Tuesday, February 07, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 3

வாசித்துக் கொண்டே போகையில் எங்கேயாவது ஒரு இடத்திலாவது 'படவா! சரியான குசும்பன்டா நீ'... இப்படியாக மனசில் ஓடி ஒரு புன்னகை வர வைக்கும் எழுத்தாக எனக்கு குஷ்வந்த் சிங்கின் எழுத்து இருந்திருக்கிறது. அவர் இந்த தலைப்பிலா?... இது தான் முதலில் தோன்றியது Obituaries - death at my doorstep புத்தகத்தை கடையில் பார்த்த போது. மேலும், 'தவிர்க்க முடியாததுதானென்றாலும் பேசாமலும் வாசிக்காமலுமாவது இருக்கலாம். அதை நான் வாங்கப் போவதில்லை' என்று தான் முதலில் முடிவானது. ஆனாலும் சில விரட்டல்களைத் தவிர்ப்பது சிரமம். இதுவும் அப்படியே.

வெவ்வேறு சமயங்களில் குஷ்வந்த் சிங் எழுதிய மரணச்செய்தி குறிப்புகளின் தொகுப்பு. குஷ்வந்த் சிங் அவருடைய இருபதுகளில் அவருடைய obituary அவரே எழுதியிருப்பதாக எங்கேயே வாசித்திருக்கிறேன். புத்தகம் அதனோடு தான் தொடங்குகிறது. அது எனக்குத் தெரிந்த குஷ் எழுத்தின் சாயலில் கொஞ்சமும் இல்லை. சாவைப் பற்றி அவர் கேட்டறிந்தவைகள்... கேட்டவர்கள் வரிசையில் தலாய் லாமா, ரஜனீஷ், வி.பி.சிங்... தெளிவில்லாத விளக்கங்கள்.

புத்தகம் உள்ளே இழுத்துக் கொள்வது புட்டோவின் இறுதி நாட்களை விவரித்துக் கொண்டு போகும் போது தான். பனிரெண்டு பக்கங்களுக்கு நீளும் அந்தக் குறிப்புகள்... சாப்பிட்டுக் கொண்டே வாசித்துச் செல்ல, ஒரு கட்டத்தில் அது சொல்லத் தெரியாத அவஸ்தையாகி, புத்தகத்தை மூடி வைக்க வைத்தது. அரசியல் நண்பர்கள், எழுத்தாள நண்பர்கள், அவருடைய வீட்டு காவல்காரர்... தொடரும் மரணச் செய்திகள். வெறும் வார்த்தைகளாயில்லாமல் உணர்வுகளாய். தெரிந்த முகங்களும் தெரியாத தகவல்களும். ஒரே சோக கீதம் பாடாமல், இயல்பாய் சொல்லிப் போகிறது. இந்த புத்தகத்தில் கூட மனுஷன் குறும்புத்தனத்தைக் காட்டாமல் போகவில்லை. இத்தனை சாவு சமாச்சாரங்களையும் படிக்க தயார் செய்யவென்றேயாயிருக்கும்.

'கொஞ்சம் சினிமா' வில் அந்தர்மகாலில் தொடங்கி பார்த்த பெங்காலிப் படங்களையும், கொஞ்சம் ஹிந்தி படங்களையும் சொல்ல நினைத்தது... பெங்காலிப் படங்கள் எண்ணிக்கை நீண்டு போனதில் அதைத் தனியாகத் தான் எழுத வேண்டும். அந்த வரிசைப் படங்களில் கனத்து போன தலையை லேசாக்க இடையில் பார்த்த
'Bluffmaster' ம் , Neal n Nikki' ம் முழு மசாலா. சும்மா அபிஷேக்பச்சனை பார்க்க்க்கவும், ம்யூஸிக்கிற்காகவும் Bluffmaster நல்ல சாய்ஸ். கூல் n லைட் மூவி. Neal n Nikki... ஒரு பைசாவுக்கு தேறாது. இந்த உதய் சோப்ராக்கு என்ன ஆச்சு? நல்லாத்தானே இருந்தார்? அந்த ஓவர் சைஸ் புஜங்களும் அதற்கு கொஞ்சமும் பொருந்தாத முகமும்... கொடுமை! அநியாய மினி சைஸ் ஆடைகளில் தனிஷா... இவ்வளவும் குறைச்சிருக்க வேண்டாம் தான். வேஸ்ட்.

அதையெல்லாம் ஒதுக்கி விட்டு அதிகம் கவனம் பெறாத இந்த படம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். Hazaar Chaurasi ki maa.

இந்த படத்தை வாங்கும் போது இது என்ன படம், எதைப் பற்றியது என்ற எந்த அனுமானமும் இல்லை. இறுக்கமான ஜெயாபச்சன் முகமும், கோவிந்த் நிஹலானி என்ற பெயரும் தான் அதை வாங்கச் சொல்லியிருக்க வேண்டும். படம் தொடங்கி இரண்டு நிமிடம் வரை தலைப்புக்கு அர்த்தம் கூட தெரிந்திருக்கவில்லை. அப்புறம்
தான் தெரிந்தது hazaar chaurasi... 1084 என்று. 1084 எண் உடலைக் காட்டி அடையாளம் காணச் சொல்வதுடன் படம் தொடங்குகிறது. அதற்குப் பிறகே தன் மகன் நக்ஸலைட் என்று தெரிந்து கொள்ளும் ஒரு அம்மாவின் தேடல்கள்.

மஹாஸ்வேதா தேவியின் Hazaar chaurasir maa என்ற நாவலின் திரைப்பட வடிவம். நக்ஸலைட் என்று கொல்லப் பட்ட மகனின் சுவடே இல்லாமல் செய்ய முயற்சிக்கும் குடும்பம், அதிலிருந்து விலகி மகனின் வேர்களைத் தேடிச் போவதும் தெரிந்து கொள்வதுமாய். கொலை செய்யப் பட்ட இரவு அவன் தங்கியிருந்த நண்பன் வீடு... அவனின் அம்மாவிடமிருந்து மகனுடைய இன்னொரு முகத்தைத் தெரிந்து கொள்வதும், எப்படி இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போனது என்ற குற்ற உணர்ச்சியும், அதிலிருந்து மீண்டு வருவதுமாய் போகும் கதை.

அம்மாவாக ஜெயாபச்சன். அந்த நிதானம், இறுக்கமான அமைதி... நிறைவாக செய்திருக்கிறார். நண்பனின் அம்மாவாக சீமா பிஸ்வாஸ். உடைந்து அழும் அந்தக் காட்சி ஒன்று போதும். மகன் பாத்திரத்தில் ஜாய் சென்குப்தா. காதலியாக நந்திதா தாஸ். பேரலல் சினிமாவின் வழக்கமான முகங்கள். எந்த அலங்காரமும் இல்லாத க்ளீன் மூவி.

எழுபதுகளின் கல்கத்தா, சொல்லப் போனால் பளபளக்கும் பெரிய சாலைகளுக்கு பின்னால் இன்னமும் அப்படி ஒரு கல்கத்தா இருக்கத்தான் செய்கிறது. பெரிய மாற்றங்களில்லாமல். நக்ஸல் இயக்கம் விட்டுப் போன வலி இன்னமும் எத்தனையோ குடும்பங்களில் மிச்சம் இருக்கலாம். அதனாலேயே அந்த நாட்களின் வேகம் இல்லாமல் போயிருக்கலாம். கோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போய் நின்று பார்த்தால் அதனுடைய நியாயங்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

இதே விஷயத்தைத் தொட்ட Hazaaron khwaishien aisi... ஒரு பீரியட் படம் என்ற பார்வையில் இன்னும் அதிகம் கவனம் எடுத்திருக்க வேண்டுமோ?

இதோ இங்கே சால்ட் லேக்கில் எழும்பும் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு தோண்டிய பள்ளங்களில் கிடைத்த எலும்புகள், ஏரியில் இப்படித் தூக்கி போட்ட கணக்கில்லாத சடலங்களின் மிச்சங்கள் என்று கேள்விப்பட்ட செய்தி நினைவுக்கு வந்து போகிறது. கொல்கத்தாவும் அதன் வரலாறும், ஆழமும் அகலமுமாய்... ரொம்பப் பெரிசு.

1 comment:

ராம்கி said...

பதிவுக்கு நன்றி..
இன்று பழைய பதிவுகளையும் படித்தேன்.
//நக்ஸலைட் என்று கொல்லப் பட்ட மகனின் சுவடே இல்லாமல் செய்ய முயற்சிக்கும் குடும்பம், அதிலிருந்து விலகி மகனின் வேர்களைத் தேடிச் போவதும் தெரிந்து கொள்வதுமாய். கொலை செய்யப் பட்ட இரவு அவன் தங்கியிருந்த நண்பன் வீடு... அவனின் அம்மாவிடமிருந்து மகனுடைய இன்னொரு முகத்தைத் தெரிந்து கொள்வதும், எப்படி இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போனது என்ற குற்ற உணர்ச்சியும், அதிலிருந்து மீண்டு வருவதுமாய் போகும் கதை.//

அம்மாவின் கோணத்தில் இருந்து கதையை நகர்த்துகிறார் என்பதே சுவாரஸ்யம் கூட்டுகிறது.

நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்வது இனிப்பு இனிக்கிறது என்று சொல்வது போல் இருக்கும்.. பதிவுக்கு நன்றி என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.