Wednesday, March 07, 2007

கயிறு - மகளிர் தினத்திற்காக.

விபரம் தெரிந்த நாளாய்
உணர்ந்திருக்கும் கயிறு

கை கால் குரல் சிந்தனையென்று
நேரத்திற்கேற்ப நழுவி
இடம் மாறி இறுக்குமது

வெளிர் நிறத்தில் மெல்லியதொரு
நூலாய்க் கிடந்ததை
உரமேற்றி நிறமேற்றியதில்
அடர்ந்த சிகப்பில் இறுகி போனது
வாலிப நாட்களில்

தாயோடு படுக்கை பகிர்ந்தவன்
என்னோடு தாய்மடி பகிர்ந்தவன்
படுக்கை பகிர்பவன்
நண்பன் அவன் இவன்
எல்லோருக்குமுண்டு
ஒரு ஆண்கயிறு

அதிக தடிமனில்லாததாய்
அடர்ந்த நிறமேறாததாய்
இழுத்த இழுப்பிற்கெல்லாம்
இசைந்து கொடுப்பதாய்

உடலும் மனமும் தளர்ந்த
முதுகிழவியின் கயிற்றில்
உரமோ நிறமோ ஏற்றுவாரில்லை

பட்டத்தின் கயிறாய்
பாதுகாப்புக்கென்றாய்
நீளமாய் நூறு கதைகள்
திரும்பத் திரும்பச் சொன்னதில்
பறவைகள் பட்டங்களாகவே
வரித்துக் கொண்டன

நீள அகலமாய் பரந்த வானமும்
தேடி தெரிய சிறகுகளிருக்கும் பிரஞ்சையற்று
கயிறு கட்டிய கால்களோடு
பத்திரமான(!) வானத்தில்

கயிற்றில் நுனி யாரிடமென்றறியாமல்
எப்போது வேண்டுமானாலும்
முடக்க படலாமென்ற எச்சரிக்கையுடனும்...

அறுக்க முடியாத கயிறொன்றில்லை
பறக்க தொடங்கினால் எல்லையுமில்லை...

27 comments:

ஜெஸிலா said...

//பறக்க தொடங்கினால் எல்லையுமில்லை...// ம்ஹும் இத ஒரு ஆண் எழுதியிருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும். யாரு புரிஞ்சுக்குறா?

icarus prakash said...

அப்படியே அள்ளிக்கிச்சு...

Nirmala said...

தெரியலை ஜெஸி... யார் எழுதறாங்கங்கறது அவ்வளவு முக்கியமா?

நன்றி ப்ரகாஷ். :-)

Premalatha said...

நன்றி பிரகாஷ், கில்லில போட்டதுக்கு.

//கயிற்றில் நுனி யாரிடமென்றறியாமல்
எப்போது வேண்டுமானாலும்
முடக்க படலாமென்ற எச்சரிக்கையுடனும்…//

அம்மா....

//அறுக்க முடியாத கயிறொன்றில்லை
பறக்க தொடங்கினால் எல்லையுமில்லை…//

:-)

சிறில் அலெக்ஸ் said...

வாவ்.. ரெம்ப நல்லயிருக்குங்க.

செல்வநாயகி said...

good one nirmala.

துளசி கோபால் said...

இறுக்கும் கயிறை அவிழ்க்கும் கைகளுக்குத்தான் இன்றைய தினக் கொண்டாட்டம்.

முத்துலெட்சுமி said...

\\பறவைகள் பட்டங்களாகவே
வரித்துக் கொண்டன//
சரிதான் நிர்மாலா ...அறுக்க விருப்பமில்லாமல் இருப்பதன் காரணம் இணையாக சண்டை போட்டால் எப்படி ? என்று தான்.இணைந்து இருக்க முயற்சியை எடுப்பது எப்போதும் பெண்களாகவே .எல்லையற்ற வெளியை விட அன்பு வெளியை முக்கியமென்று கருதி அவர்கள் கயிற்று பட்டமாகவே இருக்கிறாள். ஆனால் விளையாட்டு காட்டாமல் பத்திரமாயேனும் வைத்திருக்கட்டுமே கொஞ்சம்.

சுரேஷ் கண்ணன் said...

நல்லாத்தானே இருந்தீங்க? என்ன ஆச்சு தீடீர்னு? :-)

Nirmala said...

பிரேமலதா, அலெக்ஸ், செல்வா, துளசி... எல்லாருக்கும் நன்றி.

லட்சுமி... அனுபவம்ங்கற ஒரு பெரிய விஷயம்.. இந்த பெண், பாதுகாப்பு இப்படி கட்டாய காரணத்தால இழப்பது... ராத்திரி நேரத்தில நிலாவையோ நட்சத்திரத்தையோ பார்த்துட்டு எங்கேயாவது உட்கார்ந்து சும்மா பேசிக்கிட்டு இருக்கற ஒரு சுகம்... அவ்வளவு ஏன் நம்ம வீட்டு மொட்டை மாடியில கூட, உட்கார வேண்டாமேன்னு சொல்லும் போது... நல்லதோ கெட்டதோ நாமே தெரிஞ்சுக்கறது அவசியமில்லையா? யாராச்சும் பாதுகாத்துட்டே எவ்வளவு நாளைக்கு? கீழே விழலாம்... அடிபட்டுக்கலாம்... தெரிஞ்சுக்கலாம்... இல்லையா? கவிதையை விட இது நீளமாயிடுச்சு! பதிலா சொல்லலை... just sharing of thoughts!

சுரேஷ்... ஹிஹி... கண்டுக்காதீங்க...!

socrates said...

nalla kavithai. oru azhakana muran - "Kayiru - magalir thinanthirga". Neenga oru kayiru thayarchitengale nirmala. - Selvam, chennai

பத்மா அர்விந்த் said...

யாராச்சும் பாதுகாத்துட்டே எவ்வளவு நாளைக்கு? கீழே விழலாம்... அடிபட்டுக்கலாம்... தெரிஞ்சுக்கலாம்... ///இது சரி. ஆனால் அடிபட்டா வலிக்குமோங்கிற பயத்தில பலபேர் அப்படியே இருக்காங்க. இன்னும் சில பேர் இப்படி இருகிற சுகத்துக்காகவே விட்டு வர, முயற்சிகூட பண்றதில்லை.

Mariamathy said...

Good one Nirmala

Nirmala said...

நன்றி செல்வம்.... அப்படி யோசிக்கவேயில்லை! :-(

ஆமாம் பத்மா... இந்த பயமுறுத்தல்கள் யோசிக்கவே விடாது!

நன்றி மரியமதி...

சோமி said...

/தாயோடு படுக்கை பகிர்ந்தவன்
என்னோடு தாய்மடி பகிர்ந்தவன்
படுக்கை பகிர்பவன்
நண்பன் அவன் இவன்
எல்லோருக்குமுண்டு
ஒரு ஆண்கயிறு/
........ம்
/அறுக்க முடியாத கயிறொன்றில்லை
பறக்க தொடங்கினால் எல்லையுமில்லை/

ம்.....பறக்கத் தொடங்கினால் இறக்கை இருப்பது எல்லோருக்கும் புரியும்.

Anonymous said...

அறுத்து விட்டால்
பறப்பதற்கு
எல்லையில்லையென்றான பின்னும்
பறக்கத் தெரியாத
கோழி சொன்னதாம்
கழுகைத் தாண்டி மேலே பறப்பேனென்று

யோவ் பிரகாசரு

எந்தக் கயிறுன்னு தெரியாதுன்னு வேற சொல்லுதீரு? அதனாலதான் அள்ளிக்கிசாக்கும்??

எப்படி இதை மொதல்லேயே பார்க்காம போனேன். இன்னொரு கயிறு எழுத வேண்டியதுதான்

சாத்தான்குளத்தான்

Nirmala said...

சாத்தான்குளத்தாரே(யோவ் சாத்தான்குளத்தாரேன்னு சொல்லனும்னு தோணுச்சு! ஹிஹி)... யாரைக் கோழின்னு சொல்லுதீரு?!

ஆமா, உம்ம கயிற எங்க போடப் போகுதீக?!

சோமி... ம்ம்ம்...!

திரு said...

நிர்மலா,

கவிதை முழுவதும் அருமை!

//அறுக்க முடியாத கயிறொன்றில்லை
பறக்க தொடங்கினால் எல்லையுமில்லை...//

நம்பிக்கையான வரிகள்!

Nirmala said...

நன்றி திரு. ஒரு விஷயம் சொல்லட்டுமா? ஒரு கோபம்... ஒரு சலிப்பு... இப்படியாக எழுதி வைத்திருந்தது... அதை எழுதியிருந்த சமயத்தில் அப்படித்தான் தோன்றியிருந்தது.. அன்றைக்கு காலையில் அப்படி முடிக்கப் பிடிக்காமல் சேர்த்தவை தான் அந்த கடைசி வரிகள்!

செல்வநாயகி said...

நிர்மலா,
அன்று அவசரத்தில் படித்தவுடன் ஒரு ஒற்றைவரி எழுதிப்போனேன். உங்களின் கவிதைகளுக்கு நான் என்றும் ரசிகை. எழுதிக்கொண்டிருங்கள் அடிக்கடி.

மதுமிதாவையும் காணோம் பலநாட்களாய் :(( பிடித்துக்கொண்டுவாருங்கள் அவரையும்:))

Nirmala said...

ஹே செல்வா.. அந்த ஒரு வரி போதாதா?!

மதுவுக்கு ஒரு போன் அடிக்கிறேன்!

ramachandranusha said...

நிர்மலா, எல்லாருமே கயிற்றுடன் பிணைக்கப்பட்டவர்கள்தான். (சரிதானே குருஜி?) என்ன ஒன்று நீளம் கொஞ்சம் அதிக, குறைவாய் இருக்கும்.ஆனால் கயிறே இல்லாமல் இருந்தால் தொலைந்துப் போவார்களே :-)
(ஏதோ கவிதையை எனக்கு புரிந்தவிதத்தில் பொருள் கொண்டு இந்த மறுமொழி)

Anonymous said...

அன்பின் சீடி,

நீங்க ஒரு ஆளுதான் உண்மையான பெண்ணியவாதி :-) மத்தவங்க எல்லாம் ஷிவாங்கி க்ரூப்

மகளிர் தினத்துக்காக மட்டும் கயிறு எழுதுறவங்க பெண்கள். மகளிருக்காகவே கயிறு எழுதுபவர்க்ள் ஆண்கள். அதுதான் ஆண்களின் உயர்குணம்

மகளிருக்கான கயிறு படிங்க :-)
http://asifmeeran.blogspot.com
அப்புறமாவது திருந்துங்க :-)

சாத்தான்குளத்தான்

Nirmala said...

உஷா... புரியாத மாதிரி கவிதை எழுத ஆரம்பிச்சுட்டேனா?!

கவுஜ மட கண்மணிகளுக்கு ஒரு பெரிய கும்பிடு! கிழிச்சு தோரணமாக்கறதா முடிவு பண்ணிட்டாப்ல?! :-))))

ramachandranusha said...

இல்லை நிர்மலா, சீரியசாகத்தான் எழுதினேன். ஆண் என்ன பெண் என்ன எல்லாரும் கட்டப்பட்டவர்களே என்று சொல்ல வந்தேன். அதுப்பற்றி கருத்து சொல்லுங்க. படிக்கிற மக்களுக்கும் சேர்த்து இந்த கோரிக்கை. இங்குட்டு சாத்தான் குளத்தார மட்டும ஆட்டத்துல சேர்த்துக்காதீங்க. இந்த அழகுல அவரூ எழுதிய அபத்த கதைக்கு விளம்பரம் வேறு!

Nirmala said...

நிச்சயமா உஷா... ஆணுக்கும் கயிறு இருக்கறதை சொல்லியிருக்கேனே...

நமக்கான கயிறு ஒன்று நாமே போட்டுக் கொள்கிறோம்... அதை நம் புத்தி சொல்லும் வழியில் இறுக்கலாம்... விலக்கலாம்... இல்லையா? நம்முடைய கயிற்றின் நுனி நம் கையில்...

பத்மா அர்விந்த் said...

உஷா: மிக சரி. எல்லாருக்குமே கடமை என்னும் கயிறு (கால் விலங்கு) உண்டு. சில விருப்பத்துடன் சில சுமையாக.