Wednesday, June 03, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 4

வாஷி - யில் இருந்து கிளம்பி சூரத், அங்க்லேஷ்வர், ரத்தினகிரி....நாலு
வருஷத்தில் மூன்று ஊர் சுற்றி, ராஜுலா (Rajula, Sourashtra,
Gujrat) வந்து சேர்ந்தோம். நடுவில் மகன் வரவு.

ராஜுலா...அடுத்த பட்டிக்காடு. அதுவும் வரண்ட பட்டிக்காடு. ரயில்
வசதியெல்லாம் கிடையாது. அஹமதாபாத்தில் இருந்து பஸ். எட்டு மணி நேரம்.
வழியெல்லாம் ஒரே வரட்சி. அங்கங்கே வரும் ஒரு சில ஊர்கள்...அதுவும்
கொஞ்சம் கூட பசுமை இல்லாமல், ப்ரௌன் கலர் தூக்கலா இருக்கின்ற ஓவியம்
மாதிரி. ஆண்கள் கட்டியிருக்கும் வேட்டி கூட காவியேறின நிறத்தில்.
வாங்கும் போதே இந்த நிறத்தில் தான் இருந்திருக்குமோ என்று தோன்றும்.
பேருக்குக் கூட ஒரு வெள்ளை வேட்டி பார்க்கக் கிடைக்காது. முக்காடு போட்ட
பெண்கள்...புழுதி ஏறிய குழந்தைகள்...வழியெல்லாம் இதையே பார்த்துக்
கொண்டு போகும் போது பயமாக இருந்தது.

ராஜுலாவும் வழியில் பார்த்த ஊர்களைப் போலத்தான். அவசரமாக துடைத்து
வைத்தது போல கொஞ்சம் பளிச்சென்று இருந்தது. சந்துகளில் இரண்டு பக்கமும்
சாக்கடை ஓட, எங்கும் பன்றிகள் சாம்ராஜ்யம். ஏதோ நினைத்துக் கொண்டு
ஒன்று சத்தம் போட்டுக் கொண்டு ஓட, மற்றதெல்லாம் பின்னால் துரத்த...நடு
ரோட்டில் அருவருப்பில் நடுங்கிக் கொண்டு நான் நிற்க...எல்லோரும் அவரவர்
வேலையைப் பார்த்துக் கொண்டு. கொஞ்ச நாளில் எனக்கும் பழகி விட்டது!

ஊரும் ஜனங்களும் தான் அவ்வளவு அழுக்கு. வங்கியில் ஒரு நாள் முண்டாசும்
வெற்றிலை வாயுமாய் கூட்டம் நெரிக்க, நான் ஹேண்ட் பேகைத் திறந்து சில
நூறுகளை எண்ணிக் கொண்டிருக்க, பக்கத்திலிருந்தவர் அழுக்குப் பைக்குள்ளிருந்து
நூறு ரூபாய் கட்டுகளை எடுத்துக் கொடுத்து கொண்டிருந்தார்! நிச்சயம் அது நான்
எதிர்பார்க்காதது. நான்கு எருமைகளை நாற்பது எருமைகளாக மாற்ற மட்டுமே
தெரிந்த ஜனங்கள். அவர்களைப் பார்க்கும் போது எனக்கு வந்த பரிதாப
உணர்ச்சி, என்னைப் பார்க்கும் போது அவருக்கும் வந்திருக்கலாம்!

ராஜுலா வீடு இரண்டாம் மாடியில். முதல் மாடியில் வைர கற்கள் பாலிஷ்
செய்யும் தொழிற்சாலை. வழியெல்லாம் வெற்றிலை துப்பி, ஒரே நாற்றமாய்.
அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இரண்டாம் மாடி வீடு நல்ல வசதியாய்,
காற்றோட்டமாய். வரவேற்பறை ஜன்னலில் இருந்து பார்த்தால் வீட்டுக்காரர்
போர்ஷனுக்கு முன்னால் இருக்கும் பெரிய மொட்டை மாடி முற்றம். நிலா காயும்
நேரம் அந்த முற்றம் ரொம்ப அழகு. இது தான் வீட்டுக்கார அம்மா என்று கணவர்
அறிமுகப்படுத்தியவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும். சிரிக்க சிரிக்க
வாங்கன்னு சொன்னவரின் கண்கள் சிரித்த மாதிரி தோன்றவில்லை.
வயதானவராக இருந்ததால் மாஜி என்று கூப்பிட ஆரம்பித்தோம்.

எங்கள் வீடுகளுக்கு நடுவில் ஒரு இரும்பு கேட். அதைத் தாண்டினால் தான் அந்த
முற்றத்திற்கு போகலாம். முதல் இரண்டு நாட்களுக்கு அதை திறக்காமல் அந்தப்
பக்கம் இருந்து ஒன்றிரண்டு வார்த்தை பேசினார். அப்புறம் என் மகன்
விளையாடட்டும் என்று அந்த கேட்டைத் திறந்தார். கொஞ்சம் மிடுக்காகவே
எப்போதும் இருப்பதாக தோன்றியதால் பேச முதலில் தயக்கமாக இருந்தது.
இரண்டு மாதம் பழக்கத்தில், பம்பாயில் மகன், மருமகள், பேரக் குழந்தைகள்
இருக்க, கணவர் வியாபரத்தை பார்த்துக் கொண்டிருக்க அவர் இங்கே தனியாக
இருப்பதாக தெரிந்தது. மருமகளோடான மனக்கசப்பில் உடல் நலமில்லாமல்
போய் கொஞ்ச நாளாகத்தான் இங்கே இருப்பதும். இது துண்டு துண்டாக அவர்
பேசியதிலிருந்து யூகித்தது. ஆனால், 'எனக்கு யாருடைய பரிதாபமும்
வேண்டாம்' என்ற உறுதியோடு இருப்பதை உணர்த்தவும் தவறியதில்லை.

அப்படி இருந்ததாலோ என்னவோ அவரோடு நெருங்க வேண்டும் போல இருந்தது.
அவராக இளகட்டும் என்று காத்திருந்ததில் இன்னும் இரண்டு மாதம் போனது.
அவருடைய கணவரும் பம்பாயில் இருந்து வந்து விட கொஞ்சம் கலகலப்பாகி
விட்டார். ஒரு தரம் ஏதோ பேசும் போது அவருடைய கணவரை 'துமாரி
பிதாஜி' (உன்னுடைய அப்பா) என்று சொல்லி அவ்வளவு நாள் போட்டு
வைத்திருந்த கோட்டையை அவரே உடைத்தார். நம்ப முடியாத ஆச்சர்யத்தில்
நிமிர்ந்து பார்த்த என் கண்களை அவர் பார்க்கவில்லை. மாஜியின் மானசீக
மகள்!

அதற்குப் பிறகு எல்லாம் அவருடைய விருப்பம் தான். அவருடைய வீட்டுக்கு யார்
வந்தாலும் கூடவே கூட்டி வைத்துப் பேசுவது, எங்கே போனாலும் என்னையும் கூட்டிக்
கொண்டு போவது...சில நேரம் விருப்பம் இல்லாத போதும் ஏனோ மறுக்க
மனம் வந்ததில்லை.

மாஜிக்கு உடல்நலம் சரியில்லாமல் நடக்கவே முடியாமல், மனதளவிலும்
பாதிக்கப் பட்டிருந்தபோது (நாங்கள் அங்கே வருவதற்கு முன்) சரி செய்தது
அங்கே இருந்த ஒரு நாட்டு வைத்தியர். காவி தரிக்காத சந்நியாசி.
அவர்களுடைய குடும்ப நண்பர். தினமும் வருவார். சில நேரங்களில் என்னோடும்
பேசிக் கொண்டிருப்பார். அவர் சந்தித்த பெரிய பெரிய சந்நியாசிகளைப்
பற்றி, அவருடைய தீர்த்த யாத்திரைகளைப் பற்றி. இயல்பானவர்.
எளிமையானவர்.

ஒரு நாள் மாஜி 'கிளம்பு, வெளியிலே போயிட்டு வரலாம்' என்றார்.
வழக்கமாக அந்த நேரத்தில் அவர் கோவிலுக்குப் போவது வழக்கம். அதனால்
அங்கே தானென்று நானும் மகனும் கிளம்பினோம். வழக்கமான பாதையை விட்டு
போகும் போது கேட்டதற்கு வைத்தியருக்கு உடம்பு சரியில்லை என்று அவருடைய
வீட்டுக்கு போவதாக சொன்னார்.

வைத்தியர் வீடு...எங்கேயோ மேட்டில் ஏறி இறங்கி கொஞ்சம் தூரத்தில்.
அங்கங்கே இடிந்து போய் ரொம்ப பழைய வீடு. ஆனால் சுத்தமாயிருந்தது.
வாசலில் கயிற்றுக் கட்டிலில் வைத்தியர். எங்களைப் பார்த்ததில் அவருடைய
சந்தோஷம் தெரிந்தது. என்னோடு வைத்தியர் பேசிக் கொண்டிருக்க, மாஜி
சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார். இடையில் எட்டிப் பார்த்த
போது ஒரு ஸ்டவ், நாலே பாத்திரம் இருந்த அந்த அசௌகரியத்திலும் ஒரு
சந்தோஷத்தோடு வைத்தியருக்காக உப்புமா செய்து கொண்டிருந்தார்.
சாமானெல்லாம் நாங்கள் வழியில் வாங்கிக் கொண்டு போயிருந்தோமா,
ஏற்கனவே அங்கே இருந்ததா...நினைவில்லை. இடையிடையே  ஏதாவது
வேண்டுமா என்று வைத்தியர் வாசலில் இருந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அரைமணி நேரத்தில் சக்கரையும் போட்ட இனிப்பு உப்புமா தயார். வாசல்
மணலில் என் மகன் விளையாடி கொண்டிருக்க, படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு
நான் வைத்தியரோடு பேசிக் கொண்டிருக்க, ஒரு நிறைவான உணர்வோடு மாஜி
தட்டை நீட்டியது அழகான ஒரு நேச வெளிப்பாடு. ஒரு கவிதை போல. நான்
மட்டுமே ரசிக்க யாரோ தீட்டிய சித்திரம்.


2 comments:

வல்லிசிம்ஹன் said...

So good to read Nimma. Thank yo dear

Nirmala. said...

thank you Reva! :-)