Tuesday, December 14, 2004

மே ஹி ஸ்வாமி... மே ஹி பீவி!

கொஞ்ச நாள் முன்னால் ஒரு ஞாயிற்றுக் கிழமை... 'அவசர வேலையில்லைன்னா இங்க வா'ன்னு அழைப்பு. கணவர்தான். என்டிடிவி யின் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க. கல்கத்தா சோனாகாச்சி பாலியல் தொழிலாளர்களைப் பற்றியது. எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக ஒரு குவிஸ் நடந்து கொண்டிருந்தது. வட்டமாக எல்லாரும் உட்கார்ந்திருக்க ஒருத்தர் கேள்வி கேட்க யாராவது பதில் சொல்ல...தெரியாத போது கேட்டவரே பதில் சொல்ல...

காமிரா அவர்களிடமிருந்து விலகி ஒரு பெண்ணிடம். எந்த தயக்கமும் இல்லாமல் தன்னைப் பற்றிச் சொல்லுக் கொண்டிருந்தார்.

'ஒரு குழந்தை இருக்கு, அதற்காக சம்பாதிக்கிறேன்...'

சில கேள்விகள்... யோசிக்க அவசியமில்லாமல் நேரமும் எடுத்துக் கொள்ளாமல் வேகவேகமாக பதில்கள்.

கேள்வி கேட்டவர் கடைசியாக... "உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?"

"ஆயிருச்சு"

"உங்கள் கணவர்?"

"அவர் என்னை விட்டு விட்டுப் போய் விட்டார்" இவ்வளவு நேரம் தெளிவாக தயக்கமில்லாமல் பேசிய அந்த பெண்ணின் குரல் இதைச் சொல்வதற்கு முன் ஒரு நொடி கலங்கி, சுதாரித்தது துல்லியமாக தெரிந்தது.

காமிரா அவரிலிருந்து நகர்ந்து மறுபடியும் அந்த வட்டத்திற்கு. இப்போது ஆண்களையும் பெண்களையும் பற்றி விவாதம்.

"புருஷன் வெட்டியே போட்டலும் அவன் தான் ஸ்வாமி இந்த பெண்களுக்கு"

"நாங்க கூட வெளியில போகும் போது வகிட்டில குங்குமம் வச்சிட்டு தான் போறோம்"

"ஆமாம், அது ஒரு அங்கீகாரம் மாதிரி"

"ம்ம்ம்...ரெட் சிக்னல்"

ஒரு வெடிச்சிரிப்பு.

இப்போது காமிரா அந்த வட்டத்தில் இருக்கும் ஒரு பெண்ணை நோக்கி.

" எனக்கு கல்யாணம் ஆகலை. எனக்கு எப்பவும் நல்லா அலங்கரிச்சுக்கப் பிடிக்கும். கை நிறைய வளையல் போட்டுக்குவேன். நல்ல புடைவை கட்டிக்குவேன். வகிட்டில் தவறாம குங்குமம் வச்சுக்குவேன். இதுவரை மூன்று ஆண்களோட இருந்திருக்கேன். எல்லாரும் விட்டுட்டு போயிட்டாங்க. தனியா இருக்கேன். இப்ப எனக்கு நான் தான் ஸ்வாமி...நான் தான் பீவி(மனைவி)"

சொல்லி விட்டு உறுதியாக ஒரு புன்னகை செய்ய...வாவ்...என்று சொல்லிக் கொண்டே என்னை அறியாமல் கை தட்ட...எப்போதோ எழுந்து போய் விட்ட கணவர் குரல்... "என்ன யாராவது ஆம்பளைகளை திட்டறாங்களா?"

5 comments:

சுரேஷ் கண்ணன் said...

very nice post.

It made me to recollect the film 'Mahanathi'

Mookku Sundar said...

அய்யய்யோ டீச்சர்...நீங்க ஆம்பளைங்களை திட்ற ஃபெமினிஸ்டா..??

எனக்கு அப்படி தோணலையே..!!! :-)

நல்ல பதிவு இது.

Nirmala said...

சுந்தர், அப்பப்ப கொஞ்சூண்டு ·பெமினிஸ்ட்!!!!!

icarus prakash said...

என்னது கொஞ்சூண்டா? ... அது சரி :-). இந்த 'உமன்ஸ் லிப்' சமாசாரத்தையெல்லாம் முடிச்சுட்டு வந்து, ஸ்கூல் பிள்ளைங்களைப் பத்தி எதாச்சும் எழுதுங்க.

Anonymous said...

டீச்சரம்மா,

·பெமினிஸ்டுன்னு சொல்லிக்கிட்டு ஏதாவது ஏடாகூடமா எழுதி
வச்சுடாதீங்க. 'ஆமினிஸ்டு'ங்கள்லாம் அப்புறம் பிச்சிடப் போறாங்க