Monday, December 20, 2004

ஹா... பெண்கள் சேர்க்கும் நிறங்கள்!

ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம்... எவ்வளவு நேரம் டிவி பார்க்க என்று வெளியில் கிளம்பும் போது எங்கே போகலாம் என்று எந்த உத்தேசமும் இருக்கவில்லை. பக்கத்தில் இருக்கும் ஸ்வபூமி - the heritage plaza போகலாம் என்பது கணவருடைய விருப்பம். முன்னமே ஒரு நாள் நேரம்போகாத ஒரு மத்யானம் நான் போயிருந்த போது ஈ ஓட்டிக் கொண்டிருந்த கைவினைப் பொருட்களின் கடைகளும், மூடிக் கிடந்த உணவு விடுதிகளும் கல்லூரிக் காதலர்களையும் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அவ்வளவு மோசமாக இருக்காது என்று தான் போனோம்.

ஸ்வபூமி, NIPS School of Hotel Management உடன் சேர்ந்து துள்ளிக்கொண்டிருந்தது. NIPS முதலாண்டு புட் & ம்யூசிக் பெஸ்டிவல். மூன்று நாள் விழாவின் கடைசி நாளான இன்றைய தீம் அரேபியன் இரவு. நடுவில் இருந்த திறந்த வெளியில் உயரம் குறைந்த இரண்டு ஒட்டக உருவங்கள் பாவமாய். கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், எங்களை மாதிரி வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று கலவையான கூட்டம்.

மேடையில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவர், இரண்டு பெண் பாடகர்களுடன் குறைவில்லாத உற்சாகத்துடன் இசை நிகழ்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தார். பெரும்பாலான பாடல்கள் அரேபிய இசை கலந்த கிராமியபாடல்கள். புரியாத போதும் தாளம் போட வைத்தது. சுற்றிலும் ஸ்டால்கள் அமைத்து கல்லூரி மாணவர்களின் அரேபியன் டச் கலந்த பெங்காலி உணவு தயாரிப்பு. சுடச்சுட விற்பனை. ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்த டாரோட் கார்ட் ரீடரும், டாட்டூ மேசையும் சீந்துவாரில்லாமல் இருந்தது. அத்தனை சத்தத்தில் அவரிடம் என்ன கேட்பது என்று யாரும் போகவில்லையோ? அந்தக் கூட்டத்தில் உற்சாகமில்லாத ஆட்கள் அவர்கள் இரண்டு பேராகத்தான் இருக்க முடியும்.

அங்கே ஆச்சரியப் படுத்திய ஒரே விஷயம் பெண்கள்... பெண்கள்... பெண்கள். கூட வந்த ஆண்கள் வழக்கமான பேண்ட் சட்டையிலும், சிலர் குர்த்தாவிலும், வயதான சிலர் கோட்டிலும் இருக்க (வயது வித்தியாசம் இல்லாமல்) எல்லாப் பெண்களையும் பார்க்கும் போது தோன்றியது ' வாவ் BOLD'! வெடவெட என்று ஒல்லிப் பெண்கள் எப்போதாவது கண்ணில் பட மற்றவர்கள் பூசின உடம்பாக, மினுக்கும் சருமமும், அடிக்கும் பெரிய பொட்டும், கண்ணைப் பறிக்கும் உதட்டுச் சாயமும், மொடமொடக்கும் காட்டன் புடவையுமாய்! இத்தனை அலங்காரம் செய்யும் வரை பொறுமையாக இருந்து கூட்டிக் கொண்டு வந்த கணவர்களைப் பாராட்ட வேண்டும் (எத்தனை வீட்டில் கிளம்பும் போதே சண்டையோடே கிளம்பினார்களோ?!).

ஆனால் பெண்கள் இத்தனை மெனக்கெட்டு அலங்காரம் செய்து கொள்ளாமல் போய்விட்டால் உலகம் எத்தனை நிறமில்லாமல் இருக்கும்!!!

7 comments:

ஜெ. ராம்கி said...

ஆஹா... நிர்மலா மேடம், மேல்Kindக்கு மேட்டர் எழுதிட்டு, மறந்து போய் உங்க வலைப்பூவுலேயே போட்டுட்டீங்களா?!

Jayaprakash Sampath said...

அழகான பெண்களின் வேலை , உலககத்தை மேலும் கலர்·புல்லாக ஆக்குவது மட்டும் தானா " என்று கொடி பிடிக்கப் போகும் தாய்க்குலங்களிடம் இருந்து தப்பிக்க வாழ்த்துக்கள் :-)

Chithran Raghunath said...

சுஜாதாவின் "வசந்தகுமாரன் கதை"-யில் "இளவரசி! நீங்கள் அழகாக இருப்பதைத் தவிர உங்களுக்கு வேறு என்ன வேலை?" என்று வசந்தகுமாரன் கேட்பது நினைவுக்கு வருகிறது.

ரவியா said...

உஷாவிடம் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானமா?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

>>>
ஆனால் பெண்கள் இத்தனை மெனக்கெட்டு அலங்காரம் செய்து கொள்ளாமல் போய்விட்டால் உலகம் எத்தனை நிறமில்லாமல் இருக்கும்!!!<<<<

அப்படிச் சொல்லுங்க நிர்மலா. :)

-மதி

Anonymous said...

பெண்களாம். கலர்·புல்லாம்.
நல்லா இருந்தா சரிதான்

துளசி கோபால் said...

அன்புள்ள நிர்மலா,

பெண்கள் என்று சொன்னாலே 'கலரு'தான்! அதனால்தானெ இந்த ஆம்பிள்ளைகள்
'கலர்'பார்க்கப் போறென்னு சொல்றாங்க!

கலர்ன்னு சொன்னாலும் நம்ம இந்தியாவுலெ குறிப்பா தமிழ் நாட்டுலே புடவைகள்
( பட்டுன்னு வச்சிக்கலாமா?) என்னா கலரு, என்னா கலரு?

வெள்ளையர்கள் உலகத்திலே கலருக்குப் பஞ்சம். எப்பப் பார்த்தாலும் ஐய்யப்ப சாமிகள் மாதிரி ஒரு
கறுப்பு உடை!

நியூட்டரல் கலருன்னு ஒண்ணு. நம்ம உடைகளைப் பார்த்துட்டு வாயப் பிளப்பாங்க!

ஆம்பிள்ளைகளுக்கு அழுது வடியுற கலரும், ஒரு ப்ளூவும்!

நம்ம ஊருதான் கலர் ஃபுல் ஊரு!