Sunday, June 07, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 8

பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போதே விளையாடப் போக வேண்டிய முஸ்தீபுகளெல்லாம் முடித்து விட்டுத்தான் வருவான் மகன். வந்து பால் குடித்து, சட்டை மாற்றுவதற்கு முன்னால் நண்பர்கள் பட்டாளம் வாசலில் நின்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அன்றைக்கு வந்தவன் ஏனோ அமைதியாக ஸோபாவில். கால் இரண்டையும் கட்டிக் கொண்டு தனக்குத்தானே பேசிக்
கொண்டு. நான் கடந்து போகும் போது கொஞ்சம் சத்தமாக.

என்னதான் சொல்கிறான் என்று கொஞ்சம் கவனிக்க முயன்ற போது, எனக்குக் கேட்கட்டும் என்று அவன் முனங்கியது, "எப்பதான் இங்கயிருந்து ட்ரான்ஸ்வர் ஆகுமோ?"

ஆச்சரியம்தான். எப்போதும் மாற்றல் ஆகும் போது "இப்பத்தான் எங்க க்ரூப் சேர்ந்திருக்கு, அதுக்குள்ள போகனும்னு சொல்றியேன்னு" சலிப்பதுதான் வழக்கம்.

"என்னடா ஆச்சு?" என்று கேட்கத்தான் காத்திருந்தான்.

"என் ப்ரெண்டு ஒரு விஷயம் சொன்னான். அது நிஜமாகறதுக்குள்ள நம்மெல்லாம் இங்கிருந்து போயிடனும்"

"என்ன சொன்னான்?"

நீட்டி முழக்கி உடைந்த தமிழிலும், ஹிந்தியிலும் அவன் சொன்னது, "ஜெசல், தோரல் ரெண்டு பேரும் லவ்வர்ஸாம். அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேராம செத்துப் போயிட்டாங்களாம். அவங்களைப் பொதைச்ச எடத்தில ரெண்டு கல்லு இருக்காம். அது ரெண்டும் கொஞ்சம் கொஞ்சமா பக்கத்தில வந்துட்டிருக்கு. எப்ப அது ரெண்டும் முட்டுதோ அப்ப பூமி வெடிச்சிடுமாம். இன்னும் கொஞ்ச நாள்ல அது முட்டப் போகுது. நாம அதுக்குள்ள இங்கயிருந்து போயிடனும்"

"இதெல்லாம் சும்மா சொல்ற கதைடா கண்ணு. அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. நீ போய் விளையாடு" என்று நான் சொன்னதில் அவனுக்கு திருப்தியேயில்லை. என்னை விட்டு விட்டு அவனுடைய அக்காவைப் பிடித்துக் கொண்டான். இரண்டு பேரும் அந்த வயதுக்கே உள்ள ஆர்வத்தோடும் பயத்தோடும் அதன் பின்விளைவுகளைப் பற்றிப் பேசுவதுமாய். இரண்டு மூன்று நாள் அதே நினைவாயிருந்தான். கொஞ்ச நாளில் அது மறந்தே போய்விட்டது.

பள்ளிப் படிப்பு, கம்ப்யூட்டர் வகுப்பு எல்லாம் பாதியில் இருக்க, 99 செப்டம்பர் அடுத்த மாற்றல். இரண்டு கைகளிலும் அள்ளிச் சுமந்ததும், உதற முடியாமல் முதுகில் சுமத்தப்பட்டதுமாய் நினைவுகள்.

அடுத்ததாக போக கணவருக்குத் தோதான வேலை எதுவும் இல்லாததால், கம்பெனி சென்னையில் வந்து தலைமை அலுவலகத்தில் கொஞ்ச நாள் இருக்கச் சொன்னது. அதுவும் சில மாதங்களுக்கு மட்டுமேயானதால் எங்களுக்கு (நானும் குழந்தைகளும்) கோவைக்குப் போவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. சொந்த ஊர், சொந்த வீடு... போதும் சுற்றியது, கம்பெனி வழக்கப்படி குழந்தைகளோடு ஊரிலேயே இருந்துவிடும் யோசனையில் தான் தொடங்கியது கோவை வாழ்க்கை, ரொம்ப எதிர்பார்ப்போடு.

காந்திதாமில் கூட இருந்து சொல்லிக் கொடுத்த அப்பா, கோவையில் ஸ்கூட்டியைத் தொடவிடவில்லை. எங்கே போனாலும் தொடர்ந்து கொள்ளலாம் என்று சொன்ன கம்ப்யூட்டர் வகுப்பு ஏ சென்டர், சி சென்டர் என்று ஏதேதோ காரணம் சொல்லி கைவிரித்து விட்டது. கல்யாணம், காதுகுத்து, கருமாதி, டிவி, வம்பு.... மூச்சடைக்க ஆரம்பித்து விட்டது.

நான்கு மாதம் கழித்து, ஜனவரி 26 ம் தேதி காலை என்டிடிவி வெறும் தகவலாக சொல்ல ஆரம்பித்து தொடர்ந்த செய்தி... பத்து நாட்கள் நேரம் காலம் இல்லாமல் டிவியே பழியாகக் கிடந்தது... பார்க்கவும் முடியாமல், பார்க்காமல் இருக்கவும் முடியாமல்... அந்த இருநூற்றைம்பது குழந்தைகளை முழுசாக விழுங்கிய அஞ்சார் தெருக்களில் எத்தனை முறை நடந்திருக்கிறேன். பத்தடி அகலம் கூட இல்லாத தெருக்கள். காரெல்லாம் அதிகம் ஊருக்கு உள்ளே போக முடியாது. ஒரு ஆட்டோ போகும் போது எதிரில் இன்னொன்று வந்தால்
பக்கத்தில் இருக்கும் வீட்டு படியில் சரிந்து ஏறித்தான் வழிவிட வேண்டும். அடுக்கடுக்காக உயர்ந்த கருங்கல் கட்டிடங்கள், அவ்வளவு மலிவாக கிடைக்கும் துணிகளை வாங்க எங்கிருந்தெல்லாமோ வரும் ஜனக்கூட்டம், அத்தனை வருமானம் இருந்த போதும் மாறாத, மாற்ற முடியாத ஊரின் அமைப்பு...

அந்த செப்டம்பர் மாத மாற்றலே கேட்டு வாங்கியது. நவம்பருக்கு மேல் கணவருடைய வேலை முடிந்தால் கட்டாயம் நானும் குழந்தைகளும் அந்த வருஷம் படிப்பு முடியும் வரை தனியாக அங்கே இருந்திருக்க வேண்டும். அதை தவிர்க்க எதிர்பாராமல் கேட்ட நேரம் மாற்றம் கிடைத்து நாங்கள் இங்கே வந்துவிட... யாரோ காய்களை நகர்த்தி நீ இங்கேயிருந்து போய் விடு, நீ இங்கேயே இரு என்று செய்தது போல. ராஜுலாவில் கூட இருந்த ஒரு குடும்பம், மோசமாக பாதிக்கப்பட்ட இன்னொரு இடமான பச்சாவ்(Bachchau) என்ற ஊரில். இரண்டாவது மாடி கட்டிடம் சரியத் தொடங்க மனைவியையும் மூத்த மகளையும் மற்றவர்களோடு கயிற்றைப் பிடித்து இறங்கச் சொல்லி விட்டு கணவர் உள்ளே உறங்கும் இரண்டாவது மகளை தூக்கப் போகும் போது அவள் கண் முன்னால் புதைந்து போனது....

கேட்டது, பார்த்தது எதுவும் 'நல்லவேளை நாம தப்பிச்சுட்டோம்' என்று நினைக்க வைக்கவில்லை. இதில் எந்த இடத்திலும் நாங்கள் யாராவது இருந்திருக்க எல்லா சாத்தியங்களும் இருந்திருந்தது. புதைந்து போயோ, புதைய விட்டுத் தவித்தோ. தொடர்ந்த நாட்களில் உள்ளுக்குள் கேள்விகள்... கேள்விகள். நான், என்னுடையது... எல்லாவற்றையும் அசைத்துப் போனது. எல்லாம் அடங்கிய போது... கொஞ்சம் அடைந்திருந்தேன், கொஞ்சம்
இழந்திருந்தேன்.

மார்ச் மாதம் கணவரை ஒரிஸ்ஸாவிற்கு மாற்றிய போது இரண்டாவது யோசனையில்லாமல் கிளம்பிவிட்டோம், எட்டு மாத கோவை வாழ்க்கை முடித்துக் கொண்டு.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

So sad ma. You have gone thru so much Nimma.

Nirmala. said...

In fact we had no choice those days Reva! :-(