Thursday, February 24, 2005

நேற்றைய மாலையும்... அதே உஸ்தாதிற்கு சமர்ப்பணமாக...

இன்றைய நிகழ்ச்சியும் மூன்று பாகங்களாக. முதலில் உஸ்தாத் ரஸா அலி கானின் (Raza Ali Khan) வாய்ப்பாட்டு. தபலா நேற்று தனி கச்சேரி செய்த ஆரிப் கான். இன்றைக்கு ஆரிப் கானை மேடையில் பார்த்த கூட்டம் ஒரு வாஞ்சையோடு சந்தோஷப் பட்டது.

நேற்று சொல்லாமல் விட்டு போனது... ஆரிப் கானிற்கு பக்க வாத்தியமாக வந்த சாரங்கி வாத்தியத்தைப் பற்றி. கச்சேரி தொடங்கியதே அந்த சாரங்கியின் இசையில் தான். அமைதியான அந்த அரங்கிலே முதல் இரண்டு நிமிஷம் சாரங்கியின் ஓசை மட்டும். ரொம்ப ஆழமா, ரொம்ப சோகமா... ஆயிரம் உளைச்சல்களோடு வந்திருக்கும் எல்லோருடைய மனசையும் சுத்தமாக துடைத்து சங்கீதம் கேட்க தயார் செய்வது போல. இன்னும் கொஞ்ச நேரம் கூட வாசித்திருந்தால் நிச்சயம் அழ வைத்திருக்கும்.

இந்த முதல் கச்சேரி எனக்கு அவ்வளவாக பிடிபடவில்லை. ஒன்றிரண்டு இடங்களில் தானாக கண்ணை மூட வைத்ததைத் தவிர.

பதினைந்து நிமிட இடைவேளையில் அடுத்த நிகழ்ச்சி. உஸ்தாத் ரெய்ஸ் கானின் (Rais Khan) சிதார். தபலா, நேற்று ஆரிப் கானை 'போதும் நிறுத்திக்கோ' என்று சொல்லிய அப்பா (பெயர் நினைவில்லை!). உஸ்தாத் கரமத்துல்லா கானின் மகன். கொல்கத்தாவாசி போல... அவரைக் கண்டதும் கூட்டத்தில் ஒரு சந்தோஷ சப்தம். இன்னொரு சிதாருடன் ரெய்ஸ் கானின் மகன்.

முதல் பத்து நிமிடம் மாறி மாறி சுருதி சேர்ப்பதில். சுருதி சேர்க்கும் அவர் முயற்சிகள் எல்லாம் ஏதோ சின்ன குழந்தையை தாஜா செய்வது போல. வசமானதும் அந்த சிதார் இசை சட்டென்று இளம் பெண்ணாகிவிட்டது. புராண படங்களில் பார்த்த ரம்பா, ஊர்வசி போல... மார் கச்சையும் மெல்லிய அரையாடையுமாய்... கொஞ்சம் குழைந்து வளைந்து... அவர் வா வா என்று கூப்பிட இதோ வந்தேன் என்று சில நேரம் நெருங்கி வந்து, செல்லக் கோபம் கொண்டு விலகிப் போய்... மாறி மாறி இரண்டு சிதார்களிலும் அவளின் நர்த்தனம். ஆரம்பத்தில் அப்பாவின் சிதாரில் இளம் மங்கையாகவும், மகனுடைய சிதாரில் கொஞ்சம் வயது கூடிய பெண்ணாக ஆட சிரமப்படுவது போல தெரிந்த அவள்... ஒரு கட்டத்தில் அப்பாவே 'எனக்கு மகனளவு வேகம் இல்லை' என்று கொஞ்சம் ஒதுங்க... முழு வேகத்தோடு மேடையை ஆக்ரமித்துக் கொண்டாள். அவளின் அசைவுகளும் குழைவும் செய்ததெல்லாம் எந்த அடிப்படை அறிவும் இல்லாத என் கண்ணில் இடையிடையில் துளி நீராய் நிறைத்தது மட்டுமே.

பார்த்துக் கொண்டே இருக்க அவள் எப்போது ஆனந்த நடனமாடும் சக்தியானாள் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் 'அய்யோ போதும் இதோட நிறுத்திக்கோங்களேன்' என்று கூச்சல் போட வேண்டும் போலிருந்தது. காதும் மனசும் நிறைந்து வழிவது என்று இதற்கு முன் புத்தகத்தில் வாசித்ததெல்லாம் என்ன என்று காட்டியது. பாதியாய் மடங்கி மேடையில் அவர்கள் சபைக்கு வணக்கம் சொல்லும் போது கை தட்டக் கூட தோணவில்லை. இறுக்கிக் கட்டிக் கொண்டிருந்த கைகளை விலக்கினால் நான் உதிர்ந்து போய்விடுவேனோ என்று ஒரு பிரமை.

அடுத்தது பண்டிட் ஜஸ்ராஜின் (Pandit Jasraj) வாய்ப்பாட்டு. அவர் மேடைக்கு வருவதற்கு முன்பே, ப்ரொதிமாவின் புத்தகம் வாசித்த வகையில் அவரை எனக்குத் தெரியுமாக்கும் என்று உள்ளுக்குள்ளே ஒரு நினைப்பு. அதிகம் உயரமென்று சொல்ல முடியாது. விசிறி மடிப்பில், கீழேயிருந்து மேலே வர வர நீளம் குறைந்து அழகாக ஒரு வேஷ்டிக் கட்டு. மேலே கையில்லாத மெரூன் நிறத்தில் பட்டு கோட், முழுதும் நரைத்து காதோரம் மட்டும் சிலும்பி நிற்கும் கேசம், கழுத்து நிறைய வரிசையாக சங்கிலி... மேடை ஏற கால் உயர்த்தியதில் வேஷ்டி விலக... சிவப்பு ஓடிய ஒரு பொன்னிறம், கனிந்த பழம் போல.

அவரை இவ்வளவு ரசித்த எனக்கு கச்சேரியை ஏனோ ரசிக்க முடியவில்லை. சிதார் கேட்டதே போதும் என்றாகி விட்டிருந்தது. அந்த மயக்கத்திலிருந்து முழுதாக வெளியே வந்து இன்னொன்றில் இழைய எனக்குப் பயிற்சியேதுமில்லை. அதனால் முதல் பாட்டோடு கிளம்பிவிட்டேன்.

இந்த இரண்டு நாட்களில் கேட்டது - உஸ்தாத் கரமத்துல்லா கான் ·பருக்காபாத் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். முப்பத்திரண்டு தலைமுறைகளாக, தொள்ளாயிரம் வருடங்களாக தபலா வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்!!!

வெளியே வரும் தோண்றியது... முதல் காதல் போல இந்த முதல் கச்சேரியும்... கொஞ்சம் ஸ்பெஷல்.

Wednesday, February 23, 2005

கல் கி ஷாம்... ஏக் உஸ்தாத் கே நாம்

எப்படியும் பதினைந்து வருஷமாவது இருக்கும். தூர்தர்ஷனில் வந்து கொண்டிருந்த தொடர் அது. சாதனா. அதில் தான் ஹரி பிரசாத் சௌரஸ்யா, ரவிஷங்கர், ஷிவ் குமார் சர்மா... இப்படி வாரம் ஒருவராக. எனக்கு எல்லோரும் முதல் அறிமுகம். அதிகம் ஹிந்தி புரிந்திராத அந்த நாட்களில் ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போல அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தது தெளிவில்லாமல் நினைவில்.

அந்த பாதிப்பில் சில கேசட்கள் வாங்கியதும், தொடங்கிப் பத்து நிமிஷத்தில் நினைவு எங்கேயோ தப்பிப் போய் விடுவதுமாய்... சில வருஷங்களுக்கு முன்னால் சென்னையில் ஒரு கச்சேரிக்குப் போன போதும் அதே. முழு நீள கச்சேரியெல்லாம் நமக்கு ஆகாது என்று விட்டு விட்டதும். ஆனால் உள்ளுக்குள்ளே ஒரு உறுத்தல் இல்லாமலில்லை... 'இவ்வளவுதானா உன் ரசனை!' என்று.

சென்ற வாரம் பத்திரிகை அறிவிப்பு பார்த்ததும் இன்னொரு முறை முயற்சி பண்ணிப் பார்த்தாலென்ன என்று ஒரு யோசனை. உஸ்தாத் கரமத்துல்லா கான்(?!) என்னும் தபலா கலைஞக்காக Antiquity Festival of Fine Arts வழங்கியது. முதல் நாள் நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு கிடைக்காததால் அது கை நழுவிப் போனது.

இரண்டாம் நாளான நேற்று மூன்று பாகங்களாக. முதல் நிகழ்ச்சி உஸ்தாத் கரமத்துல்லா கான் பேரன் ஆரிப் கானின் தபலா. திரை விலகிய மேடையில் இருபது வயதுக்கு கொஞ்சம் கூடக்குறைய ஒரு இளைஞர். பளபளக்கும் ஒரு கறுப்பு குர்த்தா, நிறமேற்றிய கேசம். ஏதோ டிஸ்கோதேவிலிருந்து அவசர அவசரமாக ஆடை மாற்றி வந்தவரைப் போல. வணக்கம் சொல்லி, சின்னவனான நான் எதாவது தவறு செய்தால் பெரியவர்கள் மன்னிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தொடங்கிய போது பின்னாலிருந்து கேலி செய்து ஏதோ கமெண்ட். (இளம் வயது ஒரு மைனஸ் பாயிண்ட் ஆகப் போகும் நிறைய இடங்களில் இதுவும்!)

சங்கீத ஞானமே இல்லாமல் கச்சேரியை கேட்பதும் ஒரு அனுபவம் தான். என்ன ராகம் வாசிக்கிறார், எங்கே தப்பு செய்கிறார்... எந்த மண்டைக் குடைச்சலும் இல்லை. வெறும் ஓசையின் வித்தையை கவனிப்பது மட்டுமே. ஒரு மணி நேரம் அந்த விரல்களின் வேகம், அதில் அவர் எதிர்ப்பார்ப்பதைக் கொண்டு வர அவருடைய பிரயத்தனம், சோர்ந்து போகும் கைகளோடு போராட்டம், கடைசியில் சரியாக அமைந்து விட்ட சந்தோஷம்... இது தான் எனக்குப் புரிந்தது. மேடையின் பக்கவாட்டிலிருந்து அவருடைய தந்தை நிறுத்தச் சொல்லும் வரை நேரம் போனது வாசித்தவருக்கும் தெரியவில்லை. கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும். முடிக்கச் சொல்லிவிட்டாரே என்று கோபப்பட்ட ரசிகர்களின் சலிப்பு தான் அந்த இளம் கலைஞருக்கு பெரிய அங்கீகாரம்.

பதினைந்து நிமிட இடைவேளையில் இரண்டாவது கச்சேரி. பேகம் பர்வீன் சுல்தானா. இவரை 'சாதனா'வில் பார்த்தது போல ஒரு நினைவு. நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளரின் அறிமுகம், பர்வீன் சுல்தானாவின் ஒரு சிறு உரை, தான்புராவை சுருதி சேர்ப்பது, பிறகு அவர் வாசிக்கத் தோதாக அமர்ந்து, புடைவையெல்லாம் சரி செய்து... பாட ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் ஆனது. பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கொஞ்சம் சலிப்பும்.



(online The Telegraph பக்கங்களில் அவருடைய படம் கிடைக்கவில்லை. பத்திரிகை படம் என் செல்பேசி வழியாக)


பாட ஆரம்பிக்கும் வரைதான் இதெல்லாம். ஆரம்பித்ததும் அந்தக் குரல் அவ்வளவு பெரிய அரங்கத்தையும் ஆக்ரமித்துக் கொண்டது போல எனக்குத் தோண்றியது. லேசான ஹம்மிங்... கொஞ்சம் இழுக்கப் போனால் பிசிறு தட்டும் எனக்கு, அந்த குரலின் லெவல்... அசத்திப் போட்டது. கண்ணை மூடிக் கொண்டால் சில நேரம் அது குழந்தையாக காலைச் சுற்றி வந்தது. சில நேரம் மோகம் கொண்ட பெண்ணைப் போல வேகத்தோடு என்னைச் சுற்றிச் சுற்றி. சில நேரம் என் கையை பிடித்து தரதரன்னு எங்கேயோ மேலே இழுத்துக் கொண்டு போவது போல.

இந்த முறை அட்லீஸ்ட் தேறிவிட்டேன் என்று சொல்லலாம். அவ்வளவு நேரத்தில் ஒரு தரம் கூட எப்போ முடியும் என்று வாட்ச் பார்க்க வைக்கவில்லை. சமைக்காமல் வந்ததும், மகனுக்கு போன் பண்ணறேன்னு சொன்னதும் அப்பப்ப நினைவுக்கு வந்ததைத் தவிர.

மூன்றாவது நிகழ்ச்சி பிர்ஜு மகராஜ் மற்றும் சாஸ்வதி சென் வழங்கிய கதக் நடனம். அரங்கம் தயார் செய்யவே அரைமணி நேரம். அப்புறம் வழக்கம் போல மாறி மாறி உரை, வாத்தியக் கலைஞர்கள் கொஞ்சம் அவர்கள் திறமையைக் காண்பிக்க பிர்ஜு மகராஜ் மேடைக்கு வரும் போதே மணி ஒன்பதரை. சுமார் பத்து இன்ச் அளவுக்கு கால் சலங்கை. பாதத்திற்கு கொஞ்சம் மேலாக சின்னதாக தரையில் ஒரு ஒலிப்பெருக்கி. அதன் முன்னால் நின்று லேசாக அசைத்தாலே ஓசை அரங்கை நிறைத்து விட்டது போல ஒரு உணர்வு.

நிசப்தத்தின் ஓசையைக் கேளுங்கள் என்று சொல்லி சதங்கையிலேயே கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வந்து ஒரு கட்டத்தில் அது ஒரே சீராக மெல்லிதாக... கேட்கும் போது அது நிசப்தத்தை ஓசையில் சொல்வதாக! அதற்குப் பிறகு அலையோசையையும் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களையும் வெறும் காலசைவில் உணர்த்தியது வரை தான் பார்க்க முடிந்தது. நேரம் ஆகும் என்று தகவல் சொல்லக் கூட முடியாமல் அரங்கத்திற்குள் செல்பேசி சிக்னல் இல்லாததால் கிளம்ப வேண்டியதாகி விட்டது.

நிறைவு நாள் இன்றைக்கு. அதை நாளை.

(தொடரும்)

Wednesday, February 09, 2005

Black

அல்ஸைமரால் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு அவருடைய கண் தெரியாத, காது கேட்காத நாற்பது வயது மாணவி வார்த்தைகளையும் அதன் அர்த்தங்களையும் நினைவுக்குக் கொண்டு வரும் படம்.

நீட்டிய கைகள்... விரித்த விரல்களில் உலகத்தை உணர்ந்து கொள்ள முடியாத... அந்த இயலாமையெல்லாம் மூர்க்கமாய் வெளிப்படுத்தும் எட்டு வயது குழந்தை. கடைசி முயற்சியாக வரவழைக்கப்படும் ஆசிரியராக அமிதாப். முதல் நாளே ஆசிரியரை அப்பாவுக்கு பிடிக்காமல் போய் விட, அம்மா ரகசியமாக கொடுக்கும் இருபது நாள் கெடுவின் கடைசி நாளில் அந்தக் குழந்தை முதல் முறையாக வார்த்தைக்கும் அதன் அர்த்தத்திற்கும் இருக்கும் தொடர்பை புரிந்து கொள்கிறது. பாட்டே இல்லாத இந்த படத்திற்கு இடைவேளை கூட இல்லாமல் இருந்திருக்கலாம்.

தங்கையின் திருமணத்தின் போது உதட்டு முத்தம் தெரிந்து கொள்ளும் ராணி... அதை ஆசிரியர்கிட்டயே கேட்பதும்... அவளுக்காக அதையும் தந்து அவளிடமிருந்து பிரியும் அமிதாப்... ரொம்ப அழகு.

அமிதாப்பிற்கும் ராணிக்கும் குறைவில்லாமல் அந்தக் குழந்தையின் நடிப்பும். படம் பார்க்கும் போது அந்த வாழ்க்கை பயப்படுத்தத்தான் செய்கிறது. அமிதாப்பை படத்தில் மேஜிஷியன் என்று சொல்லும் ராணி முகர்ஜி... நிஜமான மேஜிஷியன் சஞ்சய் லீலா பன்சாலி தான், அங்கங்கே கொஞ்சம் சறுக்கிய போதும்.

நேற்று இரவு பனிரெண்டரை மணிக்கே இதை எழுத தோன்றிய அவசரத்தை நிறுத்து வைத்தது, அப்போது எழுதியிருந்தால் வெறும் உணர்ச்சிக் குவியலா இருந்திருக்கும் என்று தான். ஆனால் இப்போதும் அப்படியில்லாமல் எழுத முடியவில்லை. இந்தப் படத்தை ஒரு தரம் பார்த்தால் போறாது என்று ஏனோ ஒரு தோணல். நிச்சயமா இப்படியெல்லாம் ஒரு வாழ்கை வாழப் போறதில்லை, அட்லீஸ்ட் அந்த இரண்டு மணி நேரமாவது அதை அனுபவிக்க ஆசை, வேறொன்றுமில்லை.

படம் முடிந்து வெளியே வரும் போது இரண்டு பேர் பேசக் கேட்டது.

'படம் எப்படி?'

'No ....'

பதில் தெளிவில்லாததால் முதலாமவர் மறுபடியும் கேட்க, எல்லோரும் கவனிக்கிறார்கள் என்றோ என்னவோ இரண்டாமவர் சொன்னது,

'No comments'

எனக்கென்னவோ அவர் முதலில் சொன்னது No words என்று தான் தோன்றியது. என்னைக் கேட்டிருந்தால் அப்படித்தான் சொல்லியிருப்பேன்.

off the topic: 1. Black Friday பாட்டு இன்னும் கேட்கலை. 2. நேற்று மேக்ஸ் ம்யுல்லர் பவனில் குந்தர் கிராஸ் ஓவியங்கள் கொஞ்சம் பார்த்துட்டு வந்தேன்.

Monday, February 07, 2005

the memoirs of Protima Bedi



சென்ற முறை சென்னை சென்றிருந்த போது கண்ணில் பட்ட புத்தகம். கறுப்பு வெள்ளையில் அட்டை பூராவும் சிரிக்கும் ப்ரொதிமாவின் க்ளோசப் முகம்... பெரிய சிவப்புப் பொட்டுடன். அன்றைய வாங்கும் கோட்டா ஏற்கனவே முடிந்து விட்டிருந்தது. வாங்கிய லிஸ்டில் memoirs of a geisha ஏற்கனவே இருந்ததில் இதை அப்போதைக்கு விட்டு விட்டாலும் மிஸ் பண்ணியது உறுத்திக் கொண்டிருந்தது. (அதை இன்னும் படிக்கவில்லை என்பது வேறு விஷயம்!)

சமீபத்தில் கொல்கத்தா காலேஜ் தெருவில் பழைய புத்தகக் கடையில் மறுபடியும் கண்ணில் பட்ட போது யோசிக்க வேண்டியிருக்கவில்லை. விலை வேறு ரொம்ப குறைவாக. (இந்த புத்தகங்களையெல்லாம் யார் பேப்பர்காரருக்கு போடுகிறார்கள்? ஏன்?!) பின் அட்டையில் நீல நிற அங்கியும் மொட்டை அடித்து சற்றே முளைத்த முடியோடு ப்ரொதிமாவும். பக்கத்தில்

' I have broken every single rule that our society has so carefully constructed. I have known no barriers. I have done precisely what I bloody well felt like doing and never given a damn. I have flunted my youth, my sex, my intelligence, and I have dont it shamelessly. I have loved many, been loved by some...'

இதை வாசித்த பிறகு இந்த புத்தகத்தை படிக்க ஒரு வாகான தருணத்திற்கு காத்திருக்க வேண்டியதாகப் போயிற்று.

வாய்த்தது இந்த முறை சென்னை பயணத்தின் போது. முதல் வகுப்பின் நான்கு இருக்கையில் இரண்டு பேர் கடைசி வரை ஏறவேயில்லை. ஏறிய ஒருவரும் புத்தகமும் கையுமாக ஒரு வார்த்தை கூட பேசப்போகும் அறிகுறியில்லாத என்னைப் பார்த்து படுக்கையை விரித்தவர் தான். குறட்டையைத் தவிர வேறு சத்தமில்லை! ராத்திரி படுக்கப் போகுமுன் ஏனோ அடுத்த கேபினுக்கு மாறிக் கொண்டார்! எதிர்பாராமல் வாய்த்த இந்த தனிமை இந்த புத்தகத்தோடு இன்னும் ஒன்றிப் போக வசதியானது.

ப்ரொதிமாவால் தொகுக்கப் பட்டது. அவருடைய மகள் பூஜா பேடி இப்ராஹிம் முயற்சியால் வெளிவந்திருக்கிறது. சிக்கல்கள் நிறைந்த குழந்தைப் பருவம், பள்ளி வாழ்கை, வேகம் நிறைந்த வாலிப வயது , பேடியுடனான லிவ் இன் ரிலேஷன்ஷிப்... ஆரம்பமே நிறைய ஆச்சர்யங்களோடு.

தடுமாற்றங்கள் நிறைந்த... கவன ஈர்ப்புக்கு போராடும்... சலனங்களோடு இயல்பாக பயணிக்கும்... குழந்தைகளுக்கு அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் நிறைந்த அம்மாவாக... இருபத்தி ஆறு வயதில் ஒடிசி கற்றுக் கொள்ள ஆரம்பித்தது... நேசித்த ஆண்கள்... நேசிக்கப் பட்டது... தனி ஆளாய் நிருத்யாகிராம் அமைய போராடியது... மகனை இழந்தது... நாற்பத்து சொச்சம் வயதில் கூட யாருக்கோ காதலியாய் இருந்தது...

சென்னையில் இறங்கும் போது புத்தகம் முடிந்து விட்டது. ப்ரொதிமாவுடன் என் பயணமும். ஏறக்குறைய என் அம்மாவின் வயது இவருக்கு. இருவருடைய வாழ்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எனக்கு ப்ரொதிமாவுடையது பிடித்திருந்தது.