Wednesday, June 10, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 11

வழக்கமாக எல்லா ஊர்களையும் போலத்தான் பள்ளிக்கூடம் தேடும் படலம் தொடங்கியது. வழக்கம் போல பெயருக்கு ஒரு நுழைவுத் தேர்வு, டொனேஷன் பேரம், ஒரு நேர்முகத் தேர்வு. வழக்கமான கேள்விகள்... வழக்கமான பதில்கள். எல்லாம் முடிந்து, இனி கிளம்ப வேண்டியது தான் என்று எழுந்திருக்கும் போது தான் வழக்கமே இல்லாமல் அது நடந்தது.

"எங்கள் பள்ளிக் கூடத்தில் ஆசிரியராக பணியாற்ற விருப்பமா?"

அந்தக் கேள்வியை நம்ப முதலில் சிரமமாக இருந்தது. இதற்கு முன்னால் இப்படிஒரு கேள்வியை யாரும் கேட்டது இல்லை. கேட்டிருந்தாலும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் இப்போது அப்படி ஒரு அவசியமில்லாமல் இருந்தது. ஒரு நிமிட தயக்கத்திற்குப் பிறகு சட்டென்று சரி சொன்னது மட்டுமல்லாமல் கடைசியில் எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள் என்று கேட்டது நானா என்று இப்போதும் ஆச்சரியம்! என்னுடைய நேர்முகத் தேர்வு உடனே ஆரம்பித்தது. சின்னச் சின்ன ஒன்றிரண்டு கேள்விகளுக்கு ஏதோ நீள நீளமாய் பதில் சொல்ல, கொஞ்சம் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கணவரின் முகத்தைத் தவிர வேறெதும் சரியாக நினைவில்லை.

சீக்கிரம் தெரிவிக்கிறோம் என்று சொல்லி அனுப்பிய போது அந்த காத்திருத்தல் பழக்கமில்லாததாக இருந்தது. வீட்டில் தொலைபேசி இணைப்பு கிடைத்திருக்கவில்லையானதால் கணவரின் செல்பேசி எண்ணைத்தான் கொடுத்திருந்தோம். ஒரு வாரத்தில் நான் கோவை சென்றுவிட, அந்த நினைவு சற்றே விலகியிருந்தது. ஆனாலும் கணவரோடு பேசும் போதெல்லாம் கேட்க மறக்கவில்லை. திரும்பி வந்த ஒரு வாரத்தில் பள்ளிக்கூடம் தொடங்கி விட்டது. எந்த அழைப்பும் வரவில்லை! ஒன்றிரண்டு முறை நானாவது கூப்பிட்டு விசாரித்திருக்க வேண்டுமோ என்று அப்புறமாகத்தான் உதித்தது! ஆனாலும் நேரம் கடந்து விட்டது. வேலைக்குப் போகப் போகிறேன் என்ற நினைப்பு சுகம் மட்டுமே அனுபவிக்கக் கிடைத்தது.

எல்லாம் மறுபடியும் வழக்கம் போல. காலையில் எல்லோரும் கிளம்பிப் போய் விட டிவி, இணையம், அழைப்பு மணி அடித்து எட்டிப் பார்க்கும் பால்காரர், வேலைக்காரம்மா, பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வரும் பிள்ளைகள், ஒவ்வொருவராக டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதும், திரும்பி வருவதுமாய்... நாள்பூராவும் இதுவே. இடையில் வந்த ஆசிரியர் வேலை ஆசை எல்லாவற்றையும் கலைத்து போட்டு விட்டது போலிருந்தது. இரண்டு மூன்று மாதம் அந்த பாதிப்பில் வேறு வேலைகள் கூடத் தேடி... பின் மெல்ல எல்லாம் இயல்பானது. மறுபடியும் பழைய வாழ்க்கை பழகிப் போனது.

