Monday, June 08, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 9

'சாவு தூண்டும் முதல் உணர்வு செக்ஸ்' என்று உஷா சுப்ரமணியம் கதையில் (காக்கைச் சிறகினிலெ) படித்தது. அதற்கு ஒரு சின்ன விளக்கம் கூட கொடுத்திருந்தார். நம்ம ஊர்ப்பக்கம் நெருங்கின சொந்தம் யாராவது இறந்து போய் விட்டால் 'கவலைப்படாதே அவங்களே உனக்கு குழந்தையா பிறப்பார்கள்' என்று சொல்வதும், 'குழிப்பிள்ளை மடியிலே' என்பதுமாய். குஜராத் சாவுகள் தந்தது பத்திரமின்மையா? நிலையில்லாமையா? நாளையை எனக்குத்
தெரியாது... இன்றைக்கு ஒன்றாக இருப்போம், அது எங்கேயாக இருந்தாலும் சரி என்று தான் தோன்றியது. அதற்காகத்தான் செட்டில் ஆகிவிடும் எண்ணத்தோடு கோவை வந்த முடிவை மாற்றிக் கொண்டு ஒரிஸ்ஸா கிளம்பியது.

பரிட்சையெல்லாம் முடிந்து ஒரிஸ்ஸாவிற்கு குடித்தனம் போனதென்னவோ மே மாதம் தான். ஆனால் மார்ச் மாதமே 'ஊர் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரேன்' என்று கிளம்பிவிட்டேன். (இதற்கு முன்னால் எந்த ஊர் எப்படி இருக்கிறது என்று பார்த்துத் தான் போனது போல!) குழந்தைகளை நாங்க பார்த்துக்கறோம், நீ ஜோரா போயிட்டு வான்னு அப்பாவும் அனுப்பி
விட்டார்.

ஒரு மத்யானம் பாலேஷ்வர் போய் இறங்கிய போது சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் நடக்க ஏற்பாடு ஆகிக் கொண்டிருந்தது. ஐந்து வருஷத்திற்கு முன்பு அவர் இப்போது பேசும் அளவு கூட ஹிந்தி பேசுபவரில்லை. கூட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்தவர்களுக்கு ஒரியாவைத் தவிர வேறு எதுவும் புரியும் போலவும் தெரியவில்லை. ஆனாலும் போய் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்த போது கூட்டம் என்று ஏனோ தோண்றவில்லை. மந்தை சரியான வார்த்தையாயிருக்கும்.  நீண்ட ஒலிப்பான்களின் பாதிப்பே இல்லாமல் நகரும் ஜனங்கள். லேசாக யாராவது மேல் முட்டி விட்டால் முஷ்டியை உயர்த்தி விடுவார்கள் என்று எதுவோ உள்ளுக்குள் சொன்னது. அதிகம் விபரமில்லாமல், அதனாலேயே ஒரு முரட்டு வேகத்துடன்.

கணவருடைய பணியிடம் பாலேஷ்வரிலிருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில்  தாம்ராவில் (Dhamra). வழியெல்லாம் ஒரே பச்சை. சட்டென்று கேரளாவை நினைவு படுத்தியது. நகரத்தில் இருந்து விலக விலக வீடுகள் தனித்தனியாய். வீட்டைச் சுற்றி ஒரே செடி கொடிகள், எந்தப் பராமரிப்பும் இன்றி. தனித்தனியாக குளம் கூட. அந்த அழுக்குக் குளத்திலேயே குளியல்,
துவையல் எல்லாம். கொஞ்ச தூரத்திற்கொன்றாய் அடி பம்புகள், குடிதண்ணீருக்காக. மேல் சட்டை இல்லாமல் வெறும் துண்டோ வேஷ்டியோ மட்டும் அணிந்த ஆண்கள். பெரும்பாலான பெண்கள் இன்னும் ஜாக்கெட்டுக்கு மாறவில்லை. பாதிக் குடித்தனம் தெருவில். ரோட்டில் நெல் காய்கிறது. சௌகரியமாக உட்கார்ந்து அரட்டை. வண்டி எதாவது வரும் போது மெதுவாக யோசித்து நகர்ந்து வழி விட்டு மறுபடியும் தொடர்கிறது.

தாம்ரா ஒரு நதிக்கரை கிராமம். தங்குவதற்கு... முன்பிருந்த கம்பெனி விட்டுப் போன போர்டா கேபின், எல்லா வசதிகளுடன். பெரிய வெட்ட வெளியில் நிலத்தை மெஷின்கள் சமன்படுத்திக் கொண்டிருக்க குழந்தை குட்டிகளோடு அக்கம் பக்க குடித்தனம் அத்தனையும் அங்கேதான். வேடிக்கை பார்க்க. சங்கு வளையலோ வகிட்டில் குங்குமமோ இல்லாத எனக்கும் என் கணவருக்கும் என்ன உறவு என்று அங்கிருந்த பெண்களுக்கு பெரிய சந்தேகம். கடைசியில் ஹிந்தியைக் கடித்துக் குதறி கேட்டே விட்டார்கள். பதில் என்னவோ அவர்களுக்கு ஜீரணிக்க முடியவில்லைதான்! சங்கு வளையலில்லாமல் எப்படி நீ பெண்டாட்டி என்று!

பள்ளிக்கூடத்திற்காக மறுபடியும் நாங்கள் பாலேஷ்வரிலும் கணவர் தாம்ராவிலும் தங்க வேண்டியிருந்தது. பாலேஷ்வர் பெரிய ஊரில்லை என்றாலும் மோசமில்லை. குஜராத்தில் எந்த மூலையில் இருந்தாலும் ரயில் நிலையத்திலாவது தமிழ் புத்தகங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. பாலேஷ்வரில் எவ்வளவு முட்டியும் எதுவும் நடக்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் தமிழ் புத்தகங்கள் இல்லாமல்.

ஒரிஸ்ஸாவில் மனதைக் கவர்ந்த ஒரே விஷயம் கோனார்க். வழக்கமாக எந்த ஊரில் இருந்தாலும் சுற்றிலும் உள்ள முக்கியமான இடங்களைப் பார்க்கக் கிளம்புவது போலத்தான் பூரி, கோனார்க் பயணமும் போனது. தங்கியது பூரியில். அது தான் குறிப்பிடத்தக்க இடம்...கோனார்க் ஏதோ பக்கத்தில் இருக்கும் சின்ன இடம் என்று தான் நினைத்திருந்தேன். பார்த்த பின்பு... அது பிரமிக்க வைத்தது.

கலிங்கத்துப் போரில் பெருமளவில் உயிர்ச்சேதம் அடைந்ததில் மக்கள் இல்வாழ்க்கையை மறந்து போனதில் (இங்கே சாவு எண்ணிக்கை ரொம்ப அதிகமல்ல... அதான் அந்த முதல் வரி தியரி உல்டாவாயிடுச்சு போலயிருக்கு!) மீண்டும் அவர்களுடைய மனநிலையை மீட்டுக் கொண்டு வர கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது. கோனார்க்கில் இப்போது மிச்சம் இருப்பது பாதி கூட இல்லை. ஆனாலும் ஒவ்வொரு சின்ன சின்ன செதுக்கலும் ஏதோ ஒரு விஷயம் பொதிந்து வைத்திருக்கிறது. அந்த கால வாழ்க்கை முறை, அது என்ன அவசியத்திற்காக கட்டப் பட்டதோ அந்த செய்தி எல்லா இடங்களிலும் விரிந்து பரந்து கிடக்கிறது. அங்கே இருக்கும் வழிகாட்டிகள் பலருக்கு அதிகம் விஷயம் தெரியவில்லை. தெரிந்தவர்களும் விளக்கமாக சொல்ல விரும்புவதில்லை.

மனிதர்களின் வியாபார வேகத்தில் அதிகம் சிதைக்கப் படாமல், அதனாலேயே அது தன்னை நோக்கி இழுக்கும் ஈர்ப்பை இழக்காமல் இருப்பது போல இருக்கிறது. நாலு வருடத்திற்கு முன்பு பார்த்தது. அதை முதல் முதலாக பார்த்த போது உணர்ந்ததை இப்போதும் உணர முடிகிறது. அந்தி நேரச் சூரியன், சந்திரனின் முதல் கிரணம், நல்ல பௌர்ணமி நிலவு, அதிகாலைச் சூரியன்... ஓவ்வொரு ஒளியில் அது என்ன நிறம் கொள்ளும் என்று பார்க்கும் ஆவலை அந்த சிதைந்த கோபுரம் தூண்டுகிறது.

யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தனியே ஒரு தரம் போக வேண்டும். அது பொதிந்து வைத்திருப்பதை அதுவே திறந்து காட்டும் வரை பொறுமையாக காத்திருந்து பார்க்க ஆசை. அது எனக்கு ஒரு காதலனைப் போல!

No comments: