Saturday, April 23, 2005

படிக்க போன கதை (தொடர்ச்சி).

முதல் நாள் புகார் சொல்லி வந்ததில் அடுத்த நாள் ஆசிரியர் மாறியிருந்தார். Organisational Behaviour பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருக்கும் முதல்வரே ஆசிரியராக. ஒரு நீண்ட questionnaire, ஒரு பெரிய முக்கோணத்தில் குறுக்கே ஓடும் கோடுகளினால் எத்தனை முக்கோணங்களுக்கு வாய்ப்புகள் உண்டு என்று கண்டுபிடிப்பதிலும் ஓடியது. வகுப்பு முடிந்து வெளியே வரும் போது உரைத்தது, Organisational Behaviour பற்றிய பேப்பர் அடுத்த வருட பாடத்திட்டத்தில் தானே இருக்கிறது? அதைப் பற்றி இவர் இப்போது எதற்குப் பாடம் எடுத்தார்? வேற ஒன்றும் இல்லை. முதல் நாள் புகாரில் அவசரமாக சமைத்த உப்புமா தான் இந்த வகுப்பு.

இந்த வகுப்பில் உரைத்த இன்னொரு விஷயம் - பத்ரி வலைப்பதிவில் படித்த பால் முன்அனுமானங்கள் அடிப்படையில் கேட்ட கேள்விக்கு இப்போதும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை என்று. அப்படி ஒரு கேள்வியை முன்னாலே கேட்டிருந்தும் அதற்கான பதில் தெரிந்திருந்தும்! வாசிப்பதை விட முன்அனுமானங்கள் ஆழமாக இருக்கிறது, அபத்தமானதாக இருந்த போதும்!

மூன்றாம் நாள் வகுப்பு ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து எடுப்பார் என்று சொல்லியிருந்ததில் எதிர்பார்ப்பிருந்தது. கை நிறைய நாலைந்து பாலிதின் கவரில் ஏகப்பட்ட காகிதங்களோடும், போரோலின் வாசனையோடும் வந்தவரை சைக்கியாட்ரிஸ்ட் என்று நம்ப கஷ்டமாகத் தான் இருந்தது. வந்து உட்கார்ந்தவும் மடமடவென்று பெங்காலியில் ஏதோ சொல்லிக் கொண்டே முதல் வரிசையில் அவருக்கு வலதுபுறம் கண்ணில் படும் இடத்தில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து தலையாட்ட நான் திருதிரு. எனக்கு பெங்காலி புரியதென்றபிறகு கேள்வி ஆங்கிலமாகி 'எதற்காக சைக்காலஜி?' என்ற போது, அச்சு பிச்சென்று ஆசைக்குச் சேர்ந்தேன்னு சொல்லாமல் ·ப்ராய்ட் தான் இழுத்துட்டு வந்தார் என்றதில் ரெண்டு பேருக்கும் சந்தோஷம். (மூன்று பேரோ? ·ப்ராய்டையும் சேர்த்தி?!)

என்னுடைய அறிமுகம் முடிந்ததும் மொத்தக் கூட்டமும் பெங்காலிக்குத் தாவி விட்டது, இந்துவைத்தவிர. அறிமுகங்களும் ஏன் சைக்காலஜி என்ற கேள்விக்கான விடையும் பெங்காலியிலேயே. ஒன்றிரண்டு முறை எனக்கு புரியவில்லை என்று சொன்ன போதும். ஆசிரியர் மட்டும் அவ்வப்போது என் வெற்றுப் பார்வையை உணரும் சமயங்களில் இரண்டாவது முறையாக ஆங்கிலத்தில். இன்னும் பத்து வகுப்புகள் இது போல கவனித்தால் பெங்காலி எனக்கும் புரிய ஆரம்பித்துவிடும்! சில கலந்துரையாடல்கள், நிறைய குறிப்புகள் அவர் சொல்லச் சொல்ல எழுதிக் கொண்டதுமாக முடிந்தது, ஐந்தரை மணி நேரம் இடத்தை விட்டு அசையாமல். நேரம் போனதே தெரியவில்லை.

'வெள்ளிக்கிழமை பரிட்சை, நான்கு கேள்விகள், நூறு மதிப்பெண்கள். மதிப்பெண் போட எதாவது கொஞ்சமாவது எழுதுங்கள்' என்று சொல்லி ஆசிரியர் விடை பெறும் போது இது எதற்கு ப்ராக்டிகல் பரிட்சைக்கு என்ற கேள்வி வந்தது. முதல் நாள் காச்மூச்சென்று கற்றுக் கொடுத்த ஆசிரியர், பரிட்சை அன்று யாரையாவது கூட்டி வர வேண்டும், அவரை வைத்து இப்போது சொல்லிக் கொடுக்கும் டெஸ்ட்களெல்லாம் செய்து எழுதி கொடுக்க வேண்டும் என்று சொன்னதெல்லாம்? தேவைகளுக்கும் படிப்பவர்கள் வசதிக்கேற்பவும் மாற்றி அமைக்கப் பட்ட பரிட்சை! வெள்ளிக்கிழமை, எழுதும் பழக்கம் மறந்த கையோடு மூன்று மணி நேரம் பரிட்சை எழுதிவிட்டு வந்தாயிற்று.

இப்போது தெரிகிறது இதெல்லாம் அஞ்சல் வழியில் படித்தால் போதாதென்று. சின்னதாய் நான்கு புத்தகங்களிலும் மூன்று நேர்முக வகுப்பிலும் படிக்கும் பாடமா இது?!

3 comments:

Anonymous said...

நிர்மலா
இஙே நிறுவனக்களில் நேரடியாக பயிற்cஇ எடுக்க வேன்டும். அதுவும் வேலையாட்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது என்பது போன்றவற்றை பல பெரிய நிறுவங்களில் பயிற்cஇ எடுத்து கொள்வதால் நடைமுறை சிக்கல்களும் தெரிய வரும்.
நன்றி

posted by: Padma Arvind

Anonymous said...

நீங்கள் சொல்வது சரிதான் பத்மா. இப்படி ஒரு கோர்ஸ் முடித்து விட்டு கவுன்ஸலிங் பண்ணறேன்னு யாரும் யாரையும் குழப்பாமல் இருக்க வேண்டும்!
நன்றி.

posted by:

Anonymous said...

என்னுடைய ப்ளாக் என்னை அடையாளம் கண்டுக்க மாட்டேங்குது! அந்த அனானிமஸ் நான் தான்.
நிர்மலா.

posted by: