Saturday, December 17, 2011

One little finger - Malini Chib



Autobiography வாசிப்பதில் ஒரு தனிப்பட்ட சுவாரசியம் இருக்கிறது... என்னதான் நிஜத்தில் கற்பனை கலந்து இலக்கியம் படைத்தாலும், அதில் உள்ள ஒரு சத‌விகிதம் கற்பனை கூட எங்கோ இடிக்கிறது. அதற்காக ஆட்டோபயாக்ரபிக்கள் எல்லா உண்மையும் சொல்கிறது என்றும் இல்லை... சொல்லப் பட்ட விஷயங்களில் இருக்கும் வாழ்க்கையின் எதாவது ஒரு துளியில் என்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தே போகிறது.

72 மணி நேரம் கூட தாண்டாது என்ற குழந்தை 42 வயது சாதனை பெண்ணாகும் நீண்ட வீல்சேர் பாதையை சொல்கிறது. கொல்கத்தாவில் பிறந்து, சரியான வைத்தியமும் பயிற்சியும் கொடுப்பதற்காகவே பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த பெற்றோர், அனுசரனையான குடும்பம், நல்ல வசதி.. இதெல்லாம் அவளுடைய ப்ளஸ். எத்தனை செரிப்ரல் பால்ஸி பாதிப்பாளருக்கு இத்தனை வாய்ப்புகள் கிடைக்கிறது என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவளுக்கு சாதகமான பிரிட்டன் வாழ்க்கை, ஒரு தம்பி வரவு, இந்தியா திரும்புதல், இங்கே சரியான மருத்துவமோ, பள்ளியோ இல்லாமல் அவள் அம்மாவே ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்தது, பின்னர் ஸ்பாஸ்டிக் சொஸைட்டியாக வளர்ந்தது, பெற்றோரின் விவாகரத்து, அவளுடைய நார்மல்(எது நார்மல் என்று நிறைய இடத்தில் கேட்கிறார்!) கல்லூரி வாழ்க்கை... இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போக சுவாரசியமான பக்கங்களாய் போய் கொண்டிருந்ததில் வாலிப வயதில் ஒரு ஆணின் அண்மைக்காக, காதலுக்காக ஏங்கியதைச் சொல்லும் இடத்தில் தான், ஒரு முழுமையாக வளராத உடம்பிற்குள் இருக்கும் முழுமையான மனத்தையும் அதன் ஆசைகளையும் கொஞ்சமே கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஐம்பது சொச்சம் வயதில் இறந்து போன இரண்டடி கூட வளராத வரதன் மாமா, கடைசி காலத்தில் தன்னைப் போலவே குறைபாடுள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைத்ததும், அதெல்லாம் சரியாக வராது என்று தானே கைவிட்டதையும் பின்னெப்போதோ கேள்விப் பட்டது எங்கேயோ ஒரு வலியாக நின்றிருந்ததை இந்தப் பெண் மறுபடியும் கிளறிப் போயிருக்கிறாள். வாசித்து முடித்த பின்னும் தொந்தரவு செய்து கொண்டு.

அத்தனையையும் மீறி அவள் கடந்ததும் அடைந்ததும்... க்ரேட்!

Sunday, January 02, 2011

இன்றும்...

சர்வ காலமும் சுமந்தலைகிறேன்
சலசலத்து நகர்ந்து கொண்டிருந்தது
கோபங்களால் துரோகங்களால்
குரோதத்தால் காதல்களால்
நிரப்பிச் சேர்த்ததில் ததும்பி நிற்கிறது

ஆவேசம் கொள்கிறது
ஆனந்தக் கூத்தாடுகிறது
மௌனத்தில் ஆழ்கிறது

குறிப்பறிந்து சிதறும் சாரல்களில்
கடும் புயல்களைக் கடக்கும்
உரம் கொள்கிறது

சீண்டல்களில் புரண்டெழும் ஞாபகங்களில்
தொலைந்து போகிறது
தேடிக் கண்டடைகிறது
தெளிவுறுகிறது

அகம் ஆர்ப்பரித்த போதும்
ஓர் அணக்கம் காட்டாதிருக்கிறது

ஆழ்கடலென்பதற்கு மேல் அதை
அறிந்தார் எவருமில்லை.