Thursday, February 24, 2005

நேற்றைய மாலையும்... அதே உஸ்தாதிற்கு சமர்ப்பணமாக...

இன்றைய நிகழ்ச்சியும் மூன்று பாகங்களாக. முதலில் உஸ்தாத் ரஸா அலி கானின் (Raza Ali Khan) வாய்ப்பாட்டு. தபலா நேற்று தனி கச்சேரி செய்த ஆரிப் கான். இன்றைக்கு ஆரிப் கானை மேடையில் பார்த்த கூட்டம் ஒரு வாஞ்சையோடு சந்தோஷப் பட்டது.

நேற்று சொல்லாமல் விட்டு போனது... ஆரிப் கானிற்கு பக்க வாத்தியமாக வந்த சாரங்கி வாத்தியத்தைப் பற்றி. கச்சேரி தொடங்கியதே அந்த சாரங்கியின் இசையில் தான். அமைதியான அந்த அரங்கிலே முதல் இரண்டு நிமிஷம் சாரங்கியின் ஓசை மட்டும். ரொம்ப ஆழமா, ரொம்ப சோகமா... ஆயிரம் உளைச்சல்களோடு வந்திருக்கும் எல்லோருடைய மனசையும் சுத்தமாக துடைத்து சங்கீதம் கேட்க தயார் செய்வது போல. இன்னும் கொஞ்ச நேரம் கூட வாசித்திருந்தால் நிச்சயம் அழ வைத்திருக்கும்.

இந்த முதல் கச்சேரி எனக்கு அவ்வளவாக பிடிபடவில்லை. ஒன்றிரண்டு இடங்களில் தானாக கண்ணை மூட வைத்ததைத் தவிர.

பதினைந்து நிமிட இடைவேளையில் அடுத்த நிகழ்ச்சி. உஸ்தாத் ரெய்ஸ் கானின் (Rais Khan) சிதார். தபலா, நேற்று ஆரிப் கானை 'போதும் நிறுத்திக்கோ' என்று சொல்லிய அப்பா (பெயர் நினைவில்லை!). உஸ்தாத் கரமத்துல்லா கானின் மகன். கொல்கத்தாவாசி போல... அவரைக் கண்டதும் கூட்டத்தில் ஒரு சந்தோஷ சப்தம். இன்னொரு சிதாருடன் ரெய்ஸ் கானின் மகன்.

முதல் பத்து நிமிடம் மாறி மாறி சுருதி சேர்ப்பதில். சுருதி சேர்க்கும் அவர் முயற்சிகள் எல்லாம் ஏதோ சின்ன குழந்தையை தாஜா செய்வது போல. வசமானதும் அந்த சிதார் இசை சட்டென்று இளம் பெண்ணாகிவிட்டது. புராண படங்களில் பார்த்த ரம்பா, ஊர்வசி போல... மார் கச்சையும் மெல்லிய அரையாடையுமாய்... கொஞ்சம் குழைந்து வளைந்து... அவர் வா வா என்று கூப்பிட இதோ வந்தேன் என்று சில நேரம் நெருங்கி வந்து, செல்லக் கோபம் கொண்டு விலகிப் போய்... மாறி மாறி இரண்டு சிதார்களிலும் அவளின் நர்த்தனம். ஆரம்பத்தில் அப்பாவின் சிதாரில் இளம் மங்கையாகவும், மகனுடைய சிதாரில் கொஞ்சம் வயது கூடிய பெண்ணாக ஆட சிரமப்படுவது போல தெரிந்த அவள்... ஒரு கட்டத்தில் அப்பாவே 'எனக்கு மகனளவு வேகம் இல்லை' என்று கொஞ்சம் ஒதுங்க... முழு வேகத்தோடு மேடையை ஆக்ரமித்துக் கொண்டாள். அவளின் அசைவுகளும் குழைவும் செய்ததெல்லாம் எந்த அடிப்படை அறிவும் இல்லாத என் கண்ணில் இடையிடையில் துளி நீராய் நிறைத்தது மட்டுமே.

பார்த்துக் கொண்டே இருக்க அவள் எப்போது ஆனந்த நடனமாடும் சக்தியானாள் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் 'அய்யோ போதும் இதோட நிறுத்திக்கோங்களேன்' என்று கூச்சல் போட வேண்டும் போலிருந்தது. காதும் மனசும் நிறைந்து வழிவது என்று இதற்கு முன் புத்தகத்தில் வாசித்ததெல்லாம் என்ன என்று காட்டியது. பாதியாய் மடங்கி மேடையில் அவர்கள் சபைக்கு வணக்கம் சொல்லும் போது கை தட்டக் கூட தோணவில்லை. இறுக்கிக் கட்டிக் கொண்டிருந்த கைகளை விலக்கினால் நான் உதிர்ந்து போய்விடுவேனோ என்று ஒரு பிரமை.

அடுத்தது பண்டிட் ஜஸ்ராஜின் (Pandit Jasraj) வாய்ப்பாட்டு. அவர் மேடைக்கு வருவதற்கு முன்பே, ப்ரொதிமாவின் புத்தகம் வாசித்த வகையில் அவரை எனக்குத் தெரியுமாக்கும் என்று உள்ளுக்குள்ளே ஒரு நினைப்பு. அதிகம் உயரமென்று சொல்ல முடியாது. விசிறி மடிப்பில், கீழேயிருந்து மேலே வர வர நீளம் குறைந்து அழகாக ஒரு வேஷ்டிக் கட்டு. மேலே கையில்லாத மெரூன் நிறத்தில் பட்டு கோட், முழுதும் நரைத்து காதோரம் மட்டும் சிலும்பி நிற்கும் கேசம், கழுத்து நிறைய வரிசையாக சங்கிலி... மேடை ஏற கால் உயர்த்தியதில் வேஷ்டி விலக... சிவப்பு ஓடிய ஒரு பொன்னிறம், கனிந்த பழம் போல.

அவரை இவ்வளவு ரசித்த எனக்கு கச்சேரியை ஏனோ ரசிக்க முடியவில்லை. சிதார் கேட்டதே போதும் என்றாகி விட்டிருந்தது. அந்த மயக்கத்திலிருந்து முழுதாக வெளியே வந்து இன்னொன்றில் இழைய எனக்குப் பயிற்சியேதுமில்லை. அதனால் முதல் பாட்டோடு கிளம்பிவிட்டேன்.

இந்த இரண்டு நாட்களில் கேட்டது - உஸ்தாத் கரமத்துல்லா கான் ·பருக்காபாத் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். முப்பத்திரண்டு தலைமுறைகளாக, தொள்ளாயிரம் வருடங்களாக தபலா வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்!!!

வெளியே வரும் தோண்றியது... முதல் காதல் போல இந்த முதல் கச்சேரியும்... கொஞ்சம் ஸ்பெஷல்.

No comments: