Saturday, March 23, 2019

ஆக்ரா & ஜெய்ப்பூர்

ரொம்ப வருஷமாக தாஜ்மஹாலை முழு நிலவொளியில் பார்க்க வேண்டும் என்றொரு ஆசை. அதைப் பற்றிய ஒரு சித்திரம் மனதில் வரித்துக் கொண்டு அந்த ஆசையை உயிரோடு வைத்திருந்தேன். அதற்காக ஆக்ராவின் தங்குமிடங்களையெல்லாம் அலசி, எங்கேயிருந்து பார்த்தால் நன்றாக தெரியக்கூடும் என்று பெரிய ஒரு ஆராய்ச்சியும் செய்திருந்தேன். வீட்டில் ஒன்றிரண்டு முறை சொன்ன போது ஒரு ஐடியா என்ற வகையில் எல்லாருக்கும் பிடித்திருந்தாலும் யாருக்கும் ஆர்வமில்லாதிருந்தது. எல்லா தேனிலவு லொக்கேஷன்களுக்கும் நாங்கள் குடும்பத்தோடு போகிறோம் என்ற சலிப்பு பிள்ளைகளுக்கு இருந்தது. அதனாலேயேயும் கூட இந்த ஐடியா விலை போகவில்லை. வழக்கம் போல நான் மட்டும் தனியாகப் போகிறேன் என்றும் சொல்லிப் பார்த்தேன். அதை நான் முடிவாகச் சொல்லவில்லை போலும். அதற்கான முயற்சியை நானும் எடுக்கவில்லை. போய்க் கொள் என்றும் சொல்லவில்லை.

இப்படியாக போன நவம்பரில் ஒரு முறை மறுபடியும் அந்த முழுநிலவு நாட்களைத் தேடும் போது எதேச்சையாக அது இந்த வருட திருமண நாள் அன்றே வருவது தெரிந்தது. இப்போது சும்மாவாலும் அதில் ஒரு ரொமாண்டிக் மசாலா வேறு சேர்ந்து கொள்ள சரி போகலாமென்று முடிவு செய்தோம். முதல் மூன்று நாள் ஜெய்ப்பூரிலும், இரண்டாவது மூன்று நாள் ஆக்ராவிலும் என்று முடிவானது.

நாங்கள் வந்து இறங்கிய போது ஜெய்ப்பூரில் மாலை நான்கு மணிக்கே குளிரிருந்தது. ஜெய்ப்பூரில் தங்குமிடம் தேடும் போது மகள், அங்கயும் போய் ஏன் ஹோட்டல்? எதாவது ஹெரிட்டேஜ் ஹோம் பார்க்கலாமல்ல? என்று சொன்னதால் ஒரு குட்டி அரண்மனையை தேர்ந்தெடுத்தேன். எல்லா அறைகளுக்கும் யானை வாடகை, ஒட்டக வாடகையிருக்க எனக்குக் கொடுத்த அறை மட்டும் என் பட்ஜெட்டிலேயே இருந்தது. எதாவது மூலையில் சாமான் போடும் அறையாயிருக்குமோ என்று வேறு யோசனையாயிருந்தது. அடுத்த நாளே அரண்மணையில் இருந்து மெயில் வந்தது. உங்கள் அறை தவறுதலாக புக் ஆகியிருக்கிறது. அன்றைய தினத்தில் ஒரு கல்யாணத்திற்காக முழு அரண்மைனையும் வாடகைக்கு எடுத்திருப்பதாக. மறுபடியும் முதலில் இருந்து தேடி கிடைத்ததில் புக் செய்திருந்தேன். இறங்கியதும் கூகிள் மேப் 'புரானி பஸ்தி' என்று காண்பித்த போது கொஞ்சம் கலக்கமாக இருந்தது. எதிர்பார்த்தது போலவே நல்ல நெரிசல் மார்க்கெட் வழியாகப் போய் சாக்கடை சந்துகளைக் கடந்து ஒரு ஹவேலி வாசலில் விட்டது.

