Saturday, December 18, 2004

உனக்குத் தெரியுமா பெண்ணே?

திருமணம் ஆன பின்பும் சிலருக்கு மேட்ரிமோனியல் மேயும் சுவாரசியம் எப்படியோ அப்படித்தான் எனக்கு இந்த அஞ்சல் வழி கல்வி விளம்பரங்கள். அது ஒரு பத்து வருடங்களாக இருக்கிறது. ஒவ்வொரு வருஷமும் B.Ed படிக்க முயற்சி பண்ணி... contact classes, பரிட்சை தேதி எல்லாம் ஒத்து வராமல் ஒவ்வொரு தரமும் அடுத்த வருஷம் அடுத்த வருஷம் என்று தள்ளிப் போட்டு அது அஞ்சல் வழி படிப்பாகவே இல்லாமல் போய் விட்டது.

சரி, B.Ed போகட்டும் வேற எதாவது தேடலாம் என்று தேடியதில் எப்போதும் இந்த சைக்காலஜி மேல் ஒரு கண். காலேஜ் சேரும் போதே அதில் சேர்றேனேன்னு சொன்ன போது அப்பா விடவில்லை. 'அதைப் படிச்சு என்ன பண்ணப் போறே?' (இதைப் படிச்சு மட்டும் என்ன பண்ணினேன்னு அவரைக் கேட்க முடியாது...பாவம் அவரை விட்டுடறேன்).

இதோ இரண்டு மாசம் முன்னால் வந்த சென்னை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு கடைசியில் வேலை செய்து விட்டது. அவர்களுடைய M.Sc சைக்காலஜி ஒத்து வரும் போல தோணியதில் கொல்கத்தா study centre தேடிக் கண்டு பிடித்து ஒரு காலை நேரம் போய் சேர்ந்தேன்.

வரவேற்பில் ஒரு சின்ன பெண். விபரம் கேட்டு விட்டு என்னென்ன கொண்டு வர வேண்டும் என்று ஒரு லிஸ்ட் கொடுத்தார்.

'இதெல்லாம் எடுத்துட்டு சீக்கிரம் வரச் சொல்லுங்க' என்றார்.

'யாரை?' என்று கேட்டேன்.

'யார் சேரப் போறாங்களோ அவங்களை' என்றார்.

'நான் தான் சேர போறேன்' என்ற பதிலை எதிர்பார்க்காததால் அந்த பெண் முகத்தில் முதலில் சின்ன அதிர்ச்சி, தொடர்ந்து (அடக்க முயற்சி செய்வதற்குள்) ஒரு பெரிய சிரிப்பு. முதலில் கொஞ்சம் அசௌகரியமா உணர்ந்தாலும் 'ஆமாம் அதுக்கென்ன?' என்ற தொனியில் காத்திருந்தேன். சட்டென்று அந்த பெண் சிரிப்பை அடக்கி விட்டு என்னை வேகவேகமாக அனுப்பி விட்டார்.

இதோ ஒரு வாரத்தில் புத்தகங்களும் வந்து விடும். வரப்போகும் இரண்டு வருடத்தில் எப்போதாவது சலித்துப் போய் இந்த படிப்பை பாதியிலே விட்டு விட நினைத்தால் அந்த பெண்ணின் சிரிப்பு நினைவுக்கு வர வேண்டும்!

உனக்குத் தெரியாது பொண்ணே நீ எனக்கு எவ்வளவு பெரிய உந்து சக்தி என்று!

5 comments:

Badri Seshadri said...

இப்படி எம்.எஸ்சி சைக்காலஜி எல்லாம் ஆண்கள்தான் படிப்பார்கள் என்று எதிர்பார்த்த அந்த வரவேற்புப் பெண் எனக்கு ஆச்சரியத்தைத்தான் கொடுக்கிறார். நானறிந்தவரையில் பல பெண்கள் உளவியலில் இள/முது கலைப் படிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நான் ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டிருந்தபோது சில செமஸ்டர்கள் teaching assistant ஆக இருந்துள்ளேன். அதற்கு என்னைத் தயார்படுத்திக்கொள்ளும் விதமாக ஒரு பயிற்சி வகுப்பில் ஈடுபடவேண்டியிருந்தது. அப்பொழுது நம் மண்டைக்குள் எந்த அளவிற்கு பால் பற்றிய எண்ணங்கள் ஊறிக்கிடக்கின்றன என்பதை வெளிக்கொணரும் விதமாக ஒரு தேர்வு நடத்தினர். ஓரிரு (ஆங்கிலப்) பத்திகளில் pronouns எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அதை நிரப்பச் சொன்னார்கள். மேலோட்டமாக ஆங்கில அறிவை சோதிப்பது போன்ற இந்தத் தேர்வின் உண்மை நோக்கம் நாம் பால்களைப் பற்றிய என்ன எண்ணங்களை உள்ளே வைத்திருக்கிறோம் என்பதை அறிவதே என்பது பின்னால்தான் தெரிய வந்தது.

டாக்டர், நர்ஸ் என்று வரும். அங்கு டாக்டர் வரும்போதெல்லாம் "he, him, his", நர்ஸ் எனும்போது "she, her" போட்டுத்தான் அத்தனைபேரும் செய்திருந்தோம். இந்தத் தேர்வை எடுத்த பெண்களும் சேர்த்து. பின்னர் தேர்வு நடத்தியவர் சொன்னது - நிஜத்தில் நடந்த ஒரு விஷயம்தான் அது, அதில் நிஜமான டாக்டர் பெண், நர்ஸ் ஆண்.

Jayaprakash Sampath said...

எனக்கும் இது போல அனுபவம் உண்டு. ஐந்து வருடங்களுக்கு முன்பு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காகச் சேர்ந்திருந்தேன். லயோலாக் கல்லூரியில் வார இறுதிகளில் காண்டாக்ட் வகுப்புகள் நடக்கும். என் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவர் இருந்தவர், ஐம்பதுவயதுக்காரர். சீமென்ஸ் என்ற நிறுவனத்தில் எஞ்சினியராக வேலை பார்த்தார். மேலாண்மை படித்தால் ப்ரொமோஷனுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று ஆர்வமாக வந்து சேர்ந்திருந்தார். எனக்கு ரொம்ப வியப்பாக இருந்தது ( கவனிக்க, இருந்தது, இப்போது இல்லை :-) ). இந்த வயசில் இவர் இதுக்கு மேலே படித்து , அசைன்மெண்ட் எல்லாம் எழுதி, பட்டம் வாங்கி என்னத்தைக் கிழிக்கப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால், நான் சில காரணங்களுக்காக, முதல் வருடத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. அவர் தொடர்ந்து படித்து முடித்துவிட்டார் என்பதை சில நண்பர்கள் மூலமாகக் கேள்விப்பட்டேன். படிப்பதற்கு வயது, பால் எதுவும் தடையில்லை. நல்லாப் படிச்சு கோல்ட் மெடல் வாங்குங்க. ஆல்தி பெஸ்ட்

Anonymous said...

டீச்சரம்மா,

வாழ்த்துகள்.
படிங்க படிங்க..படிச்சுக்கிட்டே இருங்க.
அதுக்காகப் படிக்கிறேன் பேர்வழின்னு இணையப்
பக்கம் வராம இருக்காதீங்க

Anonymous said...

அந்த 'அனாமத்து' குரல் என்னோடதுதான் டீச்சரம்மா!!

Nirmala. said...

பத்ரி, அந்த பொண்ணு சிரித்தது வயசுக்காகத்தான். நான் என் மகளுக்காகவோ மகனுக்காகவோ விசாரிக்க வந்தேன்னு நினைச்சுட்டார்!

n thank u friends. இங்கே போட்டதும் அதே காரணத்துக்குத்தான். நாளைக்கு நீங்க யாராச்சும் கேக்க மாட்டிங்களா, என்னாச்சு உன்னொட படிப்புன்னு!