Tuesday, June 09, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 10

ஒரிஸ்ஸாவில் இருந்த இரண்டு வருடங்களில் அது ஏனோ ஒரு துண்டிக்கப் பட்ட இடம் போலவே இருந்தது. ஒரு பத்து வருஷம் மெதுவாக நடந்து கொண்டிருப்பது போல. புவனேஷ்வர் கூட ஒரு மாநில தலைநகருக்கான லட்சணங்கள் எதுவும் இல்லாமல். சுத்தமான காற்று, விலைவாசி குறைவு, எளிமையாக மக்கள்... எல்லாம் நல்லதாகவே இருந்த போதும் எதுவோ ஒன்று ஒட்டாதது போன்ற உணர்வு. தனித்திருப்பது போன்ற தோணல். அது விரட்டின விரட்டல் முதல் முதலாக இணையத்திற்குள் நுழைய வைத்தது.

நல்ல நட்பு வேண்டும் என்ற தேடலோடு தொடங்கிய பயணத்தில் ஆரம்பத்தில் அதைத் தவிர எல்லாம் கிடைத்தது. அந்த நாட்களில் ஒரு நண்பர் முலம் 'தினம் ஒரு கவிதை' அறிமுகமானது. அவரே ஆர்கேகே யின் சுட்டியும் தந்தார். எனக்கு எவ்வளவு பெரிய வாசலைத் திறக்கிறார் என்று அப்போது நிச்சயம் நினைத்திருக்க மாட்டார்.

என்னுடைய முதல் கவிதை... அதைப் பிரித்துப் போட்டு சொல் சிக்கனம் சொல்லித்தந்தது... முதல் கதை... என்னவோ என்னுடைய எழுத்தில் 'நான்' தெரியாமல் மறைந்து சாமர்த்தியமாக எழுதிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த என் நினைப்பைப் போட்டு உடைத்து என்னை என் கூட்டிலிருந்து வெளியே இழுத்தது... இப்படி தெரிந்தோ தெரியாமலோ எனக்குள் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியவர்கள். இதுவெல்லாம் மட்டுமே ஒரிஸ்ஸா வாழ்க்கையின் கொஞ்சமே கொஞ்சம் நிறங்கள்.

பிள்ளைகள் பாடங்களோடு போராடிக் கொண்டிருக்க, ரொம்ப ஜோராக தொடங்கிய வேலை ஏதேதோ அனுமதி கிடைக்காததால் ஆறு மாதத்தில் நின்று போய் விட ஒரு வருஷம் வீட்டில் இருந்து போரடித்துப் போயிருந்த கணவர் சூரத்திற்கு மாற்றல் கிடைத்ததும் ஒரு ஜனவரியில் 'விட்டால் போதும்' என்று கிளம்பிப் போய்விட பரிட்சை முடியும் வரை நாங்கள் அங்கேயே இருக்க வேண்டி வர... அந்த நாட்களில் இணையக் குழுக்கள் தான் எல்லாமுமாயிருந்தது.
எங்கேயோ ஒரு ஓரத்தில் அமர்ந்து எல்லாவற்றையும் வெறும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மே மாதம் பரிட்சை முடித்து பாலேஷ்வரிலிருந்து கிளம்பும் போது வழக்கமாக வரும் யாரையாவது பிரிந்து போகும் வருத்தம் முதல் முறையாக இல்லாமல் போனது. மனிதர்களோடு நெருங்கியது காந்திதாமோடு முடிந்து விட்டது. எதிலும் ரொம்ப பிடிப்பில்லை. யார் மீதும் பெரிய ஒட்டுதல் இல்லை. அப்படி நான் ஆகிப் போய் விட்டது சரியோ, தவறோ... ஆனால் அப்படித்தான்!

பத்து வருடங்கள் கழித்து மறுபடியும் சூரத். முதல்முறையாக ஏற்கனவே இருந்த இடத்திற்கு மீண்டும். நாங்கள் போய்ச் சேர்ந்த போது வெறும் நூறு கிலோமீட்டர் தூரத்தில் பரோடாவும், கோத்ராவும் கொதித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் எத்தனை கலவரங்களோ...எத்தனை சாவுகளோ என்ற யோசனையோடு தான் தொடங்கியது. ஆச்சர்யமாக சூரத்தில் அதன் நிழல் கூட இல்லை.

பரட்டைத் தலையும் மூக்கு ஒழுக்கலுமாய் நாங்கள் விட்டுப் போன சூரத் இடையில் வந்து போன ப்ளேக்கில் முற்றிலும் மாறி விட்டிருந்தது. எங்கே பார்த்தாலும் பளிச்சென்று சுத்தமாய், சாலைகள் அகலமாய், புதிய பாலங்கள், கொழிக்கும் செல்வம். புதிது புதிதாய் விரிந்திருக்கும் குடியிருப்புகள்... ஷாப்பிங் சென்டர்கள்... திரும்பின பக்கமெல்லாம் விதவிதமாய் பாஸ்ட் புட் ஜங்சன்கள்... கூட்டம் கூட்டமாய் கவலையில்லாமல் சாப்பிடும் சுர்த்திகள்! வாழ்க்கையை அனுபவிக்கும் மனிதர்கள் என்று நிச்சயமாய் சொல்லலாம். ராத்திரி பத்து மணிக்கு மேல் நீண்ட சாலைகளின் இரண்டு பக்கமும் போட்டிருக்கும் பெஞ்சுகளெல்லாம் நிறம்பி வழியும். அந்த நேரத்திலும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டு குடும்பத்தோடு பொழுதைக் கழித்துக் கொண்டு.

ஞாயிற்றுக் கிழமை மாலை சூரத் விழாக் கோலம்தான். யாரும் வீட்டிலேயே இருக்க மாட்டார்களா என்று நினைக்க வைப்பது போல அத்தனை மக்களும் வீதியில் தான். டுமஸ் ரோடு பூராவும் கார்கள் அணிவகுப்புதான். பாய், மடக்கு நாற்காலி சகிதம் குடும்பங்கள் ஆஜராகிவிடும். எந்தக் கூச்சமும் இல்லாமல் கீழே உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை
பார்த்துக் கொண்டும் தெரிந்தவர்கள் எதிர்படும் போது அரட்டையிலும். வீட்டிலிருந்து கொண்டு வந்தது... அங்கேயே வாங்கியது என்று மறுபடியும் சாப்பாடு... சாப்பாடு! இத்தனை சாப்பிட்டும் இவர்கள் இளம் வயதில் எப்படி இப்படி வெடவெட வென்று இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளியாத ரகசியம். ஆனால் நடுத்தர வயதுக்கு மேற்பட்டோர் எல்லா இடங்களையும் போல டயபடீஸூம் உடல் பருமனுடனும்.

முதலிலே இருந்த இடமென்றாலும் முற்றிலும் புதிதாய் இருந்தது. ஒவ்வொன்றாகத் தேடித் தெரிந்து கொண்டிருந்த போது சூரத் வாழ்க்கை மறக்க முடியாத நினைவுகளுக்குச் சொந்தமாக்கப் போகிறது என்று அப்போது உணர்ந்திருக்கவில்லைதான்!


No comments: