ராஜா கல்யாணத்திற்குப் போய் விட்டு வந்த போது இன்னும் கொஞ்ச நாளைக்கு சென்னை போக வேண்டியிருக்காது என்று தான் நினைத்தேன். பத்தாவது வகுப்பு பொது தேர்வு எழுதப் போகும் மகனுக்கு அட்வைஸ், ஆசிர்வாதம் எல்லாம் அப்போதே முடித்துவிட்டுத் தான் வந்தேன் என்றும்.
பின்னொரு சமயம் மகளோடு தொலைபேசியில் பேசும் போது 'பாவம் அவன். அவனோட இந்த முக்கியமான சமயத்தில நாம யாரும் கூட இருக்கப் போறதில்லை'. ஒரு எமோஷனல் ப்ளாக் மெயில் செய்யறோம் என்று தெரியாமலே சொல்லி விட்டுப் போனதில் வழக்கம் போல கொஞ்சம் உறுத்தல். பரிட்சை சமயத்தில் கூடத்தான் இருக்க முடியாது... சரி இன்னொரு தரம் பார்த்து விட்டாவது வரலாம் என்று தான் இந்த பயணம். அதிசயமாக சைட்டை மறந்து (மறந்தெங்கே... அங்கேயும் செல்பேசி விரட்டாமல் இருக்கப் போவதில்லை) மூன்று நாள் சென்னையில் இருக்க கணவரும் முடிவு செய்ததில் இது.
போகிற போக்கில் மகள் சொல்லி விட்டுப் போனதில் நான் எழுதிய பொதுத் தேர்விலிருந்து ஒவ்வொன்றாக நினைவு வந்து விட்டுப் போனது. இதை எழுத வைத்தது மகளின் பொதுத் தேர்வு நினைவுகள்.
அவள் எழுதியது ஒரிஸ்ஸாவில். கணவர் அப்போது சூரத்திற்கு மாற்றல் ஆகிப் போய் விட்டிருந்ததால் வீடு பெரிய ஹல்லா குல்லா இல்லாமல் வழக்கம் போல தான் இருந்தது. அப்பப்ப கொஞ்சம் டீவி, கொஞ்சம் அரட்டை, ராத்திரி நேரங்களில் அவள் படித்துக் கொண்டிருக்க நான் இணைய அரட்டைகளும், புத்தக வாசிப்புமாய்.
பரிட்சை நாட்களில், தடுக்கி விழும் தூரத்தில் இருக்கும் பள்ளிக் கூடத்திற்கு ஒரு மணி நேரம் முன்னாலேயே போயிருப்பாள். நான் அரை மணி நேரம் முன்னால் பள்ளிக் கூடத்தில் இருக்க வேண்டும் என்பது அன்புக் கட்டளை. போட்டது மகளல்ல. அபிஷேக். அவளுடைய நண்பன். ராத்திரி நேரம் மூன்று மணிக்கும் நாலு மணிக்கும் அலாரம் வைத்து, அடிக்கும் போது ஒரே போடு போட்டு விட்டு தூங்கிப் போன நாட்களிலெல்லாம் போன் செய்து எழுப்பிப் படிக்க வைத்தவன். 'இப்படித் தூங்கறீங்களே?' என்று ரெண்டு பேருக்கும் டோஸ் விடுபவன்.
பரிட்சை தொடங்கிய பின் பள்ளிக் கூடத்திற்குள் நுழையும் போது பார்க்க வேண்டும். கடைசி நேர உருப்போடல்கள், குறுக்கும் நெடுக்குமாய் வேக வேகமாய் எதற்கோ நடந்து கொண்டு, யாராவது ஒரு கேள்வி கேட்க திடீடென்று அதற்கு பதில் தேடி எல்லாரும் அலைமோதுவது, கண்ணில் பட்ட அம்மா அப்பாக்கள் காலெல்லாம் தொட்டுக் கும்பிட்டு...
நான் உள்ளே நுழையும் போது அவன் எங்கேயிருந்து வருகிறான் என்று தெரியாது... சட்டென்று பக்கத்தில் வந்து கையைப் பிடித்துக் கொள்வான். கையில் எந்த புத்தகமும் இருக்காது. எதையும் அந்த நேரத்தில் படிக்க மாட்டான். அங்கே நடக்கும் ஆர்ப்பாட்டங்களை எல்லாம் ரெண்டு பேரும் அமைதியாக பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். எங்கிருந்தாவது மகள் குரல் கேட்கும், 'வந்துட்டியா?' என்று. உள்ளே நுழைய பத்து நிமிஷம் இருக்கும் போது ஒரு தரம் பக்கத்தில் வந்து ஒன்றிரண்டு வார்த்தை பேசி விட்டுப் போய் விடுவாள்.
உள்ளே போக கடைசி மணி அடிக்கும் வரை அபிஷேக் கூடவே உட்கார்ந்திருப்பான். மணி அடித்ததும் அமைதியாக எழுந்து bye aunty என்று சொல்லிவிட்டுப் போவான். அவன் வகுப்புக்குள் நுழையும் வரைக்கும் நான் அங்கேயே நிற்க வேண்டும். உள்ளே போகும் போது ஒரு தரம் திரும்பிப் பார்க்கும் போது நான் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இது எதுவும் முன் கூட்டியே பேசி முடிவு செய்ததல்ல... தானாகவே.
இப்போதும் ஒவ்வொரு பரிட்சைக்கும் முன்னால் புவனேஷ்வரிலிருந்து ஒரு மிஸ் கால் வரும். கைவேலையை முடித்துக் கூப்பிடலாம் என்று நினைப்பதற்குள் நாலைந்து முறை குரல் கொடுத்து விடும். சில நேரங்களில் கொஞ்சம் கோபத்தோடு கூப்பிட்டால்... sorry aunty என்று தொடங்கும் உடையாடலில் கோபப்படத் தோணாதுதான்.
இந்த முறை மகனைப் பார்க்கும் போது இதெல்லாம் நினைவு வரும். ஒருவேளை சொல்லக் கூட செய்யலாம். அவனும் பரிட்சை ஹாலுக்குள் போவதற்கு முன் திரும்பிப் பார்க்க நினைப்பானோ?
7 comments:
உங்கள் மகள் புகைப்படம் பார்த்தேன். எதற்கும் அபிசேக்கிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். தள்ளிக்கொண்டு போனாலும் போய்விடுவான். ஆண்டி.. ஆண்டின்னு ஐஸ் வைப்பதெல்லாம் அதற்காகவும் இருக்கலாம் அல்லவா?
posted by: மரத்தடி நண்பர்
சான்ஸே இல்ல. அபிஷேக் அப்ளிகேஷன் போட்டு ரிஜெக்ட் ஆன கதையெல்லாம் தெரிந்தது தான்!
posted by:
கணவரின் சைட் என்றால் ! தெளிவாக சொல்லக்கூடாதா! :) அதுவும் செல் பேசி விரட்டல் என்று வேறு.
செந்தில் நாதன் - சிங்கை
posted by: செந்தில் நாதன்
அடேங்கப்பா! எதிர்பார்பெல்லாம் பலமாத்தான் இருக்கு! :-)
நிர்மலா.
posted by:
சோதனை
posted by: KVR
யாருக்கு
: )))))))
posted by: jayanthi sankar
செந்தில் நாதனுக்கு தான்! அதொன்னும் இல்ல ஜெ... கணவருக்கு ஒரு சைட் இருக்கணுமாம்.. அதை நாம இவ்ளோ கூலா எடுத்துக்கணுமாம்! :-)
posted by:
Post a Comment