Monday, June 01, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 1

2004 ல் மரத்தடிக்காக மரத்தடி சின்னக் கண்ணன் எழுதச் சொல்லி எழுதியது. என்னுடைய பதினெட்டு வருஷங்களை கேப்ஸ்யூலில் அடைத்து வழக்கம் போல சுருக்கமாக எழுதிய சில குறிப்புகள். எதோ தேட கிடைத்ததை இங்கே சேமிக்கிறேன். முன்பு மரத்தடியில் எழுதியதெல்லாம் ஒரு இடத்தில் எழுதியவர் பேர் போட்டு தொகுத்து வைத்திருந்ததை வெகு சுலபமாக ப்ளாகில் லிங்க் கொடுத்திருந்ததை இப்போது இப்படி எடுத்துப் போட்டு சேகரிக்க வேண்டியிருக்கிறது. பதினோரு வருஷத்துக்கு முந்திய... அது ஒரு கனாக்கால நினைவுகள்!

 இடப்பெயர்ச்சி பலன்கள் - 1


தெரியலைன்னா கேட்டுட்டாவது வாங்கி இருக்கலாமல்ல?"

எட்டாவதோ ஒன்பதாவதாவோ கேட்கிற ஒரே கேள்விக்கு அடுத்து என்ன பதில்
சொல்ல என்று தெரியவில்லை. அழுதுடுவேனோன்னு பயந்து "சரி...சரி
எப்படியாவது போயிடலாம்" என்று கணவர் பதில் சொல்ல 86 மே மாதம்
தொடங்கிய பயணம்.

விஷயம் வேற ஒன்றும் இல்லை. துர்க்-க்கு(Durg) டிக்கெட் வாங்கி வைக்கச்
சொல்ல, அப்பா எந்த ட்ரெயின் போகும் என்று புக்கிங் க்ளார்க்கைக் கேட்டு
பொக்கேரோ ஸ்டீல் சிட்டி எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் வாங்கியிருந்தார். அந்த
ட்ரெயின் துர்க்குக்கே போகாதாம். டிக்கெட் வாங்க சொன்னவர் ட்ரெயின்
விவரமும் சொல்லியிருக்கலாம்! புதுப்பொண்ணுக்கு அதெல்லாம் கேட்கத்
தெரியாது. பயம் வேற. விசாகப்பட்டிணத்தில் இறங்கி வேற ட்ரெயின்
மாற்றி ஒரு முன்பதிவில்லாத பெட்டியில் பயணத்தைத் தொடர்ந்து, ரெண்டு நாள்
கழித்து ராய்ப்பூர் போய் சேர்ந்தோம்.

ராய்ப்பூரிலிருந்து இரண்டரை மணி நேர கார் பயணம் தம்தரிக்கு(Dhamtari,
MP). தம்தரி....ரொம்ப சின்னதா, கிராமம் மாதிரி அழகாயும்
இல்லாமல் நகரம் மாதிரி வசதிகளோடும் இல்லாமல். ஊருக்கு வெளியே
குஜராத்திகள் சேர்ந்து கட்டியிருந்த ஒரு காலனியில் வீடு. அந்த ஊருக்கு அது
ரொம்ப ரொம்ப வசதியான வீடு. எல்லா வீட்டின் வராந்தாவிலும் தவறாமல்
ஒரு ஊஞ்சல். சதா அசைந்து கொண்டிருக்கும் அந்த ஊஞ்சல்களில் ஓவ்வொரு நேரம்
ஒவ்வொரு வயதுக் கூட்டம். பள்ளிக்கூடம் போகும் வரை குழந்தைகள், பிறகு
வீட்டுப் பெரியவர், பதினோரு மணிக்கு மேல் வீட்டுப் பெரியம்மா,
மத்யானம் அதற்கும் கொஞ்சம் ஓய்வு. மாலையில் வீட்டு மருமகள்கள், ராத்திரி
நேரம் வியாபாரம் முடித்து வந்த ஆண்கள் கூட்டம்.

மாலை ஐந்து மணிக்கே ராத்திரி சமையலை முடித்து விட்டு பெண்கள் எல்லாரும்
வாசலுக்கு வந்தாகிவிடும். கூட்டம் கூட்டமாய் அரட்டை, வம்பு..எல்லாம்.
தூர்தர்ஷன் புண்ணியத்தில் பானி, ஆவ்....இப்படி ஏதோ நாலு வார்த்தை
மட்டுமே தெரியும். அதனால் யாரைப் பார்த்தாலும் (வாய் வலிக்க!) ஒரு
புன்னகை மட்டும்.

என் மனைவிக்கு ஹிந்தி தெரியாது. எதாவது பேசனும்னா இங்கிலீஷ்ல
கேட்டாத்தான் புரியும் என்று பக்கத்து வீட்டு அம்மாவிடம் கணவர் சொல்லி
வைத்திருந்திருக்கிறார். அதனாலேயோ என்னவோ யாரும் என்னோட பேசவே
வரமாட்டார்கள்(இதெல்லாம் அப்புறம் தான் தெரிந்தது). எப்போதும் தனியாக
உட்கார்ந்திருக்கும் என்னிடம் ஒரு வயதான மாஜி மட்டும் நேரம் கிடைக்கும்
போது வந்து உட்கார்ந்திருப்பார்கள். எதோ நினைத்துக் கொண்டு மெல்லிய
குரலில் பேசிக் கொண்டிருப்பார். எதுவும் புரியாமல் அவரையே பார்த்துக்
கொண்டு நான்.

