தேனென்றாலும்
நானேயொரு வாத்தியமென்று
தெரிந்திருக்கவில்லை
உன் விரல் தீண்டும் வரை

கட்டுகள் தளர்த்தி
களியாட்டமாகிறது
பின்பாயும் காலத்தின் வேகம்
பரவசம் நிறைக்கிறது
விலக்கிக் கொள்ளாமல் தடுமாறுகிறேன்

மோனத்திற்கும் நிஜத்திற்குமாய்
வீசியாடும் ஊஞ்சல்
மோனத்திலே நிலை கொள்ள துடிக்கயில்

தவிர்த்திருக்க முடியாத திருப்பத்தில்
சிறியதோர் குலுக்கலுடன்
முடிவுக்கு வரும் பயணம்
கனவுகளைக் கலைத்ததா
கலைந்ததற்கான ஆட்சேபனையா
யோசிப்பதில் ஆர்வமில்லாதிருக்கிறது

தேர்வு செய்யவோர் வாய்ப்பு
கொடுப்பது போல் கொடுத்து
தெரிவாக்க மறுக்கப் பட்ட
சந்தர்ப்பம் நீ

சந்தோஷித்தேனா துக்கம் கொண்டேனா
புரியாததோர் வெளியில்
மிதந்து செல்கிறேன்
கால் பாவும் போது
வெடித்து வடியப் போகும்
எரிமலையை சுமந்து கொண்டு.

நன்றி : வார்த்தை.

Sunday, May 25, 2008

ஜெயமோகன் சிறுகதைகள்... கொஞ்சம் குஷ்வந்த் சிங்...

ஒரு தலைப்பு கொடுத்து கதையோ கவிதையோ எழுதித் தரச் சொல்வது என்னைப் பொறுத்த வரை பரிட்சைக் கட்டுரைகளை நினைவு படுத்தும் ரிடிகுலஸ் சமாச்சாரம் என்றாலும், அப்படி ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பம் வரும் போது கொஞ்சம் முட்டிப் பார்க்கும் உத்வேகம் வரும் என் முரண்பாட்டை எப்போதும் ரசித்திருக்கிறேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் கொடுத்து கதை எழுதச் சொன்ன போது ஒரு ரெபரென்ஸுக்காக(!) இரா. முருகன் சிறுகதை தொகுப்பும், ஜெயமோகன் சிறுகதை தொகுப்பும் வாங்கி வந்து வாசிக்க ஆரம்பித்திருந்தேன். இரண்டையும் மாறி மாறி வாசிக்கும் போது சிறுகதை எழுதுவது சுலபமாகத்தான் தெரிந்தது. ஓரளவிற்கு பிடிமானம் கிடைத்து விட்டதாக நினைத்து எழுத ஆரம்பித்ததும், எழுதியதை வாசித்துப் பார்த்த போதும்... ரொம்ப சலிப்பாக இருந்தது. இந்தப் புத்தகங்கள், என் சிறுகதை முயற்சி இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாமென்ற முடிவெடுத்து கதையை எழுதி முடித்ததும் ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் ஆயுசுக்கும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பும் ஒரு அனுபவம்.

காடும் ஏழாம் உலகமும் உச்சகட்ட வாசிப்பனுபவமாய் இருந்த போதும் நண்பர் சிபாரிசில் வாசித்த விசும்பு அனுபவம் நிச்சயம் வேறானது. வாசித்து முடித்த கையோடு மறுவாசிப்பு செய்ய வைத்த (இரண்டு கதைகளை தவிர்த்து) ஆச்சர்யம். இரண்டாவது முறை வாசிக்கும் போதும் அதே பசியோடு அந்தக் கதைகளை ருசிக்க முடிந்தது எனக்கு முதல் முறையாக நிகழ்ந்தது. ஒன்றிரண்டு முறை அந்தக் கதைகளைப் பற்றி பேச நேர்ந்த போது நான் பிதற்றுவது எனக்கே தெரிந்தது.

ஒரு இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் அதே போலொரு மயக்கம் வேண்டி தொடர்ந்த சிறுகதை தொகுப்பின் பின்பாதி இதை எழுதும் வரை கொண்டு வந்திருக்கிறது. ஒரு சமயம் ஒரு கதை மட்டுமே வாசிப்பது சாத்தியமாயிருந்தது. அதன் கனம், அதன் தாக்கம் அடுத்ததை கிரகிக்க என்னிடத்தில் எதையும் மிச்சம் வைத்திருக்கவில்லை.

கொஞ்சம் கண்ணாமூச்சி காட்டித் தொடங்கும். நழுவவே விடாமல் வேகமாக இழுத்துக் கொண்டு போய் இறுதியில் திசை தெரியாத ஒரு பெருவெளியில் விட்டுச் செல்லும் கதைகள். அதற்குப் பிறகு கதை உள்ளே unfold ஆவது ஒரு சுகம். சில நேரங்களில் அது பரவசம். சில நேரங்களில் பேதலிக்கச் செய்து கிடத்திப் போட்டது. நல்ல சங்கீதம் கேட்டு கண் கலங்கியது எப்போதும் நடப்பது. அதற்காகவே தேடிக் கேட்டதும் உண்டு. வாசித்து இப்படி உணர்ந்தது இதுவே முதல் முறை.

93 வருடம் டாக்கா லைப்ரரியிலிருந்து எடுத்து யாராலோ திருப்பிக் கொடுக்கப் படாமல் கொல்கத்தா காலேஜ் ஸ்ட்ரீட் பழைய புத்தகக் கடை வந்து சேர்ந்த Not A Nice Man To Know - The best of Khushwant Singh இப்பொது என் வசம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எழுதிய கட்டுரைக்கள், கவிதைகள், நாடகம், நாவலின் ஒரு பகுதி என்றெல்லாம் கலந்தடித்த ஒரு தொகுப்பு. Going Gaga Over Yoga என்ற பதினைந்து பக்கத்தின் நெடுகத்திலும் யோகாவின் பெருமைகள் தியானம்... சார்பில்லாமல சொல்வது போல நீளும் கட்டுரையின் கடைசி சில பத்திகள்....


' I concede that yoga asanas are good for health and perhaps achieve better results than other systems of exercises. I even concede that meditation may do some good to the mentally disturbed, but i cannot comprehend why a healthy man with a healthy mind should waste his time concentrating on some point between his eyes or his navel.'

Dr. Shrimali gave a guarded reply: 'It is said to make a healthy mind more creative. Everything anyone does he can do better after a course of meditation.'

'There is no evidence of increased creativity following meditation. Give me one example of a creative yogi.'

They looked at each other. Once again it was Dr. Shrimali who replied. "Sri Aurobindo.'

'Yes, Sri Aurobindo. You can't deny he was a creative philosopher,' added Dr Udupa.

'Can you name any other?After all the number of meditating yogis run into hundreds of thousands.'

There was complete silence. It gave me the oppurtunity to have my last fling. 'Anything worthwhile is created by restless minds. All the world's greatest artists, musicians, scientists, writers, poets had tortured minds. Your mental equipoise only produces mental equipoise. Nothing else.'

குஷ்வந்த் சிங் எழுத்தில் நீள வாசிக்கும் போதே எந்தப் புள்ளியில் சந்திக்கப் போகிறோம் என்ற ஒரு எதிர்பார்ப்பிருக்கும். பெரும்பாலும் அது நிகழ்வதுண்டு. இந்தக் கட்டுரையின் இந்த வரி... சரி தவறென்ற விவாதங்கள் தவிர்த்து... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இது தான் அந்தப் புள்ளி! சஞ்சலமும் தேடலுமாய் தடுமாறும் போதெல்லாம் யார் யாராலோ வழிகாட்டப் பட்டு வாசல் வரை போய் திரும்பி வந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. இந்த அலை பாய்தலும் தேடலிலும் தான் உயிர் துடிப்பை உணர்வதாயும், அது அமைதியானால் எதுவோ செத்துப் போய் விடுமென்றும் இன்று வரை நம்பும் என் எண்ணங்கள் பத்து முப்பது வருடத்திற்கு முந்தின குஷ்வந்த் சிங் எண்ணங்களோடு அந்தப் புள்ளியில் கை குலுக்கிக் கொண்டது.

இப்படியொரு புள்ளி இது வரை வாசித்த ஜெயமோகன் எழுத்துகளெங்கிலும் இதுவரை அகப்படவேயில்லை. அகப்படவும் வேண்டாமென்று தான் தோன்றுகிறது.

Saturday, April 19, 2008

Samsara - Movie


ஒரு கோடை விடுமுறைக்கு வறண்ட ஒரிஸ்ஸா சிறையிலிருந்து தப்பி கேங்டாக் போன போது 'ஹா' என்றிருந்தது. மே மாச ராத்திரி கம்பளியைத் தாண்டித் தீண்டும் குளிர், நிறைய பச்சை, கன்னங்களும் மூக்கு நுனியும் சிவந்தேயிருக்கும் குழந்தைகள், தொட்டுப் பார்க்கச் சொல்லும் கேசமும், மென்தோலும்... இந்த ஆரம்ப ஆச்சரியங்களுக்குப் பின் மிஞ்சியது சலிக்காமல் பார்த்த புத்த மடாலயங்கள். ஐந்தாறு வயதிலிருந்து கிழவர் வரை எல்லா வயதிலும் கண்ட புத்த துறவிகள். கையில்லாத மஞ்சள் சட்டையும் கணக்கில்லாத அடுக்குகளில் ஆழ்சிவப்பு மேலங்கியுமாய்... பொது மக்கள் பார்வைக்கு உள்ளது தவிர்த்த இவர்களுடைய தனி வழிபாட்டு கூடங்கள்... குட்டை மேசைகளில் விரித்த ஏடுகள், ஒத்திசைவில்லாத உச்சாடனங்கள், அதிரும் மேளங்கள், ஒரு ஜாடியில் சூடான திரவம் ஒன்றை ஓறிருவர் சிரத்தையாய் பரிமாறிச் செல்ல, ஒரு ஒழுங்கோ பக்தியோ தெரியாத... வெளியிருந்து பார்க்க இது என்னமாதிரி துறவு என்று தோன்றியிருக்கிறது. எட்டிப் பார்க்க விரும்பும் எத்தனை உலகங்களில் இதுவும் ஒன்றாகக் கூடியிருந்தது.


'ஸம்ஸாரா' - ஒரு புத்த துறவி பற்றிய திபெத்திய படம். இயக்கம் Pan Nalin. இளம் வயது, நீண்ட தனிமைத்தவம், பட்டம், தடுமாறும் மனம், காமம், ஈர்ப்பு, துறவிலிருந்து வெளியேற்றம், குடும்பம், அடல்ட்ரி, மீண்டும் துறவை நோக்கிய பயணம்... படம் ஒரு விஷுவல் ட்ரீட். ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும் மொத்தத்தையும் மறக்கடித்து லடாக்கிற்கே கொண்டு போய் விடுகிறது. ஆரம்பித்த ஐந்தாவது நிமிடம் ஒரு அமைதி பரவுவதை உணர செய்யுமளவிற்கு. விரிந்து கிடக்கும் நிலப்பரப்பும் மலைக் குடைவு வசிக்குமிடங்களும் தூரத்து பனிமலைகளும் நிறைந்த நிசப்தமும்.

இடையில் கொஞ்சமே நுழையும் நகர வாழ்க்கை அனாவசியமான கவனக் கலைப்பு. அதிக வசனமில்லாமல் அழகாய் தொடர முடிந்த படத்தின் கடைசிக்காட்சி நீண்ட வசனம் புரியாததில் இழப்பில்லை. திரும்பத்திரும்ப வரும் 'யசோதரா- ராகுல்' உணர்த்தியதே போதுமாயிருந்தது.

கதாநாயகியின் உதடுகள், குட்டித் துறவி, சுஜாதா பாத்திர பெண், கவனமாக கோர்க்கப் பட்ட சின்னச் சின்ன சப்தங்கள், காண்பித்த உலகம்... ரசித்தவை. லடாக் போயே தீர வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. கவிதை போலவும் கண்ணைக் கட்டிப் போடுவதுமாய் உடலுறவுக் காட்சிகள் யதார்த்தம்(!).

இரண்டு தடவை பார்க்கலாம். :-)