Wednesday, August 17, 2005

விஷ¤ கூப்பிடறார் - 2

ஒரு மணிக்கெல்லாம் வந்து விடுங்கள். ஒன்றரைக்குக் கிளம்பினால் எட்டு மணிக்குள் சிட்டி டூரை முடித்து விடலாம் என்று மேனேஜர் சொல்லியிருந்தார். நாங்கள் திரும்பி வரும் போதே இரண்டாகியிருந்தது. அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். நமக்கு இந்த சிட்டி டூரெல்லாம் சரிப்படாது. ஆனால் முன்னே பின்னே தெரியாத ஊரில் அதுதான் தேவலை. ரொம்ப விலாவரியாக இல்லாமல் சுவாரசியமாக இருந்த இரண்டை மட்டும் சொல்கிறேன்.

முதலாவது காலபைரவர் கோவில். நீண்ட சந்துக்குள் சின்னதாய் ஒரு கோவில். உருட்டின கண்களும் முறுக்கின மீசையுமாய் பைரவர். ஆனாலும் உதட்டில் சிரிப்பிருந்ததாக எனக்கு ஒரு தோணல். சன்னிதியைச் சுற்றி நாலடிக்கு ஒரு நடை. அதில் நல்ல கருப்பில் ஒரு பயமூட்டும் மாடு. உருவத்திற்கு கொஞ்சமும்
பொருத்தமில்லாமல் சாதுவாய் சுற்றிச் சுற்றி வருகிறது. ஜனங்களும் தங்கள் பாட்டுக்கு. நடையை ஒட்டி உயரமாய் ஒரு திண்ணை. திண்ணையில் வரிசையாய் கையில் மயிலிறகும், வாயில் மந்திரமுமாய்... திருஷ்டி கழிக்கிறார்கள் போலிருந்தது. இளைஞர்கள், ஒரு இளம் பெண், ஒரு குடுகுடுக்கிழவர் என்ற அந்த வரிசையின் சுவாரசியம், ஒரு ஏழெட்டு வயது சிறுவன். குழந்தைத்தனமே இன்னும் மாறவில்லை... அது திருஷ்டி கழிக்கப் போகிறதாம்! அந்த வாண்டு கன்னத்தைக் கிள்ள வேண்டும் போலிருந்தது. அவரோ 'நான் ஆன் ட்யூட்டி' ன்னு ரொம்ப சீரியஸாய் இருந்ததில் அந்த முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று.

அடுத்தது சாரநாத். காசியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரமிருக்கும். வண்டியை விட்டு இறங்கினதுமே வந்து சேர்ந்த கைடைப் பார்த்ததுமே எனக்கு சந்தோஷம். சொந்த சரக்கை அள்ளித் தெளிப்பார்கள் என்றாலும் கைடு இல்லாமல் பார்க்கும் எந்த இடமும் திருப்தியே தருவதில்லை. சாரநாத், காசிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் படு சுத்தமாக இருக்கிறது. கோவிலுக்கு அருகில் சாரநாத் ஸ்தூபி பிரம்மாண்டமாய் நிற்கிறது. இரண்டாயிரத்து இருநூற்றி எழுபது ஆண்டு பழமையானது. புத்தர் தனது முதல் உரையை இங்கே நிகழ்த்தியதற்கு அடையாளமாக நிர்மாணிக்கப் பட்டிருக்கிறது.

கோவிலுக்கு மற்றொரு பக்கம் அழகான வேலைப்பாடுகளோடு ஒரு மணி. மணியில் ஏதோ ஸ்கிரிப்டில் எழுதியிருக்கிறது. அதிகம் எடையில்லை... வெறும் மூவாயிரம் கிலோதான். ஜெர்மனியிலிருந்து செய்து வரப்பட்டதாம். ஒரிஜினல் போதி மரத்துக் கிளை இலங்கையில் நடப்பட்டு அங்கிருந்து கொண்டு வந்த கிளையில் முளைத்த போதி மரமொன்று இங்கே பரவி நிற்கிறது. அதற்கடியில் புத்தரையும், அவருடைய ஐந்து சீடர்களையும் இரண்டாள் உயர சிலைகளாக செய்து வைத்திருக்கிறார்கள். சிலைகளில் வேலைப்பாடு எதுவும் இல்லாமல் சிமெண்ட் சிலைகள் போலிருந்தது உறுத்தியது. கோவிலின் உள்ளே தங்க முலாம் பூசின புத்தர். சுவரெல்லாம் அழகான ஓவியங்கள். புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற கெடிபிடியெல்லாம் கிடையாது. உண்டியலில் ஐந்து ரூபாய் போட்டு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

மற்றபடி, பரந்து கிடக்கும் பனாரஸ் ஹிந்து யுனிவர்சிடி, அதற்குள்ளே ஒரு பிர்லா மந்திர், மந்திர் வாசலில் திருத்தமாக அமைந்த மதன் மோஹன் மாளவியா சிலை, அழகான, விலை மலிவான டெரகோட்டா சிற்பங்கள், மரங்கள் அணைகட்டிய அகலமான ரோடுகள்... வெளியே வந்து ஊருக்குள் நுழைந்தால் அதே சேறும் சகதியும். பராமரிப்பில்லாத குறுகலான சாலைகள். ஒழுங்கில்லாத போக்குவரத்து.

இது தவிரவும் இன்னும் சில கோவில்கள், நேரமாகிப் போனதால் கதவடைந்து போன அருங்காட்சியகம்... ஒரு நாளுக்கு இத்தனை எனக்கு ஓவர் டோஸ். அதனால் பெரிதாக கவனத்தைக் கவரவில்லை.

அன்றைக்கு ராத்திரியே விஸ்வநாதரை(நம்ம விஷ¤) தரிசிக்க சத்திர மேனேஜர் விரட்டினதில் ஒன்பதரை மணிக்கு கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். அயோத்தியா குண்டு வெடிப்பு தந்த சூட்டில் கோவிலுக்குள் பக்தர்களை விட காக்கிச் சட்டைகள் அதிகம். செல்பேசி உள்ளே அனுமதிக்க மறுத்ததால் நான் மட்டும் வெளியே. கணவர் சமத்தாய் அறையிலேயே வைத்து வந்திருக்கிறார்.

காத்திருந்த நேரத்தில் கவனித்தது... சுமாரான ரேங்கில் இருக்கும் ஒரு அதிகாரி சில பெண் காக்கிச் சட்டைகளை சொந்த பிரதாபங்களைச் சொல்லி கடுப்படித்துக் கொண்டிருந்தார். அவர்களும் ஓரக்கண்ணில் கிண்டலோடு, ரசிப்பது போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளி தனியாக உட்கார்ந்திருந்த ஒரு காக்கிச் சட்டை 'இதுக்காக இப்படி தனியா கொட்டுக் கொட்டுன்னு உட்காந்திருக்கியா? என்கிட்ட கொடுத்துட்டு போயேன்'னு ஜாடை மாடையாக சொல்லிப் பார்த்தார். எனக்கொன்னும் பிரச்னையில்லை என்ற என் பதிலை
கொஞ்சமும் ரசிக்கவில்லை. எல்லோரும் கோவிலைப் பூட்டும் பதினொரு மணிக்காக சலிப்போடு காத்திருந்தார்கள்.

கணவர் வந்ததும் செல்பேசியை அவரிடம் ஒப்படைத்து விட்டு ஒரு வழியாக உள்ளே போக முடிந்தது. இருட்டில் கோவிலின் பிரம்மாண்டம் பயம் தந்தது. எந்த பராமரிப்பும் எங்கேயும் நடப்பது போல தெரியவில்லை. கோவிலுக்கு உள்ளேயும் நிறைய காக்கிச் சட்டைகள். சிலர் படுத்துக் கொண்டு. சிலர் உலாவிக் கொண்டு. யூனிபார்மில் பத்மாசனம் போட்டு மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த பெண் போலீஸ் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பத்து மணி வாக்கிலும் கூட்டத்திற்குக் குறைவில்லை. விஸ்வநாதருக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. கூடை கூடையாய் பூக்கள் வந்து குவிந்து கொண்டிருக்க, நேர்த்தியான அலங்காரம். நான்கு பக்கமும் வாசல். நான்கிலும் சரியான நெரிசல். வியர்வையும், தலை எண்ணைச் சிக்கும் போட்டி போட்டுத் தாக்கியதில் சீக்கிரமே விலக வேண்டியதாயிற்று. ஒருபக்கச் சுவரில் வெள்ளைப் பளிங்கில் மீசை முறுக்கி இருந்த சிற்பமும், சுற்றிலும் இருந்த மற்றவைகளையும் சரியாக கவனிக்க முடியாமல் போன குறையிருக்கிறது.

வெளியே ஒரு பார்வதி சன்னதி. பக்கத்தில் போய் நின்றதுமே கர்ம சிரத்தையாய் மந்திரம் ஓதி பத்து ரூபாய் வசூல். என்ன ஓதினார், யாருக்கு... எதுவும் தெரியாது. அன்னபூரணி எங்கே என்றதற்கு இதோ என்று கைகாட்டிய இடத்தில் பார்த்த அன்னபூரணி சுவற்றோடு சேர்ந்த விக்ரஹம். கையில் இருக்கும் அன்ன கிண்ணம்
எங்கே என்ற கேள்விக்கு 'அதெல்லாம் புடவைக்கு உள்ளே இருக்கிறது' என்ற கறாரான பதில். ஐந்து ரூபாய் தட்டில் போட்டதும் புடவையை விலகி கிண்ணம் காட்டினார். கரண்டியைக் காட்ட இன்னொரு ஐந்து ரூபாய். நமட்டுச் சிரிப்போடு நானும், இதெல்லாம் சகஜம்ப்பா சிரிப்போடு அவரும் விடை பெற்றோம்!

மழை, கூட்டம், காக்கிச் சட்டை கெடுபிடி, அர்ச்சகர் இடையூறு... இதெல்லாம் இல்லாத இன்னொரு நாளில்(அப்படி ஒரு நாள் இருக்கிறதா என்ன?) சந்திப்போம் என்று விஸ்வநாதரிடம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். கங்கைக் கரையில் எதிர்பார்த்திருந்த சாதுக்களையும் சந்யாசிகளையும் நாங்கள் போன மொட்டை
வெயிலில் பார்க்க முடியவில்லை. மாலை ஏழு மணிக்கு நடக்கும் கங்கை பூஜை போட்டில் இருந்து பார்க்க ரொம்ப அழகாயிருக்கும் என்று போட்காரர் வேறு தூபம் போட்டிருந்தார். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் காசியிலிருந்து போட்டிலேயே கொல்கத்தா வரை செல்கிறார்களாம். ஒரு வாரம் பிடிக்கும் அந்தப் பயணங்களை
நாம் தான் அனுபவிப்பதில்லை.

மந்திரமும் முழுக்குமாய் சாதுக்கள் நிறைந்த 'காட்'களின் சித்திரம் ஒன்று எண்ணத்தில் ஓடுகிறது. ஹரித்துவார் கங்கா பூஜாவை அனுபவித்து எழுதியிருந்த ஒரு நாவல் தந்த சித்திரமும் கூட. தனியாக ஒருதரம் காசிக்கு போகப் போறேன் என்று இப்போதே கணவரை அரிக்க ஆரம்பித்திருக்கிறேன். தாங்க முடியாமல் தலையாட்டி விடுவார் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

7 comments:

மதி கந்தசாமி (Mathy) said...

மிகவும் நன்றாகவிருந்தது நிர்மலா. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் நீங்களும் ஏன் இருக்கிறீர்கள் என்பதை உணர வைத்தது. :சிரிப்பு:

இந்தப் பிராந்தியத்தை வைத்து ஒரு கதை எழுதி இருக்கீங்க இல்ல? சித்தப்பாவையோ மாமாவையோ வைத்து எழுதிய கதை.

-மதி

posted by: Mathy Kandasamy

Anonymous said...

நன்றி மதி. ஆமாம் 'தேவன் மாமா'. Haridhwar பேஸ் பண்ணி எழுதியிருந்தது.

posted by: nirmala

Anonymous said...

//தனியாக ஒருதரம் காசிக்கு போகப் போறேன் என்று இப்போதே கணவரை அரிக்க ஆரம்பித்திருக்கிறேன். தாங்க முடியாமல் தலையாட்டி விடுவார் என்று நினைக்கிறேன்.//

போயிட்டு திரும்பி வருவேன்னு சொல்லிப் பாருங்க...
:-)))

posted by: ஞானபீடம்

பத்மா அர்விந்த் said...

நிர்மலா
நன்றாக இருந்தது.நீங்கள் எழுதிய கதையை படிக்க வேண்டும். காசியைவிட ரிஷிகேஷ் இன்னும் நிர்மலமாக அமைதியாக இருந்தது. காசியில் எனோ ஒருவித அவசரத்தன்மையும் வியாபார பரப்பும் இருப்பதாக தோன்றுகிறது.

posted by: Padma Arvind

Anonymous said...

நிர்மலா,

ஆஹா, எனக்கும் போகணும்.
'அப்படியே கங்கையிலே இறங்கிறப்போறேன்'னு சொன்னதுக்கு மகள்
சொல்றா,'மாட்டே. திரும்பி வந்துருவே'ன்னு :-)

என்றும் அன்புடன்,
துளசி.

posted by:

செல்வராஜ் (R.Selvaraj) said...

நிர்மலா, உங்கள் பயணக்கட்டுரைகளும் தெளிவான விவரணைகளும் நன்றாக இருக்கின்றன.

posted by: செல்வராஜ்

Anonymous said...

பத்மா... ரிஷிகேஷ் போனதில்லை. போக வேண்டும். எப்பன்னு தான் தெரியலை!

எல்லா இடங்களையுமே அப்படித்தான் ஆக்கிவிட்டோம். இந்த பயணத்தில் திரிவேணி சங்கமம் கூட பார்த்தோம். அதைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசும் போது அவர் சொன்னது ' 70 களில் அங்கே போன நினைவிருக்கிறது. அப்போ நீங்க சொல்ற மாதிரி நிச்சயம் இருக்கவில்லை!'

வேதனையாத்தான் இருந்தது.

துளசி, போயிட்டு வாங்க. அதிகம் போன நாலு நாள். நிதானமா ரசிக்கறதுக்கு. அதுக்கு மேல தாங்காது!

நன்றி செல்வராஜ். கடைசியில் 'தனியாகப் போக வேண்டும்' என்று எழுதும் போது உங்க நினைவு வந்தது.

'ஞானபீடம்'... திரும்பி வர மாட்டேன்னு சொன்ன உடனே தலையாட்டிடுவாரோன்னும் தோணுது. ஆனா நாமதான் அந்த சான்ஸெல்லாம் கொடுக்கறதேயில்லையே!

posted by: nirmala