அங்கே போகும் வரை ஒரு தனியார் கம்பெனி சிவில் எஞ்சினியரின் வாழ்கை
எப்படி, வேலை நேரம் எவ்வளவு, எத்தனை நாளுக்கு ஒரு தரம் மூட்டை கட்ட
வேண்டும்...எதுவும் தெரியாது. ஏன் யோசிக்கவும் இல்லை??! கணவர் வேலைக்கு
எப்போ போவார் என்று மட்டும் தான் தெரியும். திரும்பி வருவதைப் பற்றி
எந்தத் தகவலும் இருக்காது. இலட்சக்கணக்கான தகவல்களோடு ஒரு ரீடர்ஸ்
டைஜெஸ்ட் "book of facts", ஒரு ரெபிடெக்ஸ் ஹிந்தி புக்...
இவற்றோடு ஓடிய நாட்கள். ஊரின் ஒரே பொழுது போக்கு ஒற்றை சினிமா
தியேட்டர், புரியாத ஹிந்திப் படங்கள். நீண்ட தனிமையான நாட்களின்
வெறுமையையெல்லாம் சைக்கிள் ரிக்ஷா குலுங்கலில் இடித்துக் கொண்டே போய்
சினிமா பார்த்த சந்தோஷங்கள் இட்டு நிரப்பியது.

பாவ் பாஜி என்ற பெயரை(யே) முதல் முதலாகக் கேட்டதும் அங்கே தான்.
மார்க்கெட் போகும் போதெல்லாம் மூக்கைத் துளைக்கும் வாசனை. ஒரு நாள்
தயங்கித் தயங்கி கேட்க...அதிசயமாய் ரோட்டோரக் கடைக்கு கணவர் ஓக்கே
சொல்ல...சுடச்சுட பாஜி தட்டில் வந்தது. பாவ் தவாவில் வறுபடறதுக்குள்
நாங்கள் வெறும் பாஜியை சாப்பிட ஆரம்பித்து விட்டோம். கடைக்காரர்
அவசர அவசரமாக சுட்டு நீட்டினதும் தான் தெரிந்தது, அது கூட சேர்த்து
சாப்பிடணும் என்று!

ஆறு மாதங்கள் ஓடி விட்டது. ஐந்து மாத கர்ப்பம். டாக்டர் வசதிகள்
சரியில்லை என்று கூட்டிட்டுப் போக அம்மா வந்தாயிற்று. கணவருக்கும் வேலை
முடியும் கட்டத்தில். ஊருக்குக் கிளம்புகிற நாள் காலை. அம்மா வழியில்
சாப்பிட சாப்பாடு கட்டிக் கொண்டிருந்தார். நான் மற்றதெல்லாம் எடுத்து
வைத்துக் கொண்டிருக்க, கணவர் இது நாள் வரை உபயோகித்துக் கொண்டிருந்த
கட்டில்களைப் பிரித்து ஒன்றை வேறு அறையில் போட்டுக் கொண்டிருந்தார்.
(நான் வருவதற்கு முன்பு அது கம்பெனியின் விருந்தினர் தங்கும் இடமாயிருந்தது.
அந்த அறையில் அவர் தனியாக தங்கியிருந்தார்).

"உன் வீட்டுக்காரர் இதெல்லாம் நாம போனப்பறம் செஞ்சுக்கக் கூடாதா? இன்னும்
நீ கிளம்பவே இல்லை, அதுக்குள்ள ஏன் உன் கட்டிலை வெளியில போடறார்?"
இது அம்மா.

நான் எதுவும் பேசவில்லை. சோகம் சொல்ல ஒவ்வொருத்தருக்கு ஒரு வழி
இருப்பது போல சோகத்தை மறைக்கவும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வழின்னு
அம்மாவிடம் சொல்லவா முடியும்?

ஸ்டேஷனில் எங்கள் பெட்டி எங்கேயோ தூரத்தில் இருக்க, தேடிக் கண்டுபிடித்து
நான் ஏறவும் ட்ரெயின் கிளம்பவும் சரியாக இருந்தது. கடைசியாக எதுவும்
பேசிக் கொள்ள நேரம் இருக்கவில்லை. புறப்பட்டு விட்ட ட்ரெயினிலிருந்து
எட்டிப் பார்க்கும் போது தெரிந்த கண் கலங்கிய கணவர் முகத்தை மறந்துவிடக்
கூடாது என்று இப்போதும் அடிக்கடி நினைவுபடுத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன்.
அதற்குப் பிறகு அப்படியொரு கணம் இன்று வரை பார்க்கக் கிடைக்கவில்லை.
ஜனகராஜ் பாணி வழியனுப்பு வைபோகம் தான் நடக்கிறது.


நிர்மலா.

பி.கு: இதோ இன்னொரு நினைவலைகள்! 18 வருஷமாக தொடரும் ஒரு
பயணத்தின் சில நியாபகங்கள். வசித்த இடங்கள், சந்தித்த மனிதர்கள்,
அவர்கள் தந்த பாதிப்புகள். தொடர் எழுத நினைவு படுத்தியதில் என்
பதினெட்டு வருடங்களையும் மறுபடியும் ஒருதரம் வாழ்ந்து பார்த்த மாதிரி
இருந்தது. கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது நிறைவாகத்தான் இருக்கிறது.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நிறம் நிறைத்திருக்கிறார்கள், இனிமேலும்.

யே ராஸ்தா ஹை கெஹரஹா அப் முஜ்ஸே
மில்னேகோ ஹை கோய் கஹி அப் துஜ்ஸே

(இந்தப் பயணம் என்னிடம் சொல்கிறது - இன்னும்
நீ சந்திக்க வேண்டியவர்(கள்) எங்கோ இருப்பதாக)

2 comments:

Ramachandranusha said...

Shall I start my kosuverthi😉

Nirmala. said...

why not?!