வியாழக்கிழமை காலையில் செய்தித்தாளைத் திறந்து இன்னைக்கு என்ன நடக்கப்போகிறது கொல்கத்தாவில் என்று மேய்ந்து கொண்டிருந்த போது முதல் பக்கத்தில் ஒரு மூலையில் சின்னதாக ஒரு செய்தி: The Legend of Fat Mama என்ற ஒரு செய்திப் படத்தின் ப்ரிவியூ பெங்கால் கிளப்பில் என்று. பெங்கால் கிளப்பில் நான் மெம்பரும் இல்லை. மெம்பராக இருப்பவர் எவரையும் எனக்குத் தெரியவும் தெரியாது. சரி என்று மேலே வாசித்துக் கொண்டு போனதில் மூன்றாவது பக்கத்தில் அதே படத்தைப் பற்றி கொஞ்சம் பெரிதாக ஒரு பெட்டிச் செய்தி. கொல்கத்தாவில் வசிக்கும் சீனர்களைப் பற்றித்தான் அந்த செய்திப் படம் என்று.
திரையரங்குகளில், ஷாப்பிங் மால்களில்... சீனர்கள் இங்கே நிறைய கண்ணில் படுகிறார்கள். வெண்ணெய்யை வழித்து பூசினது போல சருமம், கொஞ்சம் குள்ளமாக, பெரும்பாலும் ஒல்லியாக, அநியாயத்துக்கு ஸ்ரெயிட்டா தலைமுடி... சில நேரங்களில் நேப்பாளிகளையும் சீனர்களையும் குழப்பிக் கொள்கிறேனோ என்று தோண்றுகிறது. நேப்பாளி பெண்கள் வகிட்டில் குங்குமம் வைத்துக் கொண்டு துர்கா பூஜையும் சிவராத்திரியும் கொண்டாடிட்டு குழப்பமேயில்லாமல் இருக்கிறார்கள். குழப்பமெல்லாம் எனக்குத்தான்!
போன வாரம் கூட டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஒரு பெண் இங்கே இரண்டு அங்கே இரண்டு என்று தனித்தனி பில் போட்டு சாமான்கள் வாங்கி அந்த பில்களில் ஒன்றை எங்கேயோ தவற விட்டு... ரொம்ப பதட்டமாக... அவசர அவசரமாக அவர் ஏதோ சொன்னது யாருக்கும் புரியவில்லை. அந்த இடத்தில் அவர் அவரை பொருத்திக் கொள்ள சிரமப்படுவது போல தோண்றியது. அவர் சீனராகத்தான் இருக்க வேண்டும்.
ரபீக் ஏலியாஸ் (Rafeeq Ellias) என்பவரால் இயக்கப் பட்ட இந்த செய்திப் படம் கொல்கத்தாவில் படமாக்கப் பட்டுள்ளது. 60-70 களில் இங்கே வசித்த, சீன உணவுகளை கொல்கத்தா வாசிகளுக்கு அறிமுகம் செய்த ஒரு பெண்மணியைப் பற்றியது. (அப்படியென்றால் அப்போதிருந்து தான் சீன உணவுகள் இங்கே பிரபலமா? யாரைப் பார்த்தாலும் chowmein என்று உண்ணப்படும் நூடுல்ஸ் அப்போதுதான் அறிமுகமானதா?!) சீனர்களின் புது வருடக் கொண்டாட்டங்களோடு தொடங்கும் படம் அதிலேயே முடிவதாக சொல்லி... கடைசியில் BBC ல் சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு ஒளிபரப்பாகும் என்று வாசித்ததும் அட! பரவாயில்லையே... இன்னைக்கு முடியாவிட்டாலும் சனிக்கிழமையே பார்க்கக் கிடைக்கும் என்றிருந்தது. பார்த்து விட்டு அதை ப்ளாகிலும் எழுதுவதாக இருந்தது... ஏனோ இன்று ஒளிபரப்பாகவில்லை. நாளை மார்ச் 6 மாலை நான்கு மணிக்கு மறுஒளிபரப்பு என்றிருக்கிறது. அப்போதாவது வருகிறதா என்று பார்க்க வேண்டும்!
No comments:
Post a Comment