ரிசப்ஷனைத் தேடவே இரண்டு கட்டிடங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. தடுமாறிக் கொண்டே ஒரு வயதானவர் பெல் அடித்து யாரையோ கூப்பிட்டுக் காத்திருந்தார். அவருடைய காலடியில் பூனைக்குட்டி போல ஒரு சின்ன ஹீட்டர் உறுமிக் கொண்டிருந்தது. நெஞ்சில் இடிக்கும் ஒன்றரை அடி உயரப்படிகளை ஒன்றொன்றாக ஏறி அறையை அடைந்தால் அந்த 'மஹாராஜா ஸ்வீட்' ஏமாற்றவில்லை. அறைக்குள்ளே இன்னும் படிகள், வேறு வேறு தளங்கள். ராஜாவிற்கு தனி, ராணிக்கு தனியாக இரண்டு குளியலறைகள். பெரும்பாலும் வெளிநாட்டு பயணிகளால் நிறைந்திருப்பதால் எல்லாம் படுசுத்தம். மாலை நேரத் தேநீருக்கு மொட்டை மாடியில் காத்திருக்கச் சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் நெஞ்சை இடிக்கும்  ஒன்றரை அடி படிகளை ஏறினால் பக்கத்திலெல்லாம் வீடுகள், மொட்டை மாடிகள், குப்பை கூளம். தூரத்தில் பெரியதோர் மலை மேல் ஒரு பெரிய கோட்டை. கலவையான உணர்வு.

மாலை ஊரைக் கொஞ்சம் சுற்றும் போது ஆல்பர்ட் ஹால் என்னும் அருங்காட்சியகத்தை வெளியில் இருந்தே பார்த்தோம். அருங்காட்சியக கட்டிடமே ஒரு மாஸ்டர் பீஸ்தான். நூற்றுச் சொச்ச வருஷம் பழையது. ஆனாலும் நல்ல பராமரிப்பில் இருந்தது. மாலை வேளையில் அலங்கார விளக்கொளியில் பார்க்கத்தான் போயிருந்தோம். மாலை இயற்கை வெளிச்சத்தில் அழகாயிருந்ததா இல்லை வண்ண விளக்கிலே அழகாயிருந்ததா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. சாப்பாட்டிற்கு எல்லோரும் பரிந்துரைத்த ஸ்பைஸ் கோர்ட். Dal bhati churma ராஜஸ்தானுடைய பிரதான உணவு. இது அசைவ உணவகமானதால இங்கே kheema bhati விசேஷமாம். வழக்கமாக கோலி உருண்டை சைஸ்ஸில் இருக்கும் என்பதால் அதையும் இன்னும் வேறயும் ஆர்டர் செய்து காத்திருந்தால் இரணடு கிரிக்கெட் பந்தை சேர்த்த அளவில் ஒரு bhati வீதமாக இரண்டு. உள்ளே பூராவும் கீமா நிறைத்து. அதைச் சாப்பிட்டு முடிக்கவே பெரும்பாடானது. Foodgasmic! இராஜஸ்தான் போனால் இதைத் தவற விட வேண்டாம். சைவர்களுக்கு Dal bhati. அதை LMBல் இன்னொரு நாள் சாப்பிட்டு பாஸ் மார்க் போட்டோம்.

அடுத்த நாள் காலையில் ஹவா மெஹலை வெளியில் இருந்தே பார்த்துவிட்டு ஜெய்கர் கோட்டைக்குப் போகிற வழியில் ஜல் மெஹலையும் வெளியில் இருந்தே பார்த்துவிட்டு, அதை நினைச்சாலும் உள்ளே போய் பார்க்க முடியாது, அனுமதியில்லை, போய்ச் சேர்ந்தோம். ராஜாவின் மாளிகையாம். கீழே ஒரு பழைய மாளிகையில் இருந்து இங்கே குடிபெயர்ந்தார்களாம். பழைய மாளிகை கொஞ்சம் பெரிய வீடாட்டம் இருந்தது. அதிலிருந்து இவ்வளவு பெரிய மாளிகைக்கு குடிபெயர்ந்த காரணம் தெரியவில்லை. இயற்கை வண்ணங்களில் வேலைபாடுகள், ஷீஷ் மஹல் என்னும் கண்ணாடி மாளிகை என்று ஒரு மாளைகைக்கான எல்லா விஷயங்களோடு இருந்தது. ஒரு காளி கோவிலும் இருக்கிறது. ராஜா எப்போதும் வெற்றி பெற காளி கனவில் வந்து சொன்னதால்  தினம் ஒரு நரபலி கொடுத்துக் கொண்டிருந்ததாகவும் ஒரு கட்டத்திற்கு மேல் மக்கள் எதிர்க்க விலங்கு பலியானதாகவும், அதுவும் இப்போது மறைவாக என்றும் சொன்னார்.

அதற்குப் பிறகு இன்னொரு கோட்டை, பெரியதோர் பீரங்கி, ஒரு சிறிய அருங்காட்சியகம்... நேரப் பற்றாக்குறையால் எல்லாம் ஒரு அவசரகதியில் பார்த்துவிட்டு கிளம்பினோம். அடுத்த நாள் ஒரு சிறிய ஷாப்பிங்கை முடித்து புஷ்கர் பயணம். நாங்கள் போய்ச் சேர்ந்த அந்த மாலை நேரத்தில் புஷ்கர் ஏரியின் அழகும் அமைதியும் வார்த்தைகளில் சொல்ல இயலாதது. என்னை விட்டிருந்தால் அங்கேயே இருந்திருப்பேன். கடிகாரத்தோடு ஓடும் துணைவரோடான வாழ்க்கையில் இவ்வளவுதான் முடிகிறது. ஒரே பிரம்மாவின் கோவிலைப் பார்த்துவிட்டுக் கிளம்பினோம். புஷ்கர் வெளிநாட்டவர்களால் நிரம்பி வழிகிறது. அவர்களால் அந்த இடமே வேறு நிறத்தில் வேறு அதிர்வலைகளில் இருப்பதை உணர முடிந்தது.

அடுத்த நாள் மதியம் அஜ்மேர் திடீரென்று பயணத்திட்டத்தில் நுழைந்தது. ஓட்டுனர் ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் எங்களை ஒரு ஆட்டோகாரரிடம் ஒப்படைத்து விட்டார். கூட்ட நெரிசலாயிருக்கும், ஆட்டோதான் போகும் என்று. காசி சந்துகளை நினைவுறுத்தும் குறுகிய பாதைகளில் போய் ஒரு இடத்தில் இறக்கி விட்டார். அங்கிருந்து வழி காண்பித்து விட்டு அவரும் நின்று விட்டார். இறக்கி விடும் போது துப்பட்டா வாங்கி தலையை மூடிக் கொள்ளச் சொன்னார்கள். நாலு நாளாக துப்பட்டா இல்லாமல் தான் எல்லா இடங்களுக்கும் போயிருந்தேன். அதைச் சொன்ன விதமோ என்னவோ உடனே வாங்கி தலையோடு மூடிக் கொள்ளத் தோன்றியது. தர்க்காவிற்குள் நுழையும் போதே எங்கிருந்தோ வந்த ஷெர்வானி அணிந்த பெரியவர் ஒருவர் வழி காட்டிக் கூட்டிப் போனார். அவசரமாக நுழைந்து வாங்கிப் போயிருந்த சாத்தரை (chaddar) கொடுக்கச் சொன்னார். ரெண்டு பேரையும் தனித்தனியாக காணிக்கைக் கொடுக்கச் சொன்னார். அதே வேகத்தில் வெளியே கூட்டி வந்து விட்டு விட்டார். என்ன பார்த்தோமென்று ரெண்டு பேருக்கும் எதுவும் புரியவில்லை. என்னை கொஞ்ச நேரம் நிற்கச் சொல்லிவிட்டு கணவர் மட்டும் மறுபடியும் போய்ப் பார்த்து விட்டு வந்தார். இரண்டு நிமிடம் வெளியே நின்றிருந்திருப்பேன். கூட்டத்தில் தனித்து தெரிவது போலிருந்தது. ஒரு சூபியின் தர்க்காவிற்குள் என்னால் அந்த கொஞ்ச நேரம் இயல்பாக நிற்க முடியவில்லை. எதாவது கோவிலைப் பார்க்க விரும்பி அவர்கள் வந்தாலும் இப்படித்தான் இருக்கும். இது தந்த தாக்கம் வலுவானதாயிருந்தது. வழிபாட்டுத்தலங்களின் எளிமையை எல்லாம் தொலைத்துவிட்டோம்.

அடுத்த நாள் தான் திருமண நாள். காலையில் கிளம்பி நாள் பூராவும் பயணித்து ஆக்ரா போய் சேர்ந்தோம். ராஜஸ்தான் எல்லை கடந்து உத்திர பிரதேசத்துக்குள் நுழையும் போதே வித்தியாசம் தெரிந்தது. RTO வரி கட்ட நின்ற நேரத்தில் டீ குடிக்கப் போன இடத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்து உருண்டு கொண்டிருந்த ஆண் காண்பித்தார் உத்திர பிரதேச ஆண்களின் சுபாவத்தை. பொது இடத்தில் அவருடைய அதீத அலட்சிய மனப்பாங்கு ஒரு சோற்றுப் பதம். அங்கிருந்து நிறைய இடங்களில் பார்க்க முடிந்தது.

மாலை ஆக்ரா போய் சேர்ந்தோம். தாஜ்மஹாலை எல்லா நிறத்திலும் எல்லா நேரத்திலும் எல்லா கோணத்திலும் பார்க்க வேண்டுமென்றிருந்தேன். ரிசப்ஷனிலேயே இந்த நேரம் போக முடியாதென்றார்கள். அவர்களுடைய மொட்டை மாடியிலிருந்து தான் பார்க்க வசதி செய்திருக்கிறார்கள். அங்கே போன போது ஏற்கனவே பனி படரத் தொடங்கியிருந்தது. இரவு உணவும் நிலாவும் தாஜ்மஹாலும் என்ற கற்பனையை அங்கே குலைத்தார்கள். தாஜ்மஹாலைச் சுற்றி குறிப்பிட்ட தூரம் வரை எங்கும் இரவில் விளக்கு கிடையாது. அதனால் தெரியாது. பெரும்பாலான நாட்களில் பனி மூட்டத்தில் பகலிலேயே தெரிவதில்லை என்றார்கள். ஆகவே இரவுணவு, நிலவு மட்டுமிருந்தது, மாலையில் கண்ட இடத்தில் தாஜ்மஹாலின் சுவடு கூட இல்லை.

காலை பத்து மணிக்கு மென் குளிர் நிறைத்திருந்த வேளையில் பார்த்தோம். பெரிய உணர்வெழுச்சியெல்லாம் வராமல் அங்கிருந்த கூட்டம் பார்த்துக் கொண்டது. மனிதர்கள் குறைவாயிருக்கும் நேரம் எப்போதாயிருக்கும்? அப்போது தனியாக வந்து பார்க்க வேண்டும். என்னுடைய எல்லா நேரங்களிலும் பார்க்கும் கணக்குகளையெல்லாம் ஓட்டுனர், ரெண்டு மணி நேரத்துக்கு மேல அங்க என்ன பாக்க இருக்கு மேடம்? மதுரா பக்கத்துல இருக்கு போகலாமேன்னு புது ப்ரோக்ராம் சேர்த்து விட்டார். மதுரா என்ன்னுடைய 'ஏழு நாள் எனக்கே எனக்காய்' லிஸ்ட்டில் வேறு இருந்ததால் சரி என்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

நான் அறிந்த மதுரா, ஒன்று கிருஷ்ணர் பிறந்த ஊர், இரண்டாவது விதவைகளையெல்லாம் அங்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள் என்பது. இரண்டாவது விஷயம் இந்தக் காலத்தில் யார் இதெல்லாம் செய்கிறார்கள் என்பதால் மங்கிப் போயிருந்தது. கிருஷ்ணருக்காக மட்டும் போய் வர ஆசையிருந்தது. ஊருக்குள் நுழையும் போதே டூரிஸ்ட் வண்டிகளைக் கண்டதும் கைடு கூட்டம் தயாராகக் காத்திருந்து பாய்கிறார்கள். இங்கே ஒரு படி மேலே. காரோடு கூடவே ஓடி வருகிறார்கள். லேசாக தலையசைப்பது போல் தோன்றினால் போதும் ஏறி உள்ளே உட்கார்ந்துமாயிற்று.

அக்கம் பக்கத்தில் கோவிலின் சுவடே தெரியாத ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லி ஒரு நீண்ட சந்தில் கூட்டிக் கொண்டு போனார். ஜெயில் அறைக்குள் பிறந்த கிருஷ்ணர் கோவில் நாலா பக்கமும் விரிந்து பளப்பளா கோவிலாகியிருக்கிறது. அந்த அறையை மட்டும் அப்படியே வைத்திருக்கிறார்கள். நிஜமோ, இல்லையோ அங்கிருக்கும் போது நிஜமாகவே கிருஷ்ணர் பிறந்த இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு வந்தது. 
 
பக்கத்திலேயே ஒரு மசூதி. ஆனால் அங்கே தினப்படி தொழுகையேதும் இல்லையாம். ஆனாலும் ஏகப்பட்ட போலீஸ் கெடுபிடி. அத்தோடு கிளம்பியிருக்கணும். கைடு கிருஷ்ணர் வளர்ந்த கோகுலத்தைப் பார்க்க வேண்டாமா? இங்கேயிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர்தான் என்று காட்டிய ஆசையில் மயங்கினது நான்தான். வழியிலே நமக்குத் தெரிந்த கதையையே அவர் அவர் வர்ஷனாக கொஞ்சம் சொன்னார். கோகுலத்தில் இறங்கினதும் இதோட என் ஏரியா முடிந்தது என்று நம்மை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டார். அவர் கோகுலத்தின் பெருமையை, இங்கேதான் இது அங்கே அது என்று சின்னச் சின்ன விஷயங்களையும் விலாவரியாகச் சொல்லத் தொடங்கினார். இங்கே வருபவர்கள் சந்தோஷமாக வர வேண்டும் சந்தோஷமாகத் திரும்பிப் போக வேண்டும் என்று ஒவ்வொரு இடத்திலும் சந்தோஷமாக சிரிக்கச் சொன்னார். திடீரென்று சந்தோஷமாகச் சிரிப்பது எப்படி என்று எங்கள் இருவருக்கும் தெரியவில்லை. அங்கங்கே சின்னச் சின்னதாக எதையாவது சொல்லி திரும்பச் சொல்லச் சொன்னார். நாங்கள் இரண்டு பேரும் சிரத்தையோடு சொல்லி, சிரத்தையோடு சந்தோஷமாக சிரிக்கவும் செய்தோம். அங்கே இங்கே என்று சுற்றி கடைசிலில் கிருஷ்ணர் வளர்ந்த வீட்டுக்குக் கூட்டி வந்தார். அங்கேயும் அதே கிளிப்பிள்ளைகளாகி அவர் சொன்னதைச் சொன்னோம். மெதுவாக எங்களை அங்கிருந்த பூசாரிக்கு கை மாற்றி விட்டார். அவரும் திரையிட்டு மறைத்து வைத்திருந்த அறை வாசலில் உட்கார வைத்து நந்தகோபரிடமிருந்து நேற்று வரையான சம்பவ விவரிப்புகளுக்குப் பிறகு அங்கே நடக்கும் நிர்வாகம் பூராவும் ட்ரஸ்ட் கவனித்துக் கொள்கிறது. நந்தகோபர் மாதிரி இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள், மிக எளிய இந்த தானம், மீடியமாக இந்த தானம், உன்னதமான அந்த இதில் நீங்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம்... இப்படியாக கோகுலத்திற்குள் நுழைந்ததிலிருந்து பேசிப்பேசியே அந்த இடத்துற்கு நம்மைக் கூட்டி வருகிறார்கள். வரிசையாக நம்மைத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லும் விஷயத்திற்க்குள் நான் இந்த தானம் செய்கிறேன் என்று நம்மை நம்மை அறியாமலே சொல்ல வைக்கிறார்கள். அந்த இடத்தில் தான் மொத்தப் பிரியமும் வடிந்து ஏமாற்றமாயிருந்தது. அவர்கள் சொன்ன கோஷாலாவில் பத்து மாடுகளுக்கு மேலில்லை. பராமரிப்பதாகச் சொல்லும் விதவைகளும் யாருமில்லை. காலை ஆறு மணிக்கு வந்தால் பத்து நாற்பது பேரைப் பார்க்கலாமென்றார். திரும்பிக் காருக்கு வந்த பின் ஓட்டுனர் அதிகம் காசெதும் பிடுங்கலையே என்று கேட்டார். உண்மையாகவே தானம் செய்யும் மனதையும் கலைத்துப் போடுகிறோம் என்று தெரியாமலிருக்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் யாருக்கென்ன கவலை? அன்றைக்கு அவர் அவருடைய காரியத்தைச் சரியாச் செய்தார். நமக்குத்தான்...

அடுத்த நாள் திரும்ப ஜெய்ப்பூர், சென்னை, வீடு.

என்னிக்காவது பொழுது போகாத போது நினைத்துக் கொள்ள அனுபவங்களை சேர்த்திக் கொள்ள வேண்டுமென்பது என் எண்ணம். இப்படி எழுதிச் சேமிக்காதது பெரிதும் ஞாபகத்திலிருப்பதில்லை. அதனாலேயே இடையில் விட்டுப் போய் மறுபடியும் இந்த வேலை.





No comments: