Monday, February 13, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 4(கடைசி)

மறுநாள் காலையில் திரும்ப அஸ்ஸாம். 'காஸிரங்கா போக நாலைந்து மணி நேரம் ஆகும். மெதுவாகப் போனாலும் சாயந்தரம் போய் சேர்ந்திடலாம்' என்று ஓட்டுனர் சொன்னதால் வழியில் அந்த உமியம் ஏரியில் கொஞ்சம் இறக்கிப் போக முடிவானது. எந்த அசைவோ ஓசையோ இல்லாமல், ஒரு மெகா சைஸ் சித்திரம் மாதிரி இருந்தது ஏரி. அங்கங்கே ஒன்றிரண்டு மனித முகங்கள்... அதுகூட சித்திரத்தின் ஒரு பகுதி போலத்தான். சிதைந்து போன ஒரு தார்ச்சாலை இறங்கி ஏரியின் ஒரு மூலையில் அமிழ்ந்து போயிருந்தது. அந்த சாலையிலே நடந்து போய் ஏரித் தண்ணீரில் கால் வைத்ததும் அதன் ஜில்ல்லிர்ப்பு உடம்பெல்லாம் ஓடியது. இறங்கி விடலாமா என்ற வந்த ஆசையோடு எங்கே உடுப்பு மாற்ற என்ற கேள்வியும் வந்ததில் வெறும் கால் அளைதலோடு முடிந்தது.

அங்கே தொடங்கிய பயணம் இருட்டுவதற்கு முன்னால் காஸிரங்காவில் முடிந்தது. '·பாரஸ்ட் கேம்பில் தங்க ஏற்பாடாகியிருக்கிறது. ஒரு யானை சவாரி, ஒரு ஜீப் சவாரி, ராத்திரியும் காலையும் சாப்பாடு, தலைக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய். எல்லாம் அவங்க பாத்துக்குவாங்க' என்று கொல்கத்தாவிலிருந்து தொலைபேசி சொன்னதில் சுவாரசியமான எதிர்பார்ப்பு இருந்தது.

பிரதான சாலையிலிருந்து உள்ளடங்கியிருந்த கேம்பிற்குள் நுழைந்ததுமே பிடித்துப் போனது. சின்னச் சின்ன குடிசைகளாக ஏழெட்டு, நடுவில் ஒரு சாப்பிடும் இடம், வேலிக்கு வெளியே ஒரு தேயிலைத் தோட்டம், அதற்கு பின்னால் நீளும் காடும் மலையுமாய். வணக்கமும் விசாரிப்புகளும் முடிந்தவுடன் குடிசைகள் திறந்து விடப்பட்டது. சுமாரான சுத்தமாய் படுக்கை, போர்த்திக்கொள்ள ஒரு அழுக்கு ரஜாய்.... 'இதை நான் தொடப் போவதில்லை' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டது அதற்குக் கேட்டிருக்கும்... 'ம் ம்... பார்க்கலாம்' என்று அது சிரித்தது எனக்குக் கேட்கவில்லை.

எரியத் தொடங்கிய கேம்ப் ·பயர், சுடச்சுட தேநீர், ராத்திரி சாப்பிட என்ன வேண்டும் என்ற விசாரிப்பு எல்லாம் முடிந்து, 'கஸ்டமர் குஷ்' ஆன நேரத்தில் 'அந்த யானை சவாரி ஆகாது போலிருக்கிறது. அதுக்குப் பதிலா இங்க பக்கத்துல ஒரு நைட் ச·பாரி போயிட்டு வந்துடுங்களேன்' என்று அந்த மேனேஜர் சின்னப் பையன் நைச்சியமாகப் பேசி சம்மதிக்க வைத்து விட்டார். இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கும்மிருட்டில் ஒரு ஓடைக்குப் பக்கத்தில் ஜீப்பை நிறுத்தி, 'சத்தம் போடாம இருங்க... எதாச்சும் வந்தாலும் வரும்' என்று சொல்ல, வந்தாலும் தெரியாத அந்த கும்மிருட்டில் காத்திருந்த அரை மணிநேரத்தில் கொஞ்சம் மின்மினியும், இன்னொரு நைட் ச·பாரி ஜீப்பும் தான் வந்தது.

திரும்ப கேம்பிற்கு வந்த போது நாலைந்து ஜீப்புகளும் கொஞ்சம் கூட்டமுமாயிருந்தது. விசாரித்ததில், பத்து நாளாக தங்கியிருக்கும் அஸ்ஸாமி பட ஷ¥ட்டிங் கோஷ்டி என்று தெரிந்தது. அங்கேயே படப்பிடிப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். குளிர் ஏறத் தொடங்கியிருந்தது. சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு மணி நேரமாகியும் இன்னும் ஏற்பாடுகளே தொடர்ந்து கொண்டிருந்தது. டைரக்டரையோ, நடிகர்களையோ யாரையும் காணவில்லை. மூட்டி வைத்திருந்த நெருப்பை விட்டு விலகும் வரை குளிர் தெரியவில்லை. குடிசைக்குள் நுழைந்ததும் தான் தட்டியில் மண் பூசிய அந்த சுவரெல்லாம் வேலைக்காகாது என்று தெரிந்தது. கைவசமிருந்த ஸ்வெட்டர், ஷால் எல்லாம் போதாமல் வேறு வழியில்லாமல் அந்த ராஜாயை எடுத்து போர்த்தியும் எங்கெல்லாம் எத்தனை எலும்பு ஓடுகிறது என்று எண்ணிக் கொண்டு இரவு ஓடியது.

குளிரில் தூக்கம் வராமல் நடு ராத்திரியில் ஒரு தரம் லேசாக கதவை திறக்க, வெளியே பாட்டிலும் கையுமாய் உட்கார்ந்திருந்த போலீஸையும் கூட்டாளிகளையும் பார்த்ததில் ஹிந்தி சினிமா சீன்கள் நினைவுக்கு வந்ததில் வெளியே போகும் உத்தேசத்தை விட்டு மறுபடியும் ரஜாயைத் தஞ்சமடைய வேண்டியதாயிற்று.

அரைத்தூக்கத்தில் கழிந்த அந்த ராத்திரி, பறவைகள் சத்தத்தில் விடிந்தது. வீட்டில் இருக்கும் போது பார்த்தே இருக்காத ஐந்தரை மணி காலையை அந்த கேம்ப்பில் பார்க்கக் கிடைத்தது. யாரும் விழித்திருக்காத அந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் பரவும் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டு தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்தது மறக்க முடியாது.

அதற்குப் பிறகு போயிருந்த ஜீப் ச·பாரி, பச்சை பூத்திருந்த காட்டு வழி, தூரப்பார்வைக்கு காட்டெருமையாகத் தெரிந்து காண்டாமிருகம் தான் என்று ஊர்ஜிதமான அந்த ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு காண்டா, இரண்டு மான்கள், ஒரு ஆமை(!), நான்கைந்து காட்டெருமை... இதெல்லாம் அந்த காலை விருந்துக்குப் பின்னால் சாப்பிட்ட கொறிப்புகள். கிளம்பும் போது தான் தெரிந்தது ராத்திரி பார்த்து மிரண்டடித்து போனது சினிமா போலீஸ் என்று! தைரியமாய் வெளியே வந்து டைரக்டர் கண்ணில் பட்டு அஸ்ஸாமி படத்தில் அண்ணியாகவோ அக்காவாகவோ நடித்திருக்கக் கூடிய சந்தர்ப்பம் பாழாய் போன நடுஜாம பயத்தில் பறி போனது! ம்ம்ம்...

Tuesday, February 07, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 3

வாசித்துக் கொண்டே போகையில் எங்கேயாவது ஒரு இடத்திலாவது 'படவா! சரியான குசும்பன்டா நீ'... இப்படியாக மனசில் ஓடி ஒரு புன்னகை வர வைக்கும் எழுத்தாக எனக்கு குஷ்வந்த் சிங்கின் எழுத்து இருந்திருக்கிறது. அவர் இந்த தலைப்பிலா?... இது தான் முதலில் தோன்றியது Obituaries - death at my doorstep புத்தகத்தை கடையில் பார்த்த போது. மேலும், 'தவிர்க்க முடியாததுதானென்றாலும் பேசாமலும் வாசிக்காமலுமாவது இருக்கலாம். அதை நான் வாங்கப் போவதில்லை' என்று தான் முதலில் முடிவானது. ஆனாலும் சில விரட்டல்களைத் தவிர்ப்பது சிரமம். இதுவும் அப்படியே.

வெவ்வேறு சமயங்களில் குஷ்வந்த் சிங் எழுதிய மரணச்செய்தி குறிப்புகளின் தொகுப்பு. குஷ்வந்த் சிங் அவருடைய இருபதுகளில் அவருடைய obituary அவரே எழுதியிருப்பதாக எங்கேயே வாசித்திருக்கிறேன். புத்தகம் அதனோடு தான் தொடங்குகிறது. அது எனக்குத் தெரிந்த குஷ் எழுத்தின் சாயலில் கொஞ்சமும் இல்லை. சாவைப் பற்றி அவர் கேட்டறிந்தவைகள்... கேட்டவர்கள் வரிசையில் தலாய் லாமா, ரஜனீஷ், வி.பி.சிங்... தெளிவில்லாத விளக்கங்கள்.

புத்தகம் உள்ளே இழுத்துக் கொள்வது புட்டோவின் இறுதி நாட்களை விவரித்துக் கொண்டு போகும் போது தான். பனிரெண்டு பக்கங்களுக்கு நீளும் அந்தக் குறிப்புகள்... சாப்பிட்டுக் கொண்டே வாசித்துச் செல்ல, ஒரு கட்டத்தில் அது சொல்லத் தெரியாத அவஸ்தையாகி, புத்தகத்தை மூடி வைக்க வைத்தது. அரசியல் நண்பர்கள், எழுத்தாள நண்பர்கள், அவருடைய வீட்டு காவல்காரர்... தொடரும் மரணச் செய்திகள். வெறும் வார்த்தைகளாயில்லாமல் உணர்வுகளாய். தெரிந்த முகங்களும் தெரியாத தகவல்களும். ஒரே சோக கீதம் பாடாமல், இயல்பாய் சொல்லிப் போகிறது. இந்த புத்தகத்தில் கூட மனுஷன் குறும்புத்தனத்தைக் காட்டாமல் போகவில்லை. இத்தனை சாவு சமாச்சாரங்களையும் படிக்க தயார் செய்யவென்றேயாயிருக்கும்.

'கொஞ்சம் சினிமா' வில் அந்தர்மகாலில் தொடங்கி பார்த்த பெங்காலிப் படங்களையும், கொஞ்சம் ஹிந்தி படங்களையும் சொல்ல நினைத்தது... பெங்காலிப் படங்கள் எண்ணிக்கை நீண்டு போனதில் அதைத் தனியாகத் தான் எழுத வேண்டும். அந்த வரிசைப் படங்களில் கனத்து போன தலையை லேசாக்க இடையில் பார்த்த
'Bluffmaster' ம் , Neal n Nikki' ம் முழு மசாலா. சும்மா அபிஷேக்பச்சனை பார்க்க்க்கவும், ம்யூஸிக்கிற்காகவும் Bluffmaster நல்ல சாய்ஸ். கூல் n லைட் மூவி. Neal n Nikki... ஒரு பைசாவுக்கு தேறாது. இந்த உதய் சோப்ராக்கு என்ன ஆச்சு? நல்லாத்தானே இருந்தார்? அந்த ஓவர் சைஸ் புஜங்களும் அதற்கு கொஞ்சமும் பொருந்தாத முகமும்... கொடுமை! அநியாய மினி சைஸ் ஆடைகளில் தனிஷா... இவ்வளவும் குறைச்சிருக்க வேண்டாம் தான். வேஸ்ட்.

அதையெல்லாம் ஒதுக்கி விட்டு அதிகம் கவனம் பெறாத இந்த படம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். Hazaar Chaurasi ki maa.

இந்த படத்தை வாங்கும் போது இது என்ன படம், எதைப் பற்றியது என்ற எந்த அனுமானமும் இல்லை. இறுக்கமான ஜெயாபச்சன் முகமும், கோவிந்த் நிஹலானி என்ற பெயரும் தான் அதை வாங்கச் சொல்லியிருக்க வேண்டும். படம் தொடங்கி இரண்டு நிமிடம் வரை தலைப்புக்கு அர்த்தம் கூட தெரிந்திருக்கவில்லை. அப்புறம்
தான் தெரிந்தது hazaar chaurasi... 1084 என்று. 1084 எண் உடலைக் காட்டி அடையாளம் காணச் சொல்வதுடன் படம் தொடங்குகிறது. அதற்குப் பிறகே தன் மகன் நக்ஸலைட் என்று தெரிந்து கொள்ளும் ஒரு அம்மாவின் தேடல்கள்.

மஹாஸ்வேதா தேவியின் Hazaar chaurasir maa என்ற நாவலின் திரைப்பட வடிவம். நக்ஸலைட் என்று கொல்லப் பட்ட மகனின் சுவடே இல்லாமல் செய்ய முயற்சிக்கும் குடும்பம், அதிலிருந்து விலகி மகனின் வேர்களைத் தேடிச் போவதும் தெரிந்து கொள்வதுமாய். கொலை செய்யப் பட்ட இரவு அவன் தங்கியிருந்த நண்பன் வீடு... அவனின் அம்மாவிடமிருந்து மகனுடைய இன்னொரு முகத்தைத் தெரிந்து கொள்வதும், எப்படி இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போனது என்ற குற்ற உணர்ச்சியும், அதிலிருந்து மீண்டு வருவதுமாய் போகும் கதை.

அம்மாவாக ஜெயாபச்சன். அந்த நிதானம், இறுக்கமான அமைதி... நிறைவாக செய்திருக்கிறார். நண்பனின் அம்மாவாக சீமா பிஸ்வாஸ். உடைந்து அழும் அந்தக் காட்சி ஒன்று போதும். மகன் பாத்திரத்தில் ஜாய் சென்குப்தா. காதலியாக நந்திதா தாஸ். பேரலல் சினிமாவின் வழக்கமான முகங்கள். எந்த அலங்காரமும் இல்லாத க்ளீன் மூவி.

எழுபதுகளின் கல்கத்தா, சொல்லப் போனால் பளபளக்கும் பெரிய சாலைகளுக்கு பின்னால் இன்னமும் அப்படி ஒரு கல்கத்தா இருக்கத்தான் செய்கிறது. பெரிய மாற்றங்களில்லாமல். நக்ஸல் இயக்கம் விட்டுப் போன வலி இன்னமும் எத்தனையோ குடும்பங்களில் மிச்சம் இருக்கலாம். அதனாலேயே அந்த நாட்களின் வேகம் இல்லாமல் போயிருக்கலாம். கோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போய் நின்று பார்த்தால் அதனுடைய நியாயங்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

இதே விஷயத்தைத் தொட்ட Hazaaron khwaishien aisi... ஒரு பீரியட் படம் என்ற பார்வையில் இன்னும் அதிகம் கவனம் எடுத்திருக்க வேண்டுமோ?

இதோ இங்கே சால்ட் லேக்கில் எழும்பும் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு தோண்டிய பள்ளங்களில் கிடைத்த எலும்புகள், ஏரியில் இப்படித் தூக்கி போட்ட கணக்கில்லாத சடலங்களின் மிச்சங்கள் என்று கேள்விப்பட்ட செய்தி நினைவுக்கு வந்து போகிறது. கொல்கத்தாவும் அதன் வரலாறும், ஆழமும் அகலமுமாய்... ரொம்பப் பெரிசு.

கொல்கத்தா புத்தக கண்காட்சி

31 வது கொல்கத்தா புத்தக கண்காட்சி ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. இந்த வருட தீம் ஸ்பெய்ன். 578 ஸ்டால்களில், ஒரு நாள் மூன்று மணி நேரத்தில் கால் பங்கு கூட பார்த்து முடிக்க முடியவில்லை. இன்னொரு தரம் பார்த்து விட்டு சேர்த்து எழுதலாம் என்ற இருக்க, முடிந்தே போய் விட்டது.

'மைதான்' நாசம் ஆகிவிட்டது, சுத்தம் செய்து முடிக்க ஒரு மாதமாவது ஆகும் என்ற புலம்பல்களும், புத்தக கண்காட்சியில் உணவகங்களையும் மற்ற விற்பனைகளையும் அனுமதிக்கலாமா கூடாதா என்ற விவாதங்களுமாய் இருக்கிறது. 'ஆடியோ விஷ¤வல் சரக்குகள் கூட வாசிக்கும் பழக்கத்தைக் குறைத்து விடும். தள்ளிப் போய் வித்துக்கோ' ன்னு ஒரு கூக்குரல்.

புத்தகம், ம்யூஸிக், சாப்பாடு... இதில் கொல்கத்தாவாசிகளை அடிச்சுக்க முடியாது தான். விடவும் மாட்டார்கள். ஜிப்பா ஜோல்னா பை சகிதமாயும், கோட்டு சூட்டுமாயும் பங்காலிபாபுகள், வயதானவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், காட்டன் சேலைப் பெண்கள்... கலந்தடித்த கூட்டம்.

'குல்லம் குல்லா லிக்கா ஹை கியா(வெட்ட வெளிச்சமா எழுதியிருக்கா)'?... ஜீன்ஸ் சுந்தரிகளும் சுந்தரன்களுமாய் இருந்த கூட்டத்தில் இருந்து வந்த குரல். அவர்கள் தேடிக் கொண்டிருந்தது essays & letter writing section ல்! இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், குருதேவும் நிறைந்திருக்கிறார்கள். 'கோட்டோவியங்களில் கல்கத்தா' இதற்கென்றே ஒரு ஸ்டால். sculptor workshop... ஒரு ஸ்டாலில்.

சாகித்ய அகாடமி ஸ்டாலின் ஒரு சின்ன அலமாரியில் பத்து பதினைந்து தமிழ் புத்தகம் கண்ணில் பட்டது. தமிழ் சங்கம் இருக்கிறது. தியாகராஜர் ஹாலில் கச்சேரி செய்ய சுதாவும், சௌம்யாவும் வந்து போகிறார்கள். கவி பாரதி பெயரில் ஒரு தெரு இருக்கிறது. சாயந்திர நேரத்தில் அந்த தெருவில் கொஞ்சம் நடந்துட்டு வந்தால் ஊருக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கிறது. தமிழ் புத்தகத்துக்கு மட்டும் ஏன் தேவை இல்லை?!

நான் வாங்கியது:

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழாக்கம்: சுந்தர ராமசாமி.

Binodini - Rabindranath Tagore

The Sandal Trees - Kamala Das

May you be the mother of a hundred sons - Elisabeth Bumiller.

Thursday, February 02, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 2

'இவ்வளவு பக்கத்தில நான் இருக்கேன். பெருசா டெல்லி கிளம்பிட்டீங்க. சரி சரி கட்டின பொட்டிய பிரிப்பானேன். இங்க வந்துட்டு போங்க'... ஒற்றைக் கொம்பால் காதில் கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டே முனங்கிய காஸிரங்கா காண்டாமிருகத்தின் குரல் கேட்டு... 'நாம அஸ்ஸாம் போறோம்' என்று முடிவானது.

கௌஹாத்தி, மாநிலத் தலைநகருக்கான லட்சணங்களைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படாமல் தன் போக்கில் இருந்தது. புதிதாக முளைத்திருந்த மால்கள் சூழலோடு ஒட்டாமல் தனியாகத் தெரிந்தது. விமான நிலையத்திலிருந்து தங்கும் இடத்திற்குப் போகும் வழியில் குறுக்கிட்ட இரண்டு கிலோமீட்டர் மார்க்கெட்டைக் கடக்க இரண்டு மணிநேரம் ஆனது. எல்லாம் அந்த மஞ்சள் கோடு மீறல் தான். காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு ட்ராபிக் போலிஸ்காரர் கண்ணில் படவில்லை.

கௌஹாத்தியில் 'கட்டாயம் பார்க்க' என்று பயணப் புத்தகம் சொன்னதில் மூன்று கோவில்களை மட்டும் பார்த்த எங்கள் மக்கள்ஸ்க்கு சரியான சலிப்பு. தீர்த்த யாத்திரையா வந்திருக்கோம் என்று குதிக்க ஆரம்பித்தவர்களை சமாதானப் படுத்தி, முதலில் போனது காமாக்யா மந்திர். அமிதாப்பச்சனுக்காக ரெண்டு எருமைகளை பலி கொடுத்த கதையெல்லாம் திரும்ப வந்து ஆ.வி படித்துத் தான் தெரிந்தது. கோவிலுக்கு உள்ளே நுழையும் போது சிலிர்த்துக் கொண்டு வந்த கடாக்குட்டிகளெல்லாம் அதுக்குத்தானா?!

நீளமான க்யூ இருக்கும், குறைந்தது ரெண்டு மணிநேரமாவது ஆகும் என்று பயமுறுத்திய கதையையெல்லாம் பின்னால் ஒரு ஐம்பது பேராவது நின்று, திரும்பிப் போக வழியில்லாமல் போன சமயத்தில் கணவர் மெதுவாக எடுத்து விட்ட தகவல். வளைந்து வளைந்து செல்லும் க்யூவில் ஆறேமுக்காலாவது திருப்பத்தில் கண்ணில் பட்ட ஸ்வாமிதான் நாங்கள் பார்க்க வந்த காமாக்யாவோ என்று நினைத்தால், 'இதைக் கும்பிட்டுக்கோங்க இன்னும் உள்ள போகணும்' என்று சொன்ன 'உள்ளே' ரொம்ப இருட்டாய் இருந்தது.

அதிகம் வெளிச்சமில்லாத ஒரு திருப்பத்தில் ஒழுங்கில்லாத நான்கைந்து படிகள். இறங்கினால், வரிசையாய் உட்கார்ந்திருந்த பூசாரிகளைத் தவிர வேறேதும் தெரியவில்லை. வட்டமாய் ஒரு தாழ்வான மேடை, அந்த வட்டத்திலேயே பிரம்மாண்டமான ஒரு இருட்டு கோபுரம். உள்ளே போன வழியிலேயே திரும்பி வர வேண்டும். மண்டியிட்டு கீழே சுரக்கும் சுனை நீரைத் தொட்டுப் பார்க்கச் சொன்னபடி செய்து விட்டு வெளியே வர, அது 'ஜஹான் ஸே ஹம் ஆயே, வோ ஸ்தான் ஹை' ( நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடம்) என்று சொன்னதை 'கருப்பை' என்று சொன்னதாக நான் புரிந்து கொண்டேன். சரியா தவறா தெரியவில்லை. அதைச் சொல்லவே அவருக்கு ஏனோ அவ்வளவு தர்மசங்கடம். மேலும் கேள்வி கேட்டு குடையும் ஆர்வம் வரவில்லை.

சாதாரண நாட்களிலேயே இவ்வளவு அசௌகரியமான வழியாயிருக்கும் அந்த இடம் விசேஷங்களில் எப்படி இருக்கும்? எப்படி கூட்டத்தை சமாளிப்பார்கள் என்று கவலையாயிருந்தது. ஒரு ஆள் சறுக்கினாலும் பதட்டமும் கலவரமும் தவிர்ப்பது சிரமமாயிருக்கும். எங்கே போனாலும் இது மாதிரி யோசனை தான் வருகிறது. பக்தி?!

அதை முடித்து அடுத்ததாய் போன பாலாஜி கோவில் அச்சு அசலான தமிழ்நாட்டுக் கோவில். புளியோதரையும் சுண்டலும் தான் மிஸ்ஸிங். சர்ச்சைக்குள்ளான காஞ்சி பெரியவர்கள் சுவர்களில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது கோவிலை தவிர்த்து அன்றைய சுற்றலை முடித்துக் கொண்டோம். தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த பிரம்மபுத்திராவை காரிலிருந்து பார்த்துக் கொண்டதோடு சரி.

மறுநாள் காலை ஷில்லாங் போக கார் வந்திருந்தது. முதலில் சிரபுஞ்சி பார்த்து விடலாம் என்பது ஓட்டுனர் ஆலோசனை. 'அதிக மழை' பட்டத்தை பக்கத்து ஊருக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாய் மகன் தகவல் சொல்ல, 'அச்சச்சோ அப்படியா?!' என்றோம். சொன்ன மாதிரியே நாங்கள் போயிருந்த போது மழையொன்றும் காணோம். திடீரென்று மேகம் திரண்டு சடசட வென்று பெய்யும் என்று சொல்லியிருந்தது நாங்கள் இருந்த மூன்று நான்கு மணி நேரம் வரை நடக்கவில்லை.

தூரப் பார்வைக்குத் தெரியும் ஒன்றிரண்டு அருவிகள், அழகாய் ஒரு குகை... இது சிரபுஞ்சி. அருவியைப் பார்த்தோம் என்று போனில் சொன்னதும் அம்மா கேட்டது, 'குளிச்சீங்களா?' என்பது தான். குளிக்க முடியாத அருவியெல்லாம் வேஸ்ட் என்பது அவருடைய அபிப்ராயம். தண்ணீர், அது ஆறோ குளமோ... இறங்கி அளைய முடியணுமாம். சரிதான்.

'ஐநூறு மீட்டர் நீள குகைக்குள்ளே நுழைந்து வருவது சிரமம். ஆம்பிள்ளைகள் நீங்க ரெண்டு பேர் வேணா போகலாம், பொம்பளைங்களுக்கு கஷ்டம்' என்று அந்த ஓட்டுனர் சொல்லாமல் இருந்தால் அதில் நுழைந்தே தீரும் பிடிவாதம் வந்திருக்காது தான்! தண்ணீராலா, இல்லை நடந்து நடந்தே அப்படி ஆனதா என்று தெரியவில்லை, துடைத்து வைத்தது போல மொழுமொழு பாறைகள். இருட்டுக் குகைகளும் இணைக்கும் சிறு துவாரங்களுமாய்... எப்போ வழுக்கி விழப்போறேனோ, விழுந்தால் எப்படி இங்கிருந்து வெளியே போவது, உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம்னு இவர் ஆரம்பிச்சுடுவாரே... இதெல்லாம் தான் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் நிதானமாய் பார்த்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. அப்போதென்னவோ அதை கடந்து முடிக்கும் வேகம் தான் இருந்தது.

வழியில் உமியம்(Umiam) ஏரியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே ஷில்லாங் போய் சேர்ந்தோம். இரவு தங்கல் அங்கேதான் ஏற்பாடாகியிருந்தது. சாப்பிடப் போகும் போது குளிர் அதிகமாயிருந்ததில் என்னதான் அப்போது டெம்பரேச்சர் இருக்கும் என்ற ஆர்வத்தை மார்க்கெட் பகுதி மணிக்கூண்டு தீர்த்து வைத்தது. எட்டு டிகிரி என்று சொன்னதை நம்ப சிரமமாயிருந்ததது. சாப்பாடெல்லாம் முடித்து ஏழுமணி சுமாருக்குத் (ஏழு மணிக்கெல்லாம் ஊர் அடங்க ஆரம்பித்துவிடும் என்று ஓட்டுனர் முன்னாலேயே சொல்லியிருந்தார்) திரும்பி வரும் போது மணிக்கூண்டு வெப்பம் காட்டி மூன்று என்றது. வெப்பம் காட்டி தவறாக வேலை செய்கிறது என்றுதான் தோன்றியது. அறைக்குள் ஹீட்டரைப் போட்டு கம்பளியையும் போர்த்தி படுத்ததில் எதுவும் தெரியவில்லை.

தொடர்கிறது...