நவீனமான மாட்ரிட் நகரிலிருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவிலில் உள்ளது டொலெடோ என்ற பழமையான நகரம். குறைந்த ஜனத்தொகை, மிக குறுகலான தெருக்கள். வாகனம் எதிரில் வரும் போது ஒற்றை வரிசையில் சுவரோடு சாய்ந்து நின்று வழிவிடச் சொல்லி முதலிலேயே அறிவுறுத்தப்பட்டோம். அதே போல் நிற்கவும் வேண்டியிருந்தது! மடிந்து மடிந்து செல்லும் இந்த பாதைகளில் தொலைந்து போவதும் எளிது. திரும்பின பக்கமெல்லாம் உயரமான கல் கட்டிடங்கள், தேவாலயங்கள். டொலெடோ ஒரு மத நல்லிணக்கமான பகுதியாக இருந்திருக்கிறது. கலைகளில் சிறந்து செழிப்பான நகரமாய்.
அங்கிருந்த ஒரு தேவாலயத்தில் கேள்விப்பட்ட குறிப்பு - அறுபது வயதான ஆண்மையில்லாத மன்னருடைய இளம் மனைவி கர்ப்பமுற்றதும் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் இளம் மனைவி பக்கமும் மன்னரது சகோதரி பக்கமுமாக ரெண்டு பட, கடைசியில் ராஜ்ஜியம் சகோதரி கையில் போய் சேர்ந்தது. சகோதரியின் குறிப்பிடத்தக்க காரியங்களில் ஒன்று கொலம்பஸூக்கு பொருளுதவி அளித்து கடல் பயணம் மேற்கொள்ள உதவியது. அவரது பயணத்தில் அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயரத் தொடங்கினர். அப்படிப் பெயர்ந்த குடும்பங்கள் டொலெடோ நகரின் அவர்களது வீட்டு சாவியையும் கொண்டு சென்றிருந்தனர். பிற்காலத்தில் பொருளீட்டிக் கொண்டு திரும்பி விடும் எண்ணத்திலாக இருந்திருக்கலாம். சாவிகளைக் கண்டெடுத்த மூன்றாம் நான்காம் தலைமுறை மக்கள் வீடுகளை தேடி வந்ததாக சொல்லும் கதைகளை கேட்கும் போது அதன் சாத்தியங்கள் மறந்து ஒரு கற்பனை விரிந்தது.
ஜன்னல் பகுதி - குங்குமம் தோழி, மார்ச் 2013 இதழுக்காக எழுதியது.
No comments:
Post a Comment