Thursday, December 22, 2016

வீர நாராயணர், பேலூர் மற்றும் ஹலபேடு



எண்பதுகளில் ஒரு ஜூனியர் சிவில் இஞ்சினியரின் ஆபிஸ் வாழ்க்கை என்பது ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் நீள்வது. மொத்த உலகமும் காலை ஒன்பது மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு திரும்பின நாட்களிலேயே எங்களுக்கு இதுதான் வாய்த்தது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை. முக்கியமான கான்கிரீட் இருந்தால் அதுவும் இல்லை. ஆகவே கிடைக்கும் ஒரு நாளை தூங்கிக் கழிப்பார்கள். நமக்கோ பால்காரர், வேலைக்காரம்மா, அக்கம் பக்கம் என்று மிஞ்சிப் போனால் ஒரு பத்து பேரோடுதான் மொத்த வாழ்க்கை. அதுவும் ஏதாவது பெயரே கேட்டிராத ஒரு பொட்டல் காட்டில். அதனாலேயே எங்கேயாவது கூட்டிக் கொண்டு போக மாட்டாரா என்று காத்திருப்பதே வாழ்க்கையாயிருந்தது. அப்படி அந்த ஒரு நாளில் ஏதாவது அக்கம் பக்க ஊருக்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ பிள்ளைகளையும் சுமந்து போய் வந்தால் அந்த சலிப்பு தீரவே காலமாகும். அடுத்த பயணம் அவ்வளவு சீக்கிரத்தில் யோசனையிலும் வராது.

95 ல் அப்பா வாங்கிக் கொடுத்த முதல் மாருதி காரில்தான் எங்கள் ரோட் ட்ரிப்கள் தொடங்கின. அந்த மாருதி 800ஐ இழுத்துக் கொண்டு சுத்தாத இடமில்லை. கோட்டேஸ்வர், நாரயண் சரோவர் பயணத்தில் ஒரு ப்யூஸ் இல்லாமல் நடுக்காட்டில் மணிக்கணக்கில் காத்திருந்தோம். ஒருமுறை மூச்சு தள்ளி பச்சை கூலண்ட் கண்ணாடியில் பீச்சியடிக்க நடு ரோட்டில் நின்று போனது. இன்னொரு முறை ஏன் தான் நின்னியோ என்று தடவிக் கொண்டிருக்க 'அப்பா இங்க ஒரு ஒயர் தொங்குதே'ன்னு மகள் சொன்னதை சரி செய்து பயணத்தைத் தொடர்ந்தோம். அதற்குப் பிறகு கார்கள் மாறின. நீண்ட பயணங்கள் வாய்த்தன.

இன்றைக்கும் எங்களுடைய ரோட் ட்ரிப் ஞாபகங்கள் ஒரு பெரிய சுரங்கம். நினைத்து, பேசித் தீராது. கூகிள் மேப் வசதிகள் இல்லாத காலங்களில் எந்த ஊர்களின் வழியாக என்று விசாரித்தே எல்லா ஊர்களுக்கும் போய் வந்தோம். பைபாஸ் இல்லாமல் ஊருக்குள் நுழையும் போது மட்டும் தடுமாறுவோம். ரைட்டுல என்று சொல்லி இடது கையைக் காண்பித்து வழி சொல்வார்கள். அவர் வார்த்தையை ரெண்டு பேர் பிடித்துக் கொள்ள கையை மீதி ரெண்டு பேர் பிடித்துக் கொள்ள எங்கள் நாலு பேருக்கு இரண்டு வழி சரியென்று தோன்றும். சரியான வழியை தவற விட்ட நேரங்களில் திரும்பியெல்லாம் வந்து விட மாட்டோம். உலகம் சுத்தி வேறு வழியைக் கண்டு பிடிப்போம். எல்லா நேரமும் வழி சொல்பவர்கள் மைண்ட் மேப் போட்டு மூணாவது சிக்னல்ல ரைட் எடுத்து இரண்டாவது லெப்ட்ல போய் மெயின் ரோட்டப் பிடிச்சான்னு சொல்றதுல மூணாவது சிக்னல்ல ரைட் மட்டும் தான் எங்க எல்லோருக்கும் மனதில் பதியும். அங்கே போய் மறுபடியும் வழி கேட்போம். ஊரைவிட்டு வெளியே வரும் போது ஒருவரை ஒருவர் குதறும் மனநிலையில் இருப்போம். கொஞ்சம் நேரத்தில் எல்லாம் சரியாகும்.

சொன்ன நேரத்தில் கிளம்பாததால் பெரும்பாலும் எல்லாப் பயணங்களும் சண்டையில்தான் தொடங்கும். அதுவும் நூறாவது கிலோமீட்டருக்குள் சரி செய்யப்படும். வாய்க்கும் அல்லது ஏய்க்கும் சாப்பாட்டுக் கடைகள், சகிக்க முடியாத கழிப்பறைகள் எல்லாம் பழைய கதையாகிவிட்டது. எல்லா பெட்ரோல் பங்க்களிலும் மோசமில்லாத கழிப்பறைகள் இருக்கிறது. ட்ரிப் அட்வைசர் சகலத்துக்கும் லிஸ்ட் கொடுக்கிறது. இண்டு இடுக்கில் இருக்கும் உணவகங்களை மேப்பில் தேடிப் போக முடிகிறது. முன்பெல்லாம் பயணங்கள் பூராவும் கண்களை பாதையிலே நட்டு வைத்திருப்பதால் சின்னச் சின்ன சுவாரசியங்களாய் நிறைந்திருக்கும். ஏதாவது ஒரு வளைவு முன்னெப்போதோ எங்கேயோ போன பாதையை நினைவு படுத்தும். நடுவில் வரும் ஊர்களால் நேரம் விரயமானாலும் ஒவ்வோரு ஊருக்குமான காட்சிகளால் நிறைந்திருக்கும். இப்போது ராஜப்பாட்டைகளெல்லாம் நீண்ட நெடும் சாலைகள். சிறிய ஊர்களை தொடுவதேயில்லை. ஊருக்குள் நுழைந்தால் மேப்பில்லாமல் வேலையாவதில்லை. ஓட்டுபவருக்கு வழி சொல்வதில் ஊரை ரசிக்க முடிவதில்லை. சௌகரியங்கள் எப்பவும் சுவாரசியங்களைத் தான் விலையாக்குகிறது.
 
ஒரு கட்டத்திற்கு மேல் இப்படி ஏற்பாடுகளோடு செல்லும் பயணங்களில் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் போனது. மனம் போன போக்கில் போவதும், கிடைக்கும் இடத்தில் தங்குவதும் சுவாரசியமாய் இருக்கும் என்று தோன்றத் தொடங்கியது. ஆனாலும் இவையெல்லாம் என் மண்டையில் மட்டுமே உதிக்கும் விஷயங்களாய் இருந்ததால் மொத்த குடும்பமும் அய்யோ அதெல்லாம் சரிப்படாது என்று கூச்சலிட்டு மறுத்ததாலும் முயற்சித்ததில்லை.

இந்த முறை எதிர்ப்பு தெரிவிக்கும் இரண்டு டிக்கெட்டுகளும் இல்லாததும் முந்தின இரவுதான் முடிவு செய்ததாலும் எந்த ஏற்பாடும் செய்திருக்கவில்லை. பேலூர் ஹளபேடு போகலாம், பெங்களூரில் தங்கலாமென்று யோசித்தது அங்கிக்கே சுத்தி சிக்மங்களூர் போகலாமென்று முடிவு செய்து படுக்கும் போது இரவு மணி பத்தரை. ஆடி அசைந்து  சென்னையிலிருந்து கிளம்பும் போது காலை மணி பத்து. சென்னையை விட்டு வெளியே வரவே பதினொன்றானது. பெங்களூரில் உள்ள நண்பர் ஒருவரிடம் தங்குமிடத்தை விசாரித்து வைக்கச் சொல்லியிருந்தோம். மாலை நாலரை மணிக்கு அவரைப் பார்த்த போது, அங்க நல்ல இடமெல்லாம் இருக்குமே என்று சாதாரணமாகச் சொன்னார். அப்போது ஆரம்பித்தது தேடும் வேலை.

நாடோடிப் பயணமெல்லாம் ஆசைப் பட்டாலும் சுத்தமான படுக்கையும் மற்ற வசதிகளும் இல்லாத இடமெல்லாம் ரெண்டு பேருக்குமே வேலைக்காகாது. ட்ரிப் அட்வைசர் சொன்ன இடமெல்லாம் வார இறுதி, காலியில்லை. ஹோட்டல் விட்டு ஹோம் ஸ்டே தேடலும் அதே நிலமை. நண்பர்களை விசாரித்து பதில் வருவதற்குள் நல்லவேளையாக Coffee Tranquil ல் இடம் கிடைத்தது. எப்படி இருக்கும் என்னென்ன வசதிகள் எதுவும் தெரியாது. வேறொரு ஹோம் ஸ்டேயில் இடமில்லாததால் பரிந்துரைத்தது. நேரமாகிவிட்டது. வேறு வழியில்லை என்று ஒருநாளுக்கு மட்டும் புக் செய்து போய் சேர்ந்தோம். இரண்டு நாளும் அங்கேயே இருந்தோம்.

ஊருக்கு வெளியே காப்பித் தோட்டத்துக்கு நடுவே ஏர்டெல் போன் சிக்னல் மட்டுமே கிடைத்த, முறையாக பராமரிக்கப் பட்ட அமைதியான பங்களா.  இந்த மாதிரி இடங்களில் எல்லாம் ஹோட்டல்களை இனிமேல் முற்றாக தவிர்த்து விட வேண்டும். காலையில் பறவை சத்தம் கேட்டு விழிக்கலாம். எழுந்ததும் மொபைல் போனில் மோனத்திலிருக்க வேண்டாம். காலாற நடக்கலாம். வாசமான காபி. நல்ல மலைநாட்டு (malnad cuisine) வீட்டுச் சாப்பாடு.



இருந்த ரெண்டு நாளில் ஒரு நாள் சிருங்கேரி. புகைப்படத்தில் பார்த்து ரசித்த காலை நேர சிருங்கேரி வாய்க்கவில்லை. டூரிஸ்ட், பக்தர்கள் நெரிசலிடும் மாலை நேரம்தான். நடுவில் இருக்கும் புராதன கோவிலை காணாமலடிக்கும் முயற்சிகள் நாலாப் பக்கமும் நடந்து கொண்டிருக்கிறது. பெரிய பீடத்தின் மேல் நீள் வட்டக் கோவில். வேலைப்பாடுகள் எதையும் ரசிக்க விடாத கூட்டம். சுற்றிலும் புதிது புதிதாக எழும்பிக் கொண்டிருக்கும் பளபளக்கும் சன்னதிகள், கட்டிடங்கள். ஒரு கோவில் தரிசனம் ஆனது. மனதில் இருந்து, தேடி வந்தது என்னவோ இதுவல்ல.


எங்களுடைய பேலூர் ஹலபேடு பயணம் பற்றிக் கேள்விப்பட்ட Coffee Tranquil பெண்மணி சொல்லிப் போன வீர நாராயணன் கோவில், தேடாமல் கிடைத்தது. பனிரெண்டு மணிக்கு சென்னை வார்தாவின் மிச்சங்கள் தூரலாய் மென்குளிராய் நிறைந்திருக்க நாங்கள் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்த போது இருந்த ஒரு குடும்பமும் கிளம்பிக் கொண்டிருந்தது. கோவிலில் கரெண்ட் இல்லை. ஜெனரேட்டரில் தேவைக்கு மட்டும் ஒளிரும் விளக்குகள் . தொள்ளாயிரம் வருட பழைய கோவில். ரெண்டு ஆள் சேர்ந்தால்தான் கட்டிப் பிடிக்க முடியும் மாக்கல் தூண்கள், ஒன்று போல் ஒன்றில்லை. எதிர் எதிர் தூண்கள் கூட ஒன்று போல் ஒன்றில்லை. லேத்தில் கடைந்த மரம் போல ஆழ்ந்த கூர்மையான பள்ள வரிகள். சிலதில் நுணுக்கமான வேலைப்பாடுகள். நாலாபுறமும் இருள் சூழ்ந்திருக்க லேசான மழைச் சத்தப் பிண்ணனியில் கர்ப்பகிருஹம் மட்டும் ஒளிர்ந்திருக்க வீர நாராயணரையும், ஒரு குழலூதும் கண்ணனையும், உட்கார்ந்த நிலையில் ஒரு உக்கிர/யோக நரசிம்மரையும் பார்க்கத்தான் இந்த மொத்தப் பயணமும் வந்தேன் என்றிருந்தது. இன்னொரு முறை இந்த மழையும், இந்த இருளும் ஆளில்லா அமைதியும் ஒன்று கூடப் போவதில்லை. அதுவரை ஹொய்சாள சிற்ப வேலைப்பாடுகளை கண்ணால் பார்க்கத் தொடங்கியிருக்கவில்லை. அந்த மஞ்சள் வெளிச்சத்தில் சாளக்கிராமக் கல்லில் நுணுக்கி நுணுக்கி இழைத்த  ஆள் உயர வீர நாராயணரும், கிருஷ்ணரும், நரசிம்மரும் நிறைந்த அளவு அதன்பின் அன்றைய தினம் பார்த்த அதி உன்னதங்கள் நிறைக்கவில்லை. 
ஹலபேடு பேலூரெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட நினைப்பதே வீண்வேலை. ஹலபேடுவில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிற்பங்களில் முக்கால் மணி நேரத்தில் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது என்று சொல்லும் கைடின் தன்னடக்கம் நமக்கு நுழைவாசல் மேல் சிற்பத்தைப் பார்க்கும் போதே வந்து விடுகிறது. குருடனைப் போல் யானையைக் கொஞ்சமே கொஞ்சம் தடவி விட்டு வந்தோம். மாக்கல் என்பதால் அதீத நுணுக்கம் சாத்தியமாகியிருக்கிறது. அதனாலேயே நிறைய சிதலமாயிருக்கிறது. இயற்கையும் போர்களும் சிதைத்த மிச்சங்கள். இப்போது சரியான பராமரிப்பில் இருக்கிறது.

பேலூரையும் அன்றே பார்க்காமல் இருந்திருக்கலாம். ஒரு நாளுக்கு இத்தனை அற்புதங்கள் ரொம்ப அதிகமாகி விடுகிறது. அஜந்தா எல்லோராவிலும் இதுவே நிகழ்ந்தது. இதெல்லாம் இனியொரு முறை இப்படியல்லாமல் என்றெல்லாம் இப்போது தோன்றுவதில்லை. விரிந்து கிடக்கும் உலகத்தில் இங்கே இத்தனைதான் கிடைத்தது என்ற திருப்தி மட்டும் கொள்ள வேண்டியிருக்கிறது.