Thursday, April 21, 2005

படிக்கப் போன கதை.

கொஞ்ச நாள் முன்னால் எம்.எஸ்ஸி சைக்காலஜி அஞ்சல் வழியே படிக்க, சேரப் போனதையும் அங்கே இருந்த பெண் சிரித்ததையும் எழுதியிருந்தேன். இரண்டு மாதம் முன்பு அதே பெண் தொலைபேசியில் அழைத்து மே மாதம் பரிட்சை இருக்கும் என்றும், வந்து பணம் கட்டிப் போகச் சொல்லியும் தகவல் சொன்னார். போயிருந்த போது அடையாளம் கண்டு கொண்ட அவருடைய மெல்லிய சிரிப்பில் சூழ்நிலை கொஞ்சம் இளகியது போலிருந்தது (சென்ற முறை தேவையில்லாமல் அலைக்கழித்திருந்தார்). பணம் கட்டிவந்த வேகத்தில் புத்தகங்களை தூசி தட்டிப் படிக்கவும் ஆரம்பித்திருந்தேன்.

முதல் பேப்பர் எதிர்பார்த்தது போலில்லாமல் வரட் வரட்டென்றிருந்தது. வெறும் வாசிப்பெல்லாம் சரிப்படாது என்று குறிப்புகள் எடுத்துப் படிக்க ஆரம்பித்திருந்தேன். ஜோராக இல்லையென்றாலும் சுமாராக ஓடிக் கொண்டிருந்தது. தேதி விசாரிக்க தொலைபேசிய போது தான் தெரிந்தது பரிட்சை ஏறக்குறைய ஒரு மாதம் வரை நடக்கும் என்று. அதிலும் தொடங்கும் தேதியும் முடியும் தேதியும் மட்டும் தான் தெரியும், எந்தப் பரிட்சை எப்போதென்று அவர்களுக்கே தெரியாது என்றும். சரியாக அந்த நேரத்தில் நான் ஊரிலிருக்கப் போவதில்லை! இதுவா அதுவா என்றதில் அடிபட்டது பரிட்சைதான்.

அதைத் தெரிவிக்க அழைத்த போது மறுபடியும் அதே பெண். 'எனக்கு அப்ப்பவே தெரியும்' என்று அவர் நினைத்திருக்கலாம்! ' போகட்டும் அக்டோபரில் எழுதிக் கொள்ளுங்கள். ஆனால் ப்ராக்டிகல் வகுப்பெல்லாம் இன்னொரு முறை கிடையாது. 18ம் தேதி, திங்கள் கிழமையிலிருந்து மூன்று நாள் இரண்டு மணிநேரம் நேர்முக வகுப்பிருக்கும்... அடுத்த நாள் பரிட்சை, வந்துவிடுங்கள்' என்றார். ஞாயிற்றுக் கிழமை மத்யானம் வயிற்றுக்குள் சின்னதாக நாலே நாலு பட்டாம்பூச்சி பறந்தது விட்டுப் போனது. 'படிச்சதெல்லாம் போதும் போ' ன்னு விட்டு விடலாமா என்று ஒரே ஒருதரம் தோணவும் செய்தது.

வசூல்ராஜா கமல் மாதிரி, வகுப்பிற்குள் நுழையும் போது என்னை டீச்சர் என்று நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் அரைமணி நேரம் முன்னதாக போயிருந்தேன். என் வயதில் ஒரு பெண், கொஞ்சம் கூடக்குறைய வயதில் ஒரு ஆண்... ஏற்கனவே வந்திருந்தனர். அவர்கள் பேச்சிலிருந்து அவர்களும் வகுப்பிற்குத்தான் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததில் கொஞ்சம் சமாதானம்.

