Sunday, May 12, 2013

Postsecret.com

ரகசியங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் - அதிர்ச்சியூட்டுபவையாக, சிறுபிள்ளைத்தனமாக, உணர்வுப்பூர்வமாக... என்று தன் வலைத்தளத்தை அறிமுகப்ப்டுத்துகையில் ப்ராங்க் சொல்கிறார். 2004 ம் ஆண்டு நவம்பர் மாதம் 3000 போஸ்ட் கார்டுகளை வாஷிங்டன் நகர தெருக்களில் விநியோகம் செய்த போது அது இவ்வளவு தூரம் விரிந்து பரவும் என்று யூகிக்கவில்லை என்கிறார்.

ஒரு பக்கம் காலியாகவும் மற்ற பக்கத்தில் அவருடைய விலாசமும் எளிய விதிமுறைகளோடும் கொடுத்த அட்டைகள். இன்றைக்கு வெவ்வேறு வடிவம் பெற்று உலகின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் வந்து சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத அரை மில்லியன் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளும் வலைத்தளம். 

ரகசியங்களை வாசிக்கும் போது முகமும் பெயருமற்ற அத்தனை மனிதர்களோடும் வெவ்வேறான உணர்ச்சிகளால் தொடர்ப்பு கொள்ள முடிவது நிஜம். மெல்லிய முறுவல், சிறு அதிர்வு, சோகம் எதற்கும் குறைவில்லை. தன்னை அழுத்தி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ரகசியங்களில் இருந்து விடுபடத்தான் இப்படி ஒன்றை ஆரம்பித்ததாக சொல்லும் இவருக்கு அரை மில்லியன் அனுபவங்கள்!

கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் மனிதர்களை அறிந்து கொள்ள முடிவதில்லை, எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் யாரோவின் ரகசியங்களை அறிய முடியவது... நல்லதா கெட்டதா?!


 ஜன்னல் பகுதி - குங்குமம் தோழி, மார்ச் 2013 இதழுக்காக எழுதியது.

ஒரு சூத்திரனின் கதை - ஏ.என்.சட்டநாதன்.
பதிப்பாசிரியர்: உத்தரா நடராஜன். தமிழில்: கே. முரளிதரன், ஆ. திருநீலகண்டன்.

வாழ்க்கை குறிப்புகள் என்பது ஒரு தனி மனிதனின் வாழ்க்கையைத் தாண்டி அந்த காலகட்டத்தை பிரதிபலிப்பதாலே அது குறிப்பிடத்தக்க ஒன்றாகி விடுகின்றது. நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கும், கொண்டிருந்த அத்தைகள், பாட்டிகள் என்ற ஒவ்வொரு சாதாரண மனிதர்களின் வாழ்க்கைகள் எல்லாமே ஒரு அனுபவம்.  முழுமையாக வெளிப்படாத, குடும்பத்தார்களின் நினைவில் மட்டுமே தங்கி மறந்து போன நீண்ட காவியங்கள். அதனாலேயே கைகளில் சிக்கும் இது போன்ற தடைகள் தாண்டி வந்தவர்களின் குறிப்புகள் நிச்சயம் ஒரு பொக்கிஷம்.
சட்டநாதன் அவர்களின் இந்த குறிப்பு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கோடு போட்ட நோட்டு புத்தகத்தில்,  ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, முழுமை பெறாத குறிப்புகள். கடும் பொருளாதார சிக்கல்களுக்கு நடுவில் ஒரு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து சிரமப்பட்டு பெற்ற கல்வியும் அது கொண்டு சென்ற தூரங்களும் ஆச்சர்யமூட்டுபவை. புத்தகத்தின் தலைப்பும் அட்டைப்படமும் கொடுக்கும் தூண்டுதலைக் கடந்து ஒரு வாழ்க்கை குறிப்பாக வாசிக்க முடிந்தது.

தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக அவர் சமர்ப்பித்த அறிக்கை அவருடைய பொது வாழ்வின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு.

புத்தகத்தின் சில வரிகள்:

'அந்தப் பெரிய வீட்டின் ஒட்டு மொத்தக் குரல் அவள் தான். இளமைக் காலத்தில் இன்னும் அழகாக இருந்திருக்க வேண்டும் என்று நான் அடிக்கடி நினைப்பேன். ஆனால் ஆழமான மனவருத்தங்களை, நம்பிக்கைத் துரோகங்களை சுமக்கும் ஒரு பெண்ணாகவே அவள் என் நினைவுகளில் இருக்கிறாள்.'

'அவ்வப்போது எனக்கு சோற்றுடன் கொஞ்சம் மோர் ஊற்றுவார்கள். என் தகப்பனாரோ பாட்டியோ சோற்றில் மோர் ஊற்றிச் சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை.'
'உதவி கேட்டு அடுத்தவர் வீட்டு வாசலில் நின்றவர்களால் தான் நான் அடைந்த அவமானத்தையும் விரக்தியையும் உணர முடியும். யாராலும் கவனிக்கப் படாமல் பல மணி நேரம் நிற்க வேண்டும். காலும் மனமும் வலிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் 'நான் திரும்பக் கூப்பிடுகிறேன்' என்றோ 'இன்னொரு சகோதரனிடம் சென்று கேள்' என்றோ சொல்லப்படும்.'

'இறுதியாண்டின் மத்தியில் என் நீளக் குடுமியை வெட்டி, கிராப் வைத்துக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்தேன். மாணவர்கள் மேஜையைத் தட்டியும் கூச்சலிட்டும் வரவேற்றார்கள்.'

'நான் நன்றாக படித்திருப்பதால் நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாக அவர் சொன்னார். ஆனர்ஸ் முதல் வகுப்பு ஒன்றும் பிராமணர்களின் தனி உரிமை இல்லை என்று பதில் சொன்னேன்.'

'இவர்களில் பலர் பிரம்மஞானவாதிகள். பொதுவாக சாதி பாகுபாடு பார்க்காதவர்கள். இந்த சந்திப்பில் நடந்த விஷயங்கள் அனைத்தும் காது, மூக்கு சேர்த்து கல்லூரி விடுதிகளிலும் நகரிலிருக்கும் உணவு விடுதிகளிலும் பரப்பப்பட்டன. எனக்கு ஒரு கதாநாயகனுக்குரிய அந்தஸ்து கிடைத்தது.'

முழுமை பெறாத இந்த குறிப்புகளோடு சென்னை பல்கலைக்கழகத்தில் 1981ல் பெரியார் ஈ.வெ.ராமசாமி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவுகளை இணைத்ததன் மூலம் வேறுவிதமான ஒரு முழுமையை அளித்திருக்கிறார், பதிப்பாசிரியரும் சட்டநாதனின் பேத்தியுமான உத்தரா நடராஜன்.


ஜன்னல் பகுதி - குங்குமம் தோழி, மார்ச் 2013 இதழுக்காக எழுதியது.

டொலெடோ, ஸ்பெயின்.நவீனமான மாட்ரிட் நகரிலிருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவிலில் உள்ளது டொலெடோ என்ற பழமையான நகரம். குறைந்த ஜனத்தொகை, மிக‌ குறுகலான தெருக்கள். வாகனம் எதிரில் வரும் போது ஒற்றை வரிசையில் சுவரோடு சாய்ந்து நின்று வழிவிடச் சொல்லி முதலிலேயே அறிவுறுத்தப்பட்டோம். அதே போல் நிற்கவும் வேண்டியிருந்தது! மடிந்து மடிந்து செல்லும் இந்த பாதைகளில் தொலைந்து போவதும் எளிது. திரும்பின பக்கமெல்லாம் உயரமான கல் கட்டிடங்கள், தேவாலயங்கள். டொலெடோ ஒரு மத நல்லிணக்கமான பகுதியாக இருந்திருக்கிறது. கலைகளில் சிறந்து செழிப்பான நகரமாய்.

அங்கிருந்த ஒரு தேவாலயத்தில் கேள்விப்பட்ட குறிப்பு - அறுபது வயதான ஆண்மையில்லாத மன்னருடைய இளம் மனைவி கர்ப்பமுற்றதும் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் இளம் மனைவி பக்கமும் மன்னரது சகோதரி பக்கமுமாக ரெண்டு பட, கடைசியில் ராஜ்ஜியம் சகோதரி கையில் போய் சேர்ந்தது. சகோத‌ரியின் குறிப்பிடத்தக்க காரியங்களில் ஒன்று கொலம்பஸூக்கு பொருளுதவி அளித்து கடல் பயணம் மேற்கொள்ள உதவியது. அவரது பயணத்தில் அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயரத் தொடங்கினர். அப்படிப் பெயர்ந்த‌ குடும்பங்கள் டொலெடோ நக‌ரின் அவர்களது வீட்டு சாவியையும் கொண்டு சென்றிருந்தனர். பிற்காலத்தில் பொருளீட்டிக் கொண்டு திரும்பி விடும் எண்ணத்திலாக இருந்திருக்கலாம். சாவிகளைக் கண்டெடுத்த மூன்றாம் நான்காம் தலைமுறை மக்கள் வீடுகளை தேடி வந்ததாக சொல்லும் கதைகளை கேட்கும் போது அதன் சாத்தியங்கள் மறந்து ஒரு கற்பனை விரிந்தது.

ஜன்னல் பகுதி - குங்குமம் தோழி, மார்ச் 2013 இதழுக்காக எழுதியது.

Perfume - the story of a murderer

கடுமையான தண்டனை வழங்க மக்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படும் ஒரு குற்றவாளியின் கதையைச் சொல்லத் தொடங்கும் குரலோடு பயணிக்கிறோம். பாரிஸ் நகரின் மீன் மார்க்கெட்டில் ஒரு மீன்காரி கழிவுகளுக்கு நடுவில் பெற்றுப் போடும் குழந்தை (Jean-Baptiste Grenouille) க்ருனலே பிறந்ததுமே தன்னைச் சுற்றியுள்ள வாசனைகளை ஒரு வேட்கையோடு உள் வாங்கத் தொடங்குகிறது. பிள்ளையைக் கொல்லப் பார்த்தாள் என்று பழியோடு அம்மா தூக்கு மேடை ஏற அனாதை ஆசிரமம் போய் சேர்கிறான்.  வளரும் போது அவன் பேசும் மொழி அவனுக்கு தெரிந்த வாசனைகளை குறிப்பிட போதுமான வார்த்தைகளை கொண்டில்லாததாக உணர்கிறான். ஒவ்வொரு வாசனையையும் துல்லியமாக பிரித்தறியும் அதி அற்புதமான நாசியோடு பிறந்திருப்பதையும் அறிகிறான்.

பதிமூன்று வயதானதும் ஆசிரமத்திலிருந்து வெளியே அனுப்பப்படும் க்ருனலே தோல் பதனிடும் தொழிற்சாலை சேர்கிறான். கடுமையான வேலைகளில் இன்னும் சில வருடங்கள் கழிகின்றது. முதல் முதலாக நகரத்துக்குள் செல்ல வாய்ப்பு கிடைக்கும் ஒரு நாளில் ஒரு அழகான பெண்ணின் வாசனையைத் தொடர்ந்து பின் செல்லும் அவன் கையால் தவறுதலாக அந்தப் பெண் இறந்து போகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் நகரின் குறிப்பிட்ட வாசனை தயாரிப்பவருக்கு தோல் கொடுக்க போகும் போது அவர் கண்டுபிடிக்க சிரமப்பட்ட ஒரு வாசனை தைலத்தை அவன் நொடிகளில் தயாரித்துக் கொடுக்கிறான். அவனுடைய இடம் மாறுகிறது. அவனால் புதுப்புது தைலம் தயாரிக்கப் பட அதற்கு பதிலாக எந்த ஒரு பொருளின் வாசனையையும் கைப்பற்றும் வித்தையைக் கேட்கிறான்.   அவரிடமிருந்து கடிதம் பெற்று தொலைதூர நகருக்கு பயணிக்கிறான். அங்கே கற்ற வித்தையை வைத்து பெண்களின் உடல் வாசனையை பிரித்தெடுக்க தொடங்குகிறான், ஒவ்வொரு பெண்ணையும் கொன்று.  அவனால் உருவாக்கப்படும் உலகின் மிகச் சிறந்த வாசனை தைலமும் அது நிகழ்த்தும் மாயமுமாய் கதை முடிகிறது.
திரைப்படம் கூடுதல் சிறப்பாவது அதன் அற்புதமான ஒளியாக்கத்தினால். வெறுப்பூட்டாத கொலைகாரன்.

 ஜன்னல் - குங்குமம் தோழி, மார்ச் 2013 இதழுக்காக எழுதியது.