Wednesday, November 29, 2006

சென்னை ம்யூஸிக் ·பெஸ்ட்

நவம்பர் ஹிந்து ம்யூஸிக் பெஸ்ட் போயிட்டு வந்ததில் கொஞ்சம் கொறிக்க. ஆறிப் போனதுன்னாலும் அதில் ஏதோ சொல்ல வேண்டியிருந்தது. கொஞ்ச நாளா யோசிக்கறது மூணு பாஷை, எழுதறதுக்காக தமிழ்ப்படுத்துவதில் இருக்கற அசௌகரியம்... இதுக்காகவே ஒரு ஆங்கில ப்ளாக் ஆரம்பிக்கலாமான்னு முயற்சி பண்ணியது... நல்லவேளை ஹிந்தி எழுதற, படிக்கற வேகம் இரண்டாம் வகுப்பு குழந்தையோட கூட போட்டி போட முடியாத அளவானதால ஹிந்தி ப்ளாக் உலகம் பிழைத்தது!

இரண்டு வார இறுதிகளில் ஏழு நாள் நிகழ்ச்சி. முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதமா இல்லை என்பது தான் போகத் தூண்டியதற்கு முதல் காரணம்.

சீஸன் டிக்கெட் வாங்கின ஒரே காரணத்துக்காக முதல் வரிசையில் உட்கார வைத்து விவிஐபி ட்ரீட்மெண்ட் கொடுத்தது ம்யூஸிக் அகடமியா, இல்ல நிகழ்ச்சி அமைப்பாளரா தெரியவில்லை. எந்தரோ மகானு பாவோ, அந்தரிக்கே நா வந்தனம்!

முதல் நாள் ·பரிதா கானும் கஸல் & தும்ரி. உருது வார்த்தைகள் ஒவ்வொன்றாக அர்த்தம் விளங்கி புரிஞ்சுக்க முடிந்த போது ஏதோ பூ விரிந்த மாதிரி இருந்தது. சில நேரம் எதுவுமே புரியாம பாட்டு கேட்கிற சுகம் மட்டும். பக்கத்து இருக்கை அம்மணி மகளிடம் ·பரிதா கானும் போட்டிருந்த கம்மலை கவனிச்சயான்னு ஜாடை காட்டி சின்னதாகச் சிரிக்க வைத்தார். திருத்த்த்த முடியாது!

ஜெர்மனியிலிருந்து வந்திருந்த நால்வர் இளைஞர் அணி Mozart வாசித்ததில் மொத்த அரங்கத்தையும் கட்டிப் போட்டது இசையா அல்லது அசட்டுத்தனம் காட்ட வேண்டாமென்ற பயமா தெரியவில்லை. கைதட்டல் கூட கொஞ்சம் தயக்கத்தோடுதான்.

ஞாயிற்றுக் கிழமை கூட்டம் கலந்து கட்டி இருந்தது. பெரும்பாலும் காஷ¤வலாக வந்திருந்த இளைஞர் கூட்டம். எப்போதோ காதில் விழுந்திருந்த Kandisaa பாடிய Indian Ocean இவர்கள் தான் என்பது ரொம்ப லேட்டாகத்தான் தெரிந்தது. அவர்களுடைய இசை, வெளிப்படையான பேச்சு, தளர்வான உடல் மொழி எல்லாவற்றோடும் சட்டென்று பொருத்திக் கொள்ள முடிந்தது. ஒவ்வொரு பாடல் தொடங்குவதற்கு முன்னால் அது எந்த மாதிரி சூழலில் எப்படி உருவானது என்று சொல்லிப் பாடும் போது அந்த சூழலுக்குப் போய் ரசிக்க முடிந்தது. காட்டாறு மாதிரியான ஒரு ·ப்ளோ. அடிச்சுட்டு போயிடக்கூடாதான்னு இருந்தது.

ஒரு சிரியன் கிரிஸ்டியன் குழு சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் மதம் வளர்க்க கேரளா வந்து பாடிய பாடல் ஒன்று கேரள வாசம் சேர்த்து நாளாவட்டத்தில் யாருக்குமே அர்த்தம் தெரியாத ஒரு பாடலாகி அது யாரோ பாடி இவர்கள் கேட்டு kandisaa ஆனதாகச் சொன்னது சுவாரசியம்.

எங்களை சூ·பிக்கள் என்று எங்கள் நண்பர் சொல்கிறார். ஆனா எங்களுக்கென்னவோ நாங்கள் லூ·பிக்கள் என்று தோன்றுகிறது என்று சொல்லி ஒரு நிமிஷம் இடைவெளி கொடுத்து லூ·பிக்களுக்கு கொடுத்த விளக்கம்... 'we are the sufis who cannot control the lust'... இதைக் கேட்டு ஒரு கைத்தட்டலோடு சத்தமாகச் சிரித்து வைக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்த கனவான் ஓரக்கண்ணால் முறைத்தார். மறுநாள் பக்கத்தில் இடம் காலியிருந்தும் உட்காரவில்லை!

Global conversation-ல் கலா ராம்நாத் வயலின் மற்றும் சான்பிரான்ஸிஸ்கோ ஜார்ஜ் ப்ரூக்ஸின் சாக்ஸபோன். அறிமுகத்தின் போதே அம்மணியின் வயலினை பாடும் வயலின் என்று சொன்னார்கள். எனக்கென்னவோ அது கொஞ்சுவது போலிருந்தது. வாயெல்லாம் சிரிப்பாய் அனாயசமா அவர் கையசைக்க அதென்னவோ குழந்தையாட்டம் சொன்ன பேச்சு கேட்கிறது. இவ்வளவு திறமையிருக்க, சாக்ஸ் கலைஞரை கொஞ்சம் நாதா அல்லது குருவே என்ற பாவத்தோடு பார்த்துக் கொண்டு அவருக்கு இசைந்து வாசித்ததைப் பார்க்க பிடிக்கவில்லை.

ஜுகல்பந்தி பாலமுரளி கிருஷ்ணாவும் அவருடைய சிஷ்யர் அஜோய் சக்ரோபர்த்தியும். குருபக்தியில் சிஷ்யர் குரல் எழும்பவேயில்லை. அரங்கமே குருவை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தது. அன்றைக்கு கச்சேரியைவிட சுவாரசியமாக ஒரு நண்பர் கிடைத்தார். நாற்பத்தி ஐந்து வருட இசை கேள்வி ஞானம், பாலமுரளி கிருஷ்ணாவுடைய இளமைக்கால நண்பர்,
எக்கச்சக்கமான நினைவுகளுக்கு சொந்தக்காரர்... பதில் சண்டை போடுவேனோ என்ற எதிர்பார்ப்பில் ஏதோ கேட்டு வைக்க நான் எதோ பதில் சொல்ல சட்டென்று நண்பர்களாகிப் போனோம். ராகங்களைப் பற்றி அவர் ஏதோ சொல்லிக் கொண்டு போக நிஜமாகவே புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது ஏனோ லலிதா ராம் ஞாபகம் வந்தது. அந்த இடத்தில் அவர் இருந்திருக்கலாம்! நிகழ்ச்சி முடிந்தும் பேசிக் கொண்டிருந்தது போதாது என்று ஞாயிற்றுக் கிழமை போனில் ஒரு மணி நேரம் அரட்டை. எனக்கு ராகங்களை புரிய வைப்பதில் ஆர்வமாயிருக்கிறார். எவ்வளவு தேறுவேனென்று தெரியவில்லை! உங்களை சந்தித்ததில் சந்தோஷம் மிஸ்டர். சக்கரபாணி. (மனுஷருக்கு தமிழ் படிக்கத் தெரியாதாம்! எப்படியும் இதைப் படிக்கப் போவதில்லை).

சனிக்கிழமை அருணா சாய்ராம் வழங்கிய முழுநீள அபங்க். எப்போதோ வழக்கமாக காதில் விழுந்து கொண்டிருந்த, அவ்வளவாக கேட்கப் பிடிக்காத மராட்டி அவர் குரலில் ஸ்வீட்டாக இருந்த மாதிரி இருந்தது! அந்தக் குரலில் இருந்த பாவம் கேட்கும் போது அழவைச்சுடுமோன்னு இருந்ததால் அம்மணி மேல் சரியான பொறாமை. மனசு சரியில்லையா ஒரு பாட்டு பாடினா போதும்ன்னு இவர்களுக்கெல்லாம் ஒரு வசதி இருக்கேன்னு தான். வழக்கமான கர்நாடக கச்சேரிக்கு பழக்கப் பட்ட சென்னைக் காதுகள் இடைவேளையில் காணமல் போய்விட்டன.

கடைசிநாள் நிகழ்ச்சிக்கு என் காதும் மனசும் காலியிருக்கவில்லை. ஒட்டாம முதல் பாதி கேட்டதோடு சரி. எனக்கு அதுக்குமேல சங்கீதம் ஜீரணமாகாது போல! கொஞ்சம் இடைவெளி விட்டு டிசம்பர் கச்சேரிகளைத் தேர்ந்தெடுத்துக் கேட்க உத்தேசம். நாலு சீட்டு இடைவெளியில் தொடங்கி அடுத்தடுத்த இருக்கை வரை முன்னேறி கடைசி நான்கு நாள் பக்கத்து இருக்கைக்காரராக இருந்த திருமதி. ஒய்ஜிபி அவருடைய சபா நிகழ்ச்சிகளைப் பற்றி சந்தோஷமாகச் சொல்லியிருக்கிறார். பார்க்கணும்.

கம்பியரிங் பண்ண வந்த திரு.*&(% (பெயர் தெரியவில்லை!) வை எங்கேயோ பார்த்த ஞாபகம். நிகழ்ச்சிக்கு ஏற்ற மாதிரி உடையணிந்து வந்ததும் இயல்பான பேச்சையும் சொல்லாமப் போனேன்னா (அத்தனை ஜொள்ளு விட்டதற்கு)சரியாகாது.

என்னதான் நல்ல செட்ன்னு போட்டு அலற விட்டுக் கேட்டாலும் கண் முன்னால உட்கார்ந்து வாசிக்கறதைக் கேட்கற சுகமே சுகம்.

4 comments:

சுரேஷ் கண்ணன் said...

NICE

மதி கந்தசாமி (Mathy) said...

//என்னதான் நல்ல செட்ன்னு போட்டு அலற விட்டுக் கேட்டாலும் கண் முன்னால உட்கார்ந்து வாசிக்கறதைக் கேட்கற சுகமே சுகம்//

நிர்மலா,

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்...... பொறாமைப்பட வச்சுட்டீங்கப்பா! ஒவ்வொரு வரியை வாசிக்கிறப்பவும் காது மூக்கெல்லாம் புகைவந்தது. :)

அருமையாக உங்களின் பாணியில் எழுதி இருக்கிறீர்கள். ஏதோ சங்கீதம் கேக்கலைன்னாலும் என்னல்லாம் நடந்தது என்று தெரிந்துகொள்ள முடிந்தது. முந்தியெல்லாம் டிசம்பர் இசைவிழா செய்திகளை விழுந்துவிழுந்து படிப்பேன். அப்படியே மனதில் உருவகப்படுத்திக்கொள்வதும் நடக்கும். ;) பிறகு பிறகு, எழுத்தில் இருக்கும் அரசியல்கள் தள்ளிப்போக வைத்துவிட்டன. நம்ம ராம் எழுதுவதை மட்டும் (இதே புகைவிடல்களுடன்) வாசித்துக்கொண்டிருப்பேன். இந்த வருஷம் நீங்களும் ராமும் சேர்ந்து கலக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நேத்திக்குத்தான் Gautam Ghoseஇன் Abare Aranye பார்த்தேன். உடன நீங்கதான் நினைவுக்கு வந்தீங்க. உங்ககூட பேசணும்போல இருந்ததுன்னா பார்த்துக்கங்களேன். :)) சத்யஜித்ரேயின் aranyer din ratri பார்க்கக் கிடைச்சதில்ல. :( ஆனா, சில வாரங்களுக்கு முந்தி சத்யஜித்ரேயின் Ghare-Baire பார்க்கக்கிடைத்தது. உறைஞ்சுபோயிட்டேன்! மூலக்கதை ரபீந்திரநாத் தாகூருடையது என்று அறிந்ததும் ஆச்சரியம் வந்தது.

ஆசைகளின், பெங்காலி கத்துக்கணும் என்பதுவேறு சேர்ந்துகொண்டுவிட்டது. ;)

அடிக்கடி எழுதுங்க நிர்மலா.

ஆங்கிலத்தில் பதிவு ஒண்ணு தொடங்கிவிடுவமா?

http://wordpress.comல தொடங்கிரலாம். என்ன சொல்றீங்க?

-மதி

Boston Bala said...

இந்தியன் ஓசியனை நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டிசம்பரிலும் இந்த மாதிரி செல்லும் எண்ணம் உண்டா?

Nirmala said...

sorry friends... net down... so cudnt forward the comments on time... n no reply back either!