Thursday, August 18, 2005

இறுக்கமாகவேதான் இருக்கப் போகிறோமா?

அவர் எனக்கு அதிகம் பழக்கம் இல்லாத, நெருங்கின உறவினர். அந்த முறை ஊருக்குப் போயிருந்த போது உடல்நலம் சரியில்லாத அவரைப் பார்க்கப் போயிருந்தோம். ஆஸ்பத்திரி அறையைத் தேடிப் போன போது கட்டிலில் உட்கார்ந்திருந்தார். அசப்பில் 'மணல்கயிறு' கிட்டுமணியின் மாமனாரைப் போல இருப்பார். நல்ல உயரம். வயசு காலத்தில் நல்ல சிவப்பாயிருந்திருக்க வேண்டும். அப்போது கொஞ்சம் சோகையாயிருந்தார். அவரை இதற்கு முன் பார்த்த சந்தர்ப்பங்களில் 'வணக்கம், சௌக்கியமா இருக்கீங்களா?' விற்கு மேல் போனதில்லை. அப்போதும் அதையே அசட்டுத்தனமாகக் கேட்டு, அதற்கு அவர் உடம்பிற்கு என்ன என்று விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். மெல்லிய குரலில் சினேகமாக சொல்லிக் கொண்டு போக, கேட்க ஆசையாயிருந்தது.

அப்போது உள்ளே நுழைந்த அவர் மகள் 'இவளுக்கு புஸ்தகம் வாசிக்கறதுல ரொம்ப ஆர்வம்' என்று அவரிடம் சொல்லி விட்டு, என் பக்கம் திரும்பி 'அய்யா கூட நிறைய வாசிச்சிருக்கார்' என்று சொன்ன பிறகு பேச்சில் ஸ்ருதி சேர ஆரம்பித்தது.

நான், கணவர், அவர், அம்மா (அவர் மனைவி), அவர் மகள் எல்லோரும் சேர, பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தது. பொன்னியின் செல்வனில் இருந்து அலையோசைக்குப் போன போது கணவரும், அம்மாவும் கழண்டிருந்தனர். அலையோசை நாயகி கடைசியில் ஏரியில் படகு சவாரி போகும் போது அவளுக்குக் கேட்பதாக வரும் அலை சத்தத்தைக் குறிப்பிட்டு 'வாசிக்கும் போது காதுல அலை சத்தம் கேட்டுதுப்பா' என்று அவர் சொன்ன போது 'அட! இப்படி வாசிப்பவரா நீங்க!' என்றிருந்தது.

கல்கியிலிருந்து கொஞ்சம் அங்கே இங்கே என்று அலைந்து பாலகுமாரனுக்கு வரும் போது அவர் மகளும் ஜகா வாங்கி விட்டார். மகளுக்கு அந்தக் கால பாலகுமாரன் பிடிக்காது. சமீபத்திய பாலகுமாரன் எழுத்துகளோடு எனக்கு நெருக்கமில்லை. பெரியவருக்கும் பழைய பாலகுமாரன் எழுத்துகள் மேல் ஒரு மோகம் இருந்தது. நான் நினைவு கூர்ந்ததும் அவர் நினைவு கூர்ந்ததுமாய்... ஒரு நீண்ட சுற்றுக்குப் பிறகு தி.ஜா. முதல் முதலாய் எனக்கு தி.ஜா அறிமுகமானதை நான் சொல்ல, மலர்மஞ்சம், மோக முள், அம்மா வந்தாள்... போதும் என்று நர்ஸ் விரட்டாமல் இருந்திருந்தால் இன்னும் ஓடியிருக்கும்.

இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேசியிருக்கிறோம். இன்னும் பேச வேண்டியது பாக்கியிருப்பது போல இருந்தது. பேசிய வரையில் திருப்தியாகவும் இருந்தது. விடை பெறும் நேரம், அவரைச் சந்தித்ததில் எவ்வளவு சந்தோஷம் என்பதை உணர்த்த ஸ்வாதீனமாகத் தோண்றியது அழுத்தமான ஒரு கை குலுக்கல் தான். நான் கை நீட்ட, அவர் கண்களில் ஒரு தயக்கம் காட்டி, வணக்கம் சொல்லி அனுப்பிய போது... ஆச்சர்யமாயிருந்தது.

அவரை விட்டு விடலாம். வயதானவர். அந்தக் கால மனிதர். ஆனால் அந்த சந்திப்பு சில கேள்விகளைத் தந்தது. ஒரு ஆண் இன்னொரு ஆணை சந்திக்கும் முதல் சந்திப்பே பெரும்பாலும் கை குலுக்கலில் தான் தொடங்குகிறது. ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணைச் சந்திக்கும் போது கூட ஒரு தலையசைப்பு... ஒரு ஹலோ அல்லது வணக்கம் மட்டும் ஏன்? முதல் சந்திப்பிலேயே இயல்பாக பெண்களோடு கை குலுக்கும் ஆண்கள் இல்லையென்றும் சொல்ல முடியாது. ஒருவரைப் பார்க்கும் போது இயல்பாக அப்படி எக்ஸ்பிரஸ் செய்யச் செய்வது எது? அவர்கள் உருவமா? உடை தரும் அனுமானமா? இல்லை வைப்ரேஷன்ஸா? சில நேரங்களில் எவ்வளவு பழகினாலும் விலகியே நிற்கச் செய்வது எது? மரியாதை? கலாச்சாரம்? என்னன்னாலும் நீ பெண்(ஆண்), நான் ஆண்(பெண்)?

ஒருவேளை இப்படி மறுக்கப் படலாம் என்பது தான் முக்கியமான காரணமாயிருக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் அதிகம் 30+ களுக்குத்தான். 30+ களோடுதான். அதற்குக் குறைந்த வயதுக்காரர்கள் இவ்வளவு இறுக்கமில்லை என்று தோண்றுகிறது.

இறுக்கமாகவேதான் இருக்கப் போகிறோமா?

26 comments:

Anonymous said...

ரசித்துப்படித்தேன்... யோசிக்க வைத்த எழுத்துக்கள்.. நன்றி

வீ எம்

posted by:

வீ. எம் said...

ரசித்துப்படித்தேன்... யோசிக்க வைத்த எழுத்துக்கள்.. நன்றி

வீ எம்

icarus prakash said...

நிர்மலா, உங்கள் நுட்பமான அவதானிப்புகள் ஆச்சர்யத்தைத் தருகின்றன. வெகு அழகாகவும் இருக்கின்றன.

posted by: prakash

ராம்கி said...

//இதெல்லாம் அதிகம் 30+ களுக்குத்தான். 30+ களோடுதான். அதற்குக் குறைந்த வயதுக்காரர்கள் இவ்வளவு இறுக்கமில்லை என்று தோண்றுகிறது// இன்னும் கிராமங்களில் இருக்கலாம்.

//விடை பெறும் நேரம், அவரைச் சந்தித்ததில் எவ்வளவு சந்தோஷம் என்பதை உணர்த்த ஸ்வாதீனமாகத் தோண்றியது அழுத்தமான ஒரு கை குலுக்கல் தான். // உங்களுக்குக் கை குலுக்கத் தோன்றியிருக்கிறது. வேறு சிலருக்கு அன்பையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்த வேறு வழிவகைகள் தோன்றலாம். வார்த்தைகள் விவரிக்க முடியாத உணர்வை ஒரு சிறு ஸ்பரிசம் உணர்த்திவிடும். ஆனால் இன்னும் இந்த உணர்வு நம் சமுகத்திற்குள் இறங்கவில்லை.எனவே தான் இறுக்கம் ன்னும் இறுகிப் போய் இருக்கிறது போலும்!posted by: ராம்கி

Ramya Nageswaran said...

நிர்மலா, ஸ்விஸில் புதிதாக குடித்தனம் ஆரம்பித்த பொழுது கணவரோடு வேலை செய்யும் நண்பர்களை வீட்டிற்கு அழைத்தோம். அங்கு கன்னங்களில் மாறி மாறி மூன்று முறைகள் முத்தமிடும் வழக்கம் (ஆண்கள் பெண்களுக்கு and vice versa). முதலில் மிகவும் சங்கடத்தில் நெளிந்தேன். ஆனால் அது அன்பை வெளிப்படுத்தும் ஒரு வழி என்று பழகிப் போய்விட்டது! அதை விட north indians போல் ஒரு சின்ன hug நல்ல வழியாகவே தோன்றுகிறது.

Anonymous said...

//வேறு சிலருக்கு அன்பையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்த வேறு வழிவகைகள் தோன்றலாம்.//
ரம்யா கூறியதைத்தான் நான் இதில் புதைத்திருந்தேன்.

posted by: ராம்கி

ஜெயந்தி சங்கர் said...

நிர்மலா நீங்க தி. ஜாவோட 'மரப்பசு' படிச்சிருக்கீங்களா? எனக்கு ஏனோ இந்தப்பதிவைப்படிச்சதும் அந்த நாவல் (குறுநாவல்?) தான் நினைவுக்கு வந்தது. படித்து நாளானாலும் (விவரங்கள் மறந்துவிட்டபோதிலும்) நினைவில் நிற்கும் நாவல்,.. இல்ல?
அன்புடன், ஜெயந்தி சங்கர்

posted by: jayanthi sankar

Anonymous said...

ரசித்து கருத்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி.

ராம்கி... அதைத் தான் சொல்ல வந்தேன். பத்து அலங்கார வார்த்தைகள் சொல்லாததை ஒரு அழுத்தமான கை குலுக்கல் அழகாக சொல்லலாம்.

ரம்யா... போன வாரம் 'காப்பி டே' ல் உட்கார்ந்திருந்த போது, காத்திருந்த இரண்டு பெண்களோடு வந்து சேர்ந்த மூன்றாவது பெண்ணின் சின்ன மென்மையான ஒரு முத்தம்... அவர்கள் சந்தோஷம்... அழகாக இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த என்னையும் சந்தோஷப் படுத்தியது.

'மரப்பசு' படிச்சிருக்கேன் ஜெ. எனக்கும் பிடிக்கும்.

posted by: nirmala

Anonymous said...

மூன்றாவது பெண்ணின் சின்ன ***, மென்மையான ஒரு முத்தம்...

சின்ன hug, மென்மையான முத்தம் ... இதில் hug அங்கே ஆங்கிலத்தில் அடிக்க நினைத்து விட்டுப் போயிடுச்சு!

posted by: nirmala

donotspam said...

அழகான பதிவு.

posted by: eswar

Anonymous said...

நிர்மலா !! நல்ல கருத்து.

ரம்யா சொல்வது போல "north indians போல் ஒரு சின்ன hug நல்ல வழியாகவே தோன்றுகிறது." நல்லதுதான். சிவாஜியும் கலைஞரும் ஒரு மேடையில் கட்டித்தழுவியது கொஞ்சம் கண்களில் நீரை வரவழைத்தது. மனிதன் மனிதனுடன் அன்பை பகிர்ந்து கொள்ள அது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. கட்சி, ஈகோ, வயது, புகழ் என அனைத்தையும் தாண்டி புரிதலையும் பகிர்தலையும் மட்டுமே அன்று நான் பார்த்தேன்.

இதே கலைஞர் ஒரு பெண்ணிடம் இதே போல அன்பை பகிர்ந்து கொள்ள நினைத்தாலே தவறென்ற எண்ணம் என்னையறியாமலேயே மேலோங்குகிறது. எனக்குள்ளுமிருக்கிறது இறுக்கம். !!!

posted by: gganesh

Anonymous said...

எங்கேயோ கொண்டு போய் கடைசியில கைகுலுக்குற விதயத்துல கொண்டு வந்து விட்டிருக்கீங்கன்னாலும், இது நானும் ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்தது தான். இந்தச் சங்கடம் எனக்கும் நிறையா நடந்திருக்கு. காரணம் எதிரில் இருப்பவர் இறுக்கமானவரா இல்லையா என்று எப்படிக் கண்டுபிடிப்பது. அவரைத் தர்மசங்கடத்துல விட வேண்டாமேன்னு தோணும். இதுக்கு ஒரு வழி, நீங்க பண்ணுன மாதிரி டபக்குனு கைய நீட்டிற வேண்டியது தான்.

posted by: செல்வராஜ்

Anonymous said...

நிர்மலா,

24 வருச வெளிநாட்டு வாழ்க்கையிலெ இந்த கை குலுக்கல் இயல்பா வந்துருச்சு. ஆனா ஒரு தடவை மாமியோட மகளோட கணவரிடம் போயிட்டுவரேன்னு சொல்லிட்டுக் கை குலுக்கிட்டேன். அப்ப அவரோட முகம் போன போக்கைப் பாக்கணுமே!
அப்பத்தான் எனக்கு சட்டுன்னு உரைச்சது. அதிலிருந்து இந்தியா போனாலோ, இந்திய ஆண்களைப் பார்த்தாலோ
பதவிசா ஒரு நமஸ்தே:-)

என்றும் அன்புடன்,
துளசி

posted by:

Anonymous said...

நன்றி ஈஸ்வர்.

இருக்கமா இருக்கோம்ன்னு யோசிக்க ஆரம்பிக்கலாம் கணேஷ். கை குலுக்கலில் முதலில் தொடங்கலாம்.

செல்வராஜ்... அவ்வளவு நேரம் ரெண்டு பேருக்கும் பிடித்த விஷயங்களைப் பேசினதுல என்னை மாதிரியே அவரும் உணர்ந்துதான் இருந்தார். இருந்தாலும் தயக்கம். ஆனா யார்கிட்ட என்னைப் பற்றி பேசினாலும் ' அது என் ப்ரெண்டுப்பா' என்று தான் சொல்வார். எனக்கும் அவர் ப்ரெண்டு தான். அப்பா மாதிரியெல்லாம் கிடையாது.

துளசி... புரியுது. உறவுகளைப் பார்க்கும் போது நண்பர்கள் வட்டம் லேசானதுதான்.

posted by: nirmala

Anonymous said...

அடடே டீச்சர்,

வெகெஷன்ல இருந்து இன்னைக்கித்தான் வந்தேன். அருமையான பதிவு. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உடல் ஒரு தடை கடல். அதை அங்கீகரித்தோ/ கடந்தோ தான் உண்மையான ப்ரியத்துக்கு நகர முடியும். அதுக்கு முக்கியத்துவம் குடுத்தா இறுக்கம் குறையாது. கலக்குங்க.

posted by: மூக்கு சுந்தர்

Anonymous said...

வாங்க சுந்தர், நீங்க லேட்.

கலக்கறதா??? குழப்பி முடிக்கப் போறேன்!!

posted by: nirmala

Anonymous said...

சாம் பிட்ரோடா ஒரு முறை சொன்னது:
கை குலுக்குவது என்பது ஒரு வித சம்நிலையை- நீயும் நானும் ஒரே தளத்தில்- இருக்கிறோம் என்பதை உணர்த்துவது. காலில் விழுவது என்பது நீ என்னை விடப் பெரியவன்/ள் அல்லது சின்னவன்/ள் என்பதை நினைவூட்டுவது.

இணையக் கலாசாரம் கை குலுக்கும் கலாசாரம்.அங்கு அநேகமாக அதிகாரவரிசை (Hierarchy) கிடையாது. மேடைப் பேச்சுக் கலாசாரம் காலில் விழுவதைப் போல. அங்கு (Hierarchy) உண்டு. 'தலைவர் அவர்களே!' etc
நம் நாட்டில் கணினி -இணையம் எதிர்பார்த்த வேகத்தில் விரிவடையாததற்குக் காரணம் நம் அரசியல்வாதிகள் காலில் விழும்/ மேடைக் கலாசாரத்திலிருந்து விடுபடாததுதான்" ( இதை அவர் சொன்னது 90களின் துவக்கத்தில்)

ஒரு வேளை 30+க்கும் இதுதான் பிரசினையோ என்னவோ?


posted by: மாலன்

Anonymous said...

//கை குலுக்குவது என்பது ஒரு வித சம்நிலையை- நீயும் நானும் ஒரே தளத்தில்- இருக்கிறோம் என்பதை உணர்த்துவது.//

மாலன்... அதுதான் சொல்ல வந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது நேரில் பேசலாம்.

நன்றி.

posted by: nirmala

Tamilan said...

Vannakkam :


Sorry that I dont have tamil font . Today is the first time, I am reading this blog Mrs.Nirmala.Your words are so thought provocative.

Regarding sharing feelings, I always thought and think, When Europeans express love with a kiss and Hug, When Arabs express love by Hugging three times , why out tamil culture does not embrace these values, are we scared of our moral values will not be high if we do that??

I think this comment is written way long after this message was posted, but wanted to put my thoughts in.

Regards
Lakshmanan

முத்துலெட்சுமி said...

எங்க அம்மா அவங்க நட்பு வட்டத்து ஆளுங்களையும் அந்நாளைய உறவுகளில் உள்ள தோழிகளையும் பார்க்கும்போது ஓடிப்போய் கையைப் பிடித்து, பின் தோளோடு அணைத்தால் போல் நின்று எவ்வளவு நாள் ஆச்சு என்று கேட்கும்போது நிறைய பேர் ஆச்சரியமா தான் பார்ப்பாங்க..
மனசில் இளமை இருக்கறவங்க சுற்றம் மறந்து சந்தோசத்தை வெளிப்படுத்துவாங்கன்னு நினைக்கிறேன்.

Nirmala said...

நன்றி லக்ஷ்மணன்... உங்களுக்கு பதில் எழுத எப்படி விட்டுப் போனது என்று தெரியவில்லை!

உங்களுடைய கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன்... இயல்பாக தோன்றும் உணர்வுகளை முடக்கிக் கொள்வது... அதில் நிறைய இழக்கிறோமோ என்ற தோணல்.

வருகைக்கு நன்றி லட்சுமி. அம்மாவுக்கு என் அன்பைத் தெரிவியுங்கள். எப்போதும் அப்படியே இருக்கச் சொல்லுங்கள்.

மதுமிதா said...

இந்த இறுக்கம் முன்பு இருக்கும்தான். ஆனா, இப்ப இல்லை.

நாம கொஞ்சமா வளர்ந்திருக்கிறோங்கிறதை இந்த மனமாற்றம் காட்டுதுன்னு நினைக்கிறேன்.

நல்ல பதிவு நிர்மலா.
கல்வெட்டு சொல்லி இங்கே வந்தேன்.

Nirmala said...

சந்தேகமேயில்லை மது. நிச்சயம் மாறியிருக்கிறோம், நானும் பார்த்தேனே! இந்த இறுக்கம் தளர்த்தும் போது ரொம்ப லேசா இருக்குதானே? அப்படியிருக்கும் போது எதுக்கு இவ்வளவு அனாவசிய மனத்தடைகள்... இல்லையா?

Nirmala said...

பரிந்துரைத்த கல்வெட்டுக்கு நன்றி :-)

அறிவன் /#11802717200764379909/ said...

நல்ல விதயத்தை தொட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.
அன்பு சுரக்கும் எந்த இடத்திலும் ஸ்பரிசத்துக்குத் தேவை உண்டு;நமது குழந்தையை எவ்வளவு வார்த்தைகளால் சீராட்டினாலும்,நமது ஒரு அணைப்பு அவர்களுக்கு எவ்வளவு தேவை?????
ஆயினும் இதில் சம்பந்தப் பட்டவரை முதன் முதலாய் சந்திக்கிறோமா அல்லது அவர் நம்மை நன்கு அறிந்தவரா என்பதிலும் விதயம் இருக்கிறது.
மேலும் எந்த பாலராயினும் நாம் மனத்தடைகள் இல்லாதிருப்பினும்,மற்றவரின் மனச்சாய்வுகள் நட்பைக் கொச்சையாக்கும் நிகழ்வுகளும் நடக்காமலில்லை.
ஆயினும் பெண்கள் மிகவும் நுண்ணியமானவர்கள்;மனச்சாய்வுகள் எளிதில் வெளுத்துவிடும்.

Nirmala said...

வணக்கம் அறிவன். 'மனச்சாய்வுகள்' புதிதாக தெரிந்து கொள்ளும் வார்த்தை... நன்றி. பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இதை உணர்ந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.