Wednesday, February 23, 2005

கல் கி ஷாம்... ஏக் உஸ்தாத் கே நாம்

எப்படியும் பதினைந்து வருஷமாவது இருக்கும். தூர்தர்ஷனில் வந்து கொண்டிருந்த தொடர் அது. சாதனா. அதில் தான் ஹரி பிரசாத் சௌரஸ்யா, ரவிஷங்கர், ஷிவ் குமார் சர்மா... இப்படி வாரம் ஒருவராக. எனக்கு எல்லோரும் முதல் அறிமுகம். அதிகம் ஹிந்தி புரிந்திராத அந்த நாட்களில் ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போல அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தது தெளிவில்லாமல் நினைவில்.

அந்த பாதிப்பில் சில கேசட்கள் வாங்கியதும், தொடங்கிப் பத்து நிமிஷத்தில் நினைவு எங்கேயோ தப்பிப் போய் விடுவதுமாய்... சில வருஷங்களுக்கு முன்னால் சென்னையில் ஒரு கச்சேரிக்குப் போன போதும் அதே. முழு நீள கச்சேரியெல்லாம் நமக்கு ஆகாது என்று விட்டு விட்டதும். ஆனால் உள்ளுக்குள்ளே ஒரு உறுத்தல் இல்லாமலில்லை... 'இவ்வளவுதானா உன் ரசனை!' என்று.

சென்ற வாரம் பத்திரிகை அறிவிப்பு பார்த்ததும் இன்னொரு முறை முயற்சி பண்ணிப் பார்த்தாலென்ன என்று ஒரு யோசனை. உஸ்தாத் கரமத்துல்லா கான்(?!) என்னும் தபலா கலைஞக்காக Antiquity Festival of Fine Arts வழங்கியது. முதல் நாள் நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு கிடைக்காததால் அது கை நழுவிப் போனது.

இரண்டாம் நாளான நேற்று மூன்று பாகங்களாக. முதல் நிகழ்ச்சி உஸ்தாத் கரமத்துல்லா கான் பேரன் ஆரிப் கானின் தபலா. திரை விலகிய மேடையில் இருபது வயதுக்கு கொஞ்சம் கூடக்குறைய ஒரு இளைஞர். பளபளக்கும் ஒரு கறுப்பு குர்த்தா, நிறமேற்றிய கேசம். ஏதோ டிஸ்கோதேவிலிருந்து அவசர அவசரமாக ஆடை மாற்றி வந்தவரைப் போல. வணக்கம் சொல்லி, சின்னவனான நான் எதாவது தவறு செய்தால் பெரியவர்கள் மன்னிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தொடங்கிய போது பின்னாலிருந்து கேலி செய்து ஏதோ கமெண்ட். (இளம் வயது ஒரு மைனஸ் பாயிண்ட் ஆகப் போகும் நிறைய இடங்களில் இதுவும்!)

சங்கீத ஞானமே இல்லாமல் கச்சேரியை கேட்பதும் ஒரு அனுபவம் தான். என்ன ராகம் வாசிக்கிறார், எங்கே தப்பு செய்கிறார்... எந்த மண்டைக் குடைச்சலும் இல்லை. வெறும் ஓசையின் வித்தையை கவனிப்பது மட்டுமே. ஒரு மணி நேரம் அந்த விரல்களின் வேகம், அதில் அவர் எதிர்ப்பார்ப்பதைக் கொண்டு வர அவருடைய பிரயத்தனம், சோர்ந்து போகும் கைகளோடு போராட்டம், கடைசியில் சரியாக அமைந்து விட்ட சந்தோஷம்... இது தான் எனக்குப் புரிந்தது. மேடையின் பக்கவாட்டிலிருந்து அவருடைய தந்தை நிறுத்தச் சொல்லும் வரை நேரம் போனது வாசித்தவருக்கும் தெரியவில்லை. கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும். முடிக்கச் சொல்லிவிட்டாரே என்று கோபப்பட்ட ரசிகர்களின் சலிப்பு தான் அந்த இளம் கலைஞருக்கு பெரிய அங்கீகாரம்.

பதினைந்து நிமிட இடைவேளையில் இரண்டாவது கச்சேரி. பேகம் பர்வீன் சுல்தானா. இவரை 'சாதனா'வில் பார்த்தது போல ஒரு நினைவு. நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளரின் அறிமுகம், பர்வீன் சுல்தானாவின் ஒரு சிறு உரை, தான்புராவை சுருதி சேர்ப்பது, பிறகு அவர் வாசிக்கத் தோதாக அமர்ந்து, புடைவையெல்லாம் சரி செய்து... பாட ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் ஆனது. பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கொஞ்சம் சலிப்பும்.(online The Telegraph பக்கங்களில் அவருடைய படம் கிடைக்கவில்லை. பத்திரிகை படம் என் செல்பேசி வழியாக)


பாட ஆரம்பிக்கும் வரைதான் இதெல்லாம். ஆரம்பித்ததும் அந்தக் குரல் அவ்வளவு பெரிய அரங்கத்தையும் ஆக்ரமித்துக் கொண்டது போல எனக்குத் தோண்றியது. லேசான ஹம்மிங்... கொஞ்சம் இழுக்கப் போனால் பிசிறு தட்டும் எனக்கு, அந்த குரலின் லெவல்... அசத்திப் போட்டது. கண்ணை மூடிக் கொண்டால் சில நேரம் அது குழந்தையாக காலைச் சுற்றி வந்தது. சில நேரம் மோகம் கொண்ட பெண்ணைப் போல வேகத்தோடு என்னைச் சுற்றிச் சுற்றி. சில நேரம் என் கையை பிடித்து தரதரன்னு எங்கேயோ மேலே இழுத்துக் கொண்டு போவது போல.

இந்த முறை அட்லீஸ்ட் தேறிவிட்டேன் என்று சொல்லலாம். அவ்வளவு நேரத்தில் ஒரு தரம் கூட எப்போ முடியும் என்று வாட்ச் பார்க்க வைக்கவில்லை. சமைக்காமல் வந்ததும், மகனுக்கு போன் பண்ணறேன்னு சொன்னதும் அப்பப்ப நினைவுக்கு வந்ததைத் தவிர.

மூன்றாவது நிகழ்ச்சி பிர்ஜு மகராஜ் மற்றும் சாஸ்வதி சென் வழங்கிய கதக் நடனம். அரங்கம் தயார் செய்யவே அரைமணி நேரம். அப்புறம் வழக்கம் போல மாறி மாறி உரை, வாத்தியக் கலைஞர்கள் கொஞ்சம் அவர்கள் திறமையைக் காண்பிக்க பிர்ஜு மகராஜ் மேடைக்கு வரும் போதே மணி ஒன்பதரை. சுமார் பத்து இன்ச் அளவுக்கு கால் சலங்கை. பாதத்திற்கு கொஞ்சம் மேலாக சின்னதாக தரையில் ஒரு ஒலிப்பெருக்கி. அதன் முன்னால் நின்று லேசாக அசைத்தாலே ஓசை அரங்கை நிறைத்து விட்டது போல ஒரு உணர்வு.

நிசப்தத்தின் ஓசையைக் கேளுங்கள் என்று சொல்லி சதங்கையிலேயே கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வந்து ஒரு கட்டத்தில் அது ஒரே சீராக மெல்லிதாக... கேட்கும் போது அது நிசப்தத்தை ஓசையில் சொல்வதாக! அதற்குப் பிறகு அலையோசையையும் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களையும் வெறும் காலசைவில் உணர்த்தியது வரை தான் பார்க்க முடிந்தது. நேரம் ஆகும் என்று தகவல் சொல்லக் கூட முடியாமல் அரங்கத்திற்குள் செல்பேசி சிக்னல் இல்லாததால் கிளம்ப வேண்டியதாகி விட்டது.

நிறைவு நாள் இன்றைக்கு. அதை நாளை.

(தொடரும்)

No comments: