'தழுவல்களும், முத்தமிடல்களும் இரு மனிதர்களுக்கிடையே ஏற்படும் மன உறவின், உணர்ச்சி சங்கமத்தின், புரிந்து கொள்ளலின், ஒரு குறிப்பிட்ட பரிணாம கட்டத்தில் யதேச்சையாக நிகழ்கின்றன. அந்த கணத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்தால், பாசாங்கு செய்யாமலிருந்தால், அது ஒரு தூய நிகழ்ச்சி. இல்லாவிட்டால், அது வக்கிரமானது, ஆபாசமானது; சம்பந்தப்பட்டவர்கள் மணமானவர்களானாலும் சரி, மணமாகாதவகளானலும் சரி....'
நான் வாசித்த ஆதவனின் மூன்றாவது புத்தகம் 'காகித மலர்கள்'. ஆதவன் என்ற பெயரையே ஆர்கேகேயில் ப்ரகாஷ் மூலமாகத்தான் கேட்டது. கேட்ட பிறகு ஊருக்குப் போன போதெல்லாம் தேடியும், எனக்கு முந்தின வாசிப்பாளர்கள் வட்டத்தில் கேட்டும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு பிறகு கையில் கிடைத்த முதல் ஆதவன் நாவல் 'என் பெயர் ராமசேஷன்'. கொஞ்ச நாட்களாகவே வாசிப்பது எதுவும் மனதில் பதியாமல் போவதற்கு, வாசிப்பதில் முன்பிருந்த கவனம் இல்லாததுதான் என்று எனக்கே தெரிந்திருந்ததில் புத்தங்கங்களை குறை சொல்வதில்லை. ராமசேஷனையும், 'இரவுக்கு முன்பு வருவது மாலை' யையும் அப்படித்தான் வாசித்து விட்டுப் போயிருந்தேன்.
அப்படியே காகித மலர்களையும் வாசிக்க ஆரம்பிக்க, தோள்களைப் பிடித்து உலுக்கியது இந்த வரிகள். முடிப்பதற்குள் நிறைய தடவை உலுக்கியது. பத்மினி ப்யூட்டிபுல் என்று சொன்ன ஒரு இடத்தில் அவளோடு சேர்ந்து நானும் தான் சொன்னேன். அதுவும் இந்தப் பக்கத்தில் ஹே! என்று சொல்ல வைத்து எதிர்பக்கத்தில் முற்றிலும் மாறாக வேறொரு வெளிப்பட்டைக் கொண்டு வந்தது. எந்தப் பக்கங்கள், அதில் எனக்கு என்ன தோன்றியது என்று சொல்லி என் புரிதல்களை ஏன் திணிக்க வேண்டும்? வாசித்துப் பாருங்கள்.
முழு புத்தகமும் ஒரே மூச்சில் படித்திருக்க வேண்டும். மூன்று நாட்களாக படித்ததில்... 77 ல் இப்படி எழுதினாரா? இப்ப அவரைப் பார்க்கணுமே? முடியாது. சரி, அதற்காக சொல்ல நினைத்ததை சொல்லாமல் போய்விட முடியுமா? சொல்லிடறேன் ஆதவன். நாவல் சொன்ன சில விஷயங்களை நானும் அப்படியே யோசிக்கிறேன். இல்லை இல்லையென்று மூடி மூடி மறைக்கும் விஷயங்களை ரொம்ப சாதாரணமாகச் சொல்லிப் போனது பிடித்திருந்தது. தினமும் பார்க்கும் மனிதர்களின் இயல்பான பேச்சில் அவர்களை அறியாமல் வெளிப்படுத்தும் உள்மன நிறங்களை நான் புரிந்து கொள்கிறேன். அப்படி நான் புரிந்து கொண்டதெல்லாம் விபரீத கற்பனை என்று கேலி செய்யப் பட்டதே, அது அப்படியில்லை என்று எனக்கு ஆசுவாசம் சொன்னது உங்கள் எழுத்து.
ஆதவன்... உங்கள் விஸ்வத்தைப் பிடித்திருக்கிறது. செல்லப்பாவைத் தெரியும். கணேசனை புரிந்து கொள்ள முடிகிறது. ம்ம்ம்... கடைசியில் மிஸஸ். பசுபதியை உங்களாலும் கொல்லாமல் இருக்க முடியவில்லைதான் இல்லையா? அது என்ன தண்டனையா? அதற்கு மெனக்கெட்டு விளக்கம் சொன்ன போதும். ஆனாலும் இந்த வாசிப்பு அனுபவத்திற்கு நன்றி ஆதவன்.
11 comments:
நிர்மலா, மிஸஸ் பசுபதி இறந்து விட்டதாகச் செய்தி வருவதுடன், கதை நிறைவு பெறும் அல்லது துவங்கும். அதற்கு பிறகு, எழுத்தாளர் ஆதவனுடன், பார்வையாளர் ஆதவன் ஒரு விவாதம் நடக்கும். வெகு சுவாரசியமான இருக்கும். அந்த விவாதத்தில் உங்கள் கேள்விகளுக்கான விடை கிடைக்கலாம். சமீபத்தில் வந்த பதிப்பில், இந்தப் பகுதி இடம் பெறவில்லை என்று கேள்விப்பட்டேன்
சொல்ல விட்டுப் போனது, ஆர்கேகேயில் ஆதவன் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். நினைவு படுத்தியதற்கு நன்றி. கணிணியில் சேமித்து வைத்திருந்ததில் இருந்து இரண்டு சுட்டிகள் இங்கே. நீங்கள் வாசித்திருக்கலாம். மற்றவர்களுக்காக இதோ
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/4751
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/4758
posted by: prakash
தமிழ் யுனிகோடில் தட்டச்ச முடியாதவர்கள் கீழே இருக்கும் பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டினால் மேலே தமிழில் ட்ரான்ஸ்லிட்டரேட் ஆகி வரும்.
posted by: pulippandi
ஹாஸ்டலுக்குக் கொண்டு விட வரும் காதலன்,காதலி கதை பெயர் மறந்துவிட்டது. பிரமாதம். ஞாயிற்றுக்கிழமை,சலூன் என்று உங்கள் பதிவு பார்த்தவுடன் சில பிம்பங்கள் நினைவுக்கு வருகின்றன..இப்போது எங்கே போவேன் காகித மலர்களுக்கு?
posted by: ராம்கி
நிர்மலா, 'இப்படிக் கூட எழுத முடியுமா?' என்று நான் மாதக் கணக்கில் வியந்துள்ள எழுத்துக்களின் சொந்தக்காரர் ஆதவன்.
ராம்கி சொன்ன கதை 'ஆதவன் சிறுகதைகள்' தொகுப்பில் வந்த 'நிழல்கள்' கதை. அதில் எடுத்துக் கொண்டுள்ள விஷயத்தை மிக இயல்பாகவும், நுட்பமாகவும் எழுதியிருப்பார்.
சின்ன வயதில் அவர் மறைந்தது நமக்கெல்லாம் ஒரு பெரிய இழப்பு.
சுட்டிகளுக்கு நன்றி ப்ரகாஷ். அன்னைக்கு அதைப் படித்ததற்கும் இப்ப அதைப் படிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
காகிதமலர்கள் புதிய பதிப்பில் 'ஒரு சம்பாஷணை' என்ற தலைப்பில் அவருடைய பாத்திரங்களை அலசியிருப்பது இருக்கிறது. அதுதான் நீங்கள் சொல்வது என்று நினைக்கிறேன். ஆனாலும் அதில் எனக்குத் திருப்தியில்லை.
ராம்கி, ரம்யா... நீங்கள் சொன்ன தொகுப்பு இன்னும் படித்ததில்லை. அடுத்த முறை ஊருக்குப் போகும் போது தேடிப் பார்க்கிறேன்.
ராம்கி எந்த ஊரில் இருக்கிறீர்கள்? பக்கமா இருந்தா ஒரு நடை வந்துட்டு போகலாம்!
posted by: nirmala
//கடைசியில் மிஸஸ். பசுபதியை உங்களாலும் கொல்லாமல் இருக்க முடியவில்லைதான் இல்லையா? அது என்ன தண்டனையா? //
என் கேள்வியும் அதே !
posted by: ரவியா
நிர்மலா, உங்கள் அன்பு அழைப்புக்கு நன்றி. நான் நீங்கள் விடுமுறைக்கு வரும் சென்னையில்தான் இருக்கிறேன்.
http://stationbench.blogspot.com
For contact:
raamkiku@gmail.com
நன்றி
posted by: ராம்கி
ஆதவன் பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி, நிர்மலா. ரா.கா.கி சுட்டிகளினை அளித்ததற்காக பிரகாஷுக்கு ஒரு நன்றி.
சமீபத்தில் தான் நான் ஆதவனுடைய எழுத்துக்களுக்கு அறிமுகமானேன். நீங்கள் குறிப்பிடும் அதே ஆச்சரியத்தோடு, 1980லேயே இப்படி தமிழ்ல எழுதியிருக்காறா என்று வியந்தேன். அவருடைய cynical view of life பல்வேறு முறையில் என்னையும் பாதித்தது. காகித மலர்களின் இறுதியில் (பின் இணைப்பில்) வரும் சம்பாஷனையில் என்னதான் வாழ்க்கையினை நெகடிவாக பார்ப்பது போல தன் பாத்திரங்கள் இருந்தாலும், அவற்றின் ஊடே நம்பிக்கை என்ற சரடு நீள்கிறது என்று அவர் கூறியது எனக்கு சற்றும் விளங்கவில்லை. May be என் வாசிப்பு நோக்கு வேறோ என்னவோ.
நண்பர்களிடையே ஆதவனைப் பற்றி பேசும் போது, இதைப் போன்ற எழுத்துக்கள் (Oedipus Complex போன்றவற்றை கையாள்பவை) 1980 இல் தமிழுக்கு புதுசு, ஆனால் ஆங்கிலத்தில் வந்த ஜே.டி.சாலிங்கரின் Catcher in the rye இதைப் போன்றவற்றை கையாண்ட, மிகச்சிறப்பான நாவல் என்ற கேள்விப்பட்டேன்.
posted by: Santhosh Guru
ஆமாம் ரவியா, ஒருவேளை பத்மினியாயிருந்தால் அப்படி முடித்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்காது! அந்த காலகட்ட பெண்மணிக்கு அந்த உறுத்தல் இருக்க வேண்டுமாயிருக்கும்!
'கடைசியில் தன் அம்மா, பாட்டி ஆகியவர்களைக் கட்டுப்படுத்திய ஒழுக்க நெறிகளுக்குக் கட்டுப்பட்டவள் தான் என்பதை உணருகிறாள்'
இதற்கென்ன சொல்ல?
ஆனால் அவரையும் குற்றம் சொல்ல முடியாது. நினைத்ததை ஒரு அணவுக்கு மேல் வெளிப்படையாக சொல்லும் சௌகரியம் அன்னைக்கும் இல்லை, இன்னைக்கும் இல்லைதான்.
சந்தோஷ், காகித மலர்களில் ரொம்ப ரசித்தது பாத்திரங்கள் அவைகளாகவே இருந்தது. அவர்கள் தங்களுக்குள்ளே யோசித்தது. மற்றபடி Oedipus Complex பேஸ் பண்ணி இப்பவும் தான் எழுத முடியுமா?
அந்த புத்தகத்தைக் குறித்துக் கொண்டேன். நன்றி.
posted by: nirmala
நிர்மலா,
நானும் இப்போதுதான் ஆதவனைப் படித்தேன். அதுவும் எ.பே.ராமசேஷன் மட்டுமே. ஆனால் ஒப்பனைகள் இல்லாத எழுத்துகளுக்கு சொந்தக்காரர் என்று தோன்றியது. கொஞ்சம் பூச்சு பூசி இருந்தால் வாழ்ந்த காலத்திலேயே உசரத்துக்கு போயிருக்கலாம் - பாலா மாதிரி. சமரசம் பண்ணிக்கொள்ளாமல் செத்துப் போனதால்தான், இப்போதும் வாழ்கிறார்.
தொடர்ந்து அவரை வாசிக்க எண்ணம்.
posted by: மூக்கு சுந்தர்
Post a Comment