Monday, December 10, 2007

ஹிந்து ம்யூஸிக் ஃபெஸ்ட் -- 2

ஹிந்து ம்யூசிக் ஃபெஸ்ட்.... சென்ற முறை இதைப் பார்த்தது, எழுதினது, குங்குமத்திற்காக கச்சேரிகள் போனது, இனிய நண்பர் சக்ரபாணி அறிமுகமானது... இப்படி நிறைய காரணங்களால் மனதிற்கு ரொம்ப நெருக்கமானது. இந்த வருடமும் அதே ம்யூஸிக் அகடமி, சீஸன் டிக்கெட், முதல் வரிசை, அதே மிஸஸ். ஒய்ஜிபி, இலவச AVT பிரீமியம் காபி... நான் தான் அதே நானில்லை. சென்ற முறை இருந்த பிரமிப்பு போய் சகஜ மனப்பான்மை வந்ததில் கொஞ்சம் இழப்புதான். எனக்கு எல்லாமே சீக்கிரம் நிறம் ஒரு ஷேட் மாறிப் போய்விடுகிறது!

முதல் நாள் பாகிஸ்தானி தந்தை மகன் ஜோடி. உஸ்தாத் ஃபதேஹ் அலி கான் மற்றும் ருஸ்தம் அலி. பட்டியாலா கரானா பாணி. அப்பா நிறைகுட அமைதி, மகனின் ஷோமேன் முயற்சிகள்... தீபாவளி சரவெடி. சற்றே இரைச்சல் போல தோற்றம். கவர்னர் சங்கீதம் கேட்க வந்ததால் ம்யூஸிக் அகடமி டிடெக்டரும் செக்யூரிட்டியுமாய் அமர்க்களப்பட்டது. நண்பர் இரா. முருகனை ரொம்ப நாள் கழித்து பார்க்கக் கிடைத்தது. கையில் ஒரு மலையாள நாவலுடன்... மனுஷர் மாறவேயில்லை, அதே புன்னகை அதே சந்தோஷம்!

இரண்டாம் நாள் சிக்கில் குருசரண், அனில் ஸ்ரீனிவாசன் (பியானிஸ்ட்). அவர்களுடைய 'colour of rain' ஆல்பத்திலிருந்து ஒரு அழகான தமிழ் பாடலுடன் தொடங்கி முழு நீள தமிழ் பாடல்கள் கச்சேரி. குரலோடு இணைந்து செல்வதே தெரியாமல் இழையும் அனிலின் கைவண்ணம், எங்கேயுமே தன்னை முன்னிருந்தாமல், அட்சர சுத்தமாக பாடும் பாடகருக்கு மேடையமைத்துச் சென்றது. கொஞ்சம் பாரதியும், பெரும்பாலும் கேட்டிருந்த தமிழ் பாடல்களுமாய்... முழு ராக ஆலாபனையாக இல்லாமல், அதிகம் எளிமைப் படுத்தியும் விடாமல். குரலின் வசீகரம் எங்கேயோ மூடிக்கிடந்த கதவுகளைத் திறக்க கசியும் கண்களை துடைக்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்தது. ரொம்ப ஸ்லோ கச்சேரி என்று காதில் விழுந்த லேசான முணுமுணுப்புகளை முற்றாக புறக்கணித்து விடலாம். மைலாப்பூர் பட்டுச்சேலைகளெல்லாம் இடைவேளைக்குப் பின் காணவில்லை. 'சின்னஞ்சிறு பெண் போலே', ' சுட்டும் விழிச் சுடராய்'... 'அதரம் மதுரம்'... எல்லாமே மதுரம்!

மூன்றாம் நாள் பண்டிட் ராஜன் மிஸ்ரா, சாஜன் மிஸ்ரா சகோதரர்கள். வெண்பட்டு தலைமுடி. ஒரே மாதிரி சில்க் குர்த்தா. க்ளாசிக்கல் ஹிந்துஸ்தானி கச்சேரி. இளையவர் ராஜன் மிஸ்ரா சந்தோஷமாய் பாட மூத்தவர் தேவைப் பட்ட இடத்தில் ஜோடி சேர்ந்து கொண்டார். எந்த எளிமைப் படுத்துதலுமின்றி கட்டமைப்பிற்குள்ளே நீண்ட இசைப் பயணம். தவறாக இடை மறித்த கைத்தட்டல்களை மென்மையாக மறுக்கும் கண்டிப்பு. முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு ஹிந்தி வார்த்தைகளை புரிந்து கொண்டேனாக்கும் என்று ஆராவாரம் செய்து கொண்டிருந்தவரை என்னவேணாலும் செய்யலாம். ஒன்பதரை மணிக்கு ரசிகாஸ் விருப்பத்திற்காக தொடங்கிய தர்பாரியை எப்போது முடித்து, கடைசியாகப் பாட வைத்திருந்த பைரவியை பாடி முடித்தார்களோ நானறியேன்! பத்தரை மணிக்கு மேல் சங்கீதம் கேட்க காதுகளும் ஸ்ட்ரைக். நேரமாகிற டென்ஷன்.

வியாழக்கிழமை ஹரிஹரன், மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கஸல்பந்தி. சிட்டையாக சம்மணமிட்டு உட்கார்ந்த ஹரிஹரனை பார்க்க புதிதாக இருந்தது. சில நேரங்களில் மேடையிலிருப்பவர்களின் ஆளுமை வீச்சில் மற்றதெல்லாம் மறந்து போகும்... இந்தக் கச்சேரியும் அப்படித்தான். முதல் முதலாக ஸ்ரீனிவாஸைக் கேட்டது, அந்த வாத்தியம் விரல்களில் குழைந்தது, சீனியருக்கு வழிவிட்டு அடக்கியே வாசித்தது... எல்லாமே 'ஹரிஹரன் முன்னால் உட்கார்ந்து பாடுகிறார்' என்பதில் ரொம்பவே அடிபட்டுப் போனது. நேரத்தை இரண்டு பேரும் பகிர்ந்து கொண்டதில் யாரையுமே முழுமையாக ரசிக்க முடியவில்லை. 'உயிரே' பாடச் சொல்லிய குரல்களுக்கு, 'இங்கேயா?! சினிமாப்பாட்டா?!'... ஆச்சரியத்தோடு நாசுக்கான மறுப்பு. ரொம்ப எதிர்பார்த்து நானே சொதப்பிக் கொண்ட கச்சேரி. பாரதியார் பாட்டில் உச்சரிப்புப் பிழை நிரடியது. ஹரிஹரன் கொஞ்சம் கவனித்திருக்கலாம். என்னையும் கொஞ்சம் கச்சேரி கேட்க விட்டிருக்கலாம்!

வெள்ளிக் கிழமை 'ம்ருக்யா' - ஃப்யூஷன். ஒரு வயலின், இரண்டு பேஸ் கிடார், ஒரு கீபோர்ட், ஒரு பெர்கர்ஷனிஸ்ட், ஒரு ஆண் குரல், ஒரு பெண் குரல். வழக்கம் போல வயலின் கொஞ்சியது. ஒரு பேஸ் கிடாரிஸ்ட் கொஞ்சம் இசை அறிமுகம், உறுப்பினர் அறிமுகம் செய்து கொண்டிருக்க மற்றவர், 'என் பணி வாசித்துக் கிடப்பதே'... ஒரு சிலிர்ப்பில்லை, ஒரு மலர்ச்சியில்லை... ஆனாலும் ஒரு ஆழ்கடல் அமைதி... இருபதுகளில் இருந்த அவர் Fountain Head, Roark ஐ நினைவு படுத்திப் போனார். சுக்ருதி சென் குரல்... அல்ட்ரா மாடர்ன் அழகியின் நீண்ட ஒற்றைப் பின்னல் மாதிரி, ம்ருக்யாவிற்கு. தேன் குரல் இழுத்த இழுப்பிற்கெல்லாம் இசைந்தது. குலாம் காதர், ரசிகர்களுக்கு குலாம் பாய் ஆகிப் போனதில் சந்தோஷமான பாடல்கள் கேட்கக் கிடைத்தது. 'மஸ்த் கலந்தர்'க்கு மொத்த அகடமியும் கொண்டாட்டம் போட்டது. அத்தனையையும் ரசித்துவிட்டு் போன வருஷம் கேட்ட Indian Ocean ஐயும் ஞாபகப் படுத்திக் கொண்டது தேவையில்லைதான்.

சனிக்கிழமை ட்ரெடிஷனல் க்ராஸ்ஓவர்... தி ஃபாரஸ்ட், கொரியன் ட்ரூப். மேடை நிறைய வாத்தியங்களும் வாசிப்பவர்களும். சொந்த பாஷையில் குழுவின் கிடாரிஸ்ட் நீளமாகப் பேசிக் கொண்டு போக, மொழிபெயர்ப்பாளர் சுருக்கமாக மொழிபெயர்த்து காப்பாற்றினார். சின்னச் சின்ன அறிமுகங்கள் மட்டும் போதுமே என்று யாராவது அவருக்கு சொல்லிக் கொடுத்தால் தேவலை! மேடை நடுவில் மெல்லிய உடலும் சிறிய உருவமுமாய் ஒரு நாட்டுப்புற இசைக்கருவியை இழைந்து இழைந்து வாசித்த பெண்ணின் இசை அரங்கம் பூராவும் நிறைந்திருந்தது. நினைத்த மாத்திரத்தில் இப்போதும் காதில் ஒலிக்கிறது. குழல் வாத்தியங்கள், தந்தி வாத்தியங்கள் எல்லாமே காத்திரமாக தனித்து ஒலித்தன. சுலபமாக ஒன்றிரண்டு வாத்தியங்கள் வாசிக்கிறார்கள். சமயத்தில் பாடவும் செய்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிற்றில் கட்டி மொத்த ட்ரூப்பும் சேர்ந்து ஒரு லயத்தோடு என்னை இழுத்துக் கொண்டிருந்தது போலிருந்தது. இழுபட்ட சுகம்... ஜூம்... ஜூம்... ஜூம்!

கடைசி நாள் இண்டியன் ஃப்யூஷன். த்ரிலோக், ப்ரஸன்னா, விக்கு வினாயக் ராம், மற்றும் செல்வ கணேஷ். ரொம்ப உரிமையோடு கலைஞர்களோடு மேலேருந்து உரையாடல்கள். சரியா கேட்கலைன்னு ஒரு குரல் வந்தது தான் தாமதம் த்ரிலோக் சலித்துக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. கூட ப்ரஸன்னாவும் சேர்ந்து கொள்ள ம்யூஸிக் அகடமி ஒலி அமைப்பாளர்களுக்கு தர்ம குட்டு. பெர்கர்ஷனிஸ்ட் த்ரிலோக், செல்வ கணேஷ் கஞ்சிரா கொஞ்சம் விளையாட்டு காட்டியது. விக்குவின் கடம் பதவிசாக உள்ளே நுழைந்து தன் பங்கு கைதட்டல்கள் வாங்கி விலகிக் கொள்ள இளையவர்கள் கூட்டணி களைகட்டிக் கொண்டது. சும்மா கேட்க வந்த சிவமணியை மேடைக்கழைத்து மரியாதை செய்ய, ரசிகர்களின் வற்புறுத்தலுக்காக வாசிக்க, 'ஹேய் இது ரொம்ப நல்லாயிருக்கே!' என்றிருந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி ரசிகர்கள். ஒவ்வொரு மாதிரி சங்கீதம். எல்லாமும் கேட்டதும் ரசிக்க முடிந்ததும் சுகம். இலக்கணம், ராகம் என்ற தேடல்கள் இல்லாமல் தன்னிச்சையாக ரசிக்க முடிந்தது நிறைவாக இருந்தது. ஏழு நாட்கள் மாலை வெளியே செலவழிக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் சிரமமாக இருந்தாலும் முடியும் போது அவ்வளவு தானா என்று தோன்றுவது தவிர்க்க முடிவதில்லை. அடுத்த வருஷத்திற்கான எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது... நிறம் இன்னொரு ஷேட் மாறினாலும்!