Saturday, March 16, 2013

காசி - 4

கும்பமேளா தந்த ஏமாற்றத்தில் அன்றைக்கு வேறெங்கும் போகப் போவதில்லை, அறையிலேயே இருக்கப் போகிறேன் என்று இருந்தேன். ஒரு மணி நேரத்திற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை. ஏற்கனவே மணி ஐந்தாகிவிட்டிருந்தது. தெருவெல்லாம் நிறைத்துக் கொண்டு வாகனங்கள். மொபைல் எண் கொடுத்திருந்த இரண்டு ஆட்டோ ட்ரைவர்களும் எங்கேயோ மாட்டிக் கொண்டிருப்பதாக சொல்லிவிட்டார்கள். அந்தக் கூட்டத்தில் ரிக்ஷாவில் ஏற என்னால் ஆகாது என்றிருந்தது. ஆனால் அதில் உட்கார்ந்து போகும் போது நல்ல உயரத்தில், தேரில் போவது போல இருந்தது என்பது நிஜம்! ஊரின் மொத்த ஜனமும் ரிஷாவில் தான் போகிறார்கள். அந்தக் குட்டி சீட்டில் அப்பா, அம்மா, அப்பா மடியில் ஒரு பதினெட்டு வயது பெண்... இப்படியெல்லாம் ஆச்சரியப்படுத்தினாலும், வேறு வழியே இல்லாதவரை, நானில்லை!

ஆக கேதார் காட் போய் நீளமாக நடக்கலாம் என்றிருந்தது முடியாமல் போனது. சிவராத்திரியை முன்னிட்டு ஆட்டோக்களை இன்னும் தூரத்திலேயே நிறுத்தி விட்டார்கள். அதற்கு கொஞ்சம் தள்ளி ரிக்ஷாக்களும். வேறு வழியில்லாமல் ஒரு ஆட்டோ, பின் ஒரு ரிக்ஷா மறுபடியும் தசாஸ்வமேத் காட். இன்றைக்கு கோவிக்கு போகும் வரிசை இன்னும் நீளமாய், ஏகப்பட்ட அடிதடிகளுமாய். தெருவெல்லாம் அடைத்துக் கொண்டு போகும் மக்கள். காட் ஆறு மணிக்கே ஆரத்திக்கு தயாராகி விட்டது. எங்கேயும் நிற்கக் கூட இடமில்லை. நீளத்திற்கு பிச்சைக்காரர்கள் துணி விரித்து காத்திருந்தார்கள். ஒரு பை நிறைய அரிசி கொண்டு வந்து ஒரொரு கையாக போகிற போக்கில் அந்த துணி விரிப்பில் கொட்டிப் போகிறார்கள். ஒரு இடத்தில் அன்னதானத்திற்கு ஒரு பெரிய வரிசை. இந்த பிச்சைக்காரர்கள் யாரும் ஏனோ அந்த வரிசைக்கு போகவில்லை!

அந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களால் நிர‌ம்புவதை உணர முடிந்தது. மெல்ல நகர்ந்து அதே மணிகர்னிகா காட், அதே குறுகல் சந்து, அதே சௌக். வழியெல்லாம் கூட்டம் கூட்டமாக எல்லா விதமான வாகன‌ங்களிலும் மக்கள் வந்து சேர்ந்து கொண்டே இருந்தனர். அத்தனை கூட்டத்தை அந்த நெரிசலான ஊரில்... யோசிக்க பயமாக இருந்ததில் மிகுந்த சிரமப்பட்டு அறைக்குத் திரும்பினேன்.

மறுநாள் காலையில் விழிப்பு வந்த போது நேற்றய கூட்டம் தந்த அனுபவத்தில் இனி எங்கேயும் போகப் போவதில்லை. மத்யானம் ஊருக்கு கிளம்பும் வரை வேறெந்த சிந்தனையும் வரக்கூடாது என்றிருந்தேன். எட்டு மணிக்கு  ஜன்னல் திரை விலக்கிப் பார்த்த போது நேற்றய களேபரத்தின் சுவடு கூட இல்லை! சொல்லப் போனால் வழக்கமாக அந்த நேரத்தில் இருக்கும் சலசலப்பு கூட இல்லை. இப்படிக் கிளம்பி இங்கே போகலாமா, இல்லை அப்படிக் கிளம்பி அங்கே போகலாமா, one last time to ghat என்று ஓடின சிந்தனைகளை அடக்குவது சிரமமாக இருந்தது. ஆனாலும் போகவில்லை!

அந்த நேரத்தில் கவனத்தை மாற்ற உட்கார்ந்து பயணக்குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த போது லோக்கல் டீவியில் சிவராத்திரி நிகழ்ச்சிகளை தொகுத்திருந்தார்கள்.

ராத்திரி அலஹாபாத்தில் பெரும் கூட்டமாக கங்கையில் மூழ்கியிருக்கிறார்கள். ஒரு இளம் வயது நிர்வாண சாமியார் சிலம்பு சுற்றிக் கொண்டிருந்தார். ஒருவர் கையில் வைத்திருந்த பேப்பரைப் பார்த்து மந்திரம் சொல்லிக் கொண்டே இன்னொரு கையால் கங்கை பூஜை செய்து கொண்டிருந்தார். சிரத்தையாக வழிபாடு செய்து முழுக்கு போட்டுக் கொண்டிருந்த வயதான தம்பதி, ஒரு கட்டத்தில் அவர் அந்த அம்மாள் மேல் தண்ணீர் வீசி விளையாட அந்த அம்மாள் அவருடைய முதுகைத் தடவித் தடவிக் குளிப்பாட்ட... Bliss!

இந்த பயணத்தில் செய்யாமல் விட்டது... முதல் நாளே முயற்சி செய்திருக்க வேண்டும், விட்டதால் காசி விஸ்வநாதரை இந்த முறை பார்க்க முடியவில்லை. கங்கையில் முழுக்கு போடவில்லை. சங்கமத்திலும். வேறெந்த கோவிலுக்கும் போகவில்லை. எந்த நாகா பாபாவையும் கும்பிடவில்லை. இது ஆன்மீகப் பயணமில்லை. என்னைத் திரும்பத் திரும்ப இழுத்தது கங்கைக் கரைதான். தனியாக போனதில் பெரிய சௌகரியமாக அதை உணர்ந்தேன். யாருக்காகவும் எதையும் செய்ய வேண்டியிருக்கவில்லை. பாஷையும் கொஞ்சம் ஊர் அறிமுகமும் இருந்ததால் எந்த சிரமமும் இருக்கவில்லை. அத்தனை கூட்டத்திலும் என்னுடைய பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டு கூட காணாமல் போகவில்லை. வழிப்பறி, சீண்டல் எதுவுமில்லை. சிவராத்திரி கூட்டத்தில் தவறுதலாக மேலே இடித்ததற்கு ' மாஃப் கரோ மாயி' என்று சொன்னவரின் முகத்தைக் கூட கவனிக்க முடியவில்லை. முதல் முறை என்பதால் காலை நாலு மணிக்கு கங்கையைப் பார்க்க வேண்டும் என்று நினைத்ததையும் அந்த சிவராத்திரி முழு ராத்திரியும் கங்கை கரையிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்ததையும் செய்ய முடியவில்லை.  I had to survive, to tell this tale! அடுத்த முறை இந்த வசதிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் கங்கைக்கரையிலேயே இருக்கும் தங்கும் விடுதிகளில் தங்க வேண்டும். காலையில் எழுந்து ஜன்னல் திரையை விலக்கினால் கங்கை தெரிய வேண்டும்!

 

Friday, March 15, 2013

காசி - 3

வந்து இறங்கிய அன்றே அலஹாபாத்தில் கும்பமேளா நடந்து கொண்டிருப்பதாக தெரிந்தது. அது எப்போதோ முடிந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனந்த விகடன் கட்டுரை ஞாபகம் வந்து ஆசையாகவும் இருந்தது, கூடவே அந்தக் கூட்டத்தை நினைத்து பயமாகவும் இருந்தது. வழக்கமாக இத்தனை கூட்டம் சேரும் இடங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள், மேலும் ஏற்கனவே இங்கே ஒன்று ஆகிவிட்டிருந்தது. ஆனாலும் டாக்ஸிக்கு சொல்லி வைத்திருந்தேன்.

விசாரித்தவரையில் பயமொன்றும் இல்லை என்று தெரிந்தது. மூன்றாவது நாள் காலை எட்டு மணிக்கு கிளம்பினேன். காசியிலிருந்து 124 கிலோமீட்டர் தூரம். டாக்ஸி ட்ரைவர் நானறிந்த வரையில் ஒரு அக்மார்க் உத்திரபிரதேச ஆண்.  ஐந்தடிக்கு குறைவான உயரம். உலர்ந்த வற்றல் போல் முறுக்கின உடம்பு. தனியாகப் போகிறேன் என்பதே அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அவருக்கு வேறு வழியிருக்கவில்லை. கோவிலுக்குப் போகிறேனா, சங்கமத்தில் குளிக்க போகிறேனா என்ற ரெண்டு கேள்விக்கும் இல்லை என்ற பின் அவருக்கு பேச எதுவும் இருக்கவில்லை. வழியில் விந்தியாசல் என்ற இடத்தில் ஒரு கோவில் இருக்கிறது என்று சொல்லி விட்டு நீங்க தான் கோவிலுக்குப் போகப் போறதில்லையே அப்ப வேண்டாமென்று விட்டார்.

காசியில் முதல் நாளே கவனித்தது, எல்லா வண்டிகளும் ஹாரனை அலற விட்டுக் கொண்டு தான் ஓட்டுகிறார்கள். இரண்டு சக்கர வாகனங்களுக்கு கூட லாரி போன்ற ஹார்ன். ஆனாலும் யாரும் அதை சட்டை செய்வதில்லை. வழி விட இடமில்லாத இடத்திலும் ஹார்ன் அடித்தால் என்ன செய்வது? ரெண்டாவது நாள் எனக்கும் அந்த எருமை மாட்டுத்தனம் வந்திருந்தது. காது தான் கிழிந்து விடுமோ என்றிருந்தது. ஆச்சரியமாக அதுவும் இல்லை. சத்தம் கேட்டுக் கேட்டு ஒரு மோன‌ நிலைக்கு போய் விடுகிறோம்! அதற்குப்பிறகு பின்னால் வருவது ரயிலேயானாலும் சரியே!

இவரும் அப்படியே. ஹார்னிலிருந்து கை எடுக்காமல் வண்டி ஓட்டுகிறார். டப்பாங்குத்து, மெலடி, பழையது, புதியது எல்லாம் கலந்த ஒரு பென் ட்ரைவ் பாடித் தீர்த்தது. அரை மணிக்கு ஒரு முறை ஒரு பொட்டலத்தை கிழித்து வாயில் போட்டுக் கொள்கிறார். அதற்கப்பறம் எது கேட்டாலும் ம்ம்ம், ம்ஹூம் மட்டும் தான். ஊரிலும் நிறைய பேர் இப்படித்தான். தவிர்க்க முடியாமல் பதில் சொல்ல வேண்டி வந்தால் நம் முன்னாலேயே துப்பி விட்டுப் பேசுகிறார்கள். இவர் கார் கதவைத் திறந்து துப்புகிறார். ஒவ்வொரு தடவை கதவைத் திறக்கும் போதும் பின்னாலிருந்து எதாவது வண்டி அலறுகிறது.

இரண்டே முக்கால் மணி நேர ஒரு வழி பயணத்தில் தேவையில்லாத கட் அடித்த போதும் சாலை விதிகளை மீறின போதும் பதட்டத்தை மறைக்க ஒரு தடவைக் கூட உபயோகிக்காத ஹேண்ட் ப்ரேக் லாக் ஆக இருக்கிறதா என்றும் உடைந்து கீழே கிடந்த ஃப்ரெஸ்னரை ஒட்ட வைக்க முயற்சி செய்வதிலும் கழித்தார். அவருக்கு அவருடைய வண்டி மேல் ரொம்ப அக்கறை என்று தெரிந்ததால் உள்ளே இருந்த என்னுடைய பத்திரம் பற்றி அதிகம் கவலையில்லாமல் இருக்க முடிந்தது. எனக்கும் வேறு வழியிருக்கவில்லை!

திரிவேணி சங்கமத்திற்கு போகும் பெரிய பாலம் வழியாக போகும் போதே மொத்த இடமும் தெரிந்தது. கண்ணிற்கு எட்டின தூரம் வரைக்கும் விரிந்து கிடக்கும் தளத்தில் செய்திருந்த ஏற்பாடுகளும் விருந்தாளிகள் வந்து விட்டுப் போன மிச்சங்களும் தெரிந்தது. தகர தட்டிகளால் பிரித்த பெரிய பெரிய இட‌ங்களுக்குள் தனித்தனியாக டெண்ட் எழுப்பியிருந்திருக்கிறார்கள். சீராக பாதை அமைத்து எல்லா இடங்களுக்கும் விளக்குகள் வைத்து... இந்த இடம் ஒரு மாதம் முன்னால் எப்படி இருந்திருக்கும் என்று ஓரளவு யூகிக்க முடிந்தது. I missed it!




அன்றைக்கு நடந்து கொண்டிருந்தது பொது ஜனங்களுக்கான (கும்ப)மேளா. பெட்டி படுக்கைகளோடு தொலைவிலிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் களைப்பில் தெரிகிறது. எங்கேயோ பஸ் விட்டு இறங்கி சலிக்காமல் நடந்து போய் சங்கமத்தில் குளித்து விட்டு வருகிறார்கள். அங்கங்கே புடவைகளையும் விரிப்புகளையும் தற்காலிக கூடாரங்களாக கட்டி கீழே ஓய்வெடுக்கிறார்கள். ஒரு குடும்பம் ஸ்டவ் வைத்து பூரி சுட்டுக் கொண்டிருந்தது. நட்டநடு மைதானத்தில் ஒரு பெண்மணி கணவர் காலில் விழுந்து வணங்கி எழுந்த பின் வெட்கப்பட்டார்.






சாமியார்கள், நாகா பாபாக்கள் யாரையும் காணவில்லை. மிச்சமிருக்கும் சிலரையும் போலீஸ் தடியடித்து விரட்டுகிறது. நான் எதிர்பார்த்து வந்த மேளா இதுவாயிருக்கவில்லை. ஒரு மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

காசி - 2

முதல் நாள் ஆட்டோ ட்ரைவரோடு பேசிக் கொண்டிருந்த போது கேதார் காட் - டில் இறங்கினால் இவ்வளவு நடக்க வேண்டியதில்லை. மேலும் அங்கிருந்து போட் பிடித்தால் ஒரு முழு சுற்று சுற்றி வரலாம் என்று தெரிந்தது. (எங்கிருந்து தொடங்கினாலும் அது சாத்தியம் தான். எல்லா காட் - டிலும் போட் இருக்கிறது!) இரண்டாவது நாள் நன்றாக தூங்கி மெதுவாக  எழுந்திருக்கலாம் என்று உத்தேசித்திருந்தேன். ஐந்தரை மணிக்கே விழிப்பு வந்து விட்டது. விழித்தவுடன் கங்கைக் கரையைப் பார்க்க வேண்டுமென்றிருந்தது. ஜன்னல் திரை விலக்கினால் கங்கை தெரிய வேண்டும் போல. பத்து நிமிஷத்தில் கீழே வந்தாலும் கொஞ்ச நேரம் வரை ஒரு காலி ஆட்டோவும் சிக்கவில்லை. மறுபடியும் ரிக்ஷாவில் ஏறத் தயக்கமாயிருந்தது. நின்ற ஒரு ஆட்டோவில் புத்தகக் கட்டோடு ஒரு கல்லூரி மாணவர். நான் தனியா போக ஏறினேனே, இவங்களை எதுக்கு என்றவரை சமாதானப்படுத்தி ஏற வேண்டியிருந்தது. என் ஏதேதோ கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தை பதில்கள். நான் ஆண்ட்டியா மேடமா என்று ஒவ்வொரு பதிலிலும் குழம்பி கடைசியில் இறங்கும் போது பரிட்சை நல்லா எழுது என்று சொன்ன‌ போது சரி மேடம் என்று சொல்லி ஒரு சிரிப்போடு கிளம்பினார். அத்தனை காலையில் நிறைய பேசும் மனநினையில் நான் இருந்தது போல அவர் இருந்திருக்கவில்லையாயிருக்கும்!

ஆறு மணிக்கெல்லாம் கேதார் காட் - டில் நல்ல வெளிச்சம், நல்ல கூட்டம். பத்து நிமிஷ பேரத்திற்குப் பின் போட் ஏறியானது.  வலது எல்லையில் ஹரிஷ்சந்திர காட் தொடங்கி, திரும்பி மணிகர்னிகா காட் வரை போய் மறுபடியும் கேதார் காட் வரை கொண்டு வந்து விடுவதாக ஏற்பாடு. ஏறக்குறைய எல்லா காட்- டிலும் சின்னதாகவோ பெரிய‌தாகவோ ஒரு கோவில் இருக்கிறது. அந்த காலை நேரத்தில் காட்- களில் இருக்கும் காவி வண்ணம், அது சாமியார்களின் உடுப்பாயிருக்கட்டும், தொங்கும் படுதாக்களாயிருக்கட்டும், சுவற்று நிறமாயிருக்கட்டும், வெயில் பட்டு மொத்த இடத்தையும் சிவப்பாக்கியிருந்த‌து.


காலை நேரத்தில் முக்கியமான காட்- களில் மட்டும் வெளியாட்கள். மற்ற இடங்களில் உள்ளூர்காரர்கள் அதிகம். வண்ணார்கள், மீன் பிடிப்பவர்கள், காந்தத்தை கயிற்றில் கட்டி காசு தேடும் சிறுவர்கள், போட்-டில் பூ விற்கும் சிறுமி, கோதுமை மாவை பிசைந்து கொண்டு வந்து துளித்துளியாய் கிள்ளி மீனுக்கு போடும் இஸ்லாமியர், கொழுகொழு குண்டு சாமியார் எல்லாரையும் கடந்து ஹரிஷ்சந்திர காட் போய் சேர்ந்தோம். அங்கெயும் ஒன்றிரண்டு பிணம் எரிந்து கொண்டிருந்தது.


 நிர்வாண சாமியார்கள் குளித்து திருநீறு குழைத்து உடம்பெல்லாம் பூசிக் கொள்கிறார்கள். அது காய்ந்து பரவும் வெள்ளைதான் நாள் பூராவுக்குமான உடை. தோளில் பையும் பருத்த தொப்பையுமாய் இன்னொரு பாபா நின்ற வாக்கில் ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தார், சாம்பல் உடை கூட இல்லாமல்.




ரெண்டு மணி நேர போட் பயணம் முடிந்தது. போட் ஓட்டி வந்த வயதானவருக்கு எதுவும் பேசும் உத்தேசமிருக்கவில்லை. பாம்பு கடித்தவர்கள், தொழுநோயாளிகள், குழந்தைகள் மற்றும் சாமியார்களை எரிப்பதில்லை. கல்லைக் கட்டி ஆற்றில் போட்டு விடுவதாக ஏற்கனவே அறிந்திருந்த தகவலை மட்டும் சொன்னார்.

திரும்ப அறை, குட்டித் தூக்கம் முடிந்து கோவிலை பார்க்க கிளம்பிய போதே சிவராத்திரி களை கட்ட ஆரம்பித்து விட்டது. வழியெல்லாம் கழி அடித்து போட்டிருந்த வரிசையில் ஜனங்கள் காத்திருக்க தொடங்கி விட்டிருந்தனர்.  அதே தசாஸ்வமேத் காட். முதல்நாள் என்னை விரட்டியடித்த நாகா பாபாவிடம் பத்து பதினைந்து மார்வாடி பெண்மணிகள் கூடியிருந்தனர். அவர் பக்கத்திலிருந்த த‌ட்டில் பத்து ரூபாய் போட்டு சம்மணமிட்டு அமர்ந்திருந்த அவர் காலை ஒவ்வொருவராக தொட்டு வணங்கினர். பத்தே நிமிஷத்தில் இருநூறு ரூபாய் சேர்ந்து விட்டது. தட்டு நிறைய நிறைய பின்னால் அனுப்புவதும் பங்கு போடலும் நடந்து கொண்டிருந்தது. முக்காடு போட்ட பெண்கள், எதுவுமே போடாத சாமியார்கள்!

இன்றைக்கும் மணிகர்னிகா காட். முன்னால் போய்க் கொண்டிருந்த ஒரு கொரிய கூட்டத்தோடு அங்கிருந்த யாரோ என்னையும் மேலே போக சொன்னார்.  ஒரு பாதம் கூட கொள்ளாத அங்கங்கே உடைந்த அந்த சிறிய‌ படிக்கட்டுகள் ஏறி மேலே போனால் காலியான, கைவிடப்பட்ட ஒரு கட்டிடம். அதன் பால்கனியில் நின்றால் மொத்த மணிகர்னிகா காட் - டையும் பார்க்கலாம்.

பிணங்கள் தலையோடு கால் வரை மூடி வருகிறது. சில நேரம் ஆற்று வழியாக போட்- டில் கூட. ஆண்களை வெள்ளைத் துணியிலும் பெண்களை சிவப்புத் துணியிலும் சுற்றி வருகிறார்கள். ஐந்து நிமிடத்தில் மரக்கட்டைகளை அடுக்கி, சுற்றி வரக்கூட இடமில்லாமல் பக்கத்திலேயே இன்னொன்று எரிந்து கொண்டிருக்க, மொட்டை அடித்திருப்பவர் கையில் நீண்ட புல் போன்ற ஒன்றில் கற்பூரம் வைத்து எரியூட்டச் செய்கிறார்கள். அந்த கடைசி நிமிஷத்தை நின்று உணர யாருக்கும் நேரமிருப்பதில்லை. அவசர அவசரமாக தொடங்கி வைத்து விட்டு சாவகாசமாக காத்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் எல்லா காட்-களிலிருந்தும் ஊருக்குள் போகும் வழிகள் கல் பதித்த சிறு சந்துகள் தான். மணிகர்னிகா காட்டிலிருந்தும் அதே போல் போகும் ஒரு சிறு சந்துக்குள் நடக்கத் தொடங்கினேன். வழி கேட்ட ஒன்றிருவர் சௌக் போய் ஆட்டோ பிடிக்கச் சொல்லியிருந்தார்கள். ஒரு பத்து நிமிஷ நடையில் பிரதான வீதி வந்து விடுகிறது. அதற்குள் இரண்டு பிணங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அந்த குறுகலான சந்தில் வழிவிட்டு ஒதுங்கி நின்ற போது ஒரு கதவில் எட்டிப் பார்த்து போட்டோ எடுக்க வேண்டுமா என்று ஒருவர் கேட்டார். பிணம் தூக்கி வந்தவர்கள் அவரை சட்டை செய்யவில்லை. அவரும் பேசாமல் உள்ளே போய் விட்டார்.




அந்த குறுகலான‌ வழியிலும் டீக்கடை, சாப்பாட்டுக்கடை, பான், கோவில், துணிக்கடை, மளிகைக்கடை எல்லாமும் இருக்கிறது. ரோட்டோரக் கடைகளில் நல்ல மசாலா டீ கிடைக்கிறது. இர‌ண்டாவதாக ஒன்று உடனே குடிக்க சொல்லும் சுவையில். மொய்க்கும் ஈக்களை சகித்துக் கொள்ள முடியுமானால் ஜீராவில் முங்கிய மாவில் செய்த இனிப்புகள் நிறைய கிடைக்கிறது. நல்ல சாப்பாடு ஹோட்டல்கள் சுத்தக்குறைவான‌ இருட்டுச் சந்துகளில் இருப்பதாக வழி காட்டுகிறார்கள்.

அன்று சௌக்கில் ஆட்டோவே கிடைத்தது. இரண்டாம் நாள் சுற்று முடிந்தது.

Thursday, March 14, 2013

காசி - 1

முதல் முதலாக‌ காசிக்கு போனது குடும்ப பெரியவர்களுடைய‌ பிராத்தனைக்காக. நிச்சயமாக‌ அப்போது அந்த பிரயாணத்துக்கு நான் தயாராக இருந்திருக்கவில்லை. காரணம், காசி என்று நினைக்கும் போதே தோணின அழுக்கும் குப்பையும் கூட்டமும் தான். மேலும், வயசாகி கடைசி காலத்துல போக வேண்டிய ஒரு பிராயணத்துக்கு நான் இப்போவே ஏன் போக வேண்டும் என்று ஒரு தோணல். பிரயாண வழியும் ஊரும் என் நினைப்புகளை நிச்சயமாக்கிய‌து. பக்தியோடும் நம்பிக்கையோடும் படித்துறைக்கு வரும் மக்களுக்கும் இயந்திரத்தனத்தோடு காசொன்றே குறியாக காத்திருக்கும் பாண்டாக்களும் நடுவில் இது போன்ற இடங்களில் நிகழும் தத்தளிப்பான நாடகங்களைப் பார்க்க‌ சலிப்பாயிருந்தது. இதெல்லாம் முடித்து படகில் நீளத்திற்கு போன சவாரியில் தான் ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும். காலம் காலமாக மக்கள் தீராத நம்பிக்கையோடு வந்ததும் அத்தனை மனிதர்களின் உணர்வுகளுக்குமான மௌன சாட்சியாக நிற்கும் இந்த படித்துறைகள் தான் என்னுடைய காசி. இந்த முறை இங்கிருந்த மூன்று நாட்களிலும் திரும்பத் திரும்ப என்னை இங்கே இழுத்ததை நான் முழுமையாக உணர முடிந்தது.

I survived to tell a tale என்பது கொஞ்சம் அதிகப்படியான பிரயோகம் போலத் தோன்றினாலும் எனக்கு அது பொருத்தமாக இருப்பதாகப் படுகிறது. இது என்னுடைய முதல் தனி பயணம். அது ஒரு நீண்ட நாள் ஆசை, கனவு... என்னவாகச் சொன்னாலும் சரியே. அப்படியான ஒரு வாய்ப்பு வந்த போது காசிதான் முதல் விருப்பமாயிருந்தது. இதை நான் சரியாக, பத்திரமாக செய்து முடிக்க வேண்டியது இத்தனை காலமாக நான் சுமந்த என்னுடைய நம்பிக்கைக்கும் இது போல இனிவரும் பயணங்களுக்கும் ரொம்ப அவசியமாக இருந்தது. வந்து இறங்கியதும் டாக்ஸி டிரைவர் கேட்ட முதல் கேள்வி 'தனியாகவா வந்தீங்க அம்மா?'. அதற்குப் பிறகு நிறைய பேர் கேட்டார்கள். எனக்கும் முதல் முறை ஆமாம் சொன்ன போது இருந்த பெருமிதம் இல்லாமல் போனது. நான் அதற்கு பழகி விட்டிருந்தேன்.

அன்றைக்கு மாலை படித்துறைக்கான முதல் பயணம். கங்கைக்கு போக வேண்டும் என்றாலே ஸ்வாதீனமாக 'தசாஸ்வமேத் காட்'க்குதான் கூட்டிப் போகிறார்கள். ஆட்டோக்காரர் இதுக்கு மேல ஆட்டோ போகாது என்று வழி சொல்லி இறக்கி விட்ட இடத்தில் இருந்து கூட்டத்தில் இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது.

படி இறங்கினதும் முதலில் கண்ணில் பட்டது நாகா பாபாக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்கள். இதற்கு முந்தின காசி விஜயங்களில் இவர்களைப் பார்த்திருக்கவில்லை. அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரங்களில் கங்கைக்கு குளிக்க வருவார்கள் என்றும் ஜன நடமாட்டம் தொடங்கும் முன்னால் அவர்கள் இருப்பிடத்துக்கு போய் விடுவார்கள் என்றும் யாரோ கைடு சொல்லிக் கேட்டிருந்தேன். ஆர்வம் தாங்காமல் காமிராவைக் கையில் எடுத்ததும் ஏதோ கூச்சல். என்னவென்று புரிவதற்குள் ஒருவர் எழுந்து விரட்ட‌ ஆரம்பித்த பின்னால் தான் 'No photograph' என்று எழுதி வைத்திருப்பதையே கவனித்தேன்! ரெண்டு கைகளையும் உயர்த்தி ஸாரி சொல்லி நகர்ந்த போது 'என்னை வேண்டுமானால் போட்டோ எடுத்துக் கொள்' என்று கண்களாலே அனுமதி கொடுத்தார் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த இன்னொரு நாகா பாபா.



அங்கே தொடங்கி வழி நெடுக விதவிதமான சாமியார்கள். சில நிர்வாண சாமியார்கள், வயசு வித்தியாசமில்லாமல், இயல்பாக திரிந்து கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பேரை அப்படிப் பார்த்த பிறகு கூச்சம் தெளிந்து போனது.

இழுத்துக் கட்டிய படுதாவிற்குள் சின்னச் சின்னதாக‌ விக்கிரகங்கள், போட்டோக்கள். ஒரு வேல் ஒன்றைப் பதித்து கீழே கட்டைகளைப் போட்டு எரித்த சாம்பல். அந்த கட்டைகள் மேல் சில இடங்களில் தூக்குச்சட்டியில் பால் காய்ந்து கொண்டிருந்தது. சின்னதாய் சமையலும் கூட. அரட்டைகள், வாக்குவாதங்கள், மேலே விழுந்து பிடுங்காத பிச்சைக்காரர்கள், சிறு வியாபாரிகள், கங்கைக்கு ஆரத்தி பார்க்க அழைக்கும் போட்வாலாக்கள், கங்கையில் மிதக்க விட நாலு பூவும் ஒரு அகலும் வைத்து விற்கும் சின்னப் பெண்கள், எல்லா நேரங்களிலும் முழுக்கு போடும் ஜனங்கள்... ஒரு நாள் பூராவும் பார்த்தாலும் தீராது, சலிக்காது.

அங்கே இருந்த மூன்று நாளும் படித்துறை நடை போய் சேர்வது மணிகர்னிகா காட்-டில் தான். முதல் நாள் போன போது அங்கிங்கே என்று நான்கைந்து பிணம் எரிந்து கொண்டிருந்தது. பாதி எரிந்த பிணத்தை கழி கொண்டு இரண்டாக மடித்ததில் பாதம் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு எரிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் கூட்டம். குடும்பத்தார்கள் ஆரம்ப காரியங்கள் முடித்து எரிந்து முடிக்க காத்திருந்தனர். இதற்கு முன்னால் இருந்த பயம் இன்னபிற உணர்வுகளெல்லாம் கரைந்து இந்த பிரயாணத்துக்கு பின்னால் அது அத்தனை அதிர்ச்சி தராத‌, fact of life ஆக மாறியிருக்கிறது.


திரும்பி வரும் போது சரியாகத்தான் வந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு எங்கோ வழி மாறி விட்டிருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் பிடிபடாமல் போக ஆட்டோவும் கிடைக்காமல் சீட்டுக்கட்டுகளை சேர்த்திக் கட்டினது போல பொலபொலவென்றிருந்த சைக்கிள் ரிக்ஷாவில் ஏற வேண்டி வந்தது. பார்ப்பதற்கு அப்படி இருந்தாலும் அது குறுகலான மேடு பள்ளங்களால் ஆன சந்துகளில் சௌகரியமாகப் போனது. நான் தான் பயந்து கொண்டே உட்கார்ந்திருந்தேன்!

என்னுடைய முதல் நாள் முடிந்தது!