Monday, November 26, 2007

பரோமா - The Ultimate Woman (1984)

பரோமா... சென்ற முறை கொல்கத்தா சென்றிருந்த போது பார்த்தது. 'ஒரு நல்ல படம் பார்ப்பவருடைய சூழலை மறக்கடித்து தனக்குள் இழுத்துக் கொள்ள வேண்டும்' என்று எங்கேயோ வாசித்தது நினைவிற்கு வருகிறது. அது போல உள்ளே இழுத்துக் கொண்ட சில புத்தகங்களூம் உண்டு. வாசித்துக் கொண்டிருக்கும் நாட்களில் முழுதாக ஆக்ரமித்துக் கொண்டு, சில நேரம் அந்த கேரக்டர்களோடு நீளமாக விவாதிக்க வைத்து... வாசித்து முடித்து விட்டால் அந்த கேரக்டரை தினப்படி சந்திப்பிருக்க வாய்ப்பில்லையென்று முடித்து விடாமல் நீட்டிச் சென்ற கிறுக்குத்தனங்களூம் உண்டு.

Back to topic... அபர்ணா சென் இயக்கி ராக்கி 'பரோமா' வாக நடித்தது. இதை வாசிப்பவர்களுக்கு இந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு குறைவு என்பதால் (கலெக்டர்ஸ் லிஸ்டிலெல்லாம் வரும் என்று தோணவில்லை!) உரிமை எடுத்து கதையைப் பற்றியும் பேச உத்தேசம். இத்தனை நாட்களுக்கு பிறகு அந்தப் படம் எவ்வளவு தூரம் தன்னை unfold செய்யும் என்று தெரியவில்லை.

ஒரு துர்க்கா பூஜை நாளில் தொடங்கும் கதை. ஃபாரின் ரிட்டர்ன் பெங்காலி புகைப்படக்காரர் ராகுல்... வயது பின்னிருபதுகளில்... அவரும் அவருடைய வெளிநாட்டு உதவியாளரும் அந்த நாளின் நிகழ்வுகளை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போது கதைக்குள் நுழையும் பரோமா... நாற்பதுகளில், ஒரு டிபிகல் பெங்காலி குடும்பத்தலைவி். எல்லோரும் மரியாதையாக 'பௌதி' என்று கூப்பிட்டுக் கொண்டிருக்க முதல் அறிமுகத்தில் பரோமா என்று ராகுல் பெயர் சொல்லி அழைக்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் தலை நிமிர்த்திப் பார்த்து ... மறுக்க வேண்டுமா கூடாதா என்ற ஒரு குழப்பம்... இப்போதும் நினைவிருக்கும் ஒரு அழகான காட்சி.

புகைப்படக்காரர் ஒரு அழகான பெங்காலி பெண்ணைப் பற்றி புகைப்படம் சேகரிக்கிறேன் நீங்கள் மாடலாக இருக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க, மறுக்கும் அவளை முழு குடும்பமும் சம்மதிக்க வைக்கிறது. கணவன் அலுவலக வேலையாக பாம்பே போய் விட, வீட்டில் இருக்கும் வயதான மாமியார் வேறு ஆள் வருகையை அவ்வளவாக ரசிக்காது முகம் சுழிக்க, ஆரம்பத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள சிரமப்படும் அவள் மெல்ல அவனோடு நெருக்கமாகிறாள். புகைப்படம் எடுக்கையில் அங்கிங்கே தொடுவதற்கு முதலில் தெரிவிக்கும் மறுப்பு பின்னர் சகஜமாகிறது.

நீண்ட உரையாடல்களில் அவள் சிறப்புகளை சிலாகிக்கும் அவன், மறந்தே போயிருக்கும் அவளை அவளுக்கு நினைவு படுத்துகிறான். சிதிலமாகிக் கொண்டிருக்கும் அவளுடைய அம்மா வீட்டின் மாடியறையில் முதல் முதலாக அவன் அவளைத் தொடுவதும், நெருக்கம் அடுத்த கட்டத்திற்கு போக முற்படுகையில் மறுத்து விலகும் அவள், அவனை தவிர்க்க முடியாமல் சேர்கிறாள். வீட்டிலிருக்கும் மாமியாரை சமாளித்து அவனோடு அதிக நேரம் செலவிடுகிறாள். ஒரே ஒரு சினேகிதிக்கு மட்டும் தெரிந்து தொடரும் உறவு அவன் திரும்பிச் செல்ல வேண்டிய நாள் வர, அவளையும் கூட வரச் சொல்கிறான். போக ஆசையிருந்தாலும் மறுத்து விடுகிறாள். சினேகிதியின் விலாசத்தில் கடிதத் தொடர்பு கொள்வதாக ஏற்பாடு. ஒன்றிரண்டு கடிதமும் வருகிறது. டூர் போயிருந்த கணவரும் திரும்பி வர, நடந்ததை ஒரு நல்ல கனவாக நினைத்து நிஜத்தோடு தன்னை பொருத்திக் கொள்ள தொடங்குகிறாள். புகைப்படங்களை வெளியிட்ட ஆங்கிலப் பத்திரிகையை அவளுடைய வீட்டு விலாசத்திற்கு ராகுல் அனுப்பி வைக்கிறான். அதிலிருந்த அவளுடைய ஒரு கவர்ச்சி புகைப்படத்தால் வீட்டிலும் வெளியிலும் வெடிக்கும் பூகம்பமும் அதிலிருந்து அவள் மீள்வதுமாய் முடிகிறது.

ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு அந்த உறவு நகர்வது ரொம்ப இயல்பாக, எங்கேயும் லாஜிக் இடிக்காமல் போகிறது. ஒரு டிபிகல் பெங்காலிப் பெண், அதற்கு முன் வரை அப்படி ஒன்றாக தான் ஆவேன் என்று நினைக்காத பெண்ணின் வாழ்க்கையில் இப்படி நடப்பதும், அதை அவள் எதிர்கொள்வதும்... அவளுடைய குடும்பத்தின் ரியாக்ஷனும்... எல்லோருடைய பார்வையிலும் முழுதாக நியாயப் படுத்தப் பட்டிருந்தது. எல்லா கேரக்டரோடும் தொடர்பு படுத்திக் கொள்ள முடிவது வழக்கமாக நேர்வதில்லை.

குறிப்பிட்ட சில இயக்குனர்களின் எல்லா பெங்காலி படங்களிலுமே இயல்பு வாழ்கை அழகாக பதிவதாக உணர முடிந்திருக்கிறது. அது இதிலும். அந்த கேரக்டரை ராக்கியைத் தவிர வேறு யார் எப்படி செய்திருக்க முடியும் என்ற யோசனை சுற்றிச் சுற்றி அவரிடமே வந்து நிற்கிறது! ஒரு சின்ன கண்ணசைவு, உடலசைவு நிறைய விஷயம் பேசுகிறது. தொய்வில்லாமல் போகும் திரைக்கதை. பாஷை புரியாமல் பார்க்கும் போதும் அதிகம் இடரலில்லாமல் தொடர முடிந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் மறுபடியும் ஒரு தரம் பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன்.

Friday, November 02, 2007

காது வேட்டை

முடிந்து போனதற்காய் தவித்த பொழுதில்
முதல் காதல் படபடப்பில்
தடம் மாறி யோசனைகள்
உதித்த கணத்தில்

இப்படியொன்றில் தான்
தொடங்கியிருக்க வேண்டுமென்
காது வேட்டை

சொல்வதெல்லாம் கேட்பதாய்
கிரகிக்கவோர் மூளை கொண்டதாய்
பாரமேற்ற பிரதி யோசனை சொல்ல
குரலென்றொன்று இல்லாததாய்
அழுகையில் கரையும் வார்த்தைகளின்
அர்த்தம் தேடாததாய்...

தேடலனுபவம் தெளிவித்ததில்

ஆன்மீகக் காதுகள் வேண்டாம்
உயர்ந்து நெறியுமதன்
புருவ முடிச்சிலென்
வார்த்தைகள் சுணங்கிப் போகும்

விடலைக் காதுகள் வேண்டாம்
விளையாட்டுப் பொழுதுகளில்
துணையாயிருக்கட்டும்
என் எண்ணங்களின் கனம் தாங்க மாட்டா

என் போல் சுகித்து என் போலே துக்கிக்கும்
என்னினக் காதுகளும் வேண்டாம்
விடைகாணுமென் சூத்திரங்கள்
எழுப்பப் போகும் கண்டனங்களில்
ஏற்கனவே சலித்திருக்கிறேன்

சகவயது காதுகளில்
முதிர்ச்சி தேடுகிறேன்
முதிர்ந்த காதுகளின்
பழமையில் மிரள்கிறேன்

கல்தெய்வத்திடம் சொல்லப்படும்
ஓசையில்லா வேதனை சுமப்பவர்கள்
தேடல் முடிவில் சரணாகதியடைந்த
யாரோவின் வழித்தோன்றல்களாயிருக்கலாம்
தொடருமென் தேடலின்
தோல்வி முடிவில்
நானே தீர்வாகலாம்

என் காதுகள்...

சொல்வதெல்லாம் கேட்பதாய்
கிரகிக்கவோர் மூளை கொண்டதாய்
பாரமேற்ற பிரதி யோசனை சொல்ல
குரலென்றொன்று இல்லாததாய்
அழுகையில் கரையும் வார்த்தைகளின்
அர்த்தம் தேடாதாய்....

நன்றி: யுகமாயினி.