வெயில் கொளுத்தி ஓய்ந்த ஒரு கசகசப்பான மாலையில் தான் தொடங்கியது அந்தப் பயணம். அடுத்த வரியாக பயணமென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று எழுத நினைத்து, யாருக்குத்தான் பிடிக்காது என்று புத்தி பதில் கேள்வி கேட்க அங்கேயே நின்று விட்டது. பிடித்திருக்கத்தான் வேண்டும்... இல்லாவிட்டால் ஐம்பத்தி ஏழு வயது, பசி தாங்காது, தூக்கம் கெட முடியாது, அதிகம் நடக்க முடியாது என்று எத்தனையே உபாதைகள் இருந்த போதும் சந்தர்ப்பம் கிடைத்தால் உடனே கிளம்ப அம்மாவுக்கு ஒவ்வொரு முறையும் தோணாது. ஆனால் பயணம் பிடிக்காத மனிதர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்!
இவ்வளவு பயணமெல்லாம் இப்போது தான். கல்யாணத்திற்கு முன்னால் குறிப்பிட்டுச் சொல்லும் படி எங்கேயும் போனதில்லை. ஐந்தாறு வயதில் மொட்டைத் தலையோடு சாமுண்டேஸ்வரி கோவிலிலும் பெங்களூரில் ஏதோ மண்யாணை மேல் உட்கார்ந்திருந்ததும் புகைப்படம் மூலம் மட்டுமே அறிந்த பயணங்கள். அதற்குப் பிறகு ஏன் நாங்கள் எங்கேயுமே போகவில்லை? குடும்பத்தோடு ஒன்றாக போகும் பயணங்கள் தரும் சந்தோஷங்களை விட வேறு விஷயங்கள் முக்கியமாகிப் போய் விட்டிருக்கலாம்!
மறுபடியும் முதல் வரிக்கே வருகிறேன். அந்தப் பயணம் கொல்கத்தாவிலிருந்து சிலிகுரிக்கு. ஒரு ராத்திரி நேரத்தில் முடிந்து போய்விடும் அந்தப் பயணத்தில், முதல் முதலாக ஸ்லீப்பர் கோச்சில் பயணித்தது என்பதைத்தவிர, குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை. வழக்கமான ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போகும் பயணம் போல. அதுவும் ராத்திரி நேர பிரயாணத்தில், ஏறியதும் தூங்கிப் போய்விடும் சக பயணிகளின் முகம் கூட பதிவதில்லை.
சிலிகுரியில் காலையில் இறங்கியதும் பேருந்து நிலையத்தில் வந்து கூட்டிக் கொண்டு போவதாக சொன்ன பயண ஏற்பாட்டாளரின் தகவலே இல்லை. செல்பேசியில் விசாரிக்கும் போது நான் நின்று கொண்டிருக்கும் இடத்தை விசாரித்து விட்டு, அங்கேயே இருங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லிய அடுத்த நிமிடம் முன்னாலிருந்தார். " நான் அந்தப்பக்கம் உங்களுக்காக காத்திட்டிருந்தேன் மேடம். வண்டியில் குடிக்கத் தண்ணீர் வைத்திருக்கிறேன், செய்தித்தாள் வைத்திருக்கிறேன். மேலே போய் சேர்ந்ததும் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன். நீங்கள் திரும்பிப் போகும் வரை உங்கள் தேவைகளை கவனிக்க வேண்டியது என் பொறுப்பு ". I'm Lovin it ஐ மனதிற்குள் சொல்லிவிட்டு வெளியே மிக்க நன்றி என்று சொல்லித் தொடர்ந்தது
பயணம்.
சிலிகுரி... சட்டென்று அதன் பச்சையில் குளிர்வித்தது. போதாததற்கு காற்றில் ராத்திரி பெய்து விட்டுப் போயிருந்த மழையின் ஈரம். ஐந்து நிமிடப் பயணத்திலேயே மலைப் பாதை தொடங்கிவிட்டது. கூடவே குறுகலான ஒரு ரயில் பாதையும். வழியெல்லாம் குறுக்கே கடப்பேன், நின்று பார்த்து விட்டு உன் பயணத்தை தொடர்ந்துக்கோ என்று ஆரம்பத்திலேயே ஒரு அறிவிப்பு. சொல்றது யார் தெரியுமா? அந்த ஆராதனா ' மேரே சப்னோ கி ராணி' ரயில் பாதை தான். வழியெல்லாம் ரோட்டின் இந்த ஓரத்திலும் அந்த ஓரத்திலுமாய் மாறி மாறி கூடவே வருகிறது.
காதோரம் குளிர் உறைக்க ஆரம்பித்ததும் அதுவரை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்த மலையும் பள்ளத்தாக்குகளும் கூடுதல் அழகாகிவிட்டது போலிருந்தது. ஒவ்வொரு வளைவிலும் ஆழமாகிக் கொண்டே போகும் பள்ளத்தாக்குகளும் ஏறிக் கொண்டே போகும் குளிருமாய். குண்டும் குழியுமாய் இருந்த ரோடோ, காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததோ எதுவும் பெரிதாக உரைக்கவில்லை. மூன்றரை மணிநேரப் பயணத்தில் டார்ஜிலிங் போய்ச் சேர்ந்திருந்தோம்.