அந்தப் பெண் இந்து, கொல்கத்தா பள்ளி ஆசிரியர். ப்ளஸ் டூ மாணவர்களுக்கு கவுன்ஸலிங்கும் செய்வதால் அதற்கு உபயோகமாக இருக்கும் என்று சேர்ந்திருக்கிறார். அந்த ஆண் நந்தா, ஒரிஸ்ஸா, பாலேஷ்வரில் கால்நடை மருத்துவர். கால்நடைகளில் behavior pattern ல் ஆராய்ச்சி செய்யும் உத்தேசம் இருப்பதாகவும் அது தவிரவும் இது ரொம்ப நாள் படிக்க ஆசைப் பட்ட பாடம் என்றும் சொன்னார். 'ஐயோ நானும் அப்படித்தாங்க சேர்ந்தேன், நாங்க பாலேஷ்வரில் இருந்திருக்கிறோம்' என்று சொல்லி அவரை அங்கேயே விட்டு விட்டு, பழைய ஆசிரியர் புத்தியில் இந்துவுடன் கொல்கத்தா பள்ளிகள், அடிக்கடி செய்தித்தாளில் அடிபடும் மாணவர்கள் தற்கொலை, ஆசிரியர்களின் அதிகமான கோபம், பெற்றோர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் அப்போதுதான் அறிமுகமானவர்கள் போல நிச்சயம் இல்லை.

கொஞ்ச நேரத்தில் பைஜாமா, ஜிப்பா, ஸ்போட்ஸ் ஷ¤ சகிதமாக ஐம்பது ப்ளஸ் P.S (ஐந்து முறை பாடிபில்டிங்கில் ஆணழகராம். இப்போது கிழ சிங்கம் போல இருந்தார்), அஸன்சாலில் இருந்து உயிரியலில் டாக்டர் பட்டம் பெற்ற, கவுன்ஸலிங்கில் ஆர்வம் உள்ள பியாலி... மொத்தம் ஐந்தே பேர்தான் எங்கள் வகுப்பில் என்று தெரிந்த போது... இது சுவாரசியமான க்ரூப்தான் என்றிருந்தது.

முக்கால் மணி நேரம் தாமதமாக வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியர் சொன்ன முதல் வாக்கியம், ' நீங்களெல்லாம் எதற்காக சைக்காலஜியை அஞ்சல் வழியாக படிக்க நினைத்தீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இந்த மூன்று நாட்களில் என்னால் உங்களுக்கு அதிகம் எதுவும் சொல்லிக் கொடுக்க முடியாது, உங்களாலும் பெரிதாக எதுவும் கற்றுக் கொள்ள முடியாது'.

அதைத் தொடர்ந்த அவருடைய எந்த செய்கையும் கற்றுக் கொடுக்கும் எண்ணத்தில் இல்லை. job satisfaction, interest schedule என்ற இரண்டு டெஸ்ட்களைக் கொடுத்து 'இதெல்லாம் நீங்களே செய்யலாம். தெரியாவிட்டால் கேளுங்கள்' என்று சொல்லிவிட்டு கூடவே மற்றொரு புறம் உட்கார்ந்திருந்த ரெகுலர் வகுப்பிற்கு வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை கவனிக்கப் போய்விட்டார். அவரைப் பார்த்து ஆச்சர்யமும் சிரிப்பும் தான் வந்தது. சொல்லிக் கொடுக்கும் பாடத்திற்கும் நடைமுறை வாழ்கைக்கும் தொடர்பிருக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன?

ஆசிரியரின் இந்த செய்கைகள் எங்களை சட்டென்று ஒன்றாக்கியது. எல்லோரும் சேர்ந்து செய்து முடித்து பக்கத்து அறையிலிருந்த முதல்வர் காதில் விஷயத்தைப் போட்டு விட்டு கிளம்பினோம். வெளியே வரும் போது கல்லூரி நாட்களின் உற்சாகம் தொற்றிக் கொண்டது போலிருந்தது.

(திங்கள் கிழமையே எழுதியது கடைசி நிமிஷத்தில் காற்றில் கரைந்து போனதில் மறுபடியும் இன்றைக்கு. மீதி எப்போ?... ம்ம்ம்... தெரியலை!)

No comments: