Friday, October 27, 2017

மரணம்

படிப்பித்ததெல்லாம் நிஜமென்றால்
இந்நேரம் அறிந்திருப்பாள்
அகால மரணமடைந்த மகன்
கடைசி கணம் நினைத்ததென்னவென்று
காணாமலே போன இன்னொருவனை
பார்த்திருக்கலாம்
அல்லாத போது
தகவலறிந்திருப்பாள்
முன்னால் சென்ற கணவன்
அவளின் தன்னிச்சையான முடிவுகளில்
சலித்திருப்பான்
பின் வரும் வரிசை
தெரிந்திருப்பாள்
தன் நிறங்களை
அதில் தன் பங்களிப்பை
புரிந்திருப்பாள்
படிப்பித்ததெல்லாம் நிஜமில்லையென்று
சிரித்துமிருப்பாள்.

Saturday, October 07, 2017

இன்னொரு பயணம்

கண் முன்னே விரிந்து பரவுகிறது
கடலை நினைவுறுத்தும்
அலையடிக்கும் பெரும் பொருக்கு
துணையாய் உணர்த்தியதெல்லாம்
நழுவி விலகிட
முழுத்தனியாய்

முன்னகர்வதைத் தவிர
வழியேதுமில்லை

தாண்டிக் கடந்தபின்
நீட்டப்படும் பட்டியலில்
நிறைய இழந்திருப்பேன்
சிலவற்றைப் பெற்றிருப்பேன்

வழக்கம் போல
பெற்றது உறுதியாயும்
இழந்தது காதலுமாயிருக்கும்.

Sunday, July 02, 2017

கதவு


அந்தக் கதவைத் திறந்து
வெளி வரும் போது
கண்ணில் படும் முதல் மனிதரைக் கண்டு
மலர்ந்து சிரிப்போம்
அவரும் இது போன்ற தேடலில் இருக்கக் கூடும்
சிறு பேச்சுகளும் பரஸ்பர அறிமுகங்களும் நிகழ்ந்தேறட்டும்
இசைவுப் புள்ளிகளைத் தெரிவு செய்து கொள்வோம்
ஆச்சரியங்கள் நிகழ்ந்தேறட்டும்
தேடல்கள் தொடரட்டும்
விலகும் புள்ளியை அடையாளம் காண்போம்
மெல்லணைப்பில் விலகி நடக்கத் தொடங்குவோம்
ஞாபகங்களாய் எஞ்சுவோம்
நமக்கேயான சிறு புன்னகையாய்
ஒளிரும் கண்களாய்
முத்தமாக
தீரா மோகமாய்
நிறைத்து விலகுவோம்
தோளில் சுமந்தலைவோம்
தோள் பை நிறைந்து வழியட்டும்
யாராவது வழிப்போக்கரிடம்
திறந்து கடைப்பரத்துவோம்
வேண்டுவோர் பொறுக்கிச் செல்லட்டும்
நதியாய் பெருகி வழிவோம்

Friday, May 12, 2017

மலர்மஞ்சம்

காட்டூர் வீட்டில் ஒரு அட்டாலி இருந்தது. மாமாங்கத்திற்கு ஒரு முறை யாராவது ஏறி எதையாவது தேடுவார்கள். பெரும்பாலும் என் அக்காக்கள் அல்லது எங்கள் தாத்தா. எனக்கு ஏணி என்றால் பயம். ஏறும் போது படிகளுக்கு நடுவில் கால் விட்டு கீழே விழுந்து விடுவேன் என்று சர்வ நிச்சயமாக நம்பினேன். அதனால் யாராவது ஏறும் போது கீழே காத்திருக்கும் கூட்டத்தில் தான் எப்போதும் இருப்பேன். எதைத் தேடச் சொல்லி அனுப்பினார்களோ, அது பெரும்பாலும் பாட்டியாகத்தான் இருக்கும், இன்ன இடத்தில் இதுக்குள்ளே இருக்கும் என்று உரக்கச் சொல்ல மேலே இருப்பவர்கள் அதை தேடு தேடென்று தேடுவது எப்போதும் நடக்கும். ஏறியதே இல்லையாததால் அட்டாலி எப்போதும் எனக்கு ஒரு மனச் சித்திரம் தான்.

அந்த அட்டாலி ஒரு முறை மொத்தமாக காலியாகி ஒரு ஆறு மாத இடைவெளியில் மறுபடியும் நிறப்பப் பட்டது. வீட்டை காலி செய்து விட்டு குடியிருந்த வீட்டையே சொந்தமாக்கிக் கொண்டு திரும்பியிருந்தோம். அன்றைக்கு அம்மாவுக்காகவா அல்லது சும்மாவாச்சும் பார்க்கலாமென்றோ கௌரி அட்டாலியில் ஏற முடிவு செய்தாள்.

கௌரி என் பதின்ம வயது தோழி. வீட்டின் பின் போர்ஷனில் குடியிருந்தார்கள். ஒரே வயது. எதிர் எதிர் ரசனைகள், சுபாவக்காரர்கள். கமலஹாசனும் பாலகுமாரனும் இல்லையென்றால் விரோதிகளாயிருப்போம். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் எண்ணங்களாலும் செயல்களாலும் ஒன்றாகிவிட்டிருந்தோம். எனக்கு எஸ்பிபி, அவளுக்கு ஜேசுதாஸ். நான் சகலத்திற்கும் பயப்படுவேன். அவளுக்கு பயமே கிடையாது. கடைக்கோ கல்யாணத்துக்கோ போக வேண்டி வந்தால் அப்பா அம்மா பக்கத்து வீட்டில் சொல்லி விட்டுப் போவார்கள், பொண்ணு வீட்ல தனியா இருக்கா, கொஞ்சம் பாத்துக்கோங்க, என்று. அவள் அம்மாவும் அண்ணனும் இலங்கைக்கு இரண்டு மாதம் போயிருந்த போது தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு அவர்களுடைய போர்ஷனில் தனியாக இருந்தாள். இதுவெல்லாம் 82- 83ல் என் யோசனையிலேயே உதித்திருக்காது. எல்லா விஷயத்திலும் தெளிவாக உறுதியா இருப்பாள். எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் எப்படியும் நடத்தி விடுவாள். அன்றைக்கு அவளுக்கு அட்டாலியைப் பார்க்க வேண்டும் என்று இருந்தது. அதுவும் தான் மட்டுமல்ல, நானும் வர வேண்டும் என்று. என்னுடைய எந்த சமாதானங்களும் செல்லவில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன், நீ ஏறித்தான் ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள். எப்போதும் போல அப்போதும் அவள் சொன்னதுதான் நடந்தது. ஒவ்வொரு படிக்கும் வீல் வீலென்று அலறி ஒரு வழியாக மேலே ஏறிவிட்டோம். படபடப்பு அடங்கவே எனக்கு கொஞ்ச நேரமானது.

அதற்குப் பிறகு ஆரம்பித்தோம் எங்கள் தேடல் வேட்டையை. எங்கள் தாத்தா காலகாலமாக சேர்த்தி வைத்திருந்த பைப்புகள், சைக்கிள் டயர்கள், அடைசல்கள், பாட்டியின் அண்டா குண்டாவெல்லாம் விலக்கிய போது அது கிடைத்தது. மரத்தில் செய்து கறுப்பு வண்ணம் பூசி நான்கு பக்கமும் குமிழ் வைத்த ஒரு அடி நீளமும் அதற்கும் குறைவான அகலமும் உள்ள ஒரு தொட்டில். கோவில்களில் ஊஞ்சல் சேவைக்கு உபயோகப் படுத்துவது. அது எப்படி அங்கே என்று யாருக்கும் தெரியவில்லை. அதற்குள் ஒரு புத்தகம். மலர்மஞ்சம் என்றிருந்தது. பழுத்து மஞ்சள் நிறமாகி லேசாக மொடமொடக்கத் தொடங்கியிருந்தது. முதல் பக்கத்தில் தாத்தாவின் பெயரும் ஏதோ தேதியும் இருந்ததாக ஞாபகம்.

அப்போதெல்லாம் ரெண்டு பேருக்கும் பாலகுமாரன் பித்து பிடித்திருந்தது என்றாலும் புத்தகமென்று எது கிடைத்தாலும் வாசித்திருந்தோம். ஆசிரியர் யாரென்றெல்லாம் பார்க்கவில்லை. வாசிப்போமென்று கொண்டு வந்தோம். நாலைந்து நாட்களுக்குள் ரெண்டு பேரும் வாசித்து விட்டோம். கௌரிக்கு எப்படி இருந்தது என்று நினைவில்லை. நான் பாலியாகி மஞ்சக் கொல்லையில் குடித்தனம் நடத்த ஆரம்பித்து விட்டிருந்தேன். ராமையா அப்பா கையை பிடித்துக் கொண்டு ஊர் சுற்றினேன். தஞ்சாவூருக்கு ரயில் ஏறினோம். தூக்கனாங்குருவி கூட்டை ரசித்ததும், டாக்டர் மாமா, அவர் பேரன், நாட்டியமாடியதுமாய் கதையோடு வாழத் தொடங்கியிருந்தேன். கதையில் அவள் சென்னைக்குப் போன பிறகு பாலியும் நானும் வேறாகியிருந்தோம். ஆனாலும் அவளுடைய ஆசைகளும் அலைக்கழிப்புகளும் எனதாயிருந்தது. அவளுடைய காதலையும் தடுமாற்றங்களையும் நானும் சுமந்திருந்தேன். டாக்டர் மாமா பேரன் ரோஜா மாலையைப் போட்ட போது என் கழுத்தில் குறுகுறுத்தது.

முப்பத்திச் சொச்சம் வருடங்கள் கழித்து இப்போது நினைக்கும் போதும் அதை லேசாக உணர முடிகிறது. கொண்டாடித் தீர்த்திருந்தேன். பின்னாளில் அது திஜாவின் புத்தகம் என்றும் மோகமுள்ளென்று அவருடைய மாஸ்டர் பீஸொன்று இருப்பதைக் கேள்விப் பட்டதும் அதிலும் தலைகுப்புற வீழ்ந்து மூழ்கினேன்றாலும் மலர்மஞ்சம் முதல் காதல் போல மறக்க முடியாதது.

கௌரி சொல்லச் சொல்ல கேட்காமல் அதை யாருக்கோ வாசிக்கக் கொடுத்து அதை அவள் தாள் தாளாகப் பறக்க விட்டதற்கான முழு பொறுப்பும் என்னைச் சேர்ந்தது. என் தாத்தாவுடைய பெரிய பொக்கிஷத்தை தொலைத்திருக்கிறேன். பின்னாளில் என் சேகரிப்பிற்காக இன்னொரு புத்தகம் வாங்கிவிட்ட போதும் என் ஞாபகத்தில் மலர்மஞ்சமென்றால் அது மட்டும் தான் இருக்கிறது.

பி.கு: ராயர் காபி க்ளப்பில் மலர்மஞ்சம் பற்றி முதல் முதலாக எழுதியிருந்தேன். என்ன செய்தும் அதன் எழுத்துரு மாற்ற முடியவில்லை. இன்றைக்கு திஜாவும் கௌரியும் எதற்கோ காலையிலிருந்து தொந்தரவு செய்ததால் மனசிலிருந்து வந்த மீள் பதிவு. இப்போது அந்த மலர்மஞ்சத்தில் என்ன எழுதினேன் என்று வாசிக்க ஆவலாயிருக்கிறது.

Wednesday, May 03, 2017

இசை

அது ஒரு வினோத இசைக்கருவியாகிவிட்டது
ஸ வில் எப்போதும் ஸ வே ஒலிக்குமென்று
சொல்ல முடியாது
நேற்றைக்கு ஒலித்தது போல் இன்றிருக்காது
நான் தான் வாசித்திருப்பேன்
அதுவே இசைக்குமென்று இன்று தொட்டால்
வேறொன்றாய் இசைக்கும்
ஒரு முறை கேட்டதை வேண்டி விரும்பும் போது
முற்றிலும் பிடிவாதம் கொள்ளும்
அதுவல்லாது எதுவாயும் இசைக்கும்

எல்லாமே இசை என்கிறாய்
பொழியவும் செய்கிறது
எனக்காய் இல்லை
கேட்பது இல்லவே இல்லை
கையில் சிக்காது
வடித்தெடுக்க இயலாது
நெஞ்சிலும் நிற்காது
சதா இசைத்துக் கொண்டிருக்கும்

யாருமில்லா உள்ளறையில்
சுவரோரம் திரும்பி
காதுகளைத் துறக்கும் நேரம்
இரைச்சாலாக்கித் தணியும்

உலகம் இசையாலானது

Thursday, April 27, 2017

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - யுகியோ மிஷிமா. தமிழில் கார்த்திகைப் பாண்டியன்

சமீபகாலத்தில் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தது இந்தப் புத்தகத்தைத்தான். புதினங்கள் மெல்ல அதன் சுவாரசியத்தை இழக்க நிஜங்களைச் சொல்லும் எழுத்துகள் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளத் தொடங்கிவிட்டது. சுய சரிதை என்பதுதான் முதல் கொக்கி. பிறழ்ந்த காமம் இரண்டாவது. அதிர்ச்சியோ முன்முடிவுகளோ இல்லாமல் வாசிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லாததால்தான் ஆரம்பித்திருந்தேன். தெரிந்த விஷயங்களும் என் எல்லைகளை மீறிச் சென்றவைகளையும் வாசிப்பதில் இருந்த ஆர்வம் உள்ளே இழுத்துக் கொண்டது.

1930களில் பிறழ்ந்த காமம் எந்த சமுதாயத்திற்குமே ஜீரணிக்க முடிந்திருக்காது. தானே அதை புரிந்து கொள்ள முயற்சித்ததும் உறுதி செய்து கொண்டதுமான போராட்டம்தான் இந்த புத்தகம். எல்லோருமே ஒன்றின் மேலொன்றாக முகமூடிகளோடிருக்க தான் மட்டும் ஒரு அசாதாரண, கூடுதல் முகமூடி அணிந்து கொள்ள வேண்டி வந்தது பெரிய உறுத்தலாகிறது. சுற்றியுள்ள மொத்த உலகமும் ஒரு ஒழுக்கில் ஓடிக் கொண்டிருக்க தான் மட்டும் வேறு. அதை யாரிடமும் சொல்ல முடியாத போது இப்படியாகத்தான் பதிந்து வைக்க வேண்டியிருந்திருக்கும். அதை ஒரு வெறித்தனத்தோடு கொஞ்சமும் பாசாங்கில்லாமல் மேசையிலிட்டு கிழித்து பரப்பி வைப்பதில் ஒரு சுயவதை, ஒரு திருப்தி. அத்தனை கால தனிமையையும் துயரத்தையும் இப்படி அல்லாமல் வேறெப்படியும் வெல்ல இயலாதுதான்.

ஆரோக்கியம் குன்றிய உடல், தனிமைப் படுத்தப்பட்ட நாட்கள், வாசிப்பு, தன்னை அறிதல் என்று நீளும் புத்தகத்திற்கு இரண்டு மொழிகள். எளிமையாக சொல்லிக் கொண்டே போகும் மொழி அங்கங்கே மடங்கி மடங்கி முடிவில்லாமல் நீள்கிறது. முடியாத வரிகளில் தொலைந்து போகும் போது வருவது நிச்சயமாக ஆர்வம் அல்ல, பெரும் சலிப்பு. அது மூல நூலின் மொழியா, மொழிபெயர்ப்பாளருடையதா தெரியவில்லை. மூல நூலுடையதாக இருக்கும் பட்சத்திலும் வாக்கியங்களை சுருக்கும் சலுகை மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கும் என்றே நினைக்கிறேன். ஏழெட்டு வரிகளுக்கு நீளூம் வாக்கியங்களும் வார்த்தைகளின் நேரடி மொழிபெயர்ப்புகளும் பெரிய குறை.


 //ஒருவிசயத்தை அதன் மொத்தமும் தவறானது என்று தீர்மாணிப்பது அதன் எந்தப் பகுதி உண்மையானது அல்லது எது பொய்யானது போன்ற சந்தேகங்களால் என்னைச் சித்திரவதை செய்வதை விடச் சற்றே வலி குறைந்தது என்பதைக் கண்டறிந்து விட்டதால், நிதானமாக முகமூடிகளைக் களைவதன் மூலம் என் பொய்மையை எனக்குணர்ந்திய இந்த வழிமுறைக்கு ஏற்கனவே நான் மெல்ல மெல்ல பழகியிருந்தேன்//

//தொண தொணக்கும் பெட்டி//

// மேலும் ஒழுங்கீனம்தான் என்னுடைய இயல்பின் அடிப்படையாகவும் முழுமுதற் கொள்கையாகவும் இருந்ததால், ஒரு பெண்ணுடனான குற்றம் சொல்லவியலாத உறவில், எனது நன்மதிப்புக்குரிய நடத்தையில், மேலும் உயரிய கொள்கைகளையுடைய மனிதனாக நம்பப்படுவதில், நல்லொழுக்கம் நிரம்பிய தீவிர உணர்வை நான் கண்டுபிடித்தேன்.//


ஆனாலும் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன்.

Thursday, December 22, 2016

வீர நாராயணர், பேலூர் மற்றும் ஹலபேடுஎண்பதுகளில் ஒரு ஜூனியர் சிவில் இஞ்சினியரின் ஆபிஸ் வாழ்க்கை என்பது ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் நீள்வது. மொத்த உலகமும் காலை ஒன்பது மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு திரும்பின நாட்களிலேயே எங்களுக்கு இதுதான் வாய்த்தது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை. முக்கியமான கான்கிரீட் இருந்தால் அதுவும் இல்லை. ஆகவே கிடைக்கும் ஒரு நாளை தூங்கிக் கழிப்பார்கள். நமக்கோ பால்காரர், வேலைக்காரம்மா, அக்கம் பக்கம் என்று மிஞ்சிப் போனால் ஒரு பத்து பேரோடுதான் மொத்த வாழ்க்கை. அதுவும் ஏதாவது பெயரே கேட்டிராத ஒரு பொட்டல் காட்டில். அதனாலேயே எங்கேயாவது கூட்டிக் கொண்டு போக மாட்டாரா என்று காத்திருப்பதே வாழ்க்கையாயிருந்தது. அப்படி அந்த ஒரு நாளில் ஏதாவது அக்கம் பக்க ஊருக்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ பிள்ளைகளையும் சுமந்து போய் வந்தால் அந்த சலிப்பு தீரவே காலமாகும். அடுத்த பயணம் அவ்வளவு சீக்கிரத்தில் யோசனையிலும் வராது.

95 ல் அப்பா வாங்கிக் கொடுத்த முதல் மாருதி காரில்தான் எங்கள் ரோட் ட்ரிப்கள் தொடங்கின. அந்த மாருதி 800ஐ இழுத்துக் கொண்டு சுத்தாத இடமில்லை. கோட்டேஸ்வர், நாரயண் சரோவர் பயணத்தில் ஒரு ப்யூஸ் இல்லாமல் நடுக்காட்டில் மணிக்கணக்கில் காத்திருந்தோம். ஒருமுறை மூச்சு தள்ளி பச்சை கூலண்ட் கண்ணாடியில் பீச்சியடிக்க நடு ரோட்டில் நின்று போனது. இன்னொரு முறை ஏன் தான் நின்னியோ என்று தடவிக் கொண்டிருக்க 'அப்பா இங்க ஒரு ஒயர் தொங்குதே'ன்னு மகள் சொன்னதை சரி செய்து பயணத்தைத் தொடர்ந்தோம். அதற்குப் பிறகு கார்கள் மாறின. நீண்ட பயணங்கள் வாய்த்தன.

இன்றைக்கும் எங்களுடைய ரோட் ட்ரிப் ஞாபகங்கள் ஒரு பெரிய சுரங்கம். நினைத்து, பேசித் தீராது. கூகிள் மேப் வசதிகள் இல்லாத காலங்களில் எந்த ஊர்களின் வழியாக என்று விசாரித்தே எல்லா ஊர்களுக்கும் போய் வந்தோம். பைபாஸ் இல்லாமல் ஊருக்குள் நுழையும் போது மட்டும் தடுமாறுவோம். ரைட்டுல என்று சொல்லி இடது கையைக் காண்பித்து வழி சொல்வார்கள். அவர் வார்த்தையை ரெண்டு பேர் பிடித்துக் கொள்ள கையை மீதி ரெண்டு பேர் பிடித்துக் கொள்ள எங்கள் நாலு பேருக்கு இரண்டு வழி சரியென்று தோன்றும். சரியான வழியை தவற விட்ட நேரங்களில் திரும்பியெல்லாம் வந்து விட மாட்டோம். உலகம் சுத்தி வேறு வழியைக் கண்டு பிடிப்போம். எல்லா நேரமும் வழி சொல்பவர்கள் மைண்ட் மேப் போட்டு மூணாவது சிக்னல்ல ரைட் எடுத்து இரண்டாவது லெப்ட்ல போய் மெயின் ரோட்டப் பிடிச்சான்னு சொல்றதுல மூணாவது சிக்னல்ல ரைட் மட்டும் தான் எங்க எல்லோருக்கும் மனதில் பதியும். அங்கே போய் மறுபடியும் வழி கேட்போம். ஊரைவிட்டு வெளியே வரும் போது ஒருவரை ஒருவர் குதறும் மனநிலையில் இருப்போம். கொஞ்சம் நேரத்தில் எல்லாம் சரியாகும்.

சொன்ன நேரத்தில் கிளம்பாததால் பெரும்பாலும் எல்லாப் பயணங்களும் சண்டையில்தான் தொடங்கும். அதுவும் நூறாவது கிலோமீட்டருக்குள் சரி செய்யப்படும். வாய்க்கும் அல்லது ஏய்க்கும் சாப்பாட்டுக் கடைகள், சகிக்க முடியாத கழிப்பறைகள் எல்லாம் பழைய கதையாகிவிட்டது. எல்லா பெட்ரோல் பங்க்களிலும் மோசமில்லாத கழிப்பறைகள் இருக்கிறது. ட்ரிப் அட்வைசர் சகலத்துக்கும் லிஸ்ட் கொடுக்கிறது. இண்டு இடுக்கில் இருக்கும் உணவகங்களை மேப்பில் தேடிப் போக முடிகிறது. முன்பெல்லாம் பயணங்கள் பூராவும் கண்களை பாதையிலே நட்டு வைத்திருப்பதால் சின்னச் சின்ன சுவாரசியங்களாய் நிறைந்திருக்கும். ஏதாவது ஒரு வளைவு முன்னெப்போதோ எங்கேயோ போன பாதையை நினைவு படுத்தும். நடுவில் வரும் ஊர்களால் நேரம் விரயமானாலும் ஒவ்வோரு ஊருக்குமான காட்சிகளால் நிறைந்திருக்கும். இப்போது ராஜப்பாட்டைகளெல்லாம் நீண்ட நெடும் சாலைகள். சிறிய ஊர்களை தொடுவதேயில்லை. ஊருக்குள் நுழைந்தால் மேப்பில்லாமல் வேலையாவதில்லை. ஓட்டுபவருக்கு வழி சொல்வதில் ஊரை ரசிக்க முடிவதில்லை. சௌகரியங்கள் எப்பவும் சுவாரசியங்களைத் தான் விலையாக்குகிறது.
 
ஒரு கட்டத்திற்கு மேல் இப்படி ஏற்பாடுகளோடு செல்லும் பயணங்களில் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் போனது. மனம் போன போக்கில் போவதும், கிடைக்கும் இடத்தில் தங்குவதும் சுவாரசியமாய் இருக்கும் என்று தோன்றத் தொடங்கியது. ஆனாலும் இவையெல்லாம் என் மண்டையில் மட்டுமே உதிக்கும் விஷயங்களாய் இருந்ததால் மொத்த குடும்பமும் அய்யோ அதெல்லாம் சரிப்படாது என்று கூச்சலிட்டு மறுத்ததாலும் முயற்சித்ததில்லை.

