மூன்றாவது நாள் பார்த்த பாறைப் பூங்கா(Rock garden)வும், கங்கா மையா பார்க்கும் சுற்றுலா பயணிகளுக்காவே நிர்மாணிக்கப் பட்டது. வலிந்து திணித்த அழகோடு, பெரிதாக ஒட்டவில்லை. மூன்று நாள் டார்ஜிலிங்கில் இருந்ததில் கவனித்தது... எல்லாக் குழந்தைகளும் அழகுதான். ஆனால் இங்கே இன்னும் கொஞ்சம் கூட. பனியில் இயற்கையாகவே கன்னத்து மேட்டில் பூத்திருக்கும் சிவப்பு தான் காரணமாயிருக்கும்.
இளைஞர்கள் நீளமாக முடி வளர்க்கிறார்கள். மலைப்பாதையில் நடந்து நடந்து முறுக்கேறிய உடம்பும், செதுக்கின முகமும், பட்டுப் போன்ற முடியுமாய்... உயரம் மட்டும் கூடுதலாய் இருந்தால் மாடலிங் உலகில் இவர்களை அடிக்க ஆளிருக்காது. பெண்களுக்கு முகப்பரு, bad hair days தொல்லைகள் பற்றியெல்லாம் தெரிந்தே இருக்காது என்றிருந்தது. பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் அடிக்கடி கண்ணில் படுகிறார்கள். காலர் வைத்த முழுக்கை பெண்கள் சட்டை, அதன் மேல் ஒரு முழு நீள அங்கி, பின் பக்கம் இழுத்துக் கட்டி... அழகாகத்தான் இருக்கிறது. போன தடவையே தேடியது, இந்த முறை ஒன்று வாங்கி விட்டேன். நைட்டியாகவாவது உபயோகப் படுத்தலாம் என்று தான். அப்படிச் சொன்னதற்காக கடைக்காரப் பெண் கோபித்துக் கொண்டார். எங்கள் உடை உங்களுக்கு நைட்டியா என்று. பெரும்பாலானோர் நேப்பாளி பாஷை பேசுகிறார்கள். ரோடுகள் தாறுமாறாய் வளைந்து, ஏறி இறங்குகிறது. சொந்த வண்டி எடுத்துக் கொண்டு போகும் யோசனை இருந்தால் மறந்து விடுவது நல்லது.
டார்ஜிலிங் டீ திடம் குறைவாக, லேசான கசப்பு சுவையோடு. ஆசை தீர அங்கே குடித்துக் கொள்ள மட்டும் செய்யலாம். ஊருக்கு வாங்கிக் கொண்டு போகாமலிருப்பது உத்தமம். அந்தத் தண்ணீருக்கும் அந்த குளிருக்கும் தான் அது நன்றாக இருக்கிறது. சென்ற முறை வாங்கி வந்து கடுப்படித்ததில் அந்த வேலைக்கே போகவில்லை. மோமோ எனப்படும் சிற்றுண்டி விசேஷம். மைதா மாவில் சின்ன பூரிகளாக தேய்த்து உள்ளே காய்கறி(பெரும்பாலும் முட்டைக்கோஸ்) அல்லது இறைச்சி அடைத்து ஆவியில் வேக வைத்துக் கொடுக்கிறார்கள். கொல்கத்தாவில் பெரிய சைனீஸ் உணவகங்களில் கிடைக்கும் மோமோ எதுவும் அந்த ரோட்டோரக்கடையில் விற்பதற்கு ஈடாகாது. அந்த குளிருக்கு காரமாக ஒரு சிவப்புச் சட்னியோடு சாப்பிட... ஆஹா!
ஷாப்பிங் செய்ய ஏகப்பட்ட curio shop கள். கலைப் பொருட்களில் ஆர்வம் இருப்பவர்கள் அள்ளிக் கொண்டு வரலாம். எங்களுடைய கோட்டா சென்ற முறையே முடிந்து விட்டதால் இந்த முறை எதுவும் தேவையிருக்கவில்லை. சிவப்புப் பட்டில் சுவற்றில் தொங்கவிடும் புத்தரை வாங்காமல் வந்தது தான் ஒரே குறை. தஞ்சாவூர் சித்திரங்களைப் போல தங்கம் உபயோகித்து, ஆனால் மிகுந்த நுணுக்கமான வேலைப்பாடுகளோடு 'தாங்கா' ஓவியங்கள் யானை விலை, குதிரை விலையில். இந்த முறையும் தடவிப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.
மறுநாள் காலையில் கேங்டாக் (Gangtok) கிற்குக் கிளம்பும் போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அதே மலைகளும் பள்ளத்தாக்குகளும் பனி மூட்டமும்... கூடுதலாக ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் சேர்ந்து கொள்ளும் டீஸ்டா(Teesta) நதி. ஆரம்பத்தில் அதலபாதாளத்தில் ஆழ அகலமாய் ஓடிக் கொண்டு பயமுறுத்துகிறது. ஆனால் எங்கேயிருந்து பார்த்தாலும் அழகாயும். அடுத்த ஒரு மணி நேரத்தில், பத்தடி இறங்கினால் கைகளை அளைய விடலாம் என்ற தூரத்தில்.
டார்ஜிலிங்கில் இருந்து கேங்டாக் மூன்று மணி நேர பிரயாணம். கேங்டாக்கில் தங்கும் விடுதிக்குப் போய்ச் சேர்ந்த போது அவர்கள் எங்களை அவ்வளவு சீக்கிரம் எதிர்பார்த்திருக்கவில்லை. மறுநாள் காலையில் தான் உங்களுடைய ஊர் சுற்றிப் பார்க்கும் படலம். அதுவரை ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியது தான் என்றார். மாலையில் நடக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் தெருக்களெல்லாம் நினைவு வந்து விட்டது. ஒரு பெரிய மார்க்கெட், நீள நடந்தால் ஒரு பேருந்து நிறுத்தம், தங்கும் விடுதிகள், சௌமின்(chowmein) என்று பெயர் மாற்றிக் கொண்ட நூடுல்ஸ்... தலைநகருக்கு இதெல்லாம் ரொம்ப குறைச்சல்!
டார்ஜிலிங்கை விட அதிக எண்ணிக்கையில் சிகப்பு வஸ்திரம் தரித்த பிக்குகள். எல்லா வயதிலும். டவேரா விளம்பரத்தில் வரும் குழந்தைகள் வயதில் கூட. இவ்வளவு சின்ன குழந்தைகளை எதற்காக இப்படி அனுப்புகிறார்கள்? குடும்பத்தில் யாராவது ஒருவர் அப்படி ஆக வேண்டும் என்பது கட்டாயமா? கூம் மொனஸ்ட்ரியில் பார்த்த போது அது ஏதோ கட்டாயத்திற்காகத் தான் என்பது போல ஏன் எனக்குத் தோண்றியது? எத்தனை வருடம் அங்கேயே இருக்க வேண்டும்? முடிந்த பின் அவர்கள் என்ன செய்வார்கள்? நிறைய கேள்விகள். யாரிடம் கேட்டால் பதில் கிடைக்கும் என்று தெரியவில்லை. என்ன தெரிந்து கொள்ள வேண்டும், கேளுங்கள் சொல்கிறேன் என்ற சிநேகபாவம் யார் முகத்திலும் தெரியவில்லை. ஒருவேளை வெளிமனிதர்களோடு அவசியமில்லாமல் உரையாடுவதற்கு அனுமதியில்லாமலிருக்கலாம்!
மறுநாள் காலையில் போன ரூம்டெக் மொனஸ்ட்ரியில் சிலவருடங்கள் முன்பு இந்தியாவிற்கு தஞ்சமாக வந்த இளைஞர் தலாய்லாமா புகைப்படம் நடுவில். தவிர நிறைய பித்தளை விக்ரகங்கள், ஒரு சின்னக் குழந்தையின் புகைப்படம்... அங்கேயும் நாங்கள் போயிருந்த சமயம் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. பிரார்த்தனைக் கூடத்தைச் சுற்றி பிக்குகள் தங்கும் அறைகள். பின்புறம் இருந்த பெரிய கட்டிடம் பாடசாலை போலிருந்தது. வெளியாட்களுக்கு உள்ளே போக அனுமதியில்லை.
அது தவிர ஒரு ஸ்தூபி, ஒரு சிறிய அருங்காட்சியகம், பூங்கா. எல்லா இடங்களிலும் சின்னக் குழந்தைகளை அந்த சிகப்பு ஆடையில் திரும்பத் திரும்ப பார்த்ததில் எதிலும் மனது ஒட்டவில்லை. மறுநாள் காலையில் தான் சங்கோ(Tsamngo) ஏரிக்கு போவதாக இருந்தது. காலையில் சீக்கிரமே வண்டி வரும் என்று சொல்லியிருந்ததால் அதிகம் அலையாமல் அன்றைய தினத்தை முடித்துக் கொண்டோம். ராத்திரி குளிரும் அதிகம் இல்லை. நவம்பர் மாத கொல்கத்தா போல இதமாக.
காலையில் எட்டரை மணிக்கு வண்டி வந்திருந்தது. முதல் நாளே யார் யார் போகிறோம், பெயர், வயது விபரங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டார்கள். ஏரி இந்தியா - சீன எல்லைக்கு மிக அருகில் இருப்பதால் இந்த விபரங்களெல்லாம். கரடுமுரடான மலைப்பாதைப் பயணம். இடையிடையே சின்னதாயும் பெரிதாயுமாய் நீர்வீழ்ச்சிகள். சிலவற்றில் தடுப்புக்கம்பிகளோடு. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களைத் தவிர சுற்றுவட்டாரத்தில் வேறு நடமாட்டங்கள் இல்லை.
ஒன்றரை மணி பயணத்திற்கு பிறகு ஒரு இராணுவ கேம்ப், அதை ஒட்டி ஒரு சிறிய கிராமம். இந்த உயரத்திற்கு வரும் போது சுற்றிலும் பனி மூட்டம். பத்தடி தூரத்திற்கு அப்பால் எல்லாம் மங்கலாக. குளிர் நன்றாக உரைக்கத் தொடங்கி விட்டது. கேம்ப் வாசல்களில் அங்கங்கே கொஞ்சம் கொஞ்சமாய் பனி உறைந்து கிடக்கிறது. வீட்டுக் கதவைத் திறந்தால் அந்தப் பனியில் கால் வைக்காமல் போக முடியாது. வாசலில் பனி கொட்டிக் கிடக்கிறது. ஹவ் ஸ்வீட்!
என்னமாய் குளிர்கிறது என்று நினைத்துக் கொண்டே ஒரு வளைவைத் தாண்டியது தான். தூரத்தில் ஒரு மலை. முழுக்க முழுக்க பனியால் மூடி. உருகி வழிந்த நீர் மட்டும் இடையிடையே கோடிழுத்தது போலிருக்க... முதல் முதலாக அப்படி ஒன்றை நேரில் பார்க்கக் கிடைத்தது. இவ்வளவு அழகானதை இன்னும் பக்கத்தில் பார்க்க முடிந்தால் என்றும். நாங்கள் பக்கத்திற்குத்தான் போய்க் கொண்டிருந்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் இன்னும் இன்னும் கொஞ்சம் என்று போனதில் 12400 அடி உயரத்திற்கு வந்து விட்டிருந்தோம். திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளைப் பனி. வெடவெடக்க வைக்கும் குளிர்.
இறங்கி கொள்ளுங்கள் என்று சொன்ன இடத்தில் சுற்றிலும் மூன்று நான்கு மலைகள் சூழ்ந்திருக்க நடுவில் சாங்கோ ஏரி. சலனமில்லாமல் ஏரி விரிந்திருக்க பார்ப்பது நிஜமா என்றிருந்தது. இப்படி ஒன்றை நிச்சயமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. சென்ற முறை ஜூன் மாதத்தில் வந்திருந்த போது நிறைய குளிராயிருந்தது. லேசான பனிமூட்டம் இருந்தது. ஆனால் மருந்துக்குக் கூட எங்கேயும் பனியிருக்கவில்லை. அப்போது அங்கிருந்தவர்கள் சொல்லக் கேட்டு ஜனவரி மாதத்தில் ஏரியே உறைந்திருக்கும், அந்த நேரத்தில் வந்து பார்க்க வேண்டுமென்று நினைத்ததும், ஒவ்வொரு ஜனவரியிலும் வர முடியாமல் போனதுமாய்... மே மாதத்தில் இவ்வளவு பனியை எதிர்பார்க்கவில்லைதான். வேலை வேலை என்று வராத கணவரும், பரிட்சையிருப்பதால் வர முடியாமல் போன மகளும் இதையெல்லாம் பார்க்கவில்லையே என்றிருந்தது.
ஏரிக்கு ஒரு புறம் ஏழெட்டு கடைகள். சூடாக டீயும் மோமோவும் சௌமினும் கிடைக்கிறது. டீ குடிக்கும் போதே கடைக்காரப் பெண் Yak (பனி எருமையா?) ல் போகவில்லையா என்றார். இங்கேயும் அங்கேயும் அலைந்து கொண்டிருக்கும் ஏறக்குறைய ஐநூறு கிலோ எடையுள்ள அதன் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்க மட்டுமே தைரியம் இருந்தது. வேண்டாம் என்று போன எங்களை விடவில்லைதான். ஏரிக்கு இந்தப் பக்கம் என்ன இருக்கிறது, அந்தப் பக்கம் யாக்கில் ஏறிப் போய்ப் பாருங்கள், பனியைக் கையிலேயே தொடலாம் என்று ஆசை காட்டி கடைசியில் அதில் ஏற்றியே விட்டார்.
முழங்கால் வரையான காலணி, போட்டுக் கொள்ள ஜாக்கெட் எல்லாம் அங்கேயே வாடகைக்குக் கிடைக்கிறது. யாக்கில் ஏற ஒரு ஆளுக்கு நூற்றி அறுபது ரூபாய். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணமாம். ஏறி உட்கார்ந்தால் கல்லும் கரடுமாய் இருக்கும் ஒற்றையடிப் பாதையில் லாவகமாய் நடக்கிறது. ஆரம்ப பயம் தெளிந்ததும் யாக் ஓட்டுனரோடு பேச்சுக் கொடுத்ததில்... யாக்கின் பெயர் திங்கா, ஓட்டுபவர் தாவா, தூரமாய் கை காட்டி அந்த கிராமத்தில் தான் வசிக்கிறோம். புல்லும் கோதுமை மாவும்(?!) சாப்பிடும். மலைக்கு அந்தப் பக்கம் இருந்து வாங்கிக் கொண்டு வந்து பழக்கியது. குழந்தையாய் இருக்கும் போது ரொம்ப முரடாய் இருந்ததாகவும், இப்போது சமத்தாய் சொன்ன பேச்சு கேட்கிறது...
ஒன்றிரண்டு முறை கீழே தள்ளி விடுமோ என்று பயமுறுத்தினாலும் பத்திரமாய் அந்தப் பக்கம் கொண்டு போய் சேர்த்து விட்டது. தூரத்திலிருந்து பார்த்து மலைத்த பனி இப்போது காலடியில். கையில் எடுத்து உருண்டையாக்கும் போது எதிர்பாத்த அளவு உரைக்கவில்லை. அந்தக் குளிருக்கு கைகள் பழகிவிட்டிருந்தது. வாடகைக்கு எடுத்த ஜாக்கெட்டின் மேல் உட்கார்ந்து பனிச்சறுக்கிக் கொண்டிருந்தார்கள் ஒரு இளம் சர்தார்ஜி ஜோடி. சுற்றிலும் பனி, ஆடாமல் அசையாமல் ஒரு ஏரி, ஏறக்குறைய நிசப்தம், இடையிடையே சர்தார்ஜினியின் சிரிப்பு... எங்கேயோ காணாமல் போவது போலிருந்தது.
திங்காவிற்கு அடுத்த சவாரிக்கான நேரமாகிவிட்டதால் கிளம்ப வேண்டியதாயிற்று. திரும்ப வரும்போது தாவாவிடம் இப்பொது என்ன டெம்பரேச்சர் இருக்கும் என்று கேட்ட போது, 'அது இருக்கும் மேம்சாப், ஒரு மூணு டிகிரி'.
!!!!
No comments:
Post a Comment