Wednesday, March 21, 2007

me n my weirdness

மொதல்ல இந்த weirdness பற்றி எழுதணுமான்னு ஒரு கேள்வி இருந்தது... நான் யார்.. எனக்கு பிடிச்சது என்ன... பிடிக்காதது என்ன... என் கிறுக்குத்தனங்கள் என்ன... இதெல்லாம் ஒரு நெருங்கின வட்டத்திற்கு மட்டும் தெரிந்த விஷயமா இருக்கணும்னு என்ற சிந்தனை இருந்தது. அப்புறம், இதில என்ன இருக்கு? நான் நான் என்று பேசறது எல்லாமே என்னோட ப்ளஸ் மட்டுமேவா? இந்த கிறுக்குத்தனங்களும் தானே? அதனால எழுதிட்டேன்! இப்படி ஒரு ஞானோதயம் கொடுத்த அலெக்ஸ்க்கு நன்றி.

1. எதுவாவது என்னை ரொம்ப பாதிக்கும் போது அதிலிருந்து வெளியே வர நான் செய்யும் முயற்சிகள் அந்த சூழ்நிலைக்கு கொஞ்சமும் பொருந்தாதாயிருக்கும்... உதாரணமா, எல்லோரும் சாப்பாடு தூக்கம் தொலைத்து சோகம் சுமக்கும் சூழ்நிலையில் நான் வயிறு முட்ட சாப்பிட்டு சுகமா தூங்கிடுவேன்!

2. கன்னா பின்னா தன்னம்பிக்கை, அதைவிட அதிக கன்னா பின்னா சிந்தனைகள்!

3. ரொம்ப அமைதியா டிப்ளமேடிக்கா வெளிப்பார்வைக்கு இருக்கும் எனக்கு எப்பவாவது மறை கழண்டால் போச்சு... சிரித்து தள்ளிடுவேன்... அந்த நேரத்தில் 'சிரி' ன்னு சொன்ன கூட நான் ஸ்டாப் சிரிப்புதான்... ஆச்சரியமா யாராவது பார்க்க ஆரம்பித்தால் இன்னும் அதிகமாக!

4. எல்லோரும் துணையோட, குடும்பத்தோட போகணும்னு நினைக்கிற இடங்களுக்கு தனியே போக விருப்பம்... காபி டே, சினிமா தியேட்டர், கோவில் ஏன் தொலைதூரப் பயணங்கள் கூட... கடைசிக்கு மட்டும் வீட்டு அய்யா இன்னும் அனுமதி கொடுக்கத் தயங்குகிறார்!

5. எதாவது ஒன்று வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டு காத்துக் கொண்டேஏஏஏ இருந்து ஒரு கட்டத்தில் வேண்டாம் போ என்று முடிவு செய்த பின் மடியிலேயே வந்து விழுந்தாலும் 'நோ' தான்!

எனக்கு பிறகு யாரை அழைப்பது என்ற பெரிய குழப்பம் நீடித்ததால்... it is open to everybody who wish to continue...

Wednesday, March 07, 2007

கயிறு - மகளிர் தினத்திற்காக.

விபரம் தெரிந்த நாளாய்
உணர்ந்திருக்கும் கயிறு

கை கால் குரல் சிந்தனையென்று
நேரத்திற்கேற்ப நழுவி
இடம் மாறி இறுக்குமது

வெளிர் நிறத்தில் மெல்லியதொரு
நூலாய்க் கிடந்ததை
உரமேற்றி நிறமேற்றியதில்
அடர்ந்த சிகப்பில் இறுகி போனது
வாலிப நாட்களில்

தாயோடு படுக்கை பகிர்ந்தவன்
என்னோடு தாய்மடி பகிர்ந்தவன்
படுக்கை பகிர்பவன்
நண்பன் அவன் இவன்
எல்லோருக்குமுண்டு
ஒரு ஆண்கயிறு

அதிக தடிமனில்லாததாய்
அடர்ந்த நிறமேறாததாய்
இழுத்த இழுப்பிற்கெல்லாம்
இசைந்து கொடுப்பதாய்

உடலும் மனமும் தளர்ந்த
முதுகிழவியின் கயிற்றில்
உரமோ நிறமோ ஏற்றுவாரில்லை

பட்டத்தின் கயிறாய்
பாதுகாப்புக்கென்றாய்
நீளமாய் நூறு கதைகள்
திரும்பத் திரும்பச் சொன்னதில்
பறவைகள் பட்டங்களாகவே
வரித்துக் கொண்டன

நீள அகலமாய் பரந்த வானமும்
தேடி தெரிய சிறகுகளிருக்கும் பிரஞ்சையற்று
கயிறு கட்டிய கால்களோடு
பத்திரமான(!) வானத்தில்

கயிற்றில் நுனி யாரிடமென்றறியாமல்
எப்போது வேண்டுமானாலும்
முடக்க படலாமென்ற எச்சரிக்கையுடனும்...

அறுக்க முடியாத கயிறொன்றில்லை
பறக்க தொடங்கினால் எல்லையுமில்லை...