Wednesday, May 18, 2005

ஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு. (2)

"நாளைக்கு காலையில் மூன்றரை மணிக்கு தயாராக இருங்கள், டைகர் ஹில்ஸ¤க்கு உங்களைக் கூட்டிக் கொண்டு போக வண்டி வரும்".

"என்னது மூன்றரை மணிக்கா??? அதுவும் இந்தக் குளிரிலா?"

அப்படிக் கேட்பேன் என்று எதிர்பார்த்தது அவர் முகத்தில் தெரிந்தது. டார்ஜிலிங் எனக்குப் புதிதில்லை. இதற்கு முன்னால் வந்திருக்கிறேன் என்று சொன்னதும், "ஓ, அப்படியா? அப்ப சரி. காலையில் மூன்று இடங்கள் பார்த்து விட்டு அறைக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். மதியம் மீதி பார்க்க ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போனார். காலையில் சரியாக மூன்றே முக்காலுக்கு வண்டி வந்திருந்தது. ராத்திரி பூராவும் ஹீட்டர் சூட்டில் மரத்தளம் போட்ட அந்த அறை சொர்க்கமாக இருந்தது. வெளியில் வந்ததும் குளிர் இழுத்துக் கட்டிப் பிடித்துக் கொண்டது. ஸ்வெட்டர், ஷால் எல்லாம் தாண்டி 'நான் எப்படி?' என்று கேட்டது. 'ஆஹா... உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!' என்று சொல்ல வாய் திறக்க, பற்கள் தாளம் போட, சந்தோஷத்தில் வயது மறந்து போனது.

வழி நெடுக பெரிய ப்ளாஸ்க்கும் கையுமாய் உள்ளூர் இளம்பெண்கள், லிப்ட் கேட்டுக் கொண்டு. டார்ஜிலிங் வந்திருந்த சுற்றுலாப் பயணிக் கூட்டம் டைகர் ஹில்ஸ¤க்குப் படையெடுத்ததில் அந்த நேரத்திலும் ட்ராபிக் ஜாம். இந்த டைகர் ஹில் பயணம் சூரிய உதயமும் கஞ்சன் ஜங்காவைப் பார்க்கவும் தான்.

முதல் முதலாக கஞ்சன் ஜங்காவைப் பார்க்க கிளம்பிய போது நினைவுக்கு வந்தது, பள்ளி நாட்களில் படித்த வாஸந்தி தொடர்கதை தான். வீட்டில் ஏதோ பிரச்னை என்று சொல்லிக் கொள்ளாமல் டார்ஜிலிங்கில் வேலை தேடிக் கொண்டு கிளம்பும் நாயகி, போய்ச் சேர்ந்த அன்று இரவு படுக்கப் போவதற்கு முன் நாயகன் காலையில் நான்கு மணிக்கு எழுந்து ஜன்னல் வழியாகப் பாருங்கள், கஞ்சன் ஜங்கா தங்கம் போல மின்னுவதைப் பார்க்கலாம் என்று சொல்ல, அவள் நாலு மணிக்கா என்று நொந்து கொண்டே எழுந்து ஜன்னல் திரை விலக்க... அவளோடு சேர்ந்து அன்று நானும் பார்த்திருந்தேன்.

அந்தக் கற்பனையை ஒப்பிட்டுப் பார்க்க நிஜம் இன்றாவது தெரியுமா என்று நினைத்துக் கொண்டே போகும் போது லேசாக மழை துளிர்க்க ஆரம்பித்திருந்தது. ஓட்டுனர், "மழை பெய்ய ஆரம்பித்தால் அவ்வளவு தான். எதற்கும் போய் பாருங்கள். மழை நின்றதும் தெரிந்தாலும் தெரியலாம்" என்று சொல்ல, இப்போதும் இல்லையா என்றிருந்தது. அரைமணி நேரக் காத்திருத்தலுக்குப் பின் சூரியன் மெல்ல எட்டிப் பார்க்க அதுவரை சூரியனையே பார்க்காதது போல ஒரு கூச்சல். மலையே அரண்டிருக்கும்! சூரியன் வந்தும் பனி விலகாததால் அப்போதும் கஞ்சன் ஜங்கா தெரியவில்லை!

அங்கிருந்து நேராக Ghoom Monastry. கூம் இடத்தின் பெயர். அங்கிருக்கும் ரயில் நிலையம் உலகின் இரண்டாவது உயரமான இடத்தில் இருக்கும் ரயில் நிலையம். ஏறக்குறைய எட்டாயிரம் அடி உயரத்தில் என்று பார்த்ததாக நினைவு. மேலே ஒன்றிரண்டு இடங்களுக்கு அழகான ஒரு ரயில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடுகிறது. மொனஸ்ட்ரிக்கு நாங்கள் போன போது வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஆறேழு வயதிலிருந்து எல்லா வயதிலும் சிவப்பு நிற அங்கியும் மஞ்சள் நிற மேல்சட்டையுமாய் பிக்குகள். நடு வரிசை தவிர மற்ற வரிசைகளில் வாய் மட்டும் மந்திரம் உச்சரிக்க கவனமெல்லாம் அலைபாய்ந்து கொண்டு. மொனஸ்ட்ரி ஒரே வண்ணமயமாய். சிவப்பு நிறம் தூக்கலாக, மற்றும் மஞ்சள், நீலம், பச்சை, வெள்ளை நிறத்தில் நிறைய வேலைப்பாடுகளோடு. உருவ வழிபாடு. பளபளக்கும் சிவப்புப் பட்டில் நிறைய அலங்காரங்கள். புத்தர், மஞ்சுஸ்ரீ என்ற ஒரு பெண் தெய்வம்... இன்னும் பெயர் தெரியாத நிறைய விக்ரகங்கள், சிறிதும் பெரிதுமாய்.

அடுத்து இராணுவத்தில் உயிர்விட்ட கூர்கா பிரிவினருக்கான நினைவு சதுக்கம். சதுக்கத்தைச் சுற்றியும் கடைகள். ஸ்வெட்டர், ஷால், செருப்பு, லொட்டு லொசுக்கு. இந்த இடத்தையாவது விட்டு வைத்திருக்கலாம் என்றிருந்தது. ரயில் பாதை ஒன்று சுற்றிக் கொண்டு போகிறது. பாதையை மறித்து இந்தக் கடைகள். இதில் ரயில் போகாதா என்றதற்கு, "ஒன்பதரைக்குத்தான் ரயில் ஆரம்பிக்கும். அதுவரைக்கும்" என்றார்கள். அதற்கப்புறம் எங்கே போவார்கள்?!

இங்கே இன்னொன்றும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதை டெலஸ்கோப் என்று தான் சொல்கிறார்கள், பார்க்கவும் அப்படித்தான் தெரிகிறது, பத்து ரூபாய்க்கு அதில் டார்ஜிலிங்கின் முக்கிய இடங்களைக் காண்பிக்கிறார்கள். இடம் தெரிந்து, பெயர் மனதிற்குள் பதிவதற்குள் திருப்பி அடுத்த இடம், அதன் பெயர். இப்போது அதில் சேர்ந்திருக்கும் புது இடம், 'மே ஹ¥ நா' பள்ளிக்கூடம். இதோடு காலைசுற்றல் முடிந்தது.

மதியம் இரண்டு மணிக்கு அடுத்தது. வயதான ஒரு ஓட்டுனர், வழியெல்லாம் பேசிக் கொண்டே. அவர் வாயைக் கிண்டியதில்... பெரும்பாலும் இந்துக்கள், மற்றும் புத்த மதத்தினர் வசிக்கின்றனர். மற்றவர்கள் ரொம்பக் குறைவு. புத்த மதத்தவர்கள் வீட்டு முன்னால் நீண்ட ஒரு மூங்கில் நிறுத்தப்பட்டிருக்கும். உச்சியில் ஒரு கும்பம் போல வெள்ளை நிறத்தில். கீழே பச்சை, மஞ்சள், நீலம், சிகப்பு, வெள்ளை நிறத்தில் துணி சுற்றியிருக்கும். அதற்குக் கீழே நீளத்திற்கு இணைக்கப்பட்டிருக்கும் துணியில் அவர்கள் மொழியில் பிரார்த்தனை எழுதப் பட்டிருக்கும். அந்தத் துணி காற்றில் அசைந்தாடும் போது அவர்கள் பிராத்தனை அசைந்து மேலே செல்வதாக அவர்கள் நம்பிக்கை. இளைஞர்கள் சீக்கிரம் பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தில் பெரும்பாலும் டூரிஸ்ட் வண்டி ஓட்டுகிறார்கள். படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை. இருக்கும் கொஞ்சம் பட்டதாரி இளைஞர்களும் வங்கிக் கடனில் சொந்த வண்டி வாங்கி ஓட்டத்தான் விரும்புகிறார்கள். ராயல் ஹவுஸ் என்றழைக்கப் படும் ஒரு பழைய கட்டிடத்தைக் காட்டி, இங்கேதான் நிவேதிதா அன்னை வசித்திருந்தார். உயிர்விட்டதும் இங்கேதான். இதை ஒரு நினைவுச் சின்னமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சின்ன சின்னதாக இப்படி நிறைய சொல்லிக் கொண்டே வந்தார்.

மதியம் முதலில் பார்த்தது Himalayan Mountaineering Institute(HMI) - ன் அருங்காட்சியகம். பெரும்பான்மையான இடத்தை டென்சிங் ஆக்ரமித்திருந்தார். ஏறும் போது அவர் உபயோகப் படுத்திய பொருட்கள், புகைப்படங்கள், குறிப்புகள். அவருக்குப் பின்னால் போனவர்கள், முன்னால் போக முயற்சித்தவர்கள், ஜப்பானின் முதல் முழுக்க பெண்களால் ஆன குழு, அங்கிருந்து கொண்டு வந்த கல்.... விபரங்கள், மேலும் விபரங்கள். ஒரளவுக்கு மேல் பார்க்க முடியவில்லை. வழக்கமாக அருங்காட்சியகங்களுக்குள் நுழைந்த கொஞ்ச நேரத்தில் வரும் மென்டல் ப்ளாக்.

HMI ஐ ஒட்டி ஒரு விலங்குகள் சரணாலயம். எல்லாம் போரடித்துக் கொண்டு படுத்துக் கிடந்திருந்தன. சென்ற முறை போன போது பெயர் சூட்டி ஷேமம் விசாரித்து வந்த சிங்கத்தைக் காணவில்லை. கூட வருபவர்கள் நடக்க சலித்துக் கொள்ளாதவர்களாய் இருந்தால் மூலைக் கொன்றாய் இருக்கும் சில அரிய விலங்குகளைப் பார்த்து வரலாம். அடுத்து போவதாக இருந்த Ropeway ஒன்றரை வருடத்திற்கு முன் நடந்த ஒரு விபத்திற்குப் பின்னால் நிறுத்தி வைத்திருப்பதாக சொன்னார்கள். அதைத் தாண்டி போகும் வழியில் HMI ன் பயிற்சி வகுப்பு நடக்கும் மலையும் பள்ளத்தாக்குகளும். அதற்குப் பக்கத்தில் ஆர்வத்தில் முயற்சி செய்ய விரும்பும் அமெச்சூர்களுக்காக கயறுகட்டி பாதுகாப்பான ஒரு சின்ன குன்று.

அடுத்து போனது Tibetian Refugee Camp. அங்கே தரைக்கம்பளம் பின்னும் நீண்ட அறையில் முதலில் உட்கார்ந்திருந்த முதாட்டிக்கு எத்தனை வயதிருக்கும் என்று ஆச்சரியமாயிருந்தது. முகமெல்லாம் ஆழமாக முதுமையின் ரேகைகள். யார் உள்ளே நுழைந்தாலும் பச்சைப் பிள்ளையாட்டம் ஒரு சிரிப்பு அவர் முகத்தில். கை பாட்டுக்கு வேலையாய். அந்த தளம் பூராவும் கம்பளம் நெய்ய நூல் இழை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். மேலே போய் பாருங்கள் என்று கை காட்டியதில் அடுத்த தளத்தில் ஆழ்ந்த நிறங்களில் விதவிதமான கம்பளங்கள் தயாராகிக் கொண்டிருந்தது.

நெய்து கொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் பக்கத்தில் அழுதழுது ஓய்ந்த ஒரு குழந்தை நம்பிக்கை இல்லாமல் நின்று கொண்டிருந்தது. திரும்பிக் கூடப் பார்க்காமல் அவர் கவனம் பூராவும் கம்பளத்தில். கீழே இருந்த மைதானத்தில் இளைஞர்கள் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். வாலிப வயதுப் பெண்கள் அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு. அதற்குள்ளேயே ஒரு பள்ளிக்கூடம். கம்ப்யூட்டர் சென்டர் கூட.

அங்கிருந்த விற்பனையகத்தில் அங்கே தயாராகும் பொருட்கள் விற்பனைக்கு. கம்பளப்பிரிவு மே மாதம் 2006 வரை ஆர்டர் புக்காகியிருப்பதாக சொன்னது. உலோகத்திலும், மரத்திலுமாய் நிறைய கைவினைப் பொருட்கள். வெளியே ஒரு சுவற்றில் சீனர்களை திபெத்தை விட்டு வெளியேறச் சொல்லி ஒரு போஸ்டர்.

கிளம்பும் போது ஓட்டுனர் காட்டியதைப் பார்த்ததும் 'ஹா' என்றிருந்தது. அதுவரை காடுகள் சூழ்ந்த மலைகளின் மேலிருந்த மேகம் விலகியதில் அதற்குப் பின்னால் பிரம்மாண்டமாய் முழுக்க முழுக்க பனியால் மூடிய கஞ்சன் ஜங்கா. மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் தகதகவென்று மின்னிக் கொண்டு. ஆசை தீரப் பார்ப்பதற்குள் மறுபடியும் மேகம் மூடி விட்டது. அவ்வளவு பிரம்மாண்டமும், ஒரே நொடியில் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. ஆனாலும் கற்பனைச் சித்திரத்தோடு ஒப்பிட்டுக் கொள்ள அதுவே போதுமாயிருந்தது. வாஸந்தியின் எழுத்துக்கு ஒரு சலாம் போட்டு விட்டு அறைக்குத் திரும்பினோம்.

No comments: