Thursday, December 22, 2016

வீர நாராயணர், பேலூர் மற்றும் ஹலபேடுஎண்பதுகளில் ஒரு ஜூனியர் சிவில் இஞ்சினியரின் ஆபிஸ் வாழ்க்கை என்பது ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் நீள்வது. மொத்த உலகமும் காலை ஒன்பது மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு திரும்பின நாட்களிலேயே எங்களுக்கு இதுதான் வாய்த்தது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை. முக்கியமான கான்கிரீட் இருந்தால் அதுவும் இல்லை. ஆகவே கிடைக்கும் ஒரு நாளை தூங்கிக் கழிப்பார்கள். நமக்கோ பால்காரர், வேலைக்காரம்மா, அக்கம் பக்கம் என்று மிஞ்சிப் போனால் ஒரு பத்து பேரோடுதான் மொத்த வாழ்க்கை. அதுவும் ஏதாவது பெயரே கேட்டிராத ஒரு பொட்டல் காட்டில். அதனாலேயே எங்கேயாவது கூட்டிக் கொண்டு போக மாட்டாரா என்று காத்திருப்பதே வாழ்க்கையாயிருந்தது. அப்படி அந்த ஒரு நாளில் ஏதாவது அக்கம் பக்க ஊருக்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ பிள்ளைகளையும் சுமந்து போய் வந்தால் அந்த சலிப்பு தீரவே காலமாகும். அடுத்த பயணம் அவ்வளவு சீக்கிரத்தில் யோசனையிலும் வராது.

95 ல் அப்பா வாங்கிக் கொடுத்த முதல் மாருதி காரில்தான் எங்கள் ரோட் ட்ரிப்கள் தொடங்கின. அந்த மாருதி 800ஐ இழுத்துக் கொண்டு சுத்தாத இடமில்லை. கோட்டேஸ்வர், நாரயண் சரோவர் பயணத்தில் ஒரு ப்யூஸ் இல்லாமல் நடுக்காட்டில் மணிக்கணக்கில் காத்திருந்தோம். ஒருமுறை மூச்சு தள்ளி பச்சை கூலண்ட் கண்ணாடியில் பீச்சியடிக்க நடு ரோட்டில் நின்று போனது. இன்னொரு முறை ஏன் தான் நின்னியோ என்று தடவிக் கொண்டிருக்க 'அப்பா இங்க ஒரு ஒயர் தொங்குதே'ன்னு மகள் சொன்னதை சரி செய்து பயணத்தைத் தொடர்ந்தோம். அதற்குப் பிறகு கார்கள் மாறின. நீண்ட பயணங்கள் வாய்த்தன.

இன்றைக்கும் எங்களுடைய ரோட் ட்ரிப் ஞாபகங்கள் ஒரு பெரிய சுரங்கம். நினைத்து, பேசித் தீராது. கூகிள் மேப் வசதிகள் இல்லாத காலங்களில் எந்த ஊர்களின் வழியாக என்று விசாரித்தே எல்லா ஊர்களுக்கும் போய் வந்தோம். பைபாஸ் இல்லாமல் ஊருக்குள் நுழையும் போது மட்டும் தடுமாறுவோம். ரைட்டுல என்று சொல்லி இடது கையைக் காண்பித்து வழி சொல்வார்கள். அவர் வார்த்தையை ரெண்டு பேர் பிடித்துக் கொள்ள கையை மீதி ரெண்டு பேர் பிடித்துக் கொள்ள எங்கள் நாலு பேருக்கு இரண்டு வழி சரியென்று தோன்றும். சரியான வழியை தவற விட்ட நேரங்களில் திரும்பியெல்லாம் வந்து விட மாட்டோம். உலகம் சுத்தி வேறு வழியைக் கண்டு பிடிப்போம். எல்லா நேரமும் வழி சொல்பவர்கள் மைண்ட் மேப் போட்டு மூணாவது சிக்னல்ல ரைட் எடுத்து இரண்டாவது லெப்ட்ல போய் மெயின் ரோட்டப் பிடிச்சான்னு சொல்றதுல மூணாவது சிக்னல்ல ரைட் மட்டும் தான் எங்க எல்லோருக்கும் மனதில் பதியும். அங்கே போய் மறுபடியும் வழி கேட்போம். ஊரைவிட்டு வெளியே வரும் போது ஒருவரை ஒருவர் குதறும் மனநிலையில் இருப்போம். கொஞ்சம் நேரத்தில் எல்லாம் சரியாகும்.

சொன்ன நேரத்தில் கிளம்பாததால் பெரும்பாலும் எல்லாப் பயணங்களும் சண்டையில்தான் தொடங்கும். அதுவும் நூறாவது கிலோமீட்டருக்குள் சரி செய்யப்படும். வாய்க்கும் அல்லது ஏய்க்கும் சாப்பாட்டுக் கடைகள், சகிக்க முடியாத கழிப்பறைகள் எல்லாம் பழைய கதையாகிவிட்டது. எல்லா பெட்ரோல் பங்க்களிலும் மோசமில்லாத கழிப்பறைகள் இருக்கிறது. ட்ரிப் அட்வைசர் சகலத்துக்கும் லிஸ்ட் கொடுக்கிறது. இண்டு இடுக்கில் இருக்கும் உணவகங்களை மேப்பில் தேடிப் போக முடிகிறது. முன்பெல்லாம் பயணங்கள் பூராவும் கண்களை பாதையிலே நட்டு வைத்திருப்பதால் சின்னச் சின்ன சுவாரசியங்களாய் நிறைந்திருக்கும். ஏதாவது ஒரு வளைவு முன்னெப்போதோ எங்கேயோ போன பாதையை நினைவு படுத்தும். நடுவில் வரும் ஊர்களால் நேரம் விரயமானாலும் ஒவ்வோரு ஊருக்குமான காட்சிகளால் நிறைந்திருக்கும். இப்போது ராஜப்பாட்டைகளெல்லாம் நீண்ட நெடும் சாலைகள். சிறிய ஊர்களை தொடுவதேயில்லை. ஊருக்குள் நுழைந்தால் மேப்பில்லாமல் வேலையாவதில்லை. ஓட்டுபவருக்கு வழி சொல்வதில் ஊரை ரசிக்க முடிவதில்லை. சௌகரியங்கள் எப்பவும் சுவாரசியங்களைத் தான் விலையாக்குகிறது.
 
ஒரு கட்டத்திற்கு மேல் இப்படி ஏற்பாடுகளோடு செல்லும் பயணங்களில் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் போனது. மனம் போன போக்கில் போவதும், கிடைக்கும் இடத்தில் தங்குவதும் சுவாரசியமாய் இருக்கும் என்று தோன்றத் தொடங்கியது. ஆனாலும் இவையெல்லாம் என் மண்டையில் மட்டுமே உதிக்கும் விஷயங்களாய் இருந்ததால் மொத்த குடும்பமும் அய்யோ அதெல்லாம் சரிப்படாது என்று கூச்சலிட்டு மறுத்ததாலும் முயற்சித்ததில்லை.

இந்த முறை எதிர்ப்பு தெரிவிக்கும் இரண்டு டிக்கெட்டுகளும் இல்லாததும் முந்தின இரவுதான் முடிவு செய்ததாலும் எந்த ஏற்பாடும் செய்திருக்கவில்லை. பேலூர் ஹளபேடு போகலாம், பெங்களூரில் தங்கலாமென்று யோசித்தது அங்கிக்கே சுத்தி சிக்மங்களூர் போகலாமென்று முடிவு செய்து படுக்கும் போது இரவு மணி பத்தரை. ஆடி அசைந்து  சென்னையிலிருந்து கிளம்பும் போது காலை மணி பத்து. சென்னையை விட்டு வெளியே வரவே பதினொன்றானது. பெங்களூரில் உள்ள நண்பர் ஒருவரிடம் தங்குமிடத்தை விசாரித்து வைக்கச் சொல்லியிருந்தோம். மாலை நாலரை மணிக்கு அவரைப் பார்த்த போது, அங்க நல்ல இடமெல்லாம் இருக்குமே என்று சாதாரணமாகச் சொன்னார். அப்போது ஆரம்பித்தது தேடும் வேலை.

நாடோடிப் பயணமெல்லாம் ஆசைப் பட்டாலும் சுத்தமான படுக்கையும் மற்ற வசதிகளும் இல்லாத இடமெல்லாம் ரெண்டு பேருக்குமே வேலைக்காகாது. ட்ரிப் அட்வைசர் சொன்ன இடமெல்லாம் வார இறுதி, காலியில்லை. ஹோட்டல் விட்டு ஹோம் ஸ்டே தேடலும் அதே நிலமை. நண்பர்களை விசாரித்து பதில் வருவதற்குள் நல்லவேளையாக Coffee Tranquil ல் இடம் கிடைத்தது. எப்படி இருக்கும் என்னென்ன வசதிகள் எதுவும் தெரியாது. வேறொரு ஹோம் ஸ்டேயில் இடமில்லாததால் பரிந்துரைத்தது. நேரமாகிவிட்டது. வேறு வழியில்லை என்று ஒருநாளுக்கு மட்டும் புக் செய்து போய் சேர்ந்தோம். இரண்டு நாளும் அங்கேயே இருந்தோம்.

ஊருக்கு வெளியே காப்பித் தோட்டத்துக்கு நடுவே ஏர்டெல் போன் சிக்னல் மட்டுமே கிடைத்த, முறையாக பராமரிக்கப் பட்ட அமைதியான பங்களா.  இந்த மாதிரி இடங்களில் எல்லாம் ஹோட்டல்களை இனிமேல் முற்றாக தவிர்த்து விட வேண்டும். காலையில் பறவை சத்தம் கேட்டு விழிக்கலாம். எழுந்ததும் மொபைல் போனில் மோனத்திலிருக்க வேண்டாம். காலாற நடக்கலாம். வாசமான காபி. நல்ல மலைநாட்டு (malnad cuisine) வீட்டுச் சாப்பாடு.இருந்த ரெண்டு நாளில் ஒரு நாள் சிருங்கேரி. புகைப்படத்தில் பார்த்து ரசித்த காலை நேர சிருங்கேரி வாய்க்கவில்லை. டூரிஸ்ட், பக்தர்கள் நெரிசலிடும் மாலை நேரம்தான். நடுவில் இருக்கும் புராதன கோவிலை காணாமலடிக்கும் முயற்சிகள் நாலாப் பக்கமும் நடந்து கொண்டிருக்கிறது. பெரிய பீடத்தின் மேல் நீள் வட்டக் கோவில். வேலைப்பாடுகள் எதையும் ரசிக்க விடாத கூட்டம். சுற்றிலும் புதிது புதிதாக எழும்பிக் கொண்டிருக்கும் பளபளக்கும் சன்னதிகள், கட்டிடங்கள். ஒரு கோவில் தரிசனம் ஆனது. மனதில் இருந்து, தேடி வந்தது என்னவோ இதுவல்ல.


எங்களுடைய பேலூர் ஹலபேடு பயணம் பற்றிக் கேள்விப்பட்ட Coffee Tranquil பெண்மணி சொல்லிப் போன வீர நாராயணன் கோவில், தேடாமல் கிடைத்தது. பனிரெண்டு மணிக்கு சென்னை வார்தாவின் மிச்சங்கள் தூரலாய் மென்குளிராய் நிறைந்திருக்க நாங்கள் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்த போது இருந்த ஒரு குடும்பமும் கிளம்பிக் கொண்டிருந்தது. கோவிலில் கரெண்ட் இல்லை. ஜெனரேட்டரில் தேவைக்கு மட்டும் ஒளிரும் விளக்குகள் . தொள்ளாயிரம் வருட பழைய கோவில். ரெண்டு ஆள் சேர்ந்தால்தான் கட்டிப் பிடிக்க முடியும் மாக்கல் தூண்கள், ஒன்று போல் ஒன்றில்லை. எதிர் எதிர் தூண்கள் கூட ஒன்று போல் ஒன்றில்லை. லேத்தில் கடைந்த மரம் போல ஆழ்ந்த கூர்மையான பள்ள வரிகள். சிலதில் நுணுக்கமான வேலைப்பாடுகள். நாலாபுறமும் இருள் சூழ்ந்திருக்க லேசான மழைச் சத்தப் பிண்ணனியில் கர்ப்பகிருஹம் மட்டும் ஒளிர்ந்திருக்க வீர நாராயணரையும், ஒரு குழலூதும் கண்ணனையும், உட்கார்ந்த நிலையில் ஒரு உக்கிர/யோக நரசிம்மரையும் பார்க்கத்தான் இந்த மொத்தப் பயணமும் வந்தேன் என்றிருந்தது. இன்னொரு முறை இந்த மழையும், இந்த இருளும் ஆளில்லா அமைதியும் ஒன்று கூடப் போவதில்லை. அதுவரை ஹொய்சாள சிற்ப வேலைப்பாடுகளை கண்ணால் பார்க்கத் தொடங்கியிருக்கவில்லை. அந்த மஞ்சள் வெளிச்சத்தில் சாளக்கிராமக் கல்லில் நுணுக்கி நுணுக்கி இழைத்த  ஆள் உயர வீர நாராயணரும், கிருஷ்ணரும், நரசிம்மரும் நிறைந்த அளவு அதன்பின் அன்றைய தினம் பார்த்த அதி உன்னதங்கள் நிறைக்கவில்லை. 
ஹலபேடு பேலூரெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட நினைப்பதே வீண்வேலை. ஹலபேடுவில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிற்பங்களில் முக்கால் மணி நேரத்தில் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது என்று சொல்லும் கைடின் தன்னடக்கம் நமக்கு நுழைவாசல் மேல் சிற்பத்தைப் பார்க்கும் போதே வந்து விடுகிறது. குருடனைப் போல் யானையைக் கொஞ்சமே கொஞ்சம் தடவி விட்டு வந்தோம். மாக்கல் என்பதால் அதீத நுணுக்கம் சாத்தியமாகியிருக்கிறது. அதனாலேயே நிறைய சிதலமாயிருக்கிறது. இயற்கையும் போர்களும் சிதைத்த மிச்சங்கள். இப்போது சரியான பராமரிப்பில் இருக்கிறது.

பேலூரையும் அன்றே பார்க்காமல் இருந்திருக்கலாம். ஒரு நாளுக்கு இத்தனை அற்புதங்கள் ரொம்ப அதிகமாகி விடுகிறது. அஜந்தா எல்லோராவிலும் இதுவே நிகழ்ந்தது. இதெல்லாம் இனியொரு முறை இப்படியல்லாமல் என்றெல்லாம் இப்போது தோன்றுவதில்லை. விரிந்து கிடக்கும் உலகத்தில் இங்கே இத்தனைதான் கிடைத்தது என்ற திருப்தி மட்டும் கொள்ள வேண்டியிருக்கிறது. 


Wednesday, August 17, 2016

காசி - 2016முதல்முறையாக காசி வந்த போது அழுக்கும் கசகசக்கும் கூட்டத்தையும் தாண்டி ஒரு படகுப் பயணத்தில் தான் அதன் புராதனம் தீண்டியது. ஒரு போதியைப் போல நின்று, நானா அழுக்கு! உன்னை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருப்பேன் என்று கேட்ட போது அந்த எத்தனையில் இருந்த பிரமிப்புதான் முதல் கண்ணி. அதற்குப் பிறகு என்ன தேடுகிறேன் என்றே தெரியாமல் ஒவ்வொரு தடவையும் வந்ததும் ஒவ்வொரு தடவையும் எதையாவது புதிதாகப் பார்த்து அதையே இன்னும் விஸ்தாரணமாக பார்க்க இன்னொரு முறையென்று... என்னையும் என் காசி பயணங்களையும் தெரிந்தவர்களுக்கு ஒரு மெல்லிய சலிப்பு தொனிப்பது நன்றாகவே தெரிந்த போதும் நான் வந்து கொண்டுதான் இருக்கிறேன்.

சென்ற முறை வந்து சென்ற போது அடுத்த காசி பயணம் என்பது படித்துறையில் நேரம் காலமில்லாமல் உட்கார்ந்திருப்பதும் சலிக்காமல் கங்கையைப் பார்த்திருப்பதுமாய் இருந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பே கங்கைக் கரையில் ஒரு இடம் பார்த்து வைத்து கிளம்பத் தோதுவான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். ரெண்டு ஜன்னல் வைத்து படுக்கையிருந்து பார்த்தாலே கங்கை தெரிவது போல. ஒரு மாலையில் வந்து சேர்ந்த போது அந்த இடம் நான் யோசித்த மாதிரியே இருந்தது. கங்கை மட்டும் தான் நான் இதுவரை பார்த்ததெல்லாம் எதுவுமே இல்லை என்பது போல இந்தக் கரை அறை சுவர் வரைக்கும், ஆழத்தில். எதிர்க்கரை எங்கேயோ தொலைதூரத்தில். பெருக்கெடுத்து ஓடும் நதியைக் கேள்விப்பட்டிருக்கிறேன். கங்கையை கடலாகப் பார்ப்பேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. 
 
 
விடுதிக்காரர் சொன்னது, நீங்க கேட்டது முன்னூறு வருடப் பழமையான அறையென்று. இருக்கும் தான். எண் கோணத்தில் கருங்கல்லால் கட்டப் பட்டு மேலே ஒரு டோம் வைத்து, ரெண்டு ஜன்னல்களும் திறக்காமல் இறுகிப் போயிருந்தது. பால்கனி கதவைத் திறந்தால் ஒற்றைப் படிக்கட்டும் ஒன்றரை அடி வராந்தாவும் அதே ஒன்றரை அடி உயரத்தில் ஒரு சுற்றுச் சுவரும். அறையின் தரையிலிருந்து சற்றே நீட்டினால் காலை அந்தச் சுற்றுச் சுவரில் வைத்து விடலாம். வைத்து ஒரே தாண்டாகத் தாண்டி குதிக்க வேண்டுமென்ற ஆவலும் வராமலிருக்கவில்லை. கண்ணுக்கெட்டின தூரம் வரையில் தண்ணீராய், சிறு வேகத்தில் நகர்ந்து கொண்டேயிருக்கும் நதியைப் பார்க்கும் போது ஒவ்வொரு சமயமும் ஒவ்வொன்றாய் தோண்றியது. ஒருவகையில் இது சுய தரிசனம். சில நேரங்களில் அதில் மூழ்கிப் போவோமென்று. சில நேரங்களில் அதன் ஒழுக்கிலே மிதந்து போகலாமென்று. நீச்சல் தெரியாத போதும்! சில நேரம் பரவசமாய். இருள் பிரியாத ஒரு காலை நேரத்தில் மழையும் சேர்ந்து கொள்ள பயமூட்டுவதாய். 

அறையிலேயே பெரும்பாலான நேரத்தை கழித்திருந்தேன். எதை செய்து கொண்டிருந்தாலும் கொஞ்ச நேரத்திற்கொரு முறை எழுந்து கதவைத் திறந்து நின்று கொண்டிருக்கச் சொன்னது. முதல் நாள் மதியம் அந்த கதவைப் பார்த்து படுத்துக் கொண்டே புத்தகம் வாசித்துக் கொண்டிருக்க இடைக்கொரு முறை வெளிச்சம் மாறும் போது புத்தகத்திலிருந்து கண்ணெடுத்து வெளியே பார்க்கப் பார்க்க தீராதிருந்தது. அடுத்த நாள் குரங்கு மிரட்டினதில் கதவைச் சாத்தி வைக்க வேண்டியதாகப் போயிற்று. 

நாய் வளர்க்கிறவர்களிடம் அதைப் பற்றிப் பேசும் போது அவர்கள் அவன்/ள் என்று பெயர் சொல்லிப் பேசிப் போக நாம் நாய் என்று சொல்லி அதிலிருந்து சுதாரிக்க முயன்று, முடியாமல் தோற்று... அதே போல நான் நதிக்கரையில், ரிவர் ஃபேசிங் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க இங்கிருப்பவர்களுக்கெல்லாம் அவள் கங்கா மய்யா அல்லது கங்காஜி. வியாபாரமாகவே இருந்த போதும் பக்தி போலியில்லாமல் இருக்கிறது.

சென்ற முறை வந்திருந்த போது ஊருக்குள்ளே அறை எடுத்து தங்கியிருந்தேன். ஒருநாள் காலை அஸ்ஸி காட்- டில் வந்திறங்கி படித்துறையிலேயே நடக்க ஆரம்பித்து மணிகர்னிகா வரை வந்திருந்தேன். அதற்குப் பிறகு கல்பாளச் சந்துகளில் நடக்க ஆரம்பித்த போதுதான் பெட்டி படுக்கைகளோடு அந்த சந்துகளில் இருந்த விடுதிகளைத் தேடி வெளிநாட்டவர்கள் தங்கப் போய்க் கொண்டிருந்ததை பார்த்திருந்தேன். பாஷை தெரியாத ஊர் தெரியாத இவர்களெல்லாம் தங்கும் போது நமக்கென்ன பயமென்று தான் இப்படி ஒரு இடத்தைத் தேர்வு செய்திருந்தேன். காலையில் எழுந்து கண் விழித்து ஜன்னல் கதவைத் திறந்தால் கங்கை தெரிய வேண்டும் என்று. இந்த முறை தெரிந்ததெல்லாம் கங்கை, கங்கையைத் தவிர வேறில்லை. எந்த காட்-டும் ஒற்றைப் படி மிச்சமில்லாமல் நீராழத்தில் மூழ்கி. 
 
இரண்டாம் நாள் மணிகர்ணிகா போக காட்-டில் வழி இல்லாததால் ரோட்டிலே போக வழி கேட்ட போது ஒரு குறுகலான சந்தைக் காட்டி, துணைக்கு வரணுமா என்று கேட்டவரை தவிர்த்து நடக்க ஆரம்பித்தது நல்லதாயிற்று. போக வேண்டிய இடத்தை மனதில் கொண்டு பாதையை தேர்வு செய்வது அவ்வளவு சிரமமில்லை. தட்டுத் தடுமாறியாவது போய்விட முடிந்தது. GPS ம் கூகிள் மேப்பும் இல்லாத காலங்களில் எத்தனை பயணங்கள் காரிலே போயிருந்தோம். இப்போது ஒவ்வொரு சந்து திரும்பும் போதும் மேப்பை வழி கேட்கிறோம்! வழியிலே எதேச்சையாக கேட் எண் -2 வந்ததும் கோவிலுக்குள் நுழைந்து விட்டேன். கோவில் பூராவும் வெள்ளை பளிங்கு கற்கள் பதித்த புண்ணியவான் யாரோ! அநியாயத்திற்கு வழுக்குகிறது. முதல் முதலாக பார்த்த காசி கோவில் இது மாதிரி இருந்ததாக நினைவில்லை. திரும்பின பக்கமெல்லாம் சிவலிங்கங்கள். கங்கையிலிருந்து நீர் கொண்டு வந்து நாமே லிங்கங்களில் ஊற்றும் வசதியிருக்கிறது என்பதால் எல்லா இடங்களும் தண்ணீர் கொட்டி, அதனாலே எல்லா இடமும் வழுக்குகிறது.
 
நகரத்தாரின் விசாலாட்சியைப் பார்க்கச் சொல்லி துளசி சொல்ல, வராஹியை பார்க்கச் சொல்லி ராஜி சொல்ல, கேட் நம்பர் ரெண்டுக்குப் பக்கத்தில் எங்கேயோ என்று மேப் சொல்ல அதைத் தேடி மூன்றாவது நாள். விசாலாட்சி கோவில் வாசலில் செருப்புகளை கழட்டி மாட்ட வசதியாக போட்டிருந்த ஸ்டீல் பெஞ்சில் வெள்ளைச் சட்டை வேட்டி கட்டி விபூதி பூசி பழுத்த பழம் போல் இருந்த பெரியவர், உக்காந்துக்கோ என்ற உடல் மொழியோடிருந்தார். திரும்பி வந்த போதும் அதே இணக்கம். எண்பது வயசுக்கு மேல் எண்ண மறந்து விட்டாராயிருக்கும். அவர் சொன்ன எண்பது வயதையெல்லாம் எப்போதோ கடந்திருப்பார். மனைவி இல்லை. வீட்டிலே மருமகள் இருக்கிறாள் என்றார். அவரோடு ஒரு செல்ஃபி எடுக்க நினைத்து வேண்டாமென்று விட்டு விட்டேன். காண்பதெல்லாம் போட்டோவாகக் கூடாது. சில விஷயங்கள் வெறும் ஞாபகங்களாய் மட்டுமிருக்க வேண்டுமென்பதில் அவரை வைத்திருக்கிறேன்.  

 வராஹி வேறொரு சந்தில் இருந்தாள். காலை மட்டும் தான் தரிசனமாம். கோவில் மூடியிருக்கும் என்று வழி கேட்டவரெல்லாம் சொன்ன போதும் வாசல் வரை போய் வந்தேன். இடையில் இருப்பது ஒரு கதவுதானே!

மூன்று ஆள் அகலம்தான் இருக்கிறது ஒவ்வொரு சந்தும். அதிலே தவறாமல் ஒரு மாடு நிற்கிறது. பயந்து ஒதுங்கி செல்லும் உள்ளூர்வாசிகள் எல்லா நேரமும் இவை இத்தனை சாதுவாயிருக்காது என்று உணர்த்திப் போகிறார்கள். சாணமும் வீட்டுக் குப்பைகளும் வழியெல்லாம் இறைந்து கிடக்கிறது. அதில் விசேஷம் என்னவென்றால் எல்லாம் அன்றைய வெங்காயத் தோலும் வேண்டாமென்று வீசின சாப்பாட்டு பொருட்களும் தான். ஒவ்வொரு நாளும் புதிதாக குப்பை சேர்க்கிறார்கள். குப்பை ப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஊரையும் நிர்வாகத்தையும் குறை சொல்லிப் பிரயோஜமில்லை. வேறெங்காவதென்றால் இதையெல்லாம் சகித்திருப்பேனா என்றால் சந்தேகம் தான். இங்கே சலிக்காமல் சுத்த முடிந்தது. நாலு வயதுப் பெண் குழந்தைக்கு வேண்டிய காலுறை போட்டு ஒரு வெளிநாட்டு தம்பதி அந்த அழுக்குத் தெருவுக்குள் இயல்பாக நடத்திக் கூட்டிக் கொண்டு போனதை ஆச்சர்யத்தோடு பார்த்திருந்தேன். இந்த ஊரில் என்ன இருக்கிறதென்று இத்தனை நாள் இருக்க வந்திருக்கிறாய்/இத்தனை தடவை வருகிறாய் என்று கேட்ட சொந்தக்காரரிடம் பெரிதாக விளக்கம் அளிக்கவில்லை.

தங்கியிருந்த அறையிலிருந்து நூறு மீட்டர் தூரத்தில் இதே போல் நதிக்கு கொஞ்சம் மூக்கைத் துருத்திக் கொண்டிருக்கும் அறையில் ஒரு வயதான தம்பதிகளின் குடித்தனம். தினமும் காலை எட்டரை ஒன்பது மணிக்கு இரண்டாக மடங்கிய ஒரு அம்மணி குளித்து துவைத்த துணிகளோடு என் அறை போலவே இருக்கும் பால்கனியில் வரிசையாக காயப் போடுகிறார். மற்ற நேரங்களில் நிழல் நடமாட்டம் கூட இல்லை. இவர்களுக்கெல்லாம் கங்கை சலித்திருக்குமென்று நினைத்த என்னை ஏமாற்றி ஒரு மதிய நேரம் வெறுமனே கங்கையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

ஊர் இந்த மழை நாட்களில் பசுமை சாம்ராஜ்யம். புழங்காத கட்டிடங்களின் புழங்காத தன்மைக்கேற்ப பச்சை பூத்திருக்கிறது. சுவர் இடுக்கு, சந்து பொந்தெல்லாம் செடிகளும் கொடிகளும். காட்டுக் கொடிகளின் வளமையைப் பார்க்கும் போது டார்த்தீனிய காடுகளாய் கட்டிடங்களை மூடிவிடும் போலிருக்கிறது. இண்டு இடுக்கிலெல்லாம் மரம் தளைத்து நிற்கிறது. நான் தங்கியிருந்த அறையின் வெளிச்சுவரில் பதினைந்து இலைகளோடு ஒரு அரச விழுது.

அடுத்த கட்டிடத்தில் என்னவோ இருக்கிறது. தினமும் காலையில் ஐந்து சிவப்பு மூக்கு கிளிகள் ஆஜராகிவிடும். நாள் பூராவும் பறப்பதும் அந்த ஜன்னலைப் பார்த்து உட்கார்ந்திருப்பதும் சாயந்தரமானால் கிளம்பிப் போவதும். நாலு நாளும் காலை கண் விழிப்பதே கிளிப்பாட்டு கேட்டுத்தான். அதைத் தவிர நாளெல்லாம் பெரிய வேறு சத்தமேதுமில்லாமல் நிசப்தமாய்.

பிரம்ம முஹூர்த்த சாதுக்கள் நடமாட்டம்... வாய்க்கவில்லை. காட்- டில் உட்கார்ந்து மனிதர்களை வேடிக்கை பார்க்க நினைத்தது நடக்கவில்லை. ஏழு நாள் தனியாக, வேண்டிய மட்டும் பார்த்துத் தீர்க்கப் போகிறேன், என்று நினைத்ததற்காகவே எந்த காட்-டையும் கண்ணில் கூடக் காட்டவில்லை. ஆனால் காசியில் இறங்கி அறைக்கு வந்த நிமிஷத்திலிருந்து நான், இங்கே இந்த கணம் என்பது மட்டுமே நினைவிலிருந்தது. அலைக்கழிக்கும் யோசனைகளோ இலக்கில்லாத சிந்தனைகளோ அறவேயில்லை. உடலளவில் மனதளவில் நேற்று வரையிலான உலகத்திலிருந்து வலியில்லாத துண்டிப்பாயிருந்தது. பனிரெண்டு வருஷம் முன்னால் எழுதின கவிதை முதல்முறையாக முழுக்க நிஜமானது. நாலுநாளும் அதை துளி சிந்தாமல் அனுபவித்தேன். ஐந்தாம் நாள் கொட்டித் தீர்த்த மழையும் உயர்ந்து கொண்டே இருந்த நீர் மட்டமும் பயமுறுத்த வேறு இடத்திற்குக் கிளம்பிப் போய்விட்டேன். இனிமேலும் இது போன்ற பயணங்களுக்காக இதை பத்திரமாக முடிக்க வேண்டிய கட்டாயம்.

இன்னமும் தெரியாத இடங்களுக்குப் போகும் துணிச்சல் வரவில்லை. அதிக தொலைவிலில்லாத, எதாவது மனதிற்குப் பிடித்த இடத்திற்கு ரெண்டு நாளாவது யாருமில்லாத தனிமைப் பயணத்தை சர்வ நிச்சயமாக பரிந்துரைக்கிறேன். நீங்கள் தனிமை விரும்பியாக இருந்தால் யோசிக்கவே வேண்டாம்.

எட்டாவது நாள் நான், மீண்டும் வட்டத்தில். அடுத்த ஏழுநாள் எனக்கே எனக்காய்.. எங்கே எப்போது...

ஏழு நாள் எனக்கே எனக்காய்

ரெண்டு மாற்றுத்துணி

செலவுக்கு உரைக்க

சின்னதாய் ஒரு அட்டை

ஒரு புத்தகம் ஒரு வாக்மேன்

கஸலாய் ஹரிஹரன்
துள்ளூம் ரஹ்மான்

முதுகில் தொங்கும் சிறு பையில்
 
வீசி நடக்க வேண்டும் எனக்கு.


வெயில் உரைக்காத
துளிர் மழை நாளில்
ஆளில்லாத ரயிலில்
இரண்டாம் வகுப்பில்


ஆச்சா ஆச்சாவெனும்
கணவன்
அலுத்துக் கொள்ளும்
குழந்தைகளின்றி

தனியாய் நான்
அடையாளங்கள்
அத்தனையும் துறந்து


ராத்திரி கறிக்கு
உருளையா அவரையா
பால்காரன் வேலைக்காரி
எல்லாம் மறந்து


வருஷத்திற்கொன்றாய்


லடாக் தஞ்சாவூர்
ஹரித்வார் கோனார்க்
மதுரா காசி மானசரோவர்
நீளும் என் பட்டியல்


எட்டாம் நாள் மறுபடியும்
வட்டத்தில் இருப்பேன்.

Monday, February 01, 2016

how-we-used-to-die-how-we-die-now

எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் நடந்த முதல் சாவு தாத்தா நடராஜ குருக்களுடையது. வருஷ வருஷம் அவர் அவருடைய அப்பாவுக்கு திதி கொடுப்பது என்கிற மோட்சதீப நிகழ்ச்சி உறவினர்கள் சூழ ஒரு சிறிய திருமணம் போல நடக்கும். பேரூரில் பெரிய தாத்தா சமாதியில் ஒரு பூஜையும் பின்னர் எங்கள் ஆஸ்தான திருமண மண்டபத்தில் ஒரு 200-300 பேர்களுக்கு சாப்பாடுமாக விமரிசையாக நடக்கும். அந்த வருஷமும் அதற்கு சாமான்கள் வாங்க, குறிப்பாக அரசாணிக்காய்/மஞ்சள் பூசணிக்காய் வாங்க வடவள்ளி சந்தைக்கு போயிருந்தார். வடவள்ளியில் எங்கள் அகிலாண்டப் பாட்டியின் தங்கை வீட்டில் தங்கி வாங்கி வருவதாக ஏற்பாடு. ஆறேழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வடவள்ளிப் பயணமே அப்போதெல்லாம் காலையில் போய் சாயந்திரம் வர அவசரப் படும் வழக்கமிலாத நிதான நாட்கள். போனவர் கழிப்பறையில் மயங்கி விழுந்து விட்டதாக தகவல் வந்து கூட்டிக் கொண்டு வந்ததும் அப்பாவின் நெருங்கிய டாக்டர்  நண்பரின் மருத்துவமணையில் வைத்தியம் பார்த்ததும், ஸ்ட்ரோக் வந்து விட்டது, பிழைக்க வைக்க முடியாது என்று வீட்டுக்கு கொண்டு போகச் சொன்னதும், ஒரு குதிரை வண்டியில் வைத்து ஒரு ராத்திரி தாத்தாவை வீட்டுக்கு கூட்டி வந்ததும் துல்லியமாக நினைவிருக்கிறது. எனக்கு அப்போது பத்து, பதினோரு வயதிருக்கும்.

தாத்தாவை முதல் அறையில் படுக்க வைத்திருந்தார்கள். சுற்றிலும் யாராவது உட்கார்ந்திருப்பார்கள். மங்கை அக்காவுக்கும் மலரக்காவுக்கும் பல்ஸ் பார்க்க சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் ரெண்டு பேரில் யாராவது ஒருத்தர் மாறி மாறி பார்த்து நல்லாயிருக்கு, சுமாராயிருக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நீராகாரம் ஏதோ கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வடவள்ளிக்காரர்கள் யாரும் வந்தால் அறையின் ஓரத்தில் அமர்ந்து தேவாரம் பாடிப் போனார்கள். என் வயதுப் பேத்திகள் நான்கு பேருக்கு எந்த ஜோலியுமில்லை. யார் யார் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர. மூன்று நான்கு நாட்கள் கழிந்த பின் ஒரு மாலை நான்கு மணி சுமாருக்கு நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருக்க அமைதியாக இறந்து போனார்.

நேற்று பேஸ்புக்கில் இந்த லிங்கில் வாசிக்கும் போது எங்கள் தாத்தாவைத்தான் நினைத்துக் கொண்டேன். http://exopermaculture.com/2016/01/19/how-we-used-to-die-how-we-die-now/