Saturday, June 06, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 7

சௌராஷ்ட்ராவையா வரட்சின்னு சொல்ற, இங்க வந்து
பாருன்னு அடுத்து கூப்பிட்டது... காந்திதாம், கட்ச். குஜராத்தின் மேற்குக்
கோடி. கண்ட்லா துறைமுகமும், Free Trade Zone ம் உப்பங்களங்களுமாய்
செல்வம் கொழித்தாலும்...எல்லாம் வெளிப்பூச்சாக மட்டுமே.

ராஜுலாவிலிருந்து போகிற வழியெல்லாம் எங்கே பார்த்தாலும் முள்காடு.
நிறைய சுருக்கங்களோடு கறுப்புப் பாவாடை, முன்புறம் மலிவான வேலைப்பாடும்
இழுத்துக் கட்ட பின்புறம் கயிறு மட்டுமேயான ரவிக்கை, அடிக்கொரு தரம்
பறந்து முதுகைக் காட்டிப் போக இழுத்து இழுத்து மூடும் சிவப்பு மேலாக்கு,
உடம்பெல்லாம் பச்சை குத்தல்களோடு பால்காரப் பெண்கள். பழுப்பேறிய வெள்ளை
உடுப்பு, பெரிய முண்டாசும் நீண்ட கோலோடும் ஆண்கள். கூட்டம் கூட்டமாய்
எருமைகள். இடையிடையே சிறு நகரங்கள், அங்கே இளிக்கும் பளபளப்பு,
தொடரும் வரட்சி. நாங்களும் இங்கே இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு
வழியில் ஒரு கான்வென்டும் சர்ச்சும்.

காந்திதாம்... நுழையும் வழியில் வரவேற்பது லாரிகளும் டாங்கர்களும் தான்.
வியாபாரம் என்பது எல்லோருக்குள்ளும் கொஞ்சம் தீவிரமாகவே இருக்கிறது.
கொழிக்கும் பணத்தை செலவழிக்க வாய்ப்புகள் இல்லாத தவிப்பு. சிந்தி
(sindhi) எண்ணிக்கை கொஞ்சம் கூட. முறமெல்லாம் வேண்டாம் முழியே
போதும் புலியை விரட்ட என்னும் சிந்தி பெண்கள். நல்ல உயரமும் பருமனும்
பெரிய குரலுமாய். எல்லோருக்கும் சிறியதாகவாவது ஒரு வருமானம் அவசியம்
என்ற மனப்பான்மை. பத்து வயசிலிருந்தே குழந்தைகள் பள்ளிக்கூடம் முடிந்ததும்
தினமும் சில மணி நேரம் அவர்களுடைய கடையில், வியாபாரம் கற்க. இது
குஜராத்தில் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். எதை கற்றுக் கொள்வதானாலும்
அதில் என்ன உபயோகம் என்ற கணக்கு. ஸ்கூட்டி, சன்னியெல்லாம்
சிறியவர்களுக்கு. லைசென்ஸ் எல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள். கியர் வண்டி
ஓட்டும் பெண்களை சாதாரணமாக பார்க்கலாம்.

தம்தரிக்கு அடுத்து காந்திதாமில் நிறைய 'முதல்'கள். இரண்டு பேரும்
தனித்தனி குடித்தனம் அரம்பித்தது இங்கேதான். கணவர் வேலைக்காக
முந்த்ரா(Mundra) வில் தங்க நாங்கள் பள்ளிக்கூடத்திற்காக காந்திதாமில்.
ஊருக்கு வெளியே வீடு. ஒரு ஆட்டோவுக்குக் கூட அரை கிலோமீட்டர் நடை.
ஊரில் பத்து வயசு பொடிசுகளெல்லாம் வண்டி ஓட்டுவதைப் பார்த்த தைரியத்தில்
எங்கள் வீட்டிற்கும் ஸ்கூட்டி வந்தது. வாரத்திற்கு ஒரு தரம் வீட்டுக்கு வரும்
கணவரின் அன்பான(!) வழிகாட்டுதலில் வண்டி ஓட்டத்தான் வேண்டுமா என்று
ஒவ்வொரு முறையும் நினைத்தது நிஜம். அந்த சமயத்தில் ஊருக்கு வந்த
அப்பாவின் கொஞ்சம் குறைவான அன்பில் ஒரு மாதிரி தேறியது.

கணவரும் வாரம் பூராவும் ஊரில் இல்லை. குழந்தைகளும் படிப்பு, விளையாட்டு
என்றிருந்ததில் ஏகப்பட்ட நேரம். என்ன செய்யலாம் என்று யோசித்ததில்
கம்ப்யூட்டர் தான் கவர்ச்சியாக இருந்தது. ஸ்கூட்டியும் கம்ப்யூட்டரும் ஜோடி
சேர்ந்து கொண்டது. முதல் ஒரு மாதம் இதுக்கு மேல முடியாது என்கிற அளவு
ரோட்டோரமாகத் தட்டுத்தடுமாறி, ஸ்கூட்டியும் நானும். பழகிய பிறகு ஒரு
நாள், காந்திதாம்-பூஜ் நெடுஞ்சாலையில் ஈ, காக்கா இல்லாத ஒரு மத்யான
வேளையில், காலியாய் கிடந்த சாலை தந்த தைரியத்தில் ஸ்கூட்டி மெல்ல
மெல்ல வேகம் பிடிக்க, துப்பட்டா பறக்க விரைகையில் திடீரென்று தாண்டிச்
சென்ற லாரி க்ளீனர் பையன் சைகையில் சொல்லிப் போன சபாஷ்...
இத்தனை வருடங்கள் கழித்து இப்போது நினைக்கும் போதும் சின்னதாக ஒரு
சிரிப்பு, மெல்ல தளர்த்தும் நினைவு.

கம்ப்யூட்டர் வகுப்பிலும் ஆரம்பம் சரியான சொதப்பல். புது வகுப்பு தொடங்க
முடியாமல் நாங்கள் இரண்டே பேர். தபோஜோதியும்(பெங்காலி பையன்!)
நானும். படிப்பை விட்டு பதினொரு வருடமாயிருந்தது. முதல் நாள் சொல்லிக்
கொடுத்தது அடுத்த நாள் நினைவிருக்காது. இரண்டு நாள் சொல்லிக் கொடுத்து
விட்டு ஆசிரியர் விலகி விட பொறுமையாக விளக்கியது தபோஜோதி
தான். அடுத்த ஒரு மாதத்தில் முறையாக வகுப்பு தொடங்கிய போதும் ஒன்றாகத்
தொடர்ந்தோம். அவனோடு இருந்த ஒரு வருடத்தில், தேடித்தேடி தட்ட நேரம்
எடுக்கிறேன் என்று என்னை ஒரு நாளும் கம்ப்யூட்டரை தொட விட்டதில்லை.
யோசிக்கும் வேலை மட்டும் எனக்கு. மற்றதெல்லாம் அவன் தான். சின்னச்
சின்னதாக நாங்கள் எழுதிய ப்ரோக்ராம்கள், அதை தட்டி ஒட்டி சரி செய்தது,
வீட்டில் எல்லோரும் ஓ..நோ என்று சலிக்க தொடர்ந்த தொலைபேசி
பாடங்கள்... மெல்ல கம்ப்யூட்டர் உள்ளே இழுத்துக் கொள்ள சென்டரிலே முதலாக
வந்ததெல்லாம் தனிக்கதை.

கடற்கரையெல்லாம் சிவலிங்கங்களாய் கிடக்கும் கோட்டேஷ்வர், பாகிஸ்தானை
பக்கத்தில் இருந்து பார்க்கும் நாராயண் சரோவர், முதியோர் இல்லம் போல
வயதான மாடுகளை பராமரிக்கும் கௌஷாலா, ப்ளாக் பிரிண்ட்டும்,
பாந்தினிக்கும் பெயர் பெற்ற அஞ்சார், அரைக் கரண்டி சுண்டல் ஒரு பிடி
புளியோதரையில் ஒரு கணம் ஊருக்கே கூட்டிப் போகும் கண்ட்லா பாலாஜி
கோவில், கார் ட்ரைவிங்.... வீட்டில் நடந்த திருட்டு, தொடர்ந்த
இரண்டாவது நாள்... 98 ஜீன் மாதம் கண்ட்லாவைத் தாக்கிய புயல், வெறும்
அரைமணி நேரம் உள்ளே நுழைந்த வெள்ளம், ஆயிரக்கணக்கான சாவுகள், அன்று
காலை கண்ட்லா போவதாக இருந்து தூங்கிப் போனதில் தப்பித்த கணவர்,
எப்போதும் வழியில் எதிர்படும் சர்க்கார் மருத்துவமணையில் மலை போல
குவிந்து கிடந்த பிரேதங்கள், மறுநாள் கண்ட்லாவில் எரிவாயு சேகரிக்கும்
இடத்தில் கசிவு என்ற வதந்தியில் ஊரே காலி பண்ணி ஓடியது, பதினைந்து
நாள் மின்சாரம் இல்லாமல், நல்ல தண்ணீர் இல்லாமல்...நிலையில்லாமை
முகத்தில் அறைந்தது. தெரிந்து கொள்வதற்கும் தெளிந்து கொள்வதற்கும் உள்ள
வித்தியாசம் புரிந்தது.

ஒரு மாதத்தில் எல்லாவற்றையும் சமாளித்து எழுந்தது காந்திதாம்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

Nimma You shd write this and turn into a novel ma. So much information.

Nirmala. said...

i m not good in writing fiction Reva! tried a bit. not my cup of coffee!