Wednesday, April 04, 2007

Women & Men in my Life - Khushwant Singh

ஆங்கில புத்தகங்கள் வாசிப்பது ஏறக்குறைய இல்லை என்றாகிவிட்ட ஒரு சமயம் 'to kill a mocking bird' கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்து தாண்ட முடியாத பத்தம்பது பக்கங்களுக்குப் பிறகு 'வேண்டாம் போ' என்று விலக்கி வைத்தது 'அவ்வளவுதானா?' என்று கேட்டது. ரொம்ப லேட்டா தொடங்கி சீக்கிரம் முடிந்து விட்டதோ நமது ஆங்கில வாசிப்பு என்று தோன்றியது. சென்னை வந்ததில் இதுவும் ஒரு பெரிய மாற்றம். வெளியே இருந்த போது வாசிக்க தமிழ் புத்தகம் எதுவும் கிடைக்காத கட்டாயத்தால் எதேச்சையாக தொடங்கியது ஆங்கில நாவல் வாசிப்பு. இப்போதான் தமிழே வேண்டியமட்டும் கிடைக்கிறதே என்று அதிகம் வாசிக்காமல் இருந்தாலும், பழக்கம் விட்டதில் கொஞ்சம் வருத்தம்.

75% வரை தள்ளுபடி என்று ஆசை காட்டிய சென்னை oxford... பேருக்குத்தான் 75%... அந்த பகுதி எங்கே என்றே பார்க்கவில்லை! வழக்கமாக இழுக்கும் தலைப்புகள் பகுதியில். இதற்கு முன்னாலேயே பார்த்தும் வேண்டாம் என்று விட்ட Women & Men in my life - Khushwant singh... இந்த முறை மறுக்க முடியவில்லை. அவருடைய ஆட்டோபயாகிரபி, death at my doorstep எல்லாம் படித்து முடித்ததில்... என்னவோ எனக்கு அவரைப் பற்றி எல்லாம் தெரியும் என்ற தோணல். அதனாலேயே இதை வாசிக்கத் தொடங்கியதும்... மற்றபடி அதிகம் கேட்டிராத பொது வாழ்கை மனிதர்களை, அவருடைய புத்தகங்கள் மூலம் மட்டுமே அறிந்திருந்த அதே மனிதர்களைப் பற்றிய செய்திகளை கொஞ்சம் மாற்றங்களோடு இன்னொரு முறை கேட்பது... வீட்டில் இருக்கும் வயதானவர்கள் சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்பச் சொல்வது போல! மனுஷனுடைய எழுத்து சுவாரசியதினாலே எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.

இந்த புத்தகத்தை எழுதியதில் கோவித்துக் கொண்டு கொஞ்சம் பேர் 'உன் பேச்சு கா' விட்டுப் போய் விட்டதாகவும், வெளிப்படையாக சொன்ன நேசத்தில் கொஞ்சம் பேர் ரொம்ப சந்தோஷப் பட்டதாயும், என்ன எழுதியிருக்கு என்று படித்துப் பார்க்காமலேயே சிலர் மறுதலித்துப் போனதாயும் முன்னுரையில் சொல்கிறார். புத்தகத்தில் பெண்களைப் பற்றி எழுதியிருப்பதில் சொட்டுவது தனி ரசம்... குஷ்வந்த் சிங் ரக ரசம்! அனுபவித்து எழுதிருப்பதால் வாசிக்கும் போது அந்த பிரியம் அப்படியே உள்ளே இறங்கிவிடுகிறது.

வயது வித்தியாசமில்லாமல், இன்ன உறவு என்று சொல்ல முடியாத நேசத்தில், ஏதோ ஒரு விதத்தில் பாதித்த, வெவ்வேறு காலகட்டத்தில் சந்தித்த பெண்கள்... பெண்கள்... பெண்கள். கொஞ்சம் ஆண்களும்! நல்லதையும் கெட்டதையும் தாட்சண்யமில்லாமல் சொல்லிப் போகிறார். வெறும் மனசைத்
தான் பார்த்தேன் என்ற மழுப்பல்கள் இல்லாத 'பிந்தாஸ்' குறிப்புகள். தைரியம், சாமர்த்தியம், வெகுளித்தனம், திருட்டுத்தனம், mysterious... எல்லாமாய் பிடித்தவர்கள்.

சில வரிகள்....

'You Know how much weight i have shed? look.' She turned, pointing to her bare midriff. 'All gone. And dont u tell me slimming down does not suite me.'....... I have been to Bombay many times since but have not had the courage to call on her. I want to preserve the image of the Devyani Chaubal I had known: fat, full of life, malicious gossip, mimicry and a zest for life.

The lady persisted, 'Never mind the age difference, you still look like a married couple.' I slipped out of the dining hall and went to bed without dinner. After the compliment I didnt need any. I was little worried about how the rest of Nirmala's family would take that faux pas.

If this was true (men's gossip is less reliable than woman's) love formed very little part of Amrita's life. Sex was what mattered to her. She was a genuine case of nymphomania, ....

She put on her tape recorder at full blast, sang with it and talked at the top of her voice. I almost went round the bend and pitied her husband who had to put up with such exuberance every day.

ஆண்களைப் பற்றிய மீதிப் பாதி புத்தகம் கொஞ்சம் நியூஸ் ரீடிங் போல! மற்றபடி, ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம். முடித்த கையோடு ரொம்ப நாள் பெண்டிங் 'one hundred years of solitude' படிக்க வைத்ததில் குஷ்வந்த் சிங் பங்கு அதிகம். கொல்கத்தா வந்து, போன சனிக்கிழமை அவருடைய வழக்கமான column வாசித்ததும் இடையில் கொஞ்சம் தொய்ந்து போயிருந்த குஷ்வந்த் சிங்குடனான உறவு மறுபடியும் அதே போலாகி விட்டது.

தலைப்புதான் ரொம்ப தூண்டுகிறது... என்னையும் 'எழுதேன்' என்று! எப்போதாவது செய்யனும்.

Tuesday, April 03, 2007

The Namesake - Mira Nair


சுமார் ஒன்றரை வருடம் முன்பு இந்தப் படம் எடுப்பதற்காக மீரா நாயர் கொல்கத்தா வந்திருந்ததும் ஸ்டார் காஸ்டிங்கிற்காக நடந்த அமளிகளும் வாசித்த நினைவிருக்கிறது. வந்த ஒரு வாரமாய் ஒரு நல்ல பெங்காலி படம் பார்க்கக் கிடைக்காதா என்ற ஒரு அதிக முனைப்பில்லாத தேடலுக்கு பின் பெங்காலி சாயல் அடிக்கும் இந்தப் படம் வாய்த்தது. வழக்கம் போல இப்பவும் இது போல படங்கள் பார்க்க வரும்... எப்படிச் சொல்ல?!... கொஞ்சம் புத்திசாலி களை, வயது வித்தியாசமில்லாமல்...ம்ம்ம்... ஒரு sophisticated crowd. அங்கங்கே இளசுகளின் கெக்கேபிக்கே சிரிப்புகள் மெல்ல தலைகாட்டி, அதிலேயே ஷ்ஷ்ஷ்ஷ்... சொல்லி அடக்கிய குரலைத் தொடர்ந்து, அமைதியான சூழல். சென்னையில் சமீபகாலங்களில் பார்க்க நேர்ந்த படங்கள் எல்லாமே... ஏன் Water படத்தில் கூட அனாவசிய சத்தம் செய்து கொண்டிருந்த மக்களை நினைத்து ஏமாற்றமாயிருந்தது. நாம் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது!
ஜும்பா லாஹிரியின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இர்பான் கான், தபு கச்சிதமாக பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார்கள். அச்சுஅசலான கொல்கத்தா, அந்த மனுஷங்கள், 'ஏ' ந்னு இழுத்து பேசும் பேச்சு... தபு சொல்லும் போது ஒரிஜினல் பெங்காலி தோற்றுப் போகணும்! கொல்கத்தாவிற்கும் அமெரிக்காவுக்கும் மாறி மாறி பயணிக்கும் கதை... இது போல கலாச்சாரங்களுக்கிடையே நடக்கும் கதைகளை நிறைய பார்த்தாகிவிட்டதென்றாலும் இது கொல்கத்தா என்பதால் நெருக்கமாக உணர முடிந்தது.
பெரும்பாலான படங்களில் பார்க்கும் புத்தகம் வாசிப்பில் அதிக ஆர்வமுள்ள ஒரு கேரக்டர் இங்கேயும், அப்பாவாக. எத்தனை வருடங்கள் ஆனபோதும் வேர்களை விடாத, பெங்காலி ஜனங்களோடு அதிகம் புழங்கும் டிபிகல் அம்மா கேரக்டர், கலாச்சாரங்களுக்கு நடுவே திண்டாடும் பிள்ளைகள்... எழுபதுகளில் நடக்கும் கதையென்று சொல்வதால் நிறைய கேள்விகள் முடங்கிப் போகின்றன. Gogol என்ற பெயரைச் சுற்றி நிகழும் விஷயங்கள்... எல்லாமே உணர்வுபூர்வமாக.
மற்றபடி புதிதாக ஒன்றும் இல்லை. வலிய திணித்த ஆக்ராவைத் தவிர்த்தால், இன்னும் கொஞ்சம் என்று ஆர்வத்தைத் துண்டும் கொல்கத்தா, அதன் நிறம், கூச்சல், நெரிசல், சங்கீதம்... எல்லாமே. 'யதார்த்தமாய்' என்பதில் வரும் படுக்கை அறைக்காட்சிகள்... உறுத்தியதா என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் படம் எனக்குப் பிடித்திருந்தது!