நூறு வருடப் புராதன ஒரு தங்கும் விடுதியில் அறை ஒதுக்கியிருந்தார்கள். அன்றைக்கு சுற்றிப் பார்க்கும் வேலை எதுவும் இல்லாததால் மாலையில் காலாற நடக்கப் போன போது நான்கு வருடத்தில் டார்ஜிலிங் அதிகம் நெரிசலாகி விட்டது போலிருந்தது. வழி நெடுக தெருவோரக்கடைகளும் கூடுதல் சுறுசுறுப்பாக வியாபாரமுமாய். தெருமுடிந்து சட்டென்று விரியும் மாலில் இன்னும் அதிகம் மனிதர்கள். நாலடி தூரத்தில் நடப்பவர் தலைக்கு சற்று மேலே மிதந்து கொண்டு போகும் வெள்ளைப் பனி மூட்டம். நேற்று இதே நேரம் வியர்வை கசகசப்போடு பேருந்து ஏறியது நினைவு வந்தது. வெட்பமானி பத்து டிகிரி என்று சொன்னது. நான்கு வருடத்தில் கொஞ்சமும் மாறாமல் இருந்த உணவகத்தில் இரவு சாப்பாட்டை முடித்து அறைக்கு வந்த போது அங்கிருக்கும் வரை ஏற்பாடுகளை கவனிக்கும் திரு. முகர்ஜி காத்திருந்தார்.
12 comments:
படித்து முடித்ததும் இரண்டு கைகளையும் பறபறவென்று தேய்த்து சூடு ஏற்படுத்திக் கொண்டேன்! அந்த குளிர் இங்கே தெரிகிற மாதிரி அருமை நடை! தொடரட்டும் அருமையாக!
posted by: சுபமூகா
அசத்தலான ஆரம்பம் நிர்மலா. நடை ரொம்ப நன்றாக இருக்கிறது!
பிடிச்சிருக்கு! ரொம்ப பிடிச்சிருக்கு!! ;)
புகைப்படங்கள் எடுத்திருந்தால், இடுங்கள்.
-மதி
posted by: Mathy Kandasamy
நிர்மலா, உங்களின் பயணக் கட்டுரைகளும் அவற்றின் நடையும் எனக்கும் பிடித்திருக்கிறது. ஊன்று கவனித்தால் ஒரு சிலவற்றைக் கற்றுக் கொள்ள முடிகிறது.
posted by: செல்வராஜ்
நன்றி சுபமூகா, மதி, செல்வராஜ்.
சுபமூகா இதை எழுதும் போது இங்கே 39 டிகிரி. கடவுளே! ந்னு இருந்தது.
மதி புகைப்படம் எல்லாம் தனியாக கடைசியில் போடறேன்.
செல்வராஜ்... பயணம் போறதுன்னா ரொம்ம்ம்பப் பிடிக்கும். அதுவும் தனியாகக் போக.
நிர்மலா.
posted by: nirmala
ஆஹா... அதை மாதிரி ஒரு சுகம் வேறெதிலும் உண்டா என்று தெரியவில்லை.
-prakash
posted by: prakash
அட.. நான் முன்னே போஸ்ட் செய்ததில் பாதியைக் காணவில்லை. சுகம் என்று முந்தைய பின்னூட்டத்தில் சொன்னது, //செல்வராஜ்... பயணம் போறதுன்னா ரொம்ம்ம்பப் பிடிக்கும். அதுவும் தனியாகக் போக.//
என்பதைத்தான்.
posted by: prakash
ஆமாம் ப்ரகாஷ். அதிகம் போனால் இன்னும் நாலைந்து வருடம்... அப்புறம் அப்படிக் கிளம்பும் எண்ணம் இருக்கிறது.
நிர்மலா.
posted by: nirmala
ஹ்ம்ம்... எனக்கென்னவோ இன்னும் தனியாப் போறதுல (அதுவும் சரிதான் என்றாலும்)அவ்வளவு ஆர்வம் வரலை. அங்கேயும் இங்கேயும் அலஞ்சு சோர்வுல வூட்டுக்காரியோட சண்ட போட்டாலும், கொழந்த குட்டியோட போறது தான் இப்போ பிடிச்சிருக்கு. ஒருவேளை இன்னும் பல ஆண்டுகள் போனால் தனிப்பயணம் பிடிக்கலாம்?
posted by: செல்வராஜ்
நிர்மலா,
நல்லா எழுதறீங்க.
posted by: Muthu
ம்ம்ம்... இருக்கலாம் செல்வராஜ்.
நன்றி முத்து.
posted by: nirmala
நிம்மி! தனியா போறது நமக்குத்தான் பிடிக்கும்.
சரியா :-) அதாவது ஆண்களுக்கு அல்ல- இது
செல்வராஜ்க்கு :-))))
உஷா
posted by: Ramachandranusha
இல்ல உஷா... அப்படி லிட்டரலா சொல்ல முடியாது. பத்து வருஷம் முன்னால எனக்கு இப்படி ஒரு ஆசை இருந்த மாதிரி நினைவில்லை. ஆனா இப்படி அப்படி இருக்கு. அதுக்கு வயசு, எக்ஸ்போஷர், சில தேடல்கள்ன்னு நிறைய காரணம் இருக்கு.
posted by: nirmala
Post a Comment