Monday, August 01, 2005

மா(!)த்ருபூமி

அது ஒரு நியூஸ் சேனல் செய்தித் தொகுப்பு. ஆஜ் தக் அல்லது என்டிடிவி... சரியாக நினைவில்லை. ஒரு மாலைநேர டீயோடு சேனல் மேய்ச்சலில் இருந்த போது கண்ணில் பட்டது. குத்த வைத்து அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் வயது பஞ்சாபி பெண். முகம் மறைத்து முக்காடு போட்டிருந்தது. பக்கத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக நினைவு. அந்தப் பெண்ணை விட்டு அடுத்து கேமிரா நகர்ந்தது இரண்டு ஆண்களை நோக்கி. இரண்டு பேரும் கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மூடியிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சொன்னதிலிருந்து...

' எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் தான் இருக்கிறது. நான் தான் பெரியவன். தம்பிக்கு கல்யாணம் செய்து இன்னொரு பெண் வந்து எங்கள் நிலத்தைப் பங்கு போடுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் என் மனைவியே என் தம்பிக்கும் மனைவி '

'ஹே! என்ன சொல்றீங்க?' என்று கவனிக்க ஆரம்பித்தேன். இதே போல இன்னும் சில குடும்பங்களைக் காட்டி, பஞ்சாபில் நிலம் துண்டு படுவதைத் தவிர்க்க இப்படி ஒரு வழக்கமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லிக் கொண்டு போனார் நிருபர். இது ஒன்றும் புது கதையல்ல என்று இருபத்தி ஏழு வருடங்களாக மூன்று சகோதரர்களுக்கு மனைவியாயிருக்கும் ஒரு பெண்மணி ஆச்சர்யம் தந்தார். இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளா¾தால் எழுபத்து சொச்சம் வயதிலும் திருமணமாகாத இரண்டு ஆண்களோடு ஒரு குடும்பமும் செய்தியில் தலை காட்டியது.

தேவைகள்... அதற்கேற்றார் போல மாறும் கோட்பாடுகள். ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நிறைய யோசிக்க வைத்தது. கொஞ்சம் சிரிப்பும் வந்தது. சிரிப்பு... இன்றைக்கு இறுக்கி இறுக்கி பிடித்துக் கொண்டிருப்பதெல்லாம் ஒரு நாள் பிடியை உதறிவிட்டுப் போகத்தான் போகிறது என்பதை நினைத்தாயிருக்கும். அன்றைக்கே அதை எழுத முடியாமல் போய் விட்டது.

இன்று காலை கொஞ்ச நாளாக நேரம் வாய்க்காமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்த 'மாத்ருபூமி' படம் பார்க்கப் போகும் போது, அது இதைத்தான் சொல்லப் போகிறது என்று நிச்சயம் நினைக்கவில்லை. போனிகபூரை இப்படி ஒரு படம் எடுக்க சம்மதிக்க வைத்த டைரக்டரை பாராட்ட வேண்டும்.

Image hosted by Photobucket.com

தழும்ப தழும்ப பால் நிறைத்த ஒரு அண்டாவில் அப்பாவால் மூழ்கடித்துக் கொல்லப்படும் ஒரு பெண் சிசுவோடு படம் தொடங்குகிறது. பெண்களே இல்லாமல் போகும் ஒரு சமூகத்தில் ஆண்களின் தவிப்பு, வெளிப்படும் மூர்க்கம், தேடும் வடிகால்கள்... எவ்வளவு தூரம் இது கொண்டு போகும் என்று சொன்னது எதுவும் மிகையாகத் தெரியவில்லை. ஐந்து மகன்கள், அப்பா, ஒரு சமையல்காரச் சிறுவன் இந்தக் குடும்பத்திலிருந்து கதை தொடங்குகிறது. ஆரம்பத்தில் சொன்ன செய்திக் குறிப்பு தான் படம். அத்தனை அவலங்களையும் சொல்லிப் போகிறது. சேச்சே இவ்வளவு மோசமாகவெல்லாம் ஒன்னும் ஆகாது என்று மறுக்க முடியவில்லை. இன்றைக்கும் இப்படி கிராமங்கள் இருக்கத்தான் செய்கிறது. இனிமேலும்.

ஏன் இந்தப் படம் பற்றி சத்தமேயில்லை? முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்களை மூடிக் கொள்வது உத்தமமாக பட்டதோ?!

8 comments:

Anonymous said...

நான் சத்தம் பொடறேன். ஓஒ, ஆஆ, ஊஊ

posted by: amalasingh

Anonymous said...

இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை அமலாசிங். ஒன்னு மட்டும் தெரியுது... பதிவு ரொம்ப பாலிஷா இருக்குன்னு! படத்தை ஒருதரம் பார்த்துட்டு இதே மாதிரி சத்தம் போட முடியுதான்னு சொல்லுங்க.

நன்றி.

நிர்மலா.

posted by: nirmala

Anonymous said...

மறுமொழி நன்றாக இருக்கிறது

posted by: erainesan

Anonymous said...

நன்றி இறை நேசன்.

posted by: nirmala

Anonymous said...

தமிழ்(!)க்கடையில் இதன் டிவிடி கண்டேன். ஆனால் எடுத்துப் பார்க்கும் துணிவிருக்கல்ல. ஆனாலும் இன்றைக்கு (உங்களோடு சேர்த்து) 3ம் தடவையாக இந்தப்படத்தின் பெயர் என் புலன்களில் விழுந்திருக்கிறது. இந்த வார இறுதியில் பார்க்க நினைத்துள்ளேன்.

posted by: ஷ்ரேயா

Anonymous said...

பார்த்துட்டு சொல்லுங்க ஷ்ரேயா.

posted by: nirmala

Anonymous said...

I saw the news item on NDTV. But, I will see this movie. Very Impressive post!
regards,
Thiru

posted by: Thirumurugan

Anonymous said...

உண்மையில் நியூஸில் பார்த்தது தான் பெரிய பாதிப்பாயிருந்தது. அதை பார்க்கச் சொல்ல முடியாது... அதனால் தான் படம் பற்றி விரிவாக எழுதினேன்.

நன்றி திரு.

posted by: nirmala