Wednesday, March 29, 2006

கொல்கத்தா சங்கதிகள் - 1

கொல்கத்தா காளிகாட்... நான்கைந்து முறை போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அனுபவம் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருந்திருந்தது. வண்டியை விட்டு இறங்கும் போதே தூரத்தில் நான்கைந்து கூட்டமாய் நிற்கும் பண்டிட் கும்பலால் அளக்கப்படுவோம். அவர்களில் ஒருவர் வந்து அவசரமாகப் பேச ஆரம்பிப்பார்... 'நான் கோவில் பண்டிட். பிராமின்... வேணாப் பாருங்க... உள்ளேயிருந்து பூணலை எடுத்துக் காமிப்பார். க்யூவிலயெல்லாம் நிக்க வேண்டாம். நான் தரிசனம் செய்து தருகிறேன். வெறும் இருபது ரூபாய் தான்' என்பார். இதற்கு கொஞ்சம் மசிவது போலத் தெரிந்தால் உடனே அவருக்கென்று இருக்கும் கடைக்குக் கூட்டிப் போவார். அங்கே போனதும், 'செருப்பை இங்கேயே விட்டு விடலாம்', என்று சொல்லி கூட்டி வந்த பண்டிட் விலகிக் கொள்ள கடைக்காரர் பொறுப்பெடுத்துக் கொள்வார். 'பிரசாதம் வாங்கிட்டுப் போங்க... வெறும் இருபது ரூபாய் தான்' என்பார். மறுப்பு எதுவும் சொல்லாமல் இருக்கிறோமென்றால் ஒரு கூடையை கையில் திணிப்பார்.
அதில் பிரசாதப் பொட்டலம், ஒரு செம்பருத்தி மாலை... இப்பவும் எதுவும் பேசவில்லையென்றால் ஒரு தேங்காய், அரக்கிலோ மண்ணிலோ ஆன இரண்டு சிவப்பு வளையல்கள் (கொஞ்சம் கோணல் மாணலாயிருக்கும்)... அவ்வளவுதானென்று நினைக்கிறேன்... இதையெல்லாம் கையில் திணித்து விட்டிருப்பார். இதெல்லாமே ஒரு அவசரத்தில் நடந்திருக்கும். என்ன ஏதென்று யோசிக்கவெல்லாம் நேரமிருந்திருக்காது.

இப்போது கடைக்காரர் விலகிக் கொள்ள மறுபடியும் பண்டிட் வந்து சேர்ந்து கொள்வார். வேக நடையில் கூட்டிக் கொண்டு போவார். கடைசி ஆள் யாரு... எங்கேயிருந்து வருகிறது என்று தெரியாத ஒரு நீளமான க்யூ நகர்ந்து கொண்டிருக்க நம்மை வேறு வழியில் கூட்டிக் கொண்டு போவார். வழியென்னவோ அந்த வரிசைக்குப் பக்கத்திலேயேதான் இருக்கும். இதோ இப்போ இவர்களெல்லாம் 'ஏன் குறுக்கு வழியில் போறே'ன்னு கூச்சல் போடப் போகிறார்கள் என்ற பதட்டத்தோடு தான் நுழைவோம். ஆனால் அதெல்லாம் எதுவும் நடக்காது. சிகப்புக் கொடி தூக்கும் கொல்கத்தாவா இது என்று சின்ன ஆச்சர்யம் வந்து போகும்.

பண்டிட் கூட்டிப் போகும் இந்த வழியின் வாசலில் ஒரு காக்கிச்சட்டைக்காரர் நின்றிருப்பார். ரொம்ப அவசரமாக நமக்காக நகர்ந்து வழிவிடுவார். படியேறி ஒன்றிரண்டு திருப்பத்திற்கு பிறகு அப்பிக் கொண்டு நிற்கும் மனிதர்களோடு ஒரு சின்ன வாசல் பக்கவாட்டில் தெரியும். இங்கே போய் எப்படி தரிசனம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் நம்மைக் கூட்டி வந்தவர் ரொம்ப லாவகமாக அழைத்துப் போவார். நாம் இரண்டு பேராகட்டும், இல்லை நாலு பேராகட்டும்... எல்லோரையும் சேர்த்தணைத்து அந்த சிறிய வாசலுக்குக் கொண்டு போய் விடுவார். வாசலில் இரண்டு பக்கமும் நான்கைந்து பூசாரிகள்... அதில் ஒன்றிரண்டு பேர் மேலே தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு அசௌகரியமாக போஸில் ஊஞ்சலாடிக் கொண்டே வருபவர்களின் பிரசாதங்களை உள்ளே அனுப்புவதிலும் திரும்ப வாங்கிச் சேர்ப்பதிலும் கவனமாயிருப்பார். கூடவே 'இஷ்டப்பட்ட தட்சணை குடுத்துட்டுப் போங்க... ஐநூறோ ஆயிரமோ' என்று கூவி, பத்து ரூபாய் கொடுத்தாலும் சின்ன சலிப்போடு வாங்கிக் கொண்டு ஒரு செஞ்சாந்துப் பொட்டு வைத்து அனுப்பிவிடுவார்.

இது முடிந்ததும் நம்மை கூட்டிப் போன பண்டிட் வேகமாக சன்னதிக்கு முன்னால் இருக்கும் ஒரு மண்டபத்திற்கு அழைத்துப் போவார். அங்கே ஒரு மூலையில் அதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் நம்முடைய கூடையை ஓப்படைப்பார். அவர் ஏதோ மந்திர முணுமுணுப்பிற்குப் பிறகு அந்தத் தேங்காயை உடைத்து, ஊதுபத்தியை கொளுத்தி கொஞ்சம் தள்ளி ஒரு இடத்தில் குத்தி வைக்கச் சொல்வார். இது எல்லாமே ரொம்ப சிரத்தையோடு நடக்கும். நாமும் மறுக்கத் தோணாமல் திடீரென்று முளைத்த பயபக்தியோடு அவர் சொன்னபடியெல்லாம் செய்து கொண்டிருப்போம். தேங்காய் உடைத்தவரிடமிருந்து விடை பெறப் போகும் போது அவருக்கு கொடுக்க வேண்டிய தட்சணையை கூட்டிப் போன பண்டிட் நினைவு படுத்துவார். 'அவர் இருபது வருஷமாக வெறும் பழம் மட்டும் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்' என்று சொல்லி முடிக்கும்போது தேங்காய்
உடைத்தவர் ஐநூறு ரூபாய் கொடுக்கச் சொல்லிக் கேட்பார். இவரும் பத்து ரூபாயை மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொள்வார். ம்ம்ம் சொல்ல மறந்து போனேன்... அந்த வழி விட்ட காக்கிச் சட்டைகாரருக்கு திரும்ப வரும் போது ஒரு பத்து ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.

இத்தோடு முடிந்தது. பண்டிட் அதே வேகத்தோடு நாம் செருப்பு விட்டிருந்த கடைக்குக் கூட்டி வருவார். செருப்பை போட்டுக் கொண்டு அந்தக் கூடையைத் திருப்பிக் கொடுக்கும் போது கடைக்காரர் அவசர அவசரமாக ஒரு அட்டையில் கணக்குப் போட ஆரம்பிப்பார். அந்த பிரசாதம்... வெறும் இருபது அதெல்லாம் அந்த கூடையில் இருந்த ஒரு சின்ன பொட்டலத்தின் விலை. பூ மாலை, தேங்காய், வளையல் எல்லாமாய் சேர்த்து நூற்றைம்பது, இருநூறு ருபாய் என்று சொல்வார். காரசார விவாதம், கொஞ்சம் சாமி பெயரைச் சொல்லி பயங்காட்டல் எல்லாம் முடிந்து வெளியே வரும் போது மிஞ்சியிருப்பது வெறுப்பா, ஏமாற்றப்பட்டதா என்று சொல்ல முடியாத ஒரு கலவையாயிருக்கும்.

அன்றைக்கும் இதையெல்லாம் எதிர்பார்த்திருந்தாலும் காளிகாட் வேறு முகம் காட்டியது. முதலில் வந்த பண்டிட் கதையெல்லாம் கேட்ட பின் 'எனக்கு பிரசாதம் பூஜை எதுவும் வேண்டாம். வெறும் தரிசனம் மட்டும் செய்து வைக்க முடியும்னா வரேன்' என்று சொல்ல, காளியை வெறும் கையோடு பார்க்க போகாதே என்ற பயங்காட்டல், கெஞ்சல் கொஞ்சல் எதுவும் பலிக்காமல்... 'போ... நீயே போய் பாத்துக்கோ' என்று வெறுப்போடு விலகிக் போக இன்னொரு பண்டிட் வந்து அவருடைய பல்லவியை ஆரம்பித்தார். சரி பிரசாதம் எதும் வாங்க வேண்டாம் இங்கே வாங்க என்று ஒரு கடைக்குக் கூட்டிப் போய் ஒரு எவர்சில்வர் பேசினில் வைத்திருந்த தண்ணீரைக் காட்டி, 'இது கங்கா ஜல்... கை கழுவிக்கோங்க' என்றார். ஐயா பண்டிட் அளக்காதீரும் என்று நினைத்துக் கொண்டே கழுவி முடிக்க, பிரசாதம் வேண்டாம்... வெறும் தேங்காயாச்சும் வாங்கிக்கோங்க. இல்லைன்னா காளி...' இன்னொரு முறை பயங்காட்டலை கேட்கப் பொறுமையில்லாததால் அவரை அங்கேயே கழட்டி விட்டு நடக்கத் தொடங்கியிருந்தேன்.

முடிந்தால் காளியைப் பார்த்து போயிட்டு வரேன்மா பொண்ணேன்னு சொல்வது, முடியாவிட்டால் சும்மா ஒரு சுற்று சுற்றிவிட்டுப் போய்விடலாம் என்று தான் உள்ளே போயிருந்தேன். அதற்குப்பின் வழிமறித்த பண்டிட்களை உறுதியான ஒரு வேண்டாமில் விலக்க முடிந்தது. வழக்கமான பாதையை விட்டு நடக்க ஆரம்பித்ததில் காளியைத் தவிர நான்கு கோவில்கள் இருப்பது தெரிந்தது. ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே பின்னால் போக ரத்த சகதியில் தலை வேறு உடல் வேறாய் கிடந்த ஒரு கறுப்பு ஆடும், அதற்கு இடது பக்கத்தில் ஒரு பலிபீடமும். குங்குமமா இல்லை ரத்தமா என்று தெரியாத ஒரு சிவப்பு கசகசப்பு, தாறுமாறாய் கிடந்த மாலைகள், இரண்டாய் மடிந்து கும்பிடும் மனிதர்கள்... இதையெல்லாம் நான் இத்தனை நாள் பார்த்ததில்லை! விரிந்த கண்களும் கொள்ளை கொள்ளையாய் ஆச்சர்யத்தோடும் பத்து நிமிஷம் அங்கேயே குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருந்தேன். வெட்டிக் கிடந்த ஆட்டுக்குப் பக்கத்தில் மார்கெட்டில் பார்க்கும் ஒரு கறிக்கடை செட்டப். வெட்ட மரத்துண்டும் பெரிய கத்தியுமாய் ஒன்றிரண்டு பேர் இதற்கு முன் வெட்டிய ஆட்டை துண்டுகளாக்கிக் கொண்டிருந்தார்கள். காளிகாட்டில் இதை நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. கோவிலில் இப்படி வெட்டிக் கிடக்கும் என்று சுத்தமாய் தெரியவில்லை. 'சாமி கும்பிட வந்த பக்தியையும் காணோம். என்ன தான் செய்யறே இங்கே?' என்ற கேள்வி ஒன்றிரண்டு கண்களில் தெரிய வேறு வழியில்லாமல் அங்கிருந்து நகர வேண்டியதாயிற்று.

விசாரித்து நேரே போய் நின்றது கோவில் அலுவலகத்தில் தான். நெஞ்சில் இடிக்கும் அந்த செங்குத்துப் படிகளில் ஏறிப் போய் ஒரு பரபரப்பான கோவில் அலுவலகத்தை எதிர்பார்த்த என்னை வரவேற்றது மொத்தமே இரண்டு பேர்தான். கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே என்று கேட்டதும் 'நீங்கள் எழுத்தாளரா?' என்று கேட்டு சிலிர்க்க வைத்த பெரியவருக்கு நன்றி. வலைப்பதிவு கதையெல்லாம் சொல்ல, சுத்தமாய் புரியாத போதும் சிரத்தையாய் கேட்டு என்னை கோவிலின் முன்னாள் ட்ரஸ்டியிடம் அனுப்பி வைத்தார். கோவிலுக்கு வந்தோமா சாமி கும்பிட்டோமா என்று போகாமல் இப்படி கேட்க வந்தாலே எங்கயாச்சும் எழுதத்தானாயிருக்கும் என்பது யாரும் யூகிக்கக் கூடியதுதான் என்று அப்புறம் புத்தியில் உரைத்தாலும் எழுத்தாளரா என்று கேட்ட நிமிஷம் வந்த சந்தோஷம்... சந்தோஷம் தான்.

கோவிலுக்கு பின்னாலேயே இருக்கிறது முன்னாள் ட்ரஸ்டி திரு. அம்யோ குமார் ஹல்தார் அவர்களின் வீடு. கூட்டி போனவர், 'இன்னார் அனுப்பி வைத்தார். கோவிலைப் பற்றி கேட்கிறாங்க' என்று சொல்ல, அந்தப் பெரியவர் கண்ணில் நூறு கேள்விகள். கொஞ்சம் கேட்டும் வைத்தார். யார், என்ன என்ற விவரமெல்லாம்
கேட்டுக் கொண்டு, 'கோவிலைப் பற்றி இப்படி திடீரென்று கேட்டால் எப்படி? ஒரு நாள் ஒதுக்கிக் கொண்டு வாங்க. நிறைய இருக்கு' என்று விரட்டி விடும் தொனியில் பேச ஆரம்பித்தவர் கொஞ்ச நேரத்தில் இளக ஆரம்பித்தார்.

ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை எடுத்தும், மேசை மேலிருந்த பெங்காலி புத்தகங்களையும் காட்டிச் சொன்னது...

வங்காளத்தைக் கைப்பற்ற அக்பரால் அனுப்பப்பட்ட மான்சிங், குடிசையாய் இருந்த இந்த கோவிலைப் பார்த்திருக்கிறார். பெரிதாகக் கட்டி நிர்வாகம் செய்வதற்காக 595 பிஹா(bihas) நிலத்தை கோவிலுக்காக அளித்திருகிறார். (பிஹா என்ற அளவை அவர் விளக்கிச் சொல்ல முயன்றது எனக்குப் புரியவில்லை.) 1799 ல் கட்டத் தொடங்கிய கோவில் கட்டும் பணி 1809 ல் முடிந்தது. கோவில் நிர்வாகம் 800 ஜன்சேவாயத்துகளின் பொறுப்பில். இன்றைக்கும் ஒவ்வொரு நாள் பொறுப்பு ஒவ்வொருவருக்கு. காலை நான்கு மணிக்கு தொடங்கும் பூஜையிலிருந்து இரவு மூடும் வரை கோவிலின் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டியது அன்றைய ஜன்சேவாயத் வேலை. கோவிலைச் சுற்றியும் அவர்களுக்கு வசிக்க இடமும், மானியமும் கொடுக்கப் பட்டிருக்கிறது. அன்றைய கோவில் வசூலும் அவருக்கே.

ஒவ்வொரு நாளின் முதல் பலி காளிக்கு. அது ஆடோ, கோழியோ எதுவானாலும் கோவிலுக்கு கொடுத்து விட வேண்டும். அது கோவிலின் சமையலறைக்கு(bhog ghar) போகிறது. அது தவிர மீனும் சாப்பாடுமாய் விருந்து தயாராகி மத்யானம் காளிக்கு படைத்து விட்டு தானமாகக் கொடுக்கப் படுகிறது. கொஞ்சம் அன்றைய ஜன்சேவாயத் வீட்டுக்கும். ஒரு நாள் செலவு சுமார் நாலாயிரம். கோவிலோ ஜன்சேவாயத்துகளோ பலியிடுவதில்லை. வெளியில் இருந்து வரும் பக்தர்கள் பலியிடுவது மட்டுமே. சனிக்கிழமைகளில் அதிகமான அளவில் பலி நடக்கிறதாம். சிலநேரம் இருநூறையும் தாண்டுமாம். அரசாங்கம் இதில் தலையிடுவதில்லையா என்று கேட்டதற்கு, 'இதில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்? பக்தர்களுக்கு நம்பிக்கை. செய்கிறார்கள்' என்றார். தர்ஷண் ஆச்சா என்று கேட்டு இல்லை என்று சொன்னதால் அவருடைய ஆள் ஒருவரோடு அனுப்பி வைத்தார்.

அதே குறுக்குவழி தரிசனம். இது தவிர கீழேயும் ஒரு வழியிருக்கிறது. அது காளியை ரொம்ப பக்கத்தில் பார்ப்பதற்கு. காலைத் தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள். ஆனால் சுமார் நாலடிக்கு நீண்டிருக்கும் தங்க நாக்கை தொடுவதும், தொடாதே என்று பூசாரிகள் கத்துவதும் தவறாமல் நடக்கும். வெளியிலிருந்து எட்டிப் பார்க்க மட்டும் அனுமதிக்கப் பட்ட 'போக் கர்' உள்ளே குமித்து வைக்கப் பட்டிருந்த மீன் வறுவல்... கோவில் சமையல் அறையில் அதை சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. இரண்டாவது முறை பலிபீடத்திற்குப் போன போது சீன ஜாடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த வாலிபன் கட்டாயம் இன்னொரு தரம் வர வேண்டும் என்று
முடிவெடுக்க வைத்தான்.

திரு. ஹல்தார் உடன் நடந்த இரண்டாவது சந்திப்பில் பெரியதாக எதுவும் தெரியவில்லை. மறுபடியும் அதே தகவல்களை முதலிருந்து சொல்லி முடித்தார். நான் கேட்ட ஒன்றிரண்டு கேள்விகளுக்கும் அவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. எண்பத்து சொச்சம் வயதானவரை அதிகம் தொல்லை செய்ய வேண்டாமென்று கோவில் அலுவலகத்திற்கு நடையை கட்டினேன். அந்த சீனர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாரே என்று காமிராவும் கையுமாய் எதற்கும் அலுவலகத்தில் ஒரு வார்த்தை சொல்லி விட்டு எடுக்கலாமென்று போன போது, ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்து அனுமதி பெறாமல் ஆகவே ஆகாது என்று மறுத்து விட்டார். அவசரம்,
ஒரேயடியா ஊரை விட்டுப் போறேன் என்ற கெஞ்சல் எதுவும் செல்லுபடியாகவில்லை. 'இன்னைக்கு வியாழன். எழுதிக் கொடுத்துட்டு போங்க. சனிக்கிழமை வந்து எடுத்துக்கலாம். அப்பவும் பலிபீடத்தையெல்லாம் எடுக்கக் கூடாது' என்று சொல்ல, சனிக்கிழமையா?!... அத்தனை பலிகள்... அந்த நேரத்தில் அங்கே என்ன மாதிரி ஒரு உணர்விருக்கும்... அந்த பக்தி வெளிப்பாடு இதெல்லாம் பார்க்கணுமே என்ற யோசனையெல்லாம், சாமானை மூட்டைக் கட்ட வரேன் என்று சொன்ன பேக்கர்ஸ் வருகையால் முடியாமல் போனது.

எல்லா இடத்திலேயும் எதாவது விட்ட குறை தொட்ட குறை இருக்கணுமே... இல்லாமல் போனால் ஒரு பூர்த்தியும், அதனாலயே நினைவிலிருந்து அகன்று போவதுமாயிடாதா? காளிகாட்டிற்கு ஒரு சனிக்கிழமை காலை விஜயம் பாக்கியிருக்கிறது.

Friday, March 24, 2006

மிஸ் யூ கொல்கத்தா

ஒன்றரை வருட கொல்கத்தா வாழ்கை ஒரு செவ்வாய்கிழமையோடு முடிந்து போனது. கிளம்ப வேண்டும் என்றான போது நூறு கை கொண்டு கொல்கத்தாவை துழாவ வேண்டும் போலிருந்தது. தேடிப் பார்த்த சிலதும் பார்க்க முடியாமல் போனதும், பெங்காலி சினிமாவுமாய் கழிந்த கடைசி நாட்கள். கொஞ்ச வருஷமாய்
கொண்டிருக்கும் வைராக்கியம் விலகி நின்று கைகட்டி வேடிக்கை பார்த்ததும், 'மனுஷங்களோட ஒட்ட மாட்டேன்னு தானே சொன்னே... இப்போ ஊரோட ஒட்டிப் போனியே... பாத்தியா உன்னால இப்பவும் முடியலை'ன்னு சிரித்துக் கொண்டே சொன்னதும் கேட்டது.

ரோட்டிற்கு அந்தப் பக்கம் இருந்து, பார்க்கும் போதெல்லாம் வெறும் புன்னகை மட்டும் பரிமாறிக் கொண்டிருந்த மிஸஸ். எதிர்வீடு (இப்பவும் பெயர் தெரியாது)... திடீரென்று வந்த ஞானோதயத்தில் முந்தின இரவு போயிட்டு வரேன் என்று சொல்லி வரப் போனதும், எங்கெல்லாமோ அலைபாய்ந்த பேச்சு வலைப்பதிவிலும், கொல்கத்தா தேடலிலும் வந்து நின்றதில், 'நாம் முன்னரே சந்தித்திருக்க வேண்டும்' என்று இருவருக்குமே தோன்றியது. இன்னும் பத்து வருஷம் போனால் கையில் எடுத்தாலே உதிர்ந்து விடும் போலிருக்கும் ஒரு இரட்டை தலையணை சைஸ் புத்தகத்தைக் காட்டி, 'பெங்கால் வரலாறு பற்றிய புத்தகம்... என் அத்தை கிட்ட இருந்து எடுத்து வந்தேன். அவங்க கிட்ட இதுமாதிரி நிறைய இருக்கு' என்றுசொன்ன போது புத்தகத்திற்காக இல்லாவிட்டாலும் அந்த பாதையில் நிறைய தூரம் பயணித்திருந்திருக்கலாம் என்றிருந்தது.

மாலை வேளைகளில் மொட்டை மாடியில் நடக்கையில் தெரியும் மேகம், சிகப்பு விளக்கெரியும் தூரத்து டவர், சுற்றியும் முளைத்துக் கிடக்கும் மரம் செடியெல்லாம் பார்க்கும் போது கொல்கத்தாவைப் போலத்தான் இருக்கிறது. முச்சு விடும் சத்தம் கூடக் கேட்கும்... அந்த அமைதிக்காகவே சர்வசுதந்திரமாய் வீடெல்லாம் நடமாடும் குருவிகள் போய் மாறி மாறி நடமாடிக் கொண்டிருக்கும் மகளோ மகனோ இது சென்னை என்று நினைவு படுத்துகிறார்கள். ராத்திரிகளில் திடீரென்று கலையும் தூக்கத்தில் உணரும் வெறுமையை அசை போடும் அனுபவமும் புதிதாய் இருக்கிறது. தடுமாற்றத்தோடு அலைபாயும் பந்து போல உணர்கிறேன். நிதானத்திற்கு வரும் போது அல்லது நிதானத்திற்கு வருவதற்காகவேயாவது மறுபடியும் எழுத ஆரம்பிக்க வேண்டும். சொல்ல கொஞ்சம் கொல்கத்தா கதை இருக்கிறது.