டிசம்பர் மாதம் முதல் வாரம் ஆபிஸிலிருந்து வந்த கணவர் 'சொல்லவே மறந்துட்டேன்! ஸ்கூல்ல இருந்து உன்னைக் கேட்டு போன் வந்தது. வேலையில சேர விருப்பம்னா ஞாயிற்றுக் கிழமை காலைல வரச் சொன்னாங்க' என்ற போது சந்தோஷத்தை அடக்கி வைப்பது சுலபமாயிருக்கவில்லை. இந்த முறை என்னை ஏமாற்றாமல் வேலை கிடைத்து விட்டது. முப்பத்தி ஐந்து வயதில் முதல் முதலாக வேலைக்குப் போகும் அனுபவம்! இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஆசிரியராக. இந்த அனுபவங்களை ஏற்கனவே கொஞ்சம் எழுதியிருக்கிறேன் என்றாலும் எப்போது யோசித்தாலும் புதிது புதிதாய் எதாவது நினைவுக்கு வரத்தான் செய்கிறது!

முதல் நாள்... குழந்தைகளுக்கு அரைப் பரிட்சை தொடங்கும் நாள். ஐம்பது மிரண்ட முகங்களுக்கு முன்னால் ஐம்பத்தி ஒன்றாக நான். பேப்பரைக் கொடுத்து, கேள்விகளை எழுதிப் போட்டு, என் கையெழுத்து புரிகிறதா என்று திரும்பத் திரும்பக் கேட்டு, கடைசி நிமிஷம் வரை எழுத நேரம் கொடுத்து... மணி அடித்ததும் எல்லோரும் அவசர அவசரமாக பேப்பரை வீசிவிட்டு ஓடி விட எண்ணிப் பார்த்தால் நான்கு பேப்பர் குறைந்திருந்தது! வரிசைப் படி முதலிலேயே வாங்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்ற சாதாரண யோசனை கூட எனக்கு இல்லாதது உரைத்தது.

தொடர்ந்த நாட்களில் என்னுடைய தவறுகளில் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு ஆசிரியர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு அம்மாவாக எதிர்பார்த்தேனோ அதையெல்லாம் செய்வது எவ்வளவு சிரமம் என்று அப்போது தான் புரிந்தது. நான் செய்ய நினைத்ததையும் செய்ய முடியாமல் முடிக்க வேண்டிய பாடங்களும் மற்ற வேலைகளும் ஆக்ரமித்துக் கொண்டது.

அந்த நாட்களில் என் குழந்தைகள் என்னை எனக்கு அடையாளம் காட்டினர். எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பதை உணர வைத்தனர். அவர்களுடைய உலகத்தை எட்டிப் பார்க்க, உட்கார்ந்து ரசிக்க எனக்கு அனுமதி கிடைத்தது. சந்தோஷமான நாட்கள் சொந்தமானது. என்னுடைய ஆர்வமும் வேகமும் சிலரைத் தொற்றிக் கொண்டது என்றாலும் என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியாத குழந்தைகளும் இருந்தன.

பள்ளிக் கூடத்தில் வேண்டாமென்று விலக்கியது போக மீதமான பாடங்களே அந்த வயதுக் குழந்தைகளுக்கு அதிகம் என்று எனக்குப் பட்டது. ஒரு நாளின் ஒரு வகுப்பைக் கூட வேறெதற்கும் உபயோகப் படுத்த முடியாத வகையில் இழுத்துப் பிடித்த பாடத்திட்டங்கள். பாடங்களைத் தாண்டி அந்த குழந்தைகளைப் புரிந்து கொள்ள நேரமில்லாதது பெரிய குறையாக இருந்தது. குழந்தைகளை விட அவர்களின் பெற்றோர்கள். அவர்களுடைய அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு. அது திருட்டுத்தனம் செய்தாவது முதல் மதிப்பெண் வாங்கத் தூண்டியதும்... ஆறேழு வயதுக் குழந்தைகளுக்கு இத்தனை சிரமங்கள் தேவையேயில்லை.

நான்கு மாதங்கள் முடிந்தது. நிறுவனத்தின் சமூகத்தைச் சாராதவர்கள் பதினொரு மாத ஒப்பந்தத்தில் வேலைக்கு அமர்த்தப் பட்டிருந்தோம். மறுபடியும் புதிதாக விண்ணப்பித்து தேர்வு செய்வது நடைமுறை. ஏப்ரல் மாதம் கடைசி தேதி வெளியே வரும் போது அடுத்த வருஷம் இந்த வேலை எனக்கு எவ்வளவு அவசியம் என்று எப்படி, யாருக்குச் சொல்லிவிட்டு வர என்று தெரியவில்லை. வெளியே வந்த எல்லோருக்கும் ஒரு வகையில் வேலை அவசியமாயிருக்கையில் எனக்கு வேறு வகையில் அத்தியாவசியமாயிருந்தது.

ஜூன் முதல் வாரம் ஊரில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு தாமதமாக வந்த போது இந்த முறையும் எந்தத் தகவலும் இல்லை. ஆனால் இந்த முறை எந்தத் தயக்கத்திலும் இழக்க விரும்பாமல் போய் கேட்ட போது எனக்கு டபுள் ப்ரமோஷன் கிடைத்திருந்தது! நான்காம் வகுப்பு ஆசிரியராக. பாதிக் கண்களில் உனக்கு எப்படி அந்த வகுப்பு கிடைத்தது என்ற கேள்வி... சிலரின் ஐயோ பாவம் என்ற பார்வையும். பிறகுதான் தெரிந்தது என் வகுப்பில் பிரின்ஸிபலின் மகள் படிப்பது!

இரண்டே வயது பெரிய இந்தக் குழந்தைகள் என் எண்ணங்களை எல்லாம் தூள் தூளாக்கினர். சொல்லிக் கொடுக்க வேண்டிய வகையில் சொல்லிக் கொடுத்தால் எதையும் கற்றுக் கொள்வோம் என்று நிரூபித்தார்கள். எங்கேயோ எப்போதோ மேலோட்டமாக படித்திருந்த விபரங்களை அவர்களுக்காக என்னைத் தேடித் தெளிவாகத் தெரிந்து வரச் செய்தார்கள். கேள்விகள்... கேள்விகள்...! இப்போதும் அதே விரட்டும் பாடத்திட்டங்கள் இருந்த போதும் நாங்கள்(நானும் என் மாணவர்களும்) நேரம் ஒதுக்கப் பழகியிருந்தோம்.

ஒரு முழு வருடம். நிறைய சந்தோஷங்கள். கொஞ்சம் மன வருத்தங்கள். நிர்வாகத்தின் குளறுபடிகள். பணம் புகுந்து விளையாடி காண்பிக்கும் வேடிக்கைகள்... என்னால் எதுவும் செய்ய முடியாத போது அதில் ஒரு பங்காக இருக்க விரும்பவில்லை. அடுத்த வருடத்திற்கு உயர்நிலை வகுப்பிற்கு விண்ணப்பித்திருந்த போதும், அதற்கான முறையான கல்வித்தகுதி இல்லாத போதும் எனக்கு அந்த வேலையைக் கொடுக்க நிர்வாகம் சம்மதித்த போதும்
ஏற்கவில்லை. ஒருவேளை நிர்வாகத்தின் இடத்தில் இருந்து பார்த்தால் அவர்கள் நிலமை புரிந்திருக்குமோ என்னவோ?!

மொத்ததில் சூரத் வாழ்க்கையில் அளவில்லாமல் அடைந்தது மட்டுமே. இழந்தது... எதுவுமில்லை.

5 comments:

துளசி கோபால் said...

ஒரு டீச்சர் உருவாகினார்!

Nirmala. said...

அதே!:-)

பத்மா அர்விந்த் said...

/ஒரு ஆசிரியர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு அம்மாவாக எதிர்பார்த்தேனோ அதையெல்லாம் செய்வது எவ்வளவு சிரமம் என்று அப்போது தான் புரிந்தது/ exactly.

Nirmala. said...

Yes Padma... it is a real tough game!

Nirmala. said...

Yes Padma... it is a real tough game!