அவன்... வயது பத்தொன்பது. அந்த வயதிற்கே உரிய பெண்கள், காதல், சினிமா, ம்யூஸிக்... இவற்றிலிருந்து விலகி இருப்பவன். ப்ராணிக் ஹீலிங் கற்றுக் கொள்கிறேன். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆர்ட் ஆப் லிவிங் சேர்ந்திருக்கேன். நான் டான்ஸ் ஆடினேன் என்றால் நம்புவீர்களா? இன்றைக்கு ஆடினேன். சந்தோஷமாக இருக்கிறேன். நான் எல்லோரையும் போல குடும்பம், மனைவி என்று வாழப் படைக்கப் பட்டவன் இல்லை என்பவன்.
எனக்கு பிராண்டட் சட்டைகள் தான் பிடித்திருக்கிறது. எம்டிவி, விடிவி ஸோ குட், என்ன சொல்றீங்க? என்று கேட்பவன். இந்திய கிரிக்கெட் டீம் பிடிக்காது. இந்தியாவில் நிறைய மாற்றம் வர வேண்டும் என்பவன். ஆனால் அதில் நம்பிக்கை அதிகம் இல்லாதவன். பகத் சிங் பட கடைசிக் காட்சியில் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தவன். காந்தி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால் பகத் சிங்கை தூக்கில் போட்டிருக்க மாட்டார்களா? என்று வேதனைப் பட்டவன். ஸ்வதேஷ் ஒரு நல்ல படம். பார்த்ததில் எனக்குள் பாதிப்பு இருக்கிறது என்பவன். வயது பதினாறு.
வயது இருபத்தி ஐந்து. பிஸியோ தெரபிஸ்ட். அதுவும் இன்னும் ஆறு மாதங்களுக்குத்தான். அதற்குப் பிறகு முழுநேர மக்கள் சேவை என்று நண்பர்கள் தினத்தன்று தொலைபேசியில் அறிமுகமானவன் சொல்லிப் போகிறான்.
பொய் சொல்லப் போவதில்லை, ஏமாற்றப் போவதில்லை. நான் சொல்வதை கவனமாக யோசித்துப் பார். வேண்டாம் என்றால் என்னை கன்வின்ஸ் செய். கேட்டுக் கொள்கிறேன் என்கிறாள். கலாச்சார கோடுகள்... தாண்டுவதில் தப்பில்லை என்கிறாள். எல்லாம் மாறும், மாறத்தான் போகிறது என்கிறாள்.
என் வாழ்க்கை. நான் வாழ்கிறேன். எனக்கு என் தொப்புளில் வளையம் போடப் பிடித்திருக்கிறது. அதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்கிறாள். கல்லூரி விடுதி வாழ்க்கை என் வாழ்க்கை. நான் விரும்பிய வண்ணம் வாழ்கிறேன். ஊருக்குப் போகும் போது அவர்கள் விரும்பும் மகளாக இருக்கிறேன். ஆமாம் எனக்கு இரண்டு முகம் தான். என்ன தப்பு? என்று கேட்கிறாள்.
ஒரிஸ்ஸாவிலிருந்து பெங்களூருக்குப் படிக்க வந்தவன். கால் சென்டரில் பகுதி நேர வேலை. என்னுடைய செலவை நான் பார்த்துக் கொள்கிறேன். வயது பதினெட்டாகிவிட்டது, இன்னுமா அப்பாவை எதிர்பார்த்திருப்பது என்கிறான்.
படிய வாரிய தலைமுடி. கொஞ்சமாய் பூ. பாந்தமாக உடுத்திய சல்வாரோடு தான் வீட்டிலிருந்து கிளம்புகிறாள். half sex தப்பில்லை என்கிறாள். அதென்ன half sex என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன்.
வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. பத்து பேர். ஒரு கார், நான்கு பைக்கில் அணிவகுத்துப் போகிறார்கள், நண்பர்கள் தினத்தன்று 'காப்பி டே'க்கு.
கல்லூரிக்குள் நுழைகிறார்கள். ஏழெட்டு பேர்களாக. நடுவிலிருப்பவன் தாதா போல நினைத்துக் கொள்கிறான். அங்கே இருக்கும் ஒரு பெண்ணை முத்தமிட்டு களேபரத்தில் நழுவி விடுகிறான். கொல்கத்தா செய்தித்தாள் மூல அறிமுகம் ஆனவன்.
நான்கு கல்லூரி மாணவர்கள். ஷாப்பிங் மாலில் கண்ணில் பட்ட பெங்காலி நடிகையை கேலி செய்து, காரில் துரத்தி, வழிமறித்து மிரட்டி விட்டுப் போகிறார்கள். எல்லோரும் பனிரெண்டாவது வகுப்பு மாணவர்கள்.
என் பிள்ளைகள் மற்றும் செய்தித்தாள் மூலம் அறிமுகமாகும் அடுத்த தலைமுறை சாம்பிள்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், கறுப்பு, வெள்ளை என்ற ஆறே வண்ண கலர் பென்சில்கள். நான் படிக்க ஆரம்பித்த போது பனிரெண்டு கலர் பாக்ஸ். இப்போது விரிந்து கிடக்கும் கலர் பேலட்... பார்க்க ஆச்சர்யம், கொஞ்சம் பெருமை, அதிர்ச்சி, பயம், சந்தோஷம்... எல்லாமும் தான்.
8 comments:
நினைத்துப் பார்க்கையில் பதின்ம வயது ஷ்ரேயா நீங்க சொன்ன "வகை"களுக்குள் ஒன்றுக்கும்மேற்பட்டவற்றுக்குள் பொருந்தியிருந்தமை தெளிவாய்த் தெரிகிறது.
அப்போதெல்லாம் தெளிவை விட குழப்பங்களே அதிகம்.
ஷ்ரேயா
ஷ்ரேயா... அவர்களும் தெளிவாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் நான் இப்படி தான் என்று உரத்துச் சொல்ல தயங்காமல் இருக்கிறார்கள்.
சத்தமாகக் கேட்டால், இல்ல... என்று நழுவி பக்கத்தில் இருக்கும் நிறத்தில் மறைத்து கொள்ளும் தயக்கம் இல்லாமல் இது தான் நான், இது தான் என் கலர் என்று சொல்லக்கூடிய தைரியம் இருக்கிறது.
நன்றி.
posted by: nirmala
நிர்மலா, சிக்கலற்ற மொழியில் எழுதப்பட்டு பல வினாக்களை எழுப்பும் பதிவு.
//நான் படிக்க ஆரம்பித்த போது பனிரெண்டு கலர் பாக்ஸ். இப்போது விரிந்து கிடக்கும் கலர் பேலட்... பார்க்க ஆச்சர்யம், கொஞ்சம் பெருமை, அதிர்ச்சி, பயம், சந்தோஷம்... எல்லாமும் தான்.//
உண்மைதான். ஆனால் இந்தப்பருவங்களில் காயப்படுவதும், நிலைகுலைவதும், சிதைந்து போவதும் கடந்துபோன தலைமுறையைபோலவே இன்றும் இருக்கின்றது என்பதுவும் உண்மை.
posted by: DJ
//அந்த வயதிற்கே உரிய பெண்கள், காதல், சினிமா, ம்யூஸிக்... இவற்றிலிருந்து விலகி இருப்பவன். ப்ராணிக் ஹீலிங் கற்றுக் கொள்கிறேன். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆர்ட் ஆப் லிவிங் சேர்ந்திருக்கேன். நான் டான்ஸ் ஆடினேன் என்றால் நம்புவீர்களா? இன்றைக்கு ஆடினேன். சந்தோஷமாக இருக்கிறேன். நான் எல்லோரையும் போல குடும்பம், மனைவி என்று வாழப் படைக்கப் பட்டவன் இல்லை என்பவன்.//
அட என்னைப் ப்ற்றி எழுதி இருக்கிறீர்களே.. என்னைத்தெரியுமா?
அன்புடன் விச்சு
neyvelivichu.blogspot.com
நூறாவது பதிவை நோக்கி
posted by: vichu
Interesting narration, Nirmala. முடித்திருந்த விதமும் நன்றாக இருந்தது.
நன்றி டிசே, ரம்யா.
விச்சு... உங்களுக்குத் தெரியுமா? நான் தெரசா மாதிரி ஆகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்!
posted by: nirmala
முதன்மை வண்ணங்கள் மூன்று தான் என்றாலும், இதை வைத்துக் கொண்டு ஏராளமான வண்ணங்கள் கிடைக்கும் மனிதர்களைப் போலவே.
மனிதர்களுக்கு இரண்டு வகையான வண்ணங்கள்.. ஒன்று வெளியுலகுக்கு..இரண்டு நமக்குள்.
நிஜம் தான் விஜயன். இன்றைய தலைமுறை வெளியுலகுக்கும் தனக்கென்றும் பெரிய வித்தியாசமான நிறமில்லாமல் இருப்பது தான் இந்தப் பதிவில் சொல்ல நினைத்தது.
நன்றி.
Post a Comment