இந்த முறை எதிர்ப்பு தெரிவிக்கும் இரண்டு டிக்கெட்டுகளும் இல்லாததும் முந்தின இரவுதான் முடிவு செய்ததாலும் எந்த ஏற்பாடும் செய்திருக்கவில்லை. பேலூர் ஹளபேடு போகலாம், பெங்களூரில் தங்கலாமென்று யோசித்தது அங்கிக்கே சுத்தி சிக்மங்களூர் போகலாமென்று முடிவு செய்து படுக்கும் போது இரவு மணி பத்தரை. ஆடி அசைந்து  சென்னையிலிருந்து கிளம்பும் போது காலை மணி பத்து. சென்னையை விட்டு வெளியே வரவே பதினொன்றானது. பெங்களூரில் உள்ள நண்பர் ஒருவரிடம் தங்குமிடத்தை விசாரித்து வைக்கச் சொல்லியிருந்தோம். மாலை நாலரை மணிக்கு அவரைப் பார்த்த போது, அங்க நல்ல இடமெல்லாம் இருக்குமே என்று சாதாரணமாகச் சொன்னார். அப்போது ஆரம்பித்தது தேடும் வேலை.

நாடோடிப் பயணமெல்லாம் ஆசைப் பட்டாலும் சுத்தமான படுக்கையும் மற்ற வசதிகளும் இல்லாத இடமெல்லாம் ரெண்டு பேருக்குமே வேலைக்காகாது. ட்ரிப் அட்வைசர் சொன்ன இடமெல்லாம் வார இறுதி, காலியில்லை. ஹோட்டல் விட்டு ஹோம் ஸ்டே தேடலும் அதே நிலமை. நண்பர்களை விசாரித்து பதில் வருவதற்குள் நல்லவேளையாக Coffee Tranquil ல் இடம் கிடைத்தது. எப்படி இருக்கும் என்னென்ன வசதிகள் எதுவும் தெரியாது. வேறொரு ஹோம் ஸ்டேயில் இடமில்லாததால் பரிந்துரைத்தது. நேரமாகிவிட்டது. வேறு வழியில்லை என்று ஒருநாளுக்கு மட்டும் புக் செய்து போய் சேர்ந்தோம். இரண்டு நாளும் அங்கேயே இருந்தோம்.

ஊருக்கு வெளியே காப்பித் தோட்டத்துக்கு நடுவே ஏர்டெல் போன் சிக்னல் மட்டுமே கிடைத்த, முறையாக பராமரிக்கப் பட்ட அமைதியான பங்களா.  இந்த மாதிரி இடங்களில் எல்லாம் ஹோட்டல்களை இனிமேல் முற்றாக தவிர்த்து விட வேண்டும். காலையில் பறவை சத்தம் கேட்டு விழிக்கலாம். எழுந்ததும் மொபைல் போனில் மோனத்திலிருக்க வேண்டாம். காலாற நடக்கலாம். வாசமான காபி. நல்ல மலைநாட்டு (malnad cuisine) வீட்டுச் சாப்பாடு.இருந்த ரெண்டு நாளில் ஒரு நாள் சிருங்கேரி. புகைப்படத்தில் பார்த்து ரசித்த காலை நேர சிருங்கேரி வாய்க்கவில்லை. டூரிஸ்ட், பக்தர்கள் நெரிசலிடும் மாலை நேரம்தான். நடுவில் இருக்கும் புராதன கோவிலை காணாமலடிக்கும் முயற்சிகள் நாலாப் பக்கமும் நடந்து கொண்டிருக்கிறது. பெரிய பீடத்தின் மேல் நீள் வட்டக் கோவில். வேலைப்பாடுகள் எதையும் ரசிக்க விடாத கூட்டம். சுற்றிலும் புதிது புதிதாக எழும்பிக் கொண்டிருக்கும் பளபளக்கும் சன்னதிகள், கட்டிடங்கள். ஒரு கோவில் தரிசனம் ஆனது. மனதில் இருந்து, தேடி வந்தது என்னவோ இதுவல்ல.


எங்களுடைய பேலூர் ஹலபேடு பயணம் பற்றிக் கேள்விப்பட்ட Coffee Tranquil பெண்மணி சொல்லிப் போன வீர நாராயணன் கோவில், தேடாமல் கிடைத்தது. பனிரெண்டு மணிக்கு சென்னை வார்தாவின் மிச்சங்கள் தூரலாய் மென்குளிராய் நிறைந்திருக்க நாங்கள் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்த போது இருந்த ஒரு குடும்பமும் கிளம்பிக் கொண்டிருந்தது. கோவிலில் கரெண்ட் இல்லை. ஜெனரேட்டரில் தேவைக்கு மட்டும் ஒளிரும் விளக்குகள் . தொள்ளாயிரம் வருட பழைய கோவில். ரெண்டு ஆள் சேர்ந்தால்தான் கட்டிப் பிடிக்க முடியும் மாக்கல் தூண்கள், ஒன்று போல் ஒன்றில்லை. எதிர் எதிர் தூண்கள் கூட ஒன்று போல் ஒன்றில்லை. லேத்தில் கடைந்த மரம் போல ஆழ்ந்த கூர்மையான பள்ள வரிகள். சிலதில் நுணுக்கமான வேலைப்பாடுகள். நாலாபுறமும் இருள் சூழ்ந்திருக்க லேசான மழைச் சத்தப் பிண்ணனியில் கர்ப்பகிருஹம் மட்டும் ஒளிர்ந்திருக்க வீர நாராயணரையும், ஒரு குழலூதும் கண்ணனையும், உட்கார்ந்த நிலையில் ஒரு உக்கிர/யோக நரசிம்மரையும் பார்க்கத்தான் இந்த மொத்தப் பயணமும் வந்தேன் என்றிருந்தது. இன்னொரு முறை இந்த மழையும், இந்த இருளும் ஆளில்லா அமைதியும் ஒன்று கூடப் போவதில்லை. அதுவரை ஹொய்சாள சிற்ப வேலைப்பாடுகளை கண்ணால் பார்க்கத் தொடங்கியிருக்கவில்லை. அந்த மஞ்சள் வெளிச்சத்தில் சாளக்கிராமக் கல்லில் நுணுக்கி நுணுக்கி இழைத்த  ஆள் உயர வீர நாராயணரும், கிருஷ்ணரும், நரசிம்மரும் நிறைந்த அளவு அதன்பின் அன்றைய தினம் பார்த்த அதி உன்னதங்கள் நிறைக்கவில்லை. 
ஹலபேடு பேலூரெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட நினைப்பதே வீண்வேலை. ஹலபேடுவில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிற்பங்களில் முக்கால் மணி நேரத்தில் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது என்று சொல்லும் கைடின் தன்னடக்கம் நமக்கு நுழைவாசல் மேல் சிற்பத்தைப் பார்க்கும் போதே வந்து விடுகிறது. குருடனைப் போல் யானையைக் கொஞ்சமே கொஞ்சம் தடவி விட்டு வந்தோம். மாக்கல் என்பதால் அதீத நுணுக்கம் சாத்தியமாகியிருக்கிறது. அதனாலேயே நிறைய சிதலமாயிருக்கிறது. இயற்கையும் போர்களும் சிதைத்த மிச்சங்கள். இப்போது சரியான பராமரிப்பில் இருக்கிறது.

பேலூரையும் அன்றே பார்க்காமல் இருந்திருக்கலாம். ஒரு நாளுக்கு இத்தனை அற்புதங்கள் ரொம்ப அதிகமாகி விடுகிறது. அஜந்தா எல்லோராவிலும் இதுவே நிகழ்ந்தது. இதெல்லாம் இனியொரு முறை இப்படியல்லாமல் என்றெல்லாம் இப்போது தோன்றுவதில்லை. விரிந்து கிடக்கும் உலகத்தில் இங்கே இத்தனைதான் கிடைத்தது என்ற திருப்தி மட்டும் கொள்ள வேண்டியிருக்